Sunday, November 30, 2025

MRUDHANGAM –A PERCUSSION INSTRUMENT

MRUDHANGAM –A PERCUSSION INSTRUMENT

மிருதங்கம் -ஒரு தாளவாத்தியக்கருவி

பாரம்பரிய தென்னிந்திய க்கலை யாம் கர்நாடக இசையில் முக்கிய /முதன்மை தாளவாத்தியக்கருவி மிருதங்கம் என்பதை அனைவரும் அறிவர். பொதுமேடைகளில் பெண்கள் தோன்றுவதில்லை என்ற பழைய மரபினால் பெண்களே இல்லாதஆண்,  கச்சேரிகள் தான் 1950 களில் மிக அதிகம் மற்றும் ஆதிக்கம். அதன் உச்சம் "நான் பாடகி களுக்கு மிருதங்கம் வாசிக்கமாட்டேன்" என்று சூளுரைத்து தன் கற்பைக்காத்துக்கொண்ட சில மிருதங்க ஜாம்பவான்களும் உண்டு. ஆனால் இன்று நிலைமை தலைகீழ். ஆம் மேடையில் பாடுவதென்ன ஆடவும் தயார் என்று கிளம்பிவிட்ட நாரீமணிகள் எண்ணில் அடங்காது. நான் ளம்பெண்களைக்குறிப்பிடவில்லை [கிழம்/பழம் வகை களை கோடிட்டுக்காட்டுகிறேன்]. அதனால் உனக்கென்ன? என்போருக்கு, - 'எனக்கொன்றும் இல்லை, மகளிர் நிலைப்பாடு வேறொருநிலையை எட்டியிருப்பதை சுட்டியுள்ளேன். எனக்கொன்றுமில்லை,குறையொன்றுமில்லை. மிருதங்கம் என்ன தவில், ஏன் நாதஸ்வரம் வாசிக்கும் மகளிர்    [பிள்ளையார் சுழி -பொன்னுத்தாய் ] பலர்.     

அவ்வளவு ஏன்? நம் நாட்டின் தேஜஸ் விமானிகளின் பட்டியலில் சுமார் அரை டஜன் பெண்கள் உளர் .குங்குமப் பொட்டுகுலுங்குதடி** என்ற பாடலை குங்குமப்பொட்டு குலுக்குதடி என்று சமீபத்தில் களமாடியவர்கள் அவர்கள்.

சரி, மிருதங்கத்தில் நாம் என்ன தெரிந்து கொள்வது என பார்ப்போம்.

மிருதங்கமும் பலா மரத்தில் தான் செய்யப்படுகிறது அதற்கும் தஞ்சை தான் தலைநகர். பெரும் வித்துவான்கள் தஞ்சையில் தஞ்சம் எனில் தவறில்லை. சில முக்கிய விவரங்கள்.

வீணை செய்வதற்கு தேவையான பலா மரத்தைவிட பெரும் தடிமனான மரம் அமைந்தால் தான் மிருதங்கம் செய்ய இயலும். ஏன் எனில் , வீணையின் அகன்ற பகுதி குடம் மட்டுமே. ஆனால் மிருதங்கமோ பீப்பாய் போல உருளை வடிவம் உடையது. எனவே உடல் பகுதி முழுமைக்கும்  ஒற்றை மரத்தினால் வடிவமைக்கப்படுகிறது. இது கோடரி வேலை அல்ல. மாறாக, கடைசல் முறையில் குடைந்து இருபுறமும் அகன்ற வாய் போல் திறந்திருக்கும்படி கடைந்தெடுப்பதால், இயந்திரக்கடைசலில் நிமிடங்களில் செய்யப்படுகிறது           னால் மரம்  நன்கு காய்ந்த பின்னரே வேலைக்கு உதவும் . குறைந்தது மூன்று மாதம் நன்கு காயவிட்டு பின்னர் வடிவமைத்தல் துவங்குகிறது. மரத்திற்கு எவ்வளவு டிமாண்ட் மற்றும் போட்டி இருக்கும் என்று உணரலாம்; மேலும் இணைப்பது ஓட்டுவது போன்ற 'சரி செய்தல்' எதுவும் வேலைக்கு உதவாது.  மிருதங்க தேவைக்கு பண்ருட்டி  பலா மரங்கள் தான்  உதவி வருகின்றன. ஆனால் வேலைப்பாடுகள் எதுவும் மிருதங்கத்தை அலங்கரிக்கத்தேவை இல்லை , காரணம் இரு புறமும் அமைக்கப்படும் 'தோல் பகுதிகள்" வலுவான வார் களால் வரிந்து இழுத்துக்கட்டும் அமைப்பு வெளிப்புறத்தில் அமைவதால் புற அலங்காரப்  பணிகள் கிடையாது. 

