Saturday, August 31, 2024

TEACHER BEYOND YOUR IMAGE-12

 TEACHER BEYOND YOUR IMAGE-12

ஆசிரியர்- உங்கள் பிம்பத்தை தாண்டி-12

BE ALERT IN CLASS ROOM

வகுப்பறையில் சுறுசுறுப்பு

1 மன ரீதியான கட்டமைப்பு

[MENTAL ORGANIZATION ]

ஒரு ஆசிரியரின் செயல் திறன் குறித்த ஒரு கருத்து உருவாக்குவதே/ உருவாவதே அவ்வாசிரியரின் விறுவிறுப்பான பேச்சு, இயக்கம், கண்களை நாற்புறமும் சுழலவிடும் இயல்பான கம்பீரம் மற்றும் தயக்கமோ நடுக்கமோ குழப்பமோ, ஐயம் கலந்த பேச்சோ இன்றி பந்தயக்குதிரை போல பாய்ந்து களைப்பின்றி பயணித்து ஏற்படுத்தும் பிரமிப்பே என்று முற்றாக நம்பலாம்.

இவ்வனைத்தையும் கைவசப்படுத்தும் செயல் முறைதான்பல நூல்களிலிருந்து சொந்தமாக தொகுத்த . கருத்துக்கோவை [கட்டுரைகள் வடிவில் ஆசிரியரே உருவாக்கி வைத்துக்கொள்வது]

2] வகுப்பறைக்குள் உதவிக்கையேடாக இருக்கும் குறிப்புகளும் போதிக்கும் ஆசிரியருக்கு பெரிதும் துணை புரியும். ஆனால் அவ்வாறு துணை கிடைக்க, அவ்விரு ஆக்கங்கங்களையும் நன்றாக உள்வாங்கி தன்னை தயார் செய்துகொண்ட ஆசிரியர் ஒருவரால் தான் மிகச்சிறப்பாக மற்றும் எளிதாக  வகுப்பைக்கையாள இயலும் .. உள்ளத்தில் தெளிவு ஏற்பட நல்ல பரிச்சயம் ஒரு மகத்தான வடிவமைப்பு க்கருவி என்பதை ஆசிரியர்கள் உணர்தல் நலம் .

2 செயல் ரீதியான கட்டமைப்பு

FUNCTIONAL ORGANIZATION

இதுதான் ஆசிரியர், பலர் முன்னிலையில் வெளிப்படுத்தும் செயல் வடிவம். எனினும், முன்னது வலுவானதெனில் பின்னது வீரியம் காட்டும். எனவே மனதளவில் இருக்கும் கட்டமைப்பு, செயல் திறனுக்கு அச்சாரம்.                                செயல் வடிவம் சிறப்பு பெற சில செயல் நுணுக்கங்கள் தேவை..

ஒவ்வொரு வகுப்பு துவக்கத்திலும், முந்தைய பகுதியை 1 நிமிடம் நினைவுபடுத்திவிட்டு துவங்குவது மிக எளிதாக தகவல் தொடர்ச்சியை அமைக்கும். குறிப்பாக கால் ஆண்டு /பொங்கல் விடுமுறை போன்ற நிகழ்வுகளுக்குப்பின், பாடங்கள் சற்று மறந்த நிலையில் தான் வகுப்புக்கு வருவோர் அநேகர்.மேலும் ஒரு பொருளின் தொடர்ச்சியாக புதியபகுதி அமையும் பொழுது grasp எனும் உள்வாங்கும் திறன் சற்று மங்கியிருக்கும் .அதனையும் உயிர்ப்பித்து விட்டு தொடர்ந்தால், மறதியின் தாக்கம் குறைக்கப்பட்டு பயில்வோர் மனதில் -இனி நன்கு புரிந்துகொள்ள வேண்டும் எனும் வேகம் மேம்படும். இதனை தவிர்த்துவிட்டு புதியபகுதியில் நுழைந்தால் மாணவர்கள் முற்றாக ஈடுபாடு செலுத்தாமல் 'ஏனோதானோ ' என்றிருந்து ,ஆசிரிய முயற்சி வீணாவது ஒன்றே நிகழும். 2 வகுப்புகள் கடந்து இன்னொருவாட்டி சொல்லுங்க சார் என்று கோரிக்கைவைக்க, ஆசிரியர் மனநிலை எவ்வாறிருக்கும் ? நீங்களே சிந்தியுங்கள்.

2 இதனை செயல்படுத்த முதலில் மென் குரலில் துவங்கி 2, 3 நிமிடங்களில் ஆசிரியரின் குரல் உச்சம் எட்ட வேண்டும். இது கண் அயரும்   சோம்பேறிகளை தட்டி எழுப்பும்.

அப்படியும் தூங்கினால் பாடம் குறித்து பேசுவதை நிறுத்திவிட்டு , அமைதியாக நின்றுகொண்டு தூங்கும் நபரையே உற்று நோக்குங்கள்.  சுமார் 1 நிமிடத்தில் அந்நபர் [ஆணோ /பெண்ணோ] உள்ளுணர்வால் உந்தப்பட்டு தான் பிறர் கவனிக்கும் நிலைக்கு வந்ததை எண்ணி கூச்சமும் அச்சமும் கொண்டு சாரி சார் என்பார். என்ன நல்லா தூங்கி யாச்சா ? என்று மட்டும் கேளுங்கள் , அது அனைவரையும் சிந்திக்க வைக்கும். இதற்க்கு என்ன தண்டனையோ ? அது எப்போதோ? என்று நடுங்குவர் . ஆனால், தூங்கும் பண்பு அந்த வகுப்பில் இருந்து அகன்றுவிடும்.

