Tuesday, June 24, 2025

LET US PERCEIVE THE SONG -28

 LET US PERCEIVE THE SONG -28           

பாடலை உணர்வோம் -28

கண்ணும் கண்ணும் கலந்து [வஞ்சிக்கோட்டை வாலிபன் -1959] பாடல் கொத்தமங்கலம் சுப்பு , இசை சி ராமச்சந்திரா , ஆர் வைத்தியநாதன்

படத்தை விட புகழ் அதிகம் கொண்ட பாடல் . அப்படி என்ன விசேஷம் பாடலில் ? எல்லாமே விசேஷம் தான்

ஆம் போட்டி நடனம் தான் பாடலின் உயிர்நாடி . அன்றைய நடன நாரிமணிகள் வைஜயந்தி பத்மினி இருவரும்

'உனக்காச்சு’ ‘எனக்காச்சு ' என்று கூவாத குறையாக அரங்கேற்றிய நடன ப் போர் என்றே சொல்லலாம்.

போரா?  கிட்டத்தட்ட அது போலத்தான்,  ஒருவரை ஒருவர் கை நீட்டி அறையாததுதான் பாக்கி  [ஒருவேளை அறைந்து கொண்டார்களோ என்னவோ தெரியாது].

அவ்வளவு உக்கிரம் பாடலில்/ நடனத்தில்.

பாடலின் பல்லவியைத்தாண்டி பலருக்கும் சரண வரிகளே சரியாக தெரியாது எனினும் பாடல் ஈட்டிய வெற்றிக்கு அளவே இல்லை. தெருவெங்கும் வானொலியில்,  முழங்கிய கீதம் 1959 இல் வெகு பிரபலம்

லீலாவும் ஜிக்கி யு ம் . இந்தப்பாடலுக்கெனவே பிறந்தவர்கள் போல காட்டிய போட்டி மனப்பான்மை குரல்/பாவம் இரண்டிலும்

கேரளத்து லீலாவும்,, ஆந்திரத்து ஜிக்கியும்  போரிட்ட தமிழ் பாடலை வடிவமைத்த பலர் வேறு மாநிலத்தவரே திரு கொத்தமங்கலம் சுப்பு ஒருவர் நீங்கலாக.

இசை அமைப்பாளர் [ஹிந்தி] நடனஆசிரியர் வடநாட்டு ஹீராலால் , ஒளிப்பதிவு எல்லப்பா [கன்னடர்] , பத்மினி [கேரளா],வைஜயந்தி [மைசூர்] வேறொன்றுமில்லை தேசிய ஒருமைப்பாட்டை உணர்த்த முயல்கிறேன் -உடனே அன்பர்கள் பொங்க வேண்டாம்..

இந்த ஒரு நாட்டியம் படத்தின் பெருமைக்கு ஊன்றுகோல் எனில் மிகை அல்ல.. பெண்களுக்கே உரித்தான போட்டி, பொறாமை , கோபம், வெறுப்பு, விட்டேனா பார் என்ற குரங்குப்பிடி அனைத்தும் இந்த ஒரே பாடலில் .எல்லோருடைய பங்களிப்பும் பாடலை தன்னிகரற்ற நிலைக்கு உயர்த்தியுள்ளதை  உணரலாம்  பெண்களுக்கே உரிய  மனப்பான்மையை நேர்த்தியாக வெளிப்படுத்திய பாடல்..

ஒவ்வொரு நிலையிலும், அடுத்தவளை மட்டம்தட்ட முயலும் யுவதிகள் -கோபமும், அலட்சியமும் வெடிக்க பாடி ஆடுகின்றனர்.

இம்மி பிசகாமல் பாருங்கள். இதோ துவங்கிவிட்டது மனப்போர் 

லீலா:  ஏனோ அதிசயமே….. ... காதல் என்பது இது தானோ ..அறியேனே என்று ஒன்றுமே அறியாத சிறுமி போல           அனுபவத் தை  மறைத்து  அனுமானத்தை மட்டும் காட்டும் குரல் நேர்த்தி. 

இவ்விடத்தில்

 'இவள் இப்படிப்பாடுகிறாளே நம்ப ஆளை இவள் வீழ்த்திவிட்டாள் போலவே என்று வைஜயந்தி ஜெமினியின் முகத்தைப்பார்க்க , ஜெமினியின் உல்லாசத்தை கண்டதும் வையந்தி ஒரு கை  பார்த்துவிடவேண்டியது தான் என்ற மனோ நிலையில்

வைஜயந்தி ஒப்பனையுடன் களமிறங்க ட்ரம்பெட் ஒலி க்க     வீரப்பாவால் பேசாமல் இருக்க முடியவில்லை

'சபாஷ் சரியான போட்டி ' என்று உரத்த குரலில் முழங்குகிறார்.

