Tuesday, October 14, 2025

LET US PERCEIVE THE SONG -42

 LET US PERCEIVE THE SONG -42

பாடலை உணர்வோம் -42

அமைதியான நதியினிலே ஓடும் [ஆண்டவன் கட்டளை -1964] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி ,            டி எம் எஸ் ,பி சுசீலா

இதை பாடல் என்று சொல்லும் முன் இது பன்முனைப்போட்டி என்றால் வெகுவாக உண்மையை பிரதிபலிக்கும். இப்பாடல் படமாக்க ப்பட்டது  பழனி அருகில் உள்ள சிறு நதியில். ரயில் வரும் நேரம் பார்த்து [காத்திருந்து] சரியான தருணத்தில் படப்பிடிப்பை நடத்தியுள்ளார் டைரக்டர் ஷங்கர் [பழைய இயக்குனர்].ஆனால் சரணத்தின் பிற்பகுதிகள் தேக்கடியில் படமாக்கப்பட்டுள்ளன.

அதனால் என்ன? என்கிறீர்களா ?

அதை உணர்த்துவதும் பேசுவதும் தான் பாடல் விவாதத்திற்கு முக்கிய மான அடித்தளம். நடிக- நடிகை  .ஆடை, அணிகலன்கள், தலை சிகை அமைப்பு, மேக்கப் என்னும் முக அலங்காரம் அனைத்தும் மிக நேர்த்தியாக தொடர்ச்சி விலகாமல் காப்பாற்றப்பட்டுள்ளது.  காதலன் முதிய நபர், காதலி இளம் பெண் [பேராசிரியரை காதலிப்பவள்] படகில் முதலில் அடங்கி ஒடுங்கி அமர்ந்து இருக்கிறாள . போகப்போக நெருக்கமும் சுதந்திரமும் காட்டும் காட்சி அமைப்பு. இவற்றில் எங்கும் குறைகாண இடமின்றி செயல் பட்டுள்ள இயக்குனர்.

நடிகர்கள்

தேவிகாவும் , சிவாஜியும் தத்தம் நிலை உணர்ந்து உரிய இடைவெளியில் துவங்கி பின்னர் நெருக்கம் காட்டுவது இயல்பான நடிப்பில். அதிலும் துவக்கத்தில் பெண் "என்னை ஒன்றும் சமாதானம் செய்ய முயலவேண்டாம்" என்ற பாவம் காட்டுகிறார்   அதுவும் அதைத்தொடர்ந்து பாடல் வரிகளைக்கேட்டதும் மன நிலை மாறி இயல்பு நிலைக்கு திரும்பும் இரண்டு பதிவுகளிலும் மிக எளிதாக தேவிகா முத்திரை பதித்துள்ளார். சிவாஜி என்பதே முத்திரை தானே. இப்பாடலில் ஒரு நடை நடந்து தனது முத்திரையை சிவாஜி பதிக்க, திரை அரங்கில் அந்நாளில் விசிலும் கை தட்டலும் அன்றாட நிகழ்வு..

கவி  [கண்ணதாசன்]

இவன் கவிஞனா , கடவுளா என்று கேட்கத்தூண்டும் சொற்சுவையும், கருத்தாழமும் இவர் போல் காண்பது அரிது. ஆண்  பெண் பாடல்   இது .

காதல் பாடலா?

 இல்லை என்றோ ஆம் என்றோ சொல்லலாம் [என்ன குழப்புகிறாய் என்கிறீர்களா? நான் குழப்பவில்லை காட்சி அப்படி].

ஆண் வாழ்வின் யதார்த்தங்களை பேச, பெண்ணோ காதல் கொண்ட மனம் பற்றி பேச ஆனால் முரண் என்ற நெருடல் இல்லாமல் பயணித்த கருத்தாழம். இந்தக்கவிஞன் எப்படி மாறுபட்ட விளக்கங்களை ஒரே பாடலில் அமைத்து வெற்றி அடைந்தான் என்பது ஆழ்ந்து உணர வேண்டிய மனோத்தத்துவப்புள்ளி.

