Saturday, October 8, 2022

கிளி ஜோதிடம் / ஜோதிடன்

                       கிளி ஜோதிடம் / ஜோதிடன்

அய்யய்யோ என்ன ஆச்சு இவனுக்கு, கே. கு மற்றும் க.கு ஆடிய கிளி விளையாட்டில் சிக்கிகொண்டானா இவன் என்று சந்தேகம் ஏற்படுகிறதா? இல்லை இல்லை, முற்றிலும் மாறுபட்ட ஒரு களத்தை ப்பார்வையிட்டால் என்ன என்ற அவாவின் விளைவே கிளி ஜோதிடம்/ ஜோதிடன். இரண்டிலும் நாம் ரசிக்க நிறைய உள என்பதால் பொறுமையுடன் தொடர்ந்து படியுங்கள். அவ்வப்போது கிளி ஜோதிடம்/ ஜோதிடன் நமதும் கண் முன்னே நிகழ்ந்தாலும் / தோன்றினாலும், நாம் அதை 'வேண்டாத ஒன்று என்பதாக கடந்து செல்வோம். இதற்கு பலகாரணங்கள் இருந்தாலும், இன்னும் நமது         [கா] ரணங்கள் மென்மையானவை என்பதும் ஒரு காரணி. அதாவது ஏகப்பட்ட ரணங்களை தாங்கிக்கொண்டு வாழ்பவன் / வாழ்பவர்கள் யாராவது நல்ல ஆதரவான சொற்களை சொல்லி ஆறுதல் தருவார்களா என்று அலையும் போது,, கிளி என்ன பல்லி ஜோதிடம் என்றாலும் அமர்ந்து கேட்பான். அதில் குறை காண்பதற்கோ, ஏளனம் பேசுவதற்கோ எதுவும் இல்லை என்றே நினைக்கிறேன்.

சரி, தினமும் காலை 7. 00 மணிக்கு, TV நிகழ்ச்சியில், பரிகாரம் சொல்ல தொலை பேசி எண் XXXXXXXXXX என்ற ஹை டெக் பீற்றல்களை விட கிளி ஜோசியம் ஒன்றும் கேவலமானது அல்ல, ஏனெனில் எந்த கிளிஜோசியனும், உங்களை வீடு தேடி வந்து, 3000/- ரூபாய்க்கு தாயத்து மந்திரித்து தருகிறேன், பச்சைக்கல்லை அணியுங்கள், ஈரத்துணியுடன் நான் சொல்லும் அந்தாதியை 48 நாட்களுக்கு உச்சாடனம் செய்து [இறுதியில் பிச்சாண்டி யாக] பயன் பெறுவீர் என்று உங்களை வயப்படுத்துவதில்லை.    

கி..ஜோ வைத்தேட எங்கும் முகவரி தேட வேண்டாம். ஆல மரத்தடி நிழலில், அல்லது கோயில் அருகில் மர நிழலில் எளிமையாக, ஆனால் கௌரவமாக . அமர்ந்திருப்பார், ஒரு அழகிய கம்பி சிறையில் 2 கிளி களுடன்.  நேர்த்தியாக வடிவமைக்கப்பெற்ற சிறிய பெட்டி, பாய் விரிப்பு, தலை விதியை பூடமாக சுமந்திருக்கும், நூலகம் அதாவது. சுமார் 30 சீட்டுகள் ஒரே வண்ண உரையில், ஒரு சிறிய பெருங்காய டப்பாவில் கிளிக்கு உணவு [தானியம்], ஒரு வாழைப்பழம், ஊதுபத்தி மணம் கமழ கையில் ஆன்மிக நூல், நெற்றியில் பட்டை, மையத்தில் குங்குமம், கீழே சந்தனக்கீற்று, கை  நிறைய [பித்தளை] மோதிரங்கள் அணி வகுக்க வசீகர குரல் கொண்டு பாடும் வல்லமையினன் நமது ஜோதிடன்..

