Thursday, October 8, 2026

POETIC SPLENDOUR -2

 POETIC SPLENDOUR   -2                  

கவி [தை] யின் நளினம்  -2      

பெண்   அத்திக்காய் காய் காய் ஆலங்காய்  வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ

 நீ என்னைப்போல் பெண்ணல்லவோ

பெண்   ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்

எங்கள் வாழ்வு ஏலக்காய் நறுமணம் போல வாழ வாழ்த்தி நீ ஒளி வீசு

ஜாதிக்காய் பெட்டகம் போல்

தனிமை இன்பம் கனிய க்காய் 

இவ்வரிகளுக்கு விளக்கம் தேவையில்லை. ஆனால்  ஜாதிக்காய் உள்ளிருக்கும் விதைபோன்ற பகுதியை எடுத்தபின்னரும் ஜாதிக்காய் மணம் அந்த ஓடு போன்ற பகுதியில் தொடர்வது போல் எங்கள் வாழ்வு மணம் பெற்று வாழ [வாழக்காய்] ஒளிவீசு         

ஜாதிக்காய் பெட்டகம் போல்

தனிமை இன்பம் கனிய க்காய் 

ஆண்     சொன்னதெல்லாம் விளங்காயோ

தூதுவழங்காய் வெண்ணிலா    சொன்னதெல்லாம் விளங்கிக்கொண்டு தூது வழங்கு [என்று கேட்க] தூது வளை காயின் பெயரை பயன் படுத்தியுள்ளார் கவி அரசர்.

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீ அல்லவோ

ஆண்    உள்ள மெல்லாமிளகாயோ

ஒவ்வொரு பேச்சுரைக்காயோ  என்று ஆண்  பாடுவது

மிக கவனமாக பதம் பிரிக்க வேண்டிய பகுதி

உள்ள மெல்லாம் மிளகாயோ = உன் உள்ளம் என்ன காரமும் கொடூரமும் கொண்ட மிளகாயோ

உள்ள மெல்லாமிளகாயோ= உள்ளமெல்லாம் இளகாயோ = மனம் இரங்கமாட்டாயா என்றும் பொருள் படுகிறது.

ஒவ்வொரு பேச்சுரைக்காயோ = உனது ஒவ்வொரு பேச்சும் சுரைக்காயோ [விசேஷ சுவையில்லை என்று பொருள்படும் ] 

ஒவ்வொரு பேச்சு  உரைக்காயோ [சிறிது கூட பேச மாட்டாயா என்பதே பேச்சு உரைக்காயோ = பேச்சுரைக்காயோ என்று சேர்த்து ஒலிக்கிறது .

வெள்ளரிக்காய் பிளந்தது போல்

 வெண்ணிலவே நீ சிரிக்காயோ

இது அந்தப்பெண்ணிடம் 'அவன்' கேட்கும் சலுகை

கொஞ்சம் சிரி யேன் , அப்போது வெள்ளரிக்காய்      பிளந்தாற்போல் உன்  சிறிய பல்வரிசை  தெரியுமே  என்று [ கொ ][கெ]ஞ்சுகிறான் 

பெண்   கோதை எனை காயாதே

கொற்றவரைக்காய்  வெண்ணிலா  என்னைக்காயதே கொற்றவரைக்காய்  =கொத்தவரை யின் காய் என்பதாக தோன்றினாலும் இங்கே 'கொற்றவரை' கொற்றவன்  அதாவது தலைவன் [கொற்றவரைக்காய் எனில் தலைவனை]  நன்கு காய்ச்சு என பெண் வேண்டுகோள் வைக்க

திடீரென்று சமரசம் வந்து விட்டது போலும்

இருவரையும் காயாதே

தனிமையில் ஏங்காய்  வெண்ணிலா

என்று இருவரும் பாடி மீண்டும் பாடல் பல்லவிக்கு திரும்புகிறது

இப்பாடல் திரைத்துறையில் ஒரு மைல் கல் ஆம் இலக்கிய நயமும் இலக்கணத்தரமும் கவியரசரின் மின்னல் வேக யாப்புத்திறனுக்கும்  ஒரு முற்றான சான்று இப்பாடல்.

2 இரட்டை டூயட் - 2 ஜோடிகள் திரையிலும் , பாடலிலும் டி எம் எஸ்,சுசீலா , பி பி ஸ்ரீனிவாஸ் , ஜமுனா ராணி , காட்சியில் சிவாஜி கணேசன், தேவிகா , பாலாஜி வசந்தி , இசை அமைத்த ஜோடி விஸ்வநாதன் ராமமூர்த்தி .