வீரப்பாவின் தேர்ந்த வசன உச்சரிப்பு வெறும் மூன்று சொற்களில் அமைந்து பல நாட்கள் சிலாகிக்கப்பட்ட "சபாஷ் சரியான போட்டி" -இப்போதும் கூட பிரமிப்பைத்தருகிறது சரியான வில்லன் வீரப்பா என நிறுவிய    கா ட்சி --- ஒருகையில் மதுக்கோப்பை யுடன் அவர் நடனத்தை ரசித்த பாங்கு -பார்த்துதான் புரிந்துகொள்ள இயலும் [பாடலுக்கு சம்பந்தமில்லா விடினும் வேறொரு காட்சியில் கம்பீரமாக குதிரையில் அமர்ந்த படி "கொத்த வால் --ஒரு பெண், அடிமைக்கு  தண்ணீர் கொடுப்பது குற்றமா? என்று வில்லத்தனமான திட்டத்துடன் கேட்பாரே அதுவும் பி எஸ் வீரகிப்பாவின் மறக்கவொண்ணாத நடிப்பு].     

ஜிக்கி:   ஜிலு ஜிலு வென்று ஜோராய் ஜெகத்தை மயக்கிடுவேனே பின்னர் ஆடுவேன்  பாரடி, பாடுவேன் கேளடி என்று சவால் விடும் தொனியில் மிடுக்காய்ப்பாடி எதிராளியை மிரளவைக்கும் ஸ்டைல் .

இப்படி இரண்டு பெண்களும் பாடல் முழுவதிலும் 'போடி'--'வாடி'  ரேஞ்சுக்கு சொல்லாடுவது மட்டும் அல்லாது முகத்தை முறுவலிப்பதும், , வாயைக்கோணி -'போடி சரிதான்' என்று துச்சமாக மதிப்பதும் மிக நேர்த்தியாக அவ்வப்போது இடம் பெற்று பாடலில் ஜீவன் மேலோங்கி நிற்கிறது.

பாடகிகள் ஒரு புறம் நடிகைகள் ஒரு புறம்எனினும்  நடன ஆசிரியர்  ஹீராலாலின் பங்களிப்பு மிகுந்த பாராட்டுதலுக்குரியது.

எண்ணற்ற நாட்டியப்பாடல்களுக்கு டான்ஸ் மாஸ்டர் அவர். சில பெண்மணிகள் சரியாக நடனம் வராமல் திணறும்போது, சில டைரக்டர் /தயாரிப்பாளர் -"யோவ் ஹீராலால் , பேசாம நீரே புடவையைக்கட்டிக்கிட்டு முகத்தை காட்டாமல் ஆடிக்கொடுத்துடுய்யா, டான்ஸ் நல்லா  இருக்கும் என்று நொந்து போன  சம்பவங்கள் உண்டு.

 இப்பாடலில் பாருங்கள் அவர் வழங்கியுள்ள எத்துணை வகையான மிடுக்கு அமைப்புகள், விரைந்த அசைவுகள், குனிந்து நிமிர்ந்து எழுந்து குதித்து ஆடும் நடன அமைப்பு. இருவருக்கும் மாறுபட்ட நாட்டிய அமைப்புகள்.என்று உயர்தர நடனம் அமைத்திருக்கிறார்.

 இவ்வனைத்திற்கும் முதுகெலும்பு சி ராமச்சந்திராவின் இசை

ஒரு பாடலை, முற்றிலும் தாளத்தின் பலத்திலேயே அமைத்துவிட இயலுமா?

இயலும் என்று காட்டியுள்ளார்    சி ஆர்.

மொத்தம்  33 தபலா கலைஞர்கள் [8 வயது பிரசாத் உட்பட ] + மிருதங்கம்+ கோல் , பக்வாஜ் , சில இடங்களில் ட்ரம் . தாளங்களை மாற்றி மாற்றி ஜதி அமைத்து முற்றிலும் பிரம்மாண்ட நாட்டியப்பாடலைப்  படைத்துள்ளார் ராமச்சந்திரா .

அமைப்பு ரீதியாகவும் நடன தரத்திலும், காட்சி அமைப்பிலும் [ஒளிப்பதிவு எல்லப்பா ] ஒப்புவமை இல்லாத ஒரு பாடல் இது என்று முழு மனதுடன் சொல்ல இயலும் இப்பாடலைப்பற்றி.

கண்டு ரசியுங்கள் அங்குலம் அங்குலமாக  ஒன்றி கவனியுங்கள், வீடியோ பாடலையும் காதால் கேட்டு விட்டு ஐயோ நான் சரியாக கவனிக்கலியே என்று புலம்பாதீர்கள். பாடல் கேட்கும் அணுகுமுறையை செம்மைப்படுத்துங்கள்.

பாடலுக்கு இணைப்பு இதோ  .

https://www.youtube.com/watch?v=B56JNiO14Mk kannum kannu8m kalandhu

இந்த நடனம் குறித்து பின்னாளில் வைஜயந்திமாலா வழங்கிய பேட்டி   https://www.youtube.com/watch?v=hECK8XuR0aU vaijayanthi

நன்றி

அன்பன் ராமன் 

1 comment:

  1. நான் பார்த்து, கேட்டு ரசித்த போட்டி இசை மற்றும் நடனம்.

    ReplyDelete

MAKE LEARNING –A PLEASURE -2

  MAKE LEARNING –A PLEASURE -2      Every teacher should impress upon wards that anything can be learned, provided the learner is attentiv...