Wednesday, October 12, 2022

ஜோல்னா பை

                                                                        ஜோல்னா பை

இது என்ன கூத்து என்கிறீர்களா? கூத்துமில்லை கும்மாளமுமில்லை , இது ஒரு கூற்று அதுவும் ஒரு அனுபவஸ்தனின் கூற்று . அந்த அனுபவஸ்தன் அடியேனன்றி வேறு யார்? சாட்ஷாத்  நானே தான்.. இப்ப என்ன ஜோல்னா பை  என்று கிளம்பிவிட்டாயே என்கிறீர்களா ?  வெளியில் கிளம்புவது என்றாலே