பாடலைக்கையில் வாங்கிய எம் எஸ்வி கவிஞரிடம்

யோவ் என்னய்யா ஒரே கொத்தவால் சாவடி விஷயமா அவரை , வாழ, அத்தி . கொத்தவரை அப்பிடி இப்பிடின்னு போய்யா நல்லாவே இல்லை என்று சொல்ல

கவிஞர் எம் எஸ் வியிடம்

டேய் உன் வேலையப்பார்றா     போய் ட்யூன் போடுடா பாட்டு பயங்கர ஹிட் ஆகும் என்று சொல்ல           [ Lyric first, tune next assembly  ]

எ ம் எஸ் வி

ட்யூன் தானே இப்பவே போட்டுர்றேன் என்று ம ள ம ள என்று காரியத்தில் இறங்க 10-12 நிமிடத்தில் பாடல் ரெடி             அப்புறம் என்ன

ரெடி ஒன் டூ என்று பாடல் பதிவேறியது. பட்டி தொட்டி எங்கும் இப்பாடல் அந்த1962  இல் தொடங்கி இப்போதும் ஆங்காங்கே முழங்கிக்கொண்டிருக்கிறது .

அப்போது சிவாஜி கணேசனின் அமெரிக்கப்பயணம் இருந்ததால் ஒரு 2 ம் தேதி தொடங்கி 12 ம் தேதிக்குள் [11 நாட்களில்]  மூன்று வேடங்களில் அன்றைய மெட்றாஸ் பாஷை பேசி நடித்தது இப்போதும் பேசு பொருள் .

எம் ஆர் ராதா 2 வே டங்களில் , 3 இடங்களில் படப்பிடிப்பு ஏக காலத்தில் செய்து ஒரு 15-16 நாட்களில் படம் தயாரானது.                                                                              இன்று  கோடிகளில் புரளும் எவராவது இப்படி உழைப்பார்களா ? மனசாட்சிப்படி       நி னைத்துப்பாருங்கள். 

பி ஆர் பந்துலு தயாரித்து இயக்கிய படம்.

இவை அனைத்தையும் தொலைத்துவிட்டு ஜெர்மனியில் பாடல் எழுதுகிறேன் பெல்ஜியம் நகரில் பாடல் பதிவிடுகிறேன் , ஐரோப்பாவில் ஆடுகிறேன் அமெரிக்காவில் ஓடுகிறேன், எப்படியோ தமிழ் சினிமாவை மூடுகிறேன் என்று கிளம்பாமல் இருந்தால் போதும் ஆண்டவா .

https://www.youtube.com/watch?v=PIhxavNyRwQ

https://www.youtube.com/watch?v=xtadbhZ_ISQ&t=278s movie scene  

 நன்றி அன்பன் ம வ

Wednesday, October 7, 2026

POETIC SPLENDOUR

 POETIC SPLENDOUR                      

கவி [தை] யின் நளினம்         

நமது வாசக அன்பர் திரு ரகுநாதன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இப்பாடல் குறித்து எழுத முனைந்துள்ளேன்

            “ அத்திக்காய் காய் காய் ஆலங்காய்  வெண்ணிலவே “

அறிந்தே செய்யும் தவறுகளில் இதுவும் ஒன்று. ஆம், எழுதும் திறனும் இசைஞானமு ம்  இல்லை எனினும் ஆசை யாரை விட்டது என்னும் வகை செயல் தான் இது.

இது போல் ஒரு சொல் வீச்சும் ஓசைநயமும் இசையின் இசைவும் எளிதில் சேராது.          மனித முயற்சியின் அதீத உச்சத்தின் சான்று இப்பாடல்.

தயவு செய்து ஏனோ தானோ வகை வாசகர்கள் ஒன்றைப்புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் அறிந்த முறைகளில் பாடலை அணுகுதல் சரியல்ல. ஆழ்ந்து அமிழ்ந்து சொற்கட்டுகளை பிரித்து / சேர்த்து  பார்ப்பதும் வேண்டும் '; அதோடு இசையின்பரிமாணங்களை வெகு நுணுக்கமாக கவனிக்கவேண்டும். அதற்கு நேரமும் மனமுமில்லை எனில் பாடலை கேட்காமல் செல்வதே பாடலுக்கு தரும் மரியாதை.

