Monday, October 10, 2022

வாய் கட்டு

 

                                                                       வாய் கட்டு

பல ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை மாநகர் ,புற நகர் பகுதியில் நிகழ்ந்த ஒரு சம்பவம். இதை இன்றைய கல்லூரி மாணவர்கள் மிகவும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல். சுமார் 43அல்லது 45 ஆண்டுகள் முன்னர் 1975- 1977 காலகட்டத்தில் புறநகர் ரயிலில் மிகுந்த கூட்ட நெரிசலில் ல்ரை -- -தாம்பரம் வழிப்பாதையில் நிகழ்ந்த இச்சம்பவம் அன்றைய வாரப்பத்திரிகைகளில் , குறிப்பாக குமுதம் இதழில் ஒரு நீண்ட கட்டுரையாக  இடம் பெற்றது . நிகழ்வு இது தான்; மிகுந்த கூட்டத்தில் அன்றைய சென்னை மாநகர கல்லூரி மாணவர்கள்  கூச்சலும் ஆரவாரமும் கும்மாளமுமாக சக பயணிகளை நேரடியாகவும் ,மறைமுகமாகவும் கேலி பேசி  பயணித்துக்கொண்டிருந்த காலை நேரம் சுமார் 8.15 அல்லது 8.30 மணி அளவில்.  தங்களை விட அறிவாளிகள் எவரும் இலர்  என்ற இறுமாப்பு கொப்பளிக்க வயது வித்தியாசம் பாராமல் கேலி செய்த வண்ணம் இருந்தனர். 

உதாரணமாக சகபயணிகளில் ஒருவரை குறிப்பிடும் வண்ணம் . ஏய் மாமா நாமத்த ப்பாரு ,கோணலா இருந்தாலும் அழகா இருக்கு இல்ல என ஒருவன் சொல்ல, இன்னொருவன் நாமம் என்னடா அழகு, மாமியப்பாரு அத விட அழகு,. வேறு ஒருவன் மாமியப்பாரா , மாமியா பாரா வா என்று அடாவடியாக வம்பிழுத்துக்கொண்டு இருந்தனர்.. இப்படி கிண்டல் செய்தவர்களின் கவனம் ஒரு பெரியவர் பக்கம் திரும்பியது.. சுமார் 55-60 வயது இருக்கும். நீண்ட தாடியும், கூறிய பார்வையும் , திருநீரால் மறைந்த நெற்றி, குங்குமப்பொட்டு சகிதம் ஒரு உபாசகர் போல உருவம் கொண்டவர். அவரை, அந்த அண்ணனுக்கு தாடி பாரு, ஒரு 25 வருஷமா வளர்த்திருப்பாரோ என்று ஒருவன் சொல்ல, வேறொருவன் சீ 40 வருஷமா வளருதுடா அது என்று சொல்ல, பிறிதொருவன் தாத்தா தாடிக்கு உங்க வயசு இருக்குமா? என்று நையாண்டி செய்தான்.

பெரியவர் சொன்னார் "தம்பீ நம்மகிட்ட விளையாடாத ; நான் விளையாடினா உன்னால தாங்க முடியாது வேண்டாம்" என்றார்.           உடனே அவன் தாத்தாக்கு ரோசம் வருதுடா என்றான். வேறொருவன் ரோசம் வருது ஆனா பதில் தான் வரமாட்டேங்குது, தாடிக்கு எவ்வளவு வயசு என்று -என எல்லை மீறி பேசிட, அவர்கள் கல்லூரிக்குப்போக வேண்டிய ஸ்டேஷன் வந்தது. தப தப என்று இறங்கி ஆய் ஊய் என்று கூக்குரலிட்டு கல்லூரிக்கு சென்றனர்.     வழியில் எதிர்ப்பட்ட ஆண் , பெண் வேறுபாடின்றி மனம்போனபடி பேசி தங்களின் மேதாவிலாசம் மேம்பட அருவருக்கத்தக்க  இழி பிறவிகளாக நடந்துகொண்டனர். கல்லூரி வளாகத்தை அடைந்தனர். 

முதல் வகுப்பு தொடங்கியது . வருகைப்பதிவுக்கு, பெயர்களை விளித்தார் பேராசிரியர். இதுவரை மனம்போனபடி பேசி வந்தவன் , பேச முடியாமல்    [ வாய் செயல் படாமல்,] ஒலி வெளியே வராமல்     என வாய் பிளந்து நின்றான் . 15 நிமிடங்கள் முன்னர் வாய்ச்சவடால் பேசியவன் இப்போது பேச்சிழந்து, மானம் போன படி நின்றான். WHY DON'T YOU SPEAK ? என்றார் பேராசிரியர் . மலங்க மலங்க விழித்தான். குதூகலித்த நண்பர்கள் திகைத்தனர். அடுத்த வகுப்பிலும் அதே ஊமை நிலையில் குழம்பிப்போய் நின்றான்.  விழித்தான்.  ஆசிரியர்கள் அவனை டாக்டரிடம் அனுப்பிவைத்தனர்.