கார்பொரேட் நிறுவனங்களின் வேலை நேரம் போல டாண் என்று காலை 8.00 முதல் 12 மணி வரை ஓரிடம், பின்னர் 3. 00 மணி முதல் வேறொரு இடத்தில், மற்றோர் மர நிழலில் அதே மனிதர்..                                    வித்தை காட்டும் கூத்தாடி முன் வட்டமாக இருப்பது போல்கூட்டம்  இருப்பதில்லை கிளி ஜோதிடர்களை சுற்றி.  பெரும்பாலும், கிராம பஞ்சாயத்து மேடைகளில் தான் கிளிஜோதிட ஆபீஸ். அதுவும்,  டூரிங் ஆபீஸ் ;  ஆம் அக்கம்பக்க திருவிழாக்கள் கிளிஜோதிடம், மற்றும் ரங்கராட்டின விளையாட்டுகளுக்கு நிரந்தர புகலிடம்.

சீசனுக்கு ஏற்றாற்போல், சிகை அலங்காரத்தை மாற்றாதவர்கள் கிளி ஜோதிடர்கள் . பாடிய குரலும், படிய வாரிய தலையும் கி.ஜோ களின் சிறப்பு அடையாளங்கள். மற்றுமோர் சிறப்பு, பஸ் கண்டக்டர் போல் வாங்க வாங்க என்று கூப்பிட மாட்டார்கள் கி. ஜோ கள்..

வந்தவர்க்கு ஜோதிடம் சீராக அருவி போல் கொட்டும். சந்தேகம் தோன்றினால் மீண்டும் அதே சொற்கள் நிதானமாக வெளிப்படும். தொழில் மரபாக பாண்ட் அணிய மாட்டார்கள் வேட்டியோ, லுங்கியோ அணிவார்கள்; பெரும்பாலும் வெள்ளை சட்டை, சட்டைப்பையில் கனமான பர்ஸ்; அதை பிரித்து விரித்தால் சுமார் ஒண்ணேகால் அடி  நீளம் இருக்கும்..

பழைய கிளி கூண்டுகள் 3 அறைகள் கொண்டவை. தற்போது அநேகமாக 2 அறையில். அமைந்த பெட்டிகள். அறை எத்துணை ஆயினும் கிளிகள் என்னவோ இரண்டு தான், பாலினத்திற்கு ஒன்றாக இரண்டிற்கும் பெயர்கள் தனித்தனியே, அழைப்பதும் பெயர் சொல்லித்தான்.. கிளி ஜோதிடத்தொழில்  வினோதமானது, எப்போது கஸ்டமர் வருவார் தெரியாது; பிற தொழில்களுக்கு உண்டு,  கி.ஜோ வுக்கும் , செருப்புதைப்பவருக்கும் , ஆண்டவன் மனது வைத்தால் தான் உண்டு..

ஜோதிடம் பார்க்க  வந்தவன் ஒரு ஓரமாக செருப்பை விட்டு விட்டு கி. ஜோவுக்கு, கும்பிடு போடுவான். சோசியம் பாக்கணும் என்பான். பாத்துரலாம் என்பான் கி. ஜோ. அய்யா பேரு ?- கி.ஜோ ,

வந்தவன் "செல்லத்துரை "

உடனே ஒரு அறையை திறந்து விட்டு, 'செல்லத்துரை என்ற பேர் ராசிக்கு ஒரு சீட்டை எடுடா முருகா " என்பான் கி.ஜோ. எல்லாம் எடுக்கலாம் இப்பென்ன அவசரம்  என்பது போல கிளி பக்கத்து அறை கிளியை பார்த்துக்கொண்டிருக்க, மீண்டும் “முருகா” என்று கூப்பிடுவான் கி.ஜோ.

முருகன் இப்போது தரையில் மெல்ல பக்க வாட்டில் இடுப்பை ஆட்டி ஆட்டி நகர்வான். சீட்டு அடுக்கு பக்கத்தில் போய் நிற்பான்; அங்குமிங்கும் பார்த்து விட்டு, ஒவ்வொரு சீட்டாக அலகினால் இழுத்து கீழே தள்ளுவான்.. திடீரென்று ஒரு சீட்டை கவ்விக்கொண்டு கி. ஜோ அருகில் போய் கீ என்று கத்துவான். கி.ஜோ சீட்டை வாங்கிக்கொண்டு, ஒரு தானியத்தை முருகனுக்கு ஊதியமாக தருவான். மீண்டும் முருகன் அறைக்குள் செல்வான். இன்னொரு கிளியின் பெயர் - செல்லம்மா

