Monday, October 10, 2022

பெரும் மனங்கள் /ஆளுமைகள்

                 பெரும் மனங்கள் /ஆளுமைகள்

 

அன்புடையீர்

நாம் காலம்  கடந்தாவது  சில பழைய நாம், அறிந்திருக்கிற ஆனால் சரிவர புரிந்துகொள்ளாத நிகழ்வுகளில் பல,  தங்கச்சுரங்கங்களாக ஆழ் மனதில் புதையுண்டு இருப்பன. அவற்றை  மீண்டும் கிளறினால் நம்மை அறியாமலே நாம் ஏன் இதை கவனிக்கத்தவறி  விட்டோம் என்ற எண்ணம் மேலிடுவது திண்ணம். இவன் என்ன நீண்ட வரிகளை எழுதி துன்புறவான் போலிருக்கிறதே என்று கலங்க வேண்டாம். தொடர்ந்து முன் செல்லுங்கள் நான் சொல்ல முற்படுவதில் இருக்கும் நியாயம் புலப்படும்.

திரைப்படங்களையும், அவற்றில் அறிவுறுத்தப்பட்ட மிக வலிமையான மனோ தத்துவ குறியீடுகளை உணராமல் பத்தோடு பதினொன்று அத்தோடு இதுஒன்று என்ற அளவில் நல்ல திறமைகளை அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று,  முறையாக ப்புரிந்து கொள்ளாமல் சிறுபிள்ளைத்தனமாக விட்டு விட்டோம் என்பதை நான் அறிந்த சில படங்களை முன்னிறுத்தி விளக்க எத்தனிக்கிறேன். இவ்வகை கருத்துகளை எடுத்து சொல்லி, நினைவூட்டிட வேண்டிய நிலை என்பதே வருத்தத்திற்குரிய ஒன்று.

கருப்பு வெள்ளைப்பட காலங்களிலும் , பின்னர் 1980 கள்  வரையிலும்  கூட  கருத்தும் பொறுப்பும் ஒரு சேர பயணித்ததை நாம் அறிவோம். பின்னர் தடம் புரண்டு , இப்போது எந்த வரைமுறையும் இன்றி அவலமான நிலையில் பெரும்பாலான படங்கள் தடுமாறிக்கொண்டிருப்பதை பார்க்கிறோம்.

நமது தலைப்பு “பெரும் மனங்கள் /ஆளுமைகள்”. ஆம் இவை கதை ஆக்கங்களிலும், பாடல்களிலும் , அவைகாட்சிப்படுத்தப்பட்ட பாங்கிலும்    

[அமைப்பு / ஒளிப்பதிவு],] பாடல் / இசையின் நேர்த்தி மற்றும்  இவ்வனைத்தையும் ஒருங்கிணைத்த இயக்கம் இவை பற்றியதே

நெஞ்சிருக்கும் வரை [1967] படம் கருப்பு வெள்ளையில், ஒப்பனை இன்றி முன்னணி நடிகர்கள் பங்கு பெற்ற புதுமை.

கவிஞர் கண்ணதாசனிடம் , இயக்குனர் ஸ்ரீதர், "கவிஞரே , காதல் பாடல் நிறைய எழுதியாச்சு, காதலைப்பத்தி ஒரு 2 வரியில எழுதலாமா ? என்ன "ஸ்ரீ" எழுதிருவோம் -இது கண்ணதாசன் . ஹார்மோனியம் மெல்ல ரீங்கரிக்க விசு காத்திருக்க  வந்து வீழ்ந்த வரிகள் " சந்தித்த வேளையில் சிந்திக்க வே இல்லை , தந்து விட்டேன் என்னை' -போதுமா ஸ்ரீ என்றாராம் கவிஞர்.

 மீண்டும் கவிஞர் இதை பின் வரியில் வச்சுக்கலாம், பல்லவிக்கு, ஆரம்பிக்க 'முத்துக்களோ கண்கள் , தித்திப்பதோ கன்னம் ' சரியாய் இருக்கும் .

எல்லாம் இருக்கும், இருங்க.

 சரியா நம்ம டியூன் உக்காருதானு பாக்க வேணாமா -செட்டியாருக்கு ரொம்ப தான் அவசரம் என்று விசு கொதிக்க, டேய் நீ டியூனல்லம் போட்ருவ னு எனக்கு தெரியும்டா, , மேல எழுத விடுறா . -இது கண்ணதாசன்