வாயைத்திற, கண்ணை காட்டு, நாக்கை நீட்டு , அண்ணாந்து வாயைத்திற உள் நாக்கை காட்டு , நாக்கை உயர்த்து என பயிற்சி மிருகம் போல அனைத்து அடிப்படை சரிபார்ப்புகளும் அரங்கேறின. டாக்டரும் குழம்பினார். 20 வைட்டமின் மாத்திரைக்கு பரிந்துரைத்தார். மாலை 3 மணிக்கே வீட்டுக்கு திரும்பினான். வீட்டில் உள்ளோருக்கு அதிர்ச்சி ; பையன் ஊமையாய் நின்றான். பேச முடியவில்லை என எழுதிக்காட்டினான். அந்த வட்டாரத்தில் இருந்த நரம்பியல் விற்பன்னர் முயன்றும் எதுவும் தெரியவில்லை. அவர் உயர்ந்த ரக வைட்டமின் மாத்திரைகளை நிர்ணயித்தார். பேச்சு வர மறுக்கிறது, 10 மணி நேரத்துக்கும் மேலாக. . மந்திரிக்க சொன்னார்கள். இன்றைய மனிதர்களானால் , மந்திரிக்கு சொல்லி  உதவி தேடப்பார்ப்பார்கள்.. பையன் இடி விழுந்தவன் போல கல்லாக நின்றான். யாரோ சொன்னார் துர்கைக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி தீவிர பக்தி செலுத்து;காலை, மாலை தவறாமல் இறைவனிடம் பிரார்த்தனை செய் என்றார்கள்.. வீட்டிற்கு வந்து குளித்தான், நெக்குருக வேண்டி நிற்க, தாயார் விளக்கேற்றினார்.

என்ன ஆச்சரியம்? விளக்கின் ஜோதியில் அதே தாடி மனிதர் தோன்றி "விளையாடாதே என்று சொன்னேனே கேட்டாயா , விளையாடினாய் , நானும் விளையாடினேன் , உனது வாயை ஐந்து நாட்களுக்கு கட்டியிருக்கிறேன் . நீ காலை மாலை இறைவனைத்தொழுது  மன்னிப்பு கேள் . 5 நாளைக்கு இதை அனுபவி எந்த நண்பனாலும் உன்னை காப்பாற்ற முடியாது என்று சொல்லி மறைந்தார். 5ம் நாள் காலை மீண்டும் விளக்கு ஜோதியில் சாமியார்  தோன்றினார். இன்று மாலை வாய்க்கட்டு விலகும், கவனமாக பேசு, பிறரை ஏளனம் செய்யாதே என்று அறிவுரை சொல்லி மறைந்தார். மாலையில் பேச்சு மெல்ல திரும்பியது. இனிமேல் கனவில் கூட கேலி பேச மாட்டான்.

மாணவர்களே கும்பலாக நீங்கள் எதுவும் செய்யலாம் என்று நினைத்தால், சரியான உபாசகர்கள் உங்களை பந்தாடிவிடக்கூடும் . சமுதாயத்தில் வித்தகர்கள் அனேகர் உண்டு ; செயல் திறன் அற்றவர்கள் சவடால் பேசி ஆவதென்ன?  உணருங்கள் உங்களின் கையறு நிலையை..

ஆண்டவன் சோதனையோ ? யார் கொடுத்த போதனையோ

தீயிலே இறங்கிவிட்டான் திரும்ப வந்து தாள் பணிவான்

சத்தியம் இது சத்தியம் ---              கண்ணதாசன்

இது சாத்தியமும் கூட 


பேரா. ராமன்

 

1 comment:

  1. இது கலி காலம் .என்னவெல்லாமோ நடக்கும் என்று நம்முள் பலர் பேசுவதைக்கேட்கிறோம் . ஒழக்கத்தை சொல்லிக்கொடுக்கும் பள்ளி ஆசிரியர்கள் கை கட்டிப்போட்டிருக்கும் நிலையில் ஒழுக்கம் எங்கிருந்து யாருக்கு வரும்.
    இதற்கு சில பெற்றோர்களும் உடந்தை
    வெங்கட்ராமன்

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...