Saturday, January 14, 2023

EAST STREET MARKET

 EAST STREET MARKET

கீழத்தெரு மார்க்கெட்

மாலை மணி சுமார் 5.15 இருக்கும். மாலையில்  ஆற்றின் கரையோர கிராமங்களில் இருந்து சில கீரை வகைகள், பச்சை மிளகாய் , கொத்துமல்லி வகைகளை கூடைகளில் வைத்துக்கொண்டு சில பெண்கள் விற்பனை செய்ய வந்தவர்கள் , அலுப்பு காரணமாக டீ அருந்திக்கொண்டிருக்க , நீலகண்ட ஐயர் வந்து இறங்கினார்            சைக்கிளி ல் இருந்து .

ரெண்டு நிமிசம் சாமீ என்றாள்  கீரை /மிளகாய் விற்கும் பொன்னம்மாள். அந்தப்பெண்மணிக்கு ஐயர் மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் உண்டு ; ஏன் என்றால் , கீரை வகைகளை எப்படிப்பார்த்து வளர்க்க வேண்டும், பூச்சி வந்தால் ரசாயனம் கலக்காமல் எப்படி காப்பாற்ற வேண்டும் என விரிவாக விளக்கி, மேலும் ஒரு தீபாவளிக்கு அவர்கள் பயிர்களை நேரில் பார்த்து, சில வழி முறைகளைச்சொல்லி , தீபாவளிப்பரிசாக 100/- ரூபாய் வீதம் பொன்னம்மாளுடன் தினமும் விற்பனை செய்யும் 5 பேருக்கு கொடுத்து, அவர்களும் நீ ஐயர் வழிகளைக்கடைப்பிடித்து நல்ல முன்னேற்றம் கண்டிருந்தனர். அவர் சும்மா கேட்டால் கூட விளை பொருட்களை காசு வாங்காமல் தருவதற்கு தயங்க மாட்டார்கள்

இந்தக்கிழம் இங்கும் வந்து ஆதிக்கம் செலுத்தப்பார்க்கிறதா என்று கோபம் கொப்பளிக்க நறநறத்தாள் சயன்ஸ் டீச்சர்.. ஐயர் அவளைப்பார்க்காத மாதிரி  நின்றிருந்தார்.

ஒண்ணு  வாங்கணும் இல்லேன்னா வழிவிடணும் , இதென்ன டீசன்ஸி இல்லாம கடைய மறைச்சு நிக்கறது என்று   பண்பு குறித்து டீச்சர் வியாக்யானம் செய்ய, பொன்னம்மா "என்னம்மா வேணும் ?" என்றாள் .

"எனக்கு வாழைப்பழம் வாங்கணும் "-டீச்சர்

பொன்னம்மாள் "கீரைக்கடையில " வாள  ப்பள ம்வாங்க வந்தியாம்மா ? அதுக்கு ஏன் பெரியவரை டீஜென்ஜி அது இதுனு கத்தற ? போம்மா அங்குட்டு மூலைல வாள ப்பள  கடை இருக்குது "- பொன்னம்மா  

உனக்கு ஏன் பொத்துக்கிட்டு வருது?" “உங்க அப்பாவா அவரு”-- - -டீச்சர்

பெரியவங்கள இப்பிடி தான் பேசுவியா ? ஒனக்கு ஊட்டுல தாய்  தகப்பன் இல்லையா ? நீ என்ன சொடலைமாடன் மாதிரி சொயம்பு வா -வாய் ரொம்ப போகுதே , இதெல்லாம் நல்லதில்லை ஆமாம் சொல்லிப்புட்டேன் என்றாள் பொன்னம்மாள்.

"உங்க அப்பாவா அவருனு கேட்டேன்-பதில் சொல்லாம ஏதேதோ பேசுறயே ?"-டீச்சர் 

"அப்பாவா அதுக்கும் மேல ,கடவுளா வந்தவரு அவரப்போயி மறுவாதி இல்லாம பேசறியே நீ நல்லா  இருப்பியா  நாற வாயீ -போடீ அங்குட்டு , எந்திருச்சு வந்தேன்னா , கீள தள்ளி களுத்துலியே மீதிச்சி ஒன்ன  பொலி போட்ருவண்டீ , வந்த எடத்துல வியாபாரத்தப்பாக்கலாம்னு பாத்தா வந்துட்டாளுக , வாளப் பள ம் வாங்கறவ மொகரையப்பாரு -த் தூ”   என்று சாபமிட்டாள்.

டீச்சர் பயந்து நடுங்கி ஓடி விட்டாள் .

பாருங்க சாமீ என்னா பேச்சு பேசுது களுத - சோறு தான் திங்கிதோ என்னாத்த திங்குதோ ?

சரிம்மா அவாளுக்கு தெரிஞ்சுது அவ்வளதான் , நீ ஏன் கோவப்படற ? பகவான் பாத்துப்பான் என்றார் நீ. ஐயர் .

பகவான் என்னக்கி வந்து இவளப்பாக்கறது , நாலு சத்து சாத்துனா , மூடிக்கிட்டு ஓடிருவா , இவளையெல்லாம் பேசவிடக்கூடாது சாமி.

3 கீரை வகைகள், கொத்துமல்லி, மிளகாய் வாங்கிக்கொண்டு மெல்ல நடந்தார் ஐயர்.

இத்தனை களேபரத்தில் வாழைப்பழங்கள் அநேகமாக விற்றுத்தீர்ந்தன, இருந்தது ஒரு சீப்பு பூவன் பழம் மட்டுமே. மறுநாள் வரலக்ஷ்மி பூஜை , இந்த டீச்சர் தேவை இல்லாமல் பேசி வாங்கிக்கட்டிக்கொண்டு கர் புர் என்று பெருமூச்சு  விட்டு கையில் பழத்துடன் நடக்க , பின்னால் சைக்கிள் தள்ளிக்கொண்டு நீ.   நடந்து வர, திடீரென்று பாய்ந்து குரங்கு ஒன்று வாழைப்பழ சீப்பை பிடுங்கிக்கொண்டு , பக்கத்து ஸ்கூட்டரில் உட்கார்ந்து மடியில் பழத்தை வைத்துக்கொண்டு கிள்ளி தின்னத்தொடங்கியது.

டீச்சர் சூ சூ என்றாள் , குரங்கு கண்ணை பெரிதாக விழித்து, பல்லைக்காட்டிக்கொண்டு ப்ரர்ர்ர் பர்ர்ர் ச்யூப் ச்யூப் என்று மிரட்ட டீச்சர் ஐயோ என்ன செய்வேன் இப்போ மார்க்கெட்ல கூட பழம் இல்லையே என்று திகைத்தாள்..

ஐயர் சைக்கிள் நிறுத்திவிட்டு, ராமா குடுறா என்றார், குரங்கு மந்திரத்துக்கு கட்டுப்பட்ட ஜீவன் மாதிரி சீப்பை அப்படியே ஐய்யரிடம் கொடுத்துவிட்டு  , ஓரமாக உட்கார்ந்து கொண்டது .

இந்தாம்மா பத்திரமா பைக்குள்ள வெச்சு கொண்டுபோம்ம்மா என்று டீச்சரிடம் கொடுத்தார்.

நன்றி சொல்லும் பண்புகூட இல்லாதவள் அந்த டீச்சர்.

ஐயர் இப்போதும் சிரித்தார்.                               நன்றியுடன் அன்பன் ராமன் 

 

 

No comments:

Post a Comment

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...