கொஞ்சம் கொஞ்சம் பொறுங்க என்று அற்புதமாக வளைத்து நெளித்து வீசு பாடிக்காட்ட அடுத்த 7 நிமிடத்தில் பாடல் முடிந்தது. அவ்வளவு தானா ? இந்த ஒரு பாடலில் கவிஞனின் வித்தைகள் தான் எத்துணை ; கண்ணதாசனின் விளையாட்டைப்பாருங்கள் ஒரே சொல்லை எழுத்தை மாற்றி, விருந்து கேட்பதென்ன, விரைந்து கேட்பதென்ன என்று ஊடல் , வாழை தோரண மேளத்தோடு என்று மணமேடை கற்பனையை ஓட விட்ட நேர்த்தி. இவை மட்டுமா ? பாடலில் எதுகை மோனை விளையாட்டுகள் ஆங்காங்கே விரவி ஒரு காவிய அந்தஸ்தில் மிளிரும் நளினத்தை என்ன சொல்ல?                                          

  பின் வரும் நயங்களைப்பாருங்கள்

சந்தித்த என்ற சொல்லில் சிறு மாற்றம் செய்து சிந்திக்க

விருந்து என்ற சொல்லில் சிறு மாற்றம் செய்து விரைந்து

என்று மோக தாகத்தின் வேகத்தை செப்பிடும் வேகத்தில் விதைத்த மின்னல் வேகக்கவி கண்ணதாசன்

காதல் மனம் இயற்கையை துணை கொள்ளும் எனும் பாங்கு மேலிட பின் வரும் யாப்பு

கன்னிப்பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட

கடலின் அலைகள் ஓடி வந்து காலை நீராட்ட

அந்தக்கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் அது ஒரு அசுரக்கூட்டம் எனில் மிகையே அல்ல ஒன்றை ஒன்று விழுங்கி ஏப்பம் விடும் அசாத்திய திறமை சாலி களின் கூட்டணி து .

யார் யாரை விஞ்சுவர் என்பது மில்லியன் டாலர் கேள்வி . தொழில் திறனில் அவனவன் ஜாம்பவான். கண்ணதாசனை எழுத விட்டுவிட்டு விசு என்ன தூங்குவாரா?

பாரடா இங்கே என்பது போல ஒரு அற்புத டியூன் , பல ராகங்களின் [ மேக் , மத்தியமாவதி, மல்ஹர் ]  சாயையில் ; எவராலும் முத்துக்களோ கண்கள் மறந்து விட்டது என்று சொல்ல முடியுமா.?

பாடலின் துவக்க இசையில்  நெஞ்சை அள்ளும் நரம்புக்கருவிகள் [கிட்டார் , சித்தார் ] பின்னிப்பிணைந்து கவர்நதிழுக்க உடனே, தொடர்ந்து சிருங்கார ரசம் பரிமளிக்கும் ஏற்ற இறக்கங்கள் புடை சூழ சுசீலா, டி எம் எஸ் இருவரும் ரசிகர்களை க்கட்டிப்போட்ட பாடல் .

ஆம் விஸ்வநாதன் தனித்துப்பயணிக்க துவங்கிய [1965 ன்  பிற்பகுதி]ஆரம்ப கட்டத்தில், தான் யார் என்று ஐயம் திரிபற மிளிர மற்றும் மிரள வைத்த  இசைகம்பீரம். ஒருவர் கவியரசு எனில் , இவர் செவி அரசு ஆம்.

ஆம், சினிமாப்பாடல்களில் மேலிடும் வசீகரம் யாதெனில்,செவியை வசீகரித்தபின்னரே கவியை பார்க்க தூண்டும். ஆம், கண்ணதாசனின் பல பாடல்களை ஆழ்ந்து அனுபவிக்க வைத்த பெருமை விஸ்வநாதனின் இசையின் வசீகரத்துக்கு உண்டு. அது ஒரு பெரும் காரணி  என்பது அடியேனின் துணிபு. 

இவை நீங்கலாக ,இவற்றை அற்புதமாக காட்சிப்படுத்திய ஆளுமை- ஸ்ரீதர் . இதனை ஒரு கனவுப்பாடலாக திரையில் களப்படுத்தி , கதா பாத்திரங்களின் புனிதம் குன்றாமல் காட்சியை அமைத்து ,ஏழ்மையை கெளரவம் சிதையாமல் திரையில் வடித்த படைப்பாளி.

கரணம் தப்பினால் மரணம் நிலை இப்பாடலுக்கு. மரணம் நேராத கரணம் இப்பாடல் காட்சிஅமைப்பு மற்றும்கனவுக்கான இரவு நேர அமைப்பில்  பாலுவின் ஒளிப்பதிவு. இவ்வாறாக இவ்வாளுமைகள் தமிழ்த்திரை தன்னை வளப்படுத்திக்கொண்டிருந்த காலம் .   

FOR FURTHER REFERENCE : YOU TUBE QFR -EPISODE 367

https://www.youtube.com/watch?v=PJowQ0oczMc

மேலும் வளரும்                                                                                                                    

பேரா . ராமன் 

No comments:

Post a Comment

TEACHER BEYOND YOUR IMAGE-23

  TEACHER BEYOND YOUR IMAGE-23 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-23 அன்பர்களே இதுகாறும் ஆசிரியப்பணியில் ஆசிரியர் மேற்கொள்ள உகந...