ஒவ்வொரு பொருளுக்கும் சூழ்நிலையில் நிகழும் திருப்பங்களை எவ்வளவு நேர்த்தியாக குறிப்பிடுகிறார் . அமைதியான நிலையில் ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் [ சுகமோ, சோகமோ அளவில்லாது போனால், ஆடும் [தள்ளாடும் ] என்று மனித மனம் பற்றி சொல்கிறார் . தென்றலில் அழகாக அசையும் தென்னங்கீற்றும் மரமும் , புயலில் சாய்ந்து சரிவதையும் அதே பகுதியில் உள்ள நாணலை யும் சுட்டுகிறார் அதாவது பக்குவம் இருந்தால் தடு மாற்றம்  ,தட மாற்றம் இரண்டும் இல்லை என்கிறார் ; அதற்கு நாணலை அடையாளம் கொள்கிறார் ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது -காற்றடித்தால் சாய்வதில்லை [கனிந்த மனம் வீழ்வதில்லை] எதையும் அளவோடு கைக்கொள்ளுதல் மனிதர்க்கு நல்லது என்று  என்றென்றும் நிலைக்கும் தத்துவம் ஆணின் பகுதியில்.

பெண்

நாணல் போன்ற பெண் நிலை என்று சொல்லி , அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்துவிடும்  

அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்ப நிலை மாறி விடும் என்று ஆதரவு அரவணைப்பு குறித்து பேசுகிறாள்

மாறுபட்ட உள்ளங்களின் நிலைகள் ஒரே பாடலில் ; இதைநெருடல் இல்லாமல் உலவ  விட்ட இடத்தில் இசை அமைப்பாளரின்  பங்களிப்பு வெகு சிறப்பானது. சிறிதும் முரண் பாடு இல்லா நகர்வு ட்யூன், குரல், கருவி கள் என்று ஒரு சுமுக ஒருங்கிணைப்பு

அமைதி மேலிட, ஒலிக்கும் சந்தூர் இசை [எம் எஸ் ராஜு -பல் திறன் கலைஞர் சாட் சாத் மாண்டலின் ராஜு வே தான்]. தொடர்ந்து ஒலி க்கும் குழல் பாடல் நெடுகிலும் வெகு சிறப்பாக பயணிக்க அதியற்புத ஒலிப் பதிவு உதவியுள்ளது. கருவிகள் இணைவதும் பிரிவதும் நம்மை பாதிக்காத வகையில் நாத சங்கமம் செய்து பாடலை கேட்பது ஒரு ரம்மியம். இது ஏன் டூயட் இல்லை ?

முதற்பகுதி டி எம் எஸ்ஸின் ஆதிக்கம்.,

பிற் பகுதி சுசீலாவின் மேலாண்மை.

சுசீலா வின்குரல்  துவங்கியதும் பாடலின் பரிமாணம் மாறுவதை உணரலாம் . டி எம் எஸ் "தென்னை இளங்கீற்றினிலே மற்றும் ஆற்றங்கரை மேட்டினிலே  இரு இடங்களிலும் கம்பீரத்தின் உச்சமும் வலுவான தொனியும் காட்டி மிரள வைக்கிறார். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இது போன்ற பாடல்கள் இனிமேல் கனவில் வந்தால் தான் உண்டு. பாடலை நன்கு ரசிக்க இணைப்பு இதோ 

AMAIDHI MELIDA

amaidhiyaana

https://www.youtube.com/watch?v=_z5wY52cYA8

QFR குழுவினரின் விளக்கமும் பாடலும் -கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=caR-CkvKKh4&list=RDcaR-CkvKKh4&start_radio=1 amaidhiyaana nadhiyinile qfr 741

 

 

No comments:

Post a Comment

LET US PERCEIVE THE SONG -42

  LET US PERCEIVE THE SONG -42 பாடலை உணர்வோம் -42 அமைதியான நதியினிலே ஓடும் [ ஆண்டவன் கட்டளை -1964] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர...