TEACHER BEYOND YOUR IMAGE-24
ஆசிரியர்- உங்கள் பிம்பத்தை தாண்டி-24
அன்பர்களே
பிற பணிகளில் இல்லாத ஒரு 'இறுக்கமான சூழல் 'ஆசிரியப்பணிக்கு உண்டு. பிற பணியாளர்
அரைகுறை மேலாடையுடன் கடைக்கு சென்று வரலாம், கண்ட இடங்களில் நின்று கொண்டு எந்த அரசியலும்
பேசலாம். தெருக்குழாயில் பிறரிடம் வாதிடலாம், மோதிடலாம் --இது எதையும் ஆசிரியர் பிறர்
போல் மேற்கொள்ள இயலாது.அந்த சூழல்களில் , ஆசிரியரும் சராசரி மனிதன் தானே என்ற எண்ணம்
அறவே அகன்று , ஐயோ ஆசிரியரா இவர், இப்படி பேசுகிறாரே , சண்டை இடுகிறாரே , கூசாமல் கீழ்த்தர
சொற்களை உதிர்க்கிறார் என்று திடீரென்று ஆசிரியரை பெரும் உயரத்தில் வைத்துப்பேசுவது
போல் நடந்துகொள்வார்கள். அதே நேரத்தில் தபால் அலுவகத்திலோ, வங்கியிலோ, மருத்துவர் ஆலோசனைக்கோ
காத்திருந்தால் , அப்போது அவர் மட்டும் என்ன , வானத்திலிருந்து குதித்தாரா? வரிசையில
வரட்டும் என்று நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு ஆசிரியனை சராசரிக்கும் கீழே வைத்து கருத்தியலை
சமுதாயம் உருவாக்கும். நாம் உணர வேண்டியது யாதெனில் ஆசிரியர் என்ற அடையாளம் போதிக்கும்
இடங்களில் அதுவும் போதிக்கும் போது மட்டுமே என நினைவில் நிறுத்துதல். ஆசிரியனுக்கு
எந்த விசேஷ சமுதாய அங்கீகாரமும் கிடையாது. இப்போதெல்லாம் சமூக அங்கீகாரம் ஒருவர் எவ்வளவு
சொத்து சேர்த்துள்ளார் / எவ்வளவு அசுரவேகத்தில் பொருள்/ நிலம் மனை வீடு என அசையா சொத்துகளை
வாரம் ஒன்றுக்கு வாங்கிக்குவிக்கிறார் போன்ற குறியீடுகள் கொண்டே நிர்ணயம் ஆகிறது. இவை
தவிர ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அது போன்ற ஊழல் அதிகாரியிடம் ஏதேனும் கோரிக்கை நிறைவேற்றிக்கொள்ள
நேர்ந்தால், ஆசிரியர் என்றதும் ஏதோ ரேஷன் கடையில் உலவும் எலியைப்போல நம்மை பார்ப்பதை
உணரலாம். எனவே ஆசிரிய பிம்பம் என்பது வலுவான
அமைப்பாக முழு அங்கீகாரம் பெறுதல் என்பது நம்மிடம் பயிலும் மாணவ, மாணவியர் இடம் தான்.
அது செயல் திறன் அடிப்படையில் மட்டுமே வலுப்பெறுகிறது என்பதனால், நமது செயல்கள், பயிற்றுவித்தல்
மற்றும் பொது வெளிகளிலும் முற்றிலும் தரமானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்..
இங்கே பொது வெளி என்பது வகுப்பறைக்கு வெளியே என்ற கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளப்பட
வேண்டிய ஒன்று. அதாவது நூலகம், உணவகம், வளாகத்தில் உள்ள வங்கிக்கிளை, வாகன நிறுத்துமிடங்கள் போன்ற வற்றிலும் நமது செயல்கள்
கூர்ந்து கவனிக்கப்படுகின்றன என்று மனதில் நிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் .
இதன் ஒரு முக்கியமான தருணம் கல்விச்சுற்றுலா [educational tour] ஆகும்
இரு பாலர் பயிலும் துறைகளில் கல்விச்சுற்றுலாவை மிக கவனமாக கையாள வேண்டும்.
இருபாலரையும் தனித்தனியே அழைத்துச்செல்ல முடியாது கூடாது. ஆனால் என்ன செய்ய முடியும்
எனில் , ஆசிரியர்களில் ஆண் பெண் இருவரும் இடம்
பெற வேண்டும் . தங்குமிடங்களில் , வேவ்வேறு பகுதிகளில் அறைகள் இருக்கும் இடங்களை தேர்ந்தேடுத்தல்
அவசியம் . அதே போல இரவு 8 மணிக்குள் அறைக்கு வந்து பின்னர் இரவு நாவை முடித்து அவரவர்
அறைகளில் வருகைப்பதிவு சரி பார்க்கப்பட வேண்டும். ஆகவே ஒவ்வொரு அறையிலும் இன்னார் தங்குகின்றனர்
என்பதை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். அன்றாடப்பணியில் நீங்கள் திறமையானவர் எனில்
உங்களின் அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படும். இல்லையேல் நீங்கள் என்ன சொன்னாலும் எதிரிடை
செயல்களில் ஈடுபட்டு உங்களின் உறக்கமும் உடல் நலனும் பாதிப்புக்குள்ளாகும்.. இன்னொன்று
எந்த செலவினத்திற்கும் நீங்கள் பணம் கையாள்வதை தவிர்த்து இரு மாணவர்களை பணம் கையாளும்
சுற்றுலாச்செயலர் என்று மாணவக்கார் விருப்பப்படி நியமித்துவிடுங்கள். அப்போது தன் விருப்பத்திற்கு ஆட்களை அமர்த்திக்கொண்டார் என்று யாரும் பேச முடியாது.
மேலும் எந்த ஒரு செலவினத்திலும் ஆசிரியர் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டார் அல்லது
சுருட்டிவிட்டார் என்று பேச இடம் இருக்காது. மேலும், மாணவர்களே நேரடியாக கணக்குகளை
பார்த்துக்கொள்வதால், உங்களின் நேர்மையை சந்தேகிக்க இயலாது.
இன்னொன்று, சில ஊர்களில் தான் சில பழங்கள்.
காய்கள், ஆடைகள் போன்றவற்றை வாங்க முடியும். அப்படி நீங்கள் வாங்க வேண்டி வந்தால் மாணவ
மாணவியரை கடையில் வெளியே இருக்கச்சொல்லி நீங்கள் மட்டும் உள்ளே சென்று வேண்டியதை வாங்கி
விட்டு பணம் செலுத்திவிட்டு உரிய ரசீதுடன் வாருங்கள். என்ன சார் வாங்கினீர்கள் என்போரிடம்
விவரம் சொல்லுங்கள். தேவைப்பட்டால் அவரவர் வாங்கிக்கொள்வர். நமது நிதியில் இருந்து
ஆசிரியர் தனக்கு வாங்கிக்கொண்டு விட்டார் என்று எண்ணசிறிதும் இடம் கொடாதீர்கள். ஆசிரியர்கள்
இதுபோல் நம்மை வஞ்சிப்பார்கள் என்று பலர் நம்புகின்றனர். இவற்றை பேசி விளக்குவதை விட வெளிப்படையாக செயல்
படுத்துதல் எளிது.
மேலும் அவர் நெருப்பு ஐயா, என்று அவர்களே உங்களை பெரிதும் உற்ற தலைவராக ஏற்பர்.
உங்களின் ஒவ்வொரு சொல்லும், முற்றாக ஏற்கப்படும். நேர்மைக்கும் நேர்மையாளருக்கும் இறைவனே துணை ஆனால் நேரடியாக உங்களை எப்போதும் பார்த்து
க்கொண்டிருப்போர், மனதார உண்மையை அறிவார்கள். இவற்றை ஏன் சொல்லுகிறேன் என்றால், ஆசிரிய
பிம்பத்தில் நேர்மையையும் நடுநிலையையும் பார்த்து பிறர் வழங்கும் பெருமதிப்பு ஈடற்றது..
ஆக, ஆசிரிய பிம்பம் என்பது தவப்பயன் போன்றது முறையான செயலும் தியாகமும் கட்டமைக்கும்
பிம்பம் வலுவானது. அதுவே பிறர்க்கும் வழிகாட்டியாகும் .
ஏதோ நான் அறிந்தவற்றை அனுபவங்களை பகிர்ந்துள்ளேன். ஏற்பெனில் கொள்ளுங்கள், இன்றேல்
தள்ளுங்கள்.
இறையருள் ஆசிரியர்களை வழி நடத்தட்டும் .
நிறைவு
நன்றி
அன்பன் ராமன்
No comments:
Post a Comment