கோமாளிகளைப்போல அந்த நடிகர் நடிக்கிறார் இந்த நடிகை ஆடுகிறாள் என்று குதூகலிப்போர்  சினிமா பாருங்கள். இந்த ஒழுக்கம் பாடல் கேட்க முற்றிலும் அவசியம் ; இன்றேல் பாடல் கேட்கநினைப்பது அனாவசியம் சற்று நீண்ட பதிவு பொறுமை தேவை இதனை உள்வாங்கிப்படிக்க                            

 எனவே இரு பகுதிகளாக வெளிவருகிறது

இதோ விளக்கம்

பகுதி -1

பெண்   அத்திக்காய் காய் காய் ஆலங்காய்  வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ

 நீ என்னைப்போல் பெண்ணல்லவோ

ஆண்  அத்திக்காய் காய் காய் ஆலங்காய்  வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீ அல்லவோ

என்னுயிரும் நீ அல்லவோ

பல்லவியின் வரிகள் ஏதோ காய்களின் பெயருடன் துவங்குவது போல் தோன்ற, ஆழ்ந்து கவனித்தால் இது ஒருசிலேடை வகைப்பாடல். சிலேடையின் சிறப்பே ஒருசொல்லுக்கு குறைந்தது 2 பொருள்படும் தன்மையே

அத்தி மற்றும் ஆல  மரத்தின் காய்கள் போல் தோன்றினாலும் உண்மையில் பொருள் வேறு     சொல்லை பிரித்து பார்த்தால்  பொருள் மாறும்

  அத்   'திக்' காய் =அந்த திக்கில் /அந்த திசையில்        காய்  = காய்ச்சு , வேகவை

ஆலம் = விஷம் /எப்போதும்  காய்= காய்ச்சு , இத் 'திக்காய் =இத் திசையில் /இத்திக்கில்   காயாதே = காய்ச்சாதே /காயாதே  என்று நிலவிடம் பெண்ணும் ஆணும் கோருவதாக புனையப்பட்ட பாடல்

பெண்   கன்னிக் காய்  ஆசைகொண்ட பாவைக்காய்

அங்கே காய் அவரை காய்

மங்கை எந்தன் கோவைக்காய்    

காதல் வயப்பட்ட கன்னி [கன்னிக்காய் ]பெண்[ பாவை] க் [காய்] பெண்ணுக்காக /பாவைக்காக

அங்கே [அவன் இருக்கும் இடத்தில் ]காய்ச்சு , அவரை [அந்த ஆண் மீது] காய்ச்சு

மங்கை எந்தன்[ கோவை ] தலைவனை சுட்டு காய்ச்சு  என்று பெண் நிலவிடம் கேட்பதாக  பாவைக்காய் , அவரைக்காய் , கோவைக்காய் என்று கொடியில் விளையும் காய்களைக்கொணடே இந்தச்சரணம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆண்

மாதுளங்காய் ஆனாலும்

என்னுளம் காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீ அல்லவோ

மாதுளம் [மாது=பெண் இவளின் உள்ளம்] காயானா லும் என் உள்ளம் காய் ஆகுமோ என்னுளம் காய் ஆகுமோ     என்னை நீ காயாதே

பெண்  இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீ அல்லவோ

என்னுயிரும் நீ அல்லவோ

ஆண்    இரவுக்காய் உறவுக்காய் எங்கும் இந்த ஏழைக்காய்

நீயும் காய் நிதமும் காய் நேரில் மிற்கும் இவளைக்காய்

இரவுக்காய் [இரவுக்காக] உறவுக்காய் [உறவுக்காக ]ஏங்கும் [தவம் கிடக்கும் ] இந்த ஏழைக்காய் [வறட்சியில் இருப்பவன் எனக்காக] , தினம் தினம் காய்ச்சு இதோ எதிரில் இருக்கும் இவளைக்காய்[ச்சு] [வறுத்து எடு ]

பெண்   உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ

என்னை நீ காயாதே என்னுயிரு ம் நீ அல்லவோ

நான் கனிந்த பருவத்தினள் , என்னை காய் என்கிறா ரே என்று சீண்டல்

https://www.youtube.com/watch?v=PIhxavNyRwQ

நாளை  தொடரும்

POETIC SPLENDOUR -2

  POETIC SPLENDOUR    -2                    கவி [தை] யின் நளினம்   -2        பெண்     அத்திக்காய் காய் காய் ஆலங்காய்   வெண்ணிலவே ...