இரு புறமும் தோல் தகடுகள் போர்த்தப்பட்டு மிருதங்கம் தயாராகிறது. மூன்று வகை தோல்கள் பயன் படுகின்றன.  1, எருமை 2 ஆடு, 3 பசு இவை மூன்றும் ஒரு புறத்தில் ,மறு புறத்தில் பசுத்தோல் மட்டும் அமைப்பது என்பது பொதுவான நடை முறை. மூன்றடுக்கு தோல் அமைந்த பகுதியில் மையத்தில் கருப்பாக வட்டமாக 'சாதம் ' என்று அழைக்கப்படும் வில்லை போன்ற பகுதி மிக முக்கியமானது

தாளக்கட்டுகளை நிறைவு செய்யவோ அல்லது வேறு நடை மாற்றத்திற்கு முன்னரோ லேசாக ஒரு விரல் தொடர்பினால் 'டும்'  என்ற ஒலி எழுப்பி சுவை கூட்டுவார்கள். அது 'சாதம்' பகுதியில் ஏற்படுத்தும் அதிர்வின் பயனாக த்தோன்றுவது எனவே அதன் [சாதப்பகுதியின்] கலவையும் அடர் த்தியும்  மிகவும் கவனமாக படிப்படியாக கலவையை ஏற்றி ஏற்றி அடர்த்தியை கூட்டுவார்கள். கலைஞர்கள் சொல்வது "அதுக்கு ஒழுங்கா சாதம் போட்டால் , மிருதங்கம் நமக்கு சாதம் போடும் ".  சாதம் போடுவது கிட்டத்தட்ட மிருதங்கம் கட்டப்பட்ட [முறுக்காக வடிவமைத்த] பின்னர் தான்.

மூன்றடுக்கு தோல் பகுதியியல் உள்ளிருந்து வெளியே பசுத்தோல், ஆட்டுத்தோல் , எருமைத்தோல் வட்ட வட்ட வில்லைகளாக அடுக்கப்படும்., அவற்றை ஒரு இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து நெகிழச்செய்து மறுநாள் அடுக்கி வலுவான தோல் இழைகள் [வார்] கொண்டு கட்டுகிறார்கள் . இந்த வார் தோலி லிருந்து நீளமாக சுமார் ஒரு விரல் அகலத்திற்கு வாழை நார் போல் கிழித்து எடுக்கப்படுகிறது, நீண்ட மெல்லிய ரிப்பன் போன்ற வாரின் இரு தலைப்பகுதியிலும் தரையில் ஆணி மூலம் அடித்து நன்கு உலர வைக்கப்படுகிறது. நன்கு உலர்ந்த வார் தான் செம்மையாக வரிந்து கட்டி தோல் பகுதிகளை உலோகத்தகடுகள் போல் விறைப்பாக நிறுத்த உதவும்.  முதலில் எருமைத்தோலில் 4 துளைகள் 90 டிகிரி கோணங்களில் அமைத்து கட்டி பின்னர் சம இடைவெளிகளில் 8 புதிய துளைகளை அமைத்து அவற்றையும் வலுவாக தோல் இழைகளால் வரிந்து கட்டுமுன் எருமைத்தோல் நடுவில் வட்டமான பெரிய துளை அமைக்கின்றனர். பின்னர் வரிந்து கட்டி விட்டு ,எதிர் விளிம்பில் இதே போல ஊறவைத்த பசுத்தோல் வில்லை அமைத்து தோல் இழை வாரினால் வரிந்து கட்டிவிட்டு நாள்கணக்கில்  நன்கு காய வைக்கிறார்கள். அது தோலின் ஈரம் அகன்று வறண்ட விரைத்த நிலைக்கு வரும். ;அதுவே நல்ல நாதம் தரும். இதுபோன்ற நிலையில் 3 தோல் பகுதியில் மையப்பகுதியில் சாதம்வைத்து தேய்த்து கருப்பு தூளை சிறிது சிறிதாக வைத்து வட்டமாக தேய்த்து தேய்த்து மெல்ல மெல்ல அடர்ந்த கரும் பூச்சு அமைக் கிறார்கள்.  இப்போது சாதம் என்பது என்ன என பார்ப்போம். சுக்கான் பாறை என்ற வகை கற்களை மெலிதாக நுணுக்கி , கருப்பு நிற பொடியுடன் சேர்த்து அரைத்து குழைக்கப்படும் கலவை. அதை ஆட்டுத்தோல் மீது ஓட்டுவதற்கு சாதத்தை [நாம் உண்ணும் சோறு ] குழைத்து மைபோல் ஆக்கி தடவி அதன் மீது கருப்புக்குழைவை சிறுக சிறுக தேய்த்து வட்டமான அடர் வில்லை உருவாக்குகின்றனர். இதற்கு சுமார் மூன்று மணி நேர உழைப்பு தேவைப்படுகிறது. இந்த கலவையின் மிருதுத்தன்மை பொடியின் 'நைஸ்' அறவையைப்பொறுத்தது. பெரிய துகள்கள் எனில் நாதம் மாறுபடும்.  

 [வித் வான்கள் தேவைக்கேற்ப கலவை உருவாக்குகிறார்கள்].    

மேலும் மெல்லிய நாதம் கூட்ட எருமைத்தோலுக்கும் ஆட்டுத்தோலுக்கும் உள்ள இடைவெளியில் காய்ந்த மெல்லிய குச்சி துண்டுகளை ஆங்காங்கே செலுத்தி தோல்களுக்கிடையே இடை வெளி உருவாக்கி நாதம் சற்று மாறும்படி செய்கிறார்கள்

அதிக ஒலி வேண்டுமாயின் கருப்புபொடியில் சிறு சிறு உருண்டைகளை [ஒரே அளவில் தேர்ந்தெடுத்து] ஆட்டுத்தோல் மேல் , எருமைத்தோலுக்குக்கீழே வைத்து நாதம் கூட்டுகிறார்கள்    .                                                                                                                ஒவ்வொரு ஊரின் பருவ நிலை மாற்றங்களுக்கு ஏற்ப தோல் தொய்வோ விறைப்போ கொள்ளும். அதை சரி செய்ய குச்சிபோன்ற மரத்தூண்டும், சிறிய கருங்கல் குழவியும் உபயோகிக்கிறார்கள். முக்கிய தோல் பிணைப்புகளை மேலிருந்து கீழ் [முறுக்கேற்ற] கீழிருந்து மேல் [தளர்வு கொடுக்க] குச்சியை உரிய இடத்தில் வைத்து குழவியால் தட்ட, வேண்டிய மாற்றம் உருவாகும்.

மிருதங்கத்தின் பசுத்தோல் பகுதி [அதன் பெயர் தொப்பி] ஈரப்பதத்தில் தொய்வடையும். அதை சரி செய்ய ரவையை வைத்து தேய்த்து [கேசரி/உப்புமா ரவையை தான்] ஈரப்பதத்தை உறிஞ்சி முறுக்கேற்றி வேண்டிய நாதம் பெற வைப்பார்கள் அதற்கும் ரவை வைத்திருப்பார்கள் வித்துவான்கள். [கோயில் குருக்கள் விபூதிப்பை வைத்திருப்பது போல ]. 

கோபத்தில் சில பெற்றோர் தமது சிறுவர்களை எருமை மாடே என்று திட்டுவார்கள் . எதற்கும் தோள் கொடுக்க எவர் இருந்தாலும் மிருதங்கத்திற்கு தோல் கொடுத்து உதவுவது என்னவோ எருமை தான். எருமையின் மதிப்பு இகழ்வோர்க்கு தெரிவதில்லை. மிருதங்கத்தின் இரு புறமும் பாதுகாக்க இரு உரைகள், மொத்த உருவையும்  பாதுகாப்பாக வைத்து காக்க உரை இவற்றையும் தருகின்றனர் கருவி தயா ரிப்போர்.

இவற்றின் பல பகுதிகளை அறிய வீடியோ இணைப்புகள் கீழே.

https://www.youtube.com/watch?v=4L4QRz_52EQ making –jesudas [das]

https://www.youtube.com/watch?v=vLYUdkdoD_I   EPISODE 1

https://www.youtube.com/watch?v=k2I5zWpAMjo II MRIDHANGAM

**போனஸாக 'குங்குமப்பொட்டு குலுங்குதடி ' பாடல் இணைப்பு கீழே 

https://www.youtube.com/watch?v=MwtwEREnP8I 

*******************************************************************************

 

GINGER

  GINGER Ginger has a global value for its utility as a spice and also as a medicinal supplement in alleviating digestive disorders, slugg...