இன்னொரு கவனமின்மை -இருவர் பேசிக்கொண்டிருப்பது. இது ஒரு வியாதி -பரவும் தன்மை உடையது.

கல்யாணம் பேசும் சம்பந்திகள் போல இருவர் தங்களுக்குள்ளேயே [வகுப்பில்] பேசுவது அவ்வப்போது நிகழும்.

அதுவும் ஆசிரியர் ஏமாளி எனில் 80% பயில்வோர் வகுப்பை கவனிக்காமல் பொழுதுபோக்குவர். அது ஏமாளி நிலையில் இருந்த அவரை கோமாளி நிலைக்கு தள்ளிவிடும். அவ்வாசிரியர்கள் வகுப்பு என்றாலே கசமுசா ஒலி தான் மேலோங்கி அக்கம் பக்கம் வகுப்புகள் நடக்கமுடியாத அளவிற்கு இடையூறு ஏற்படும். அதன் பின்னர் அவ்வாசிரியரின் பணிக்கே இடையூறு ஏற்படும் அல்லது அவர் வகுப்பு மைதானத்தில் மரத்தடியில் என்று அட்டவணையில் குறித்து [time table ல் ] அவமானம் விளைவிக்கப்படும். இவற்றை செவ்வனே கட்டுக்குள் வைக்க இயலவில்லை எனில் இவ்வாசிரியர் சொல்வது எவருக்கும் புரியாவில்லை என்பது தெளிவாகிறது. ஒன்று அவர்கள் சிறப்பாக கற்றுத்தர முயலவேண்டும், இல்லையேல் வேறு வகை அலுவல்களுக்கு செல்வது உகந்தது. இன்றேல் மாணவர் வாழ்வு பாதிக்கப்படும். . .உயர்கல்வியில் இது போன்ற திறன் குறைந்த வர்கள் ஆசிரியராகத்தொடர்வது  தேச நலனுக்கு எதிரானது.

3 செயல் நாட்டம்

ஒவ்வொரு நாளும் சொல்ல வேண்டிய தகவல்களை முறையாக ஒழுங்கிபடுத்திவைத்துக்கொண்டு வகுப்பில் நுழைந்தால், ஆசிரிய கம்பீரம் எத்தகையது என பலரும் உணர்வர். மேலும், அவரிடம்  பயில்தலை வாழ்வின் பேறெனக்கருதி மகிழ்வர். ஏனெனில் அவ்வகை ஆசிரியர்கள் கூறும் தகவல்களை எளிதில் பிற வழிகளில் பெற இயலாது.. அத்தகைய ஆசிரியர்கள் தொடர்ந்து தகவல் மேம்பாடு செய்து பெரும்பாலும் updated நிலையில் இருப்பவர்கள். முறையான வரிசைப்படுத்தப்பட்ட புதிய தகவல் தொகுப்பு தான் அவர்களை பெரும் ஆசிரிய வல்லமைகளாக அடையாளப்படுத்தும்.

4 செயல் வீரியம்

தகவலை வழங்குவதில் ஆசிரியன் காட்டும் மொழித்தாக்கம் பலருக்கும் எட்டாக்கனி எனில் மிகையே அல்ல. ஆம் அவர்கள் பொறுக்கியெடுத்த வல்லமை மிக்க சொற்களை அள்ளி வீசும் வேகமும் நளினமும் ஆழ்ந்த தீவிர தேடுதலின் பலனாய் வாய்த்தவை. அனைத்தும் உலகளாவிய பாராட்டுப்பெற்ற நூல்களில் இருந்தே திரட்டப்பெற்று  , சந்தேகத்தின் விளிம்பு கூட நெருங்கவொண்ணா  தீப்பிழம்பென தோற்றுவிக்கும் ஞானச்சுடர் எனில் அவ்வகைத்தகவல் திரட்டுகளை வேறெங்கு தேடுவது? . எனவே ஒரு ஆசிரியன் தன்னை முறையாக வடிவமைத்துக்கொண்டால் , தொழில்நுட்பம் எவ்வளவு விரிவடைந்தாலும் மனிதன் ஆற்றும் ஆசிரியப்பணியை கருவிகள் ஆற்றிட இயலுமா ?

மனித மனம் சூழலின் தேவைக்கேற்ப செயல் உத்திகளை நேர்த்தியாக மாற்றி ஆற்றவேண்டிய கடமையை செவ்வனே செய்தல் போல் கருவிகளை வடிவமைக்க நினைப்பது வளமான கற்பனை;ஆயின் பயில்வோனின் தேவைக்கு ஏற்ப தகவலை எளிமையாக்கி தரும் ஆசானுக்கு இணை ஆசானே தான். அதனால் தான் வளர்ந்துவிட்ட நாடுகளில் கூட இன்னமும் ஆசிரியப்பணி மனிதர்கள் வசமே உள்ளது.

உன்னத வாய்ப்பன்றோ ஆசிரியப்பணி? ; அதில் போட்டியாளர் பலர் எனினும் வெற்றியாளர் ஓரிருவர் தான்.

ஏனெனில் அதற்கான விடாமுயற்சி பலருக்கும் வேப்பங்காய் எனில் வெற்றி ஏது?  அவ்வேலை வெட்டியே அன்றி  வெற்றி அன்று .

தொடரும்

அன்பன் ராமன்

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...