  சீட்டை பிரிக்காமலே பாடுவான்   கி.ஜோ

சீட்டை பிரித்து விநாயகன் படத்தை காட்டிக்கொண்டே பாடுவான்                                                

                அண்ணன் செல்லத்துரைக்கு

             அன்பு தம்பி விநாயகன் வந்திருக்கான்

         “ சொன்ன    சொல்லு மாறாம சொந்த பந்தம் நாடாம

      வந்த பந்தம் துணையோடு, வாழ்வினிலே போராடும் துரையே நீ

       மொறையாகக்கரையேற வகையாக வாழ்ந்    தீடுவாய்,,

          பகை ஏது  செய்தாலும் புகை யாக ஓடிடுமே

          சிந்தையிலே சிறிதளவும் சஞ்சலமே வேணாமய்யா

        பஞ்சணையின் சுகம் போல பக்குவமா சொல்  லீடுவேன்

          சத்தியமா உனக்கு நான் சாட்சியமா நின் றீ டுவேன்

         முருகனவன் துணையாலே கருகிடுமே பகை யாவும்.

         பழனியிலே பார்த்து நீ சோதரனின் ஆசி வாங்கி

 நம்பிக்கை  யாய்  வாழ்ந்தீடவே , தும்பிக்கையான் வாழ்த்தீடுறேன்.”

என்று சரளமாகப்பாடும் போது , மனம் அமைதி கொள்ளாதா? நம்பிக்கை யை விதைக்கும் வண்ணம் சீரான நடையில் பாடும் அந்த நளினம் துயர்கொண்டவனை அமைதிப்படுத்தும். மன வக்கிரங்களைக்குறைக்கும் . பட்ட துயர் விலகும் என இறைவன் வழங்கிய உத்திரவாதமாக மனம் அமைதியுறும்.. 

“பழனில போய் முருகனை கும்பிடுங்க , வந்த துன்பம் சுவடில்லாம விலகும்” என்று ஆறுதல் சொல்வான் கி. ஜோ. இதை விட அமைதி சேவை உண்டா.?

ஒருவன் பிழைப்புக்கு எதையோ சொல்கிறான் என்றே வைத்துக்கொண்டால் கூட ஆயிரக்கணக்கான ரூபாய்களை வாங்கிக்கொண்டு ஏமாற்றாமல் ஏதோ ஒரு 5 ரூபாயில் ஆறுதல் கிடைப்பதை ஏன் வெறுக்க வேண்டும். THEY ARE CHEATS என்று வாதிடுவோர் வேறு எங்குமே உண்மை தவிர வேறில்லை என்ற உத்திரவாதம் தர முடியுமா? ஏழைகளின் பிழைப்பை ஏளனம் செய்யாமல் இருப்போம்.   நன்றி. 

பேரா. ராமன்

2 comments:

  1. Enjoyed reading the deep observation of a common place activity.

    ReplyDelete
  2. என்னய்யா ஜோசியரே கிளிக்கு எப்படி ஜோசியம் தெரியும் என்று ஜோசியர் பக்கத்தில் நின்று கொண்டிருந்தவன் கேட்டான்..நீ 10ரூபாய் கொடுத்து கிளிகிட்ட கேளு அப்புறம் தெரியும் கிளி ஜோசியம் எப்படீன்னு.
    ராசா ஐயாவுக்கு ஒரு கார்ட் எடுத்துப்போடு
    கமலஹாசன் படம் போட்டகார்டெ கிளி எடுத்துக்கொடுத்தது.
    ஜோசியன் கார்ட்லிலுள்ளதை படிக்கவும்
    வந்தான் மெதுவாக நகர ஆரம்பித்தான்
    எல்லாம் கெட்டதையே சொல்ல அதற்கு பரிகாரம் பண்ணலாம் என்றான் ஜோசியன்
    பரிகாரம் பண்ணனும்னா 1000ரூபாய் செலவாகும் என்றதும் இடத்தைவிட்டு நகர்ந்தான் ஜோசியம் பார்க்க வந்தவன்
    வெங்கட்ராமன்

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-23

  TEACHER BEYOND YOUR IMAGE-23 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-23 அன்பர்களே இதுகாறும் ஆசிரியப்பணியில் ஆசிரியர் மேற்கொள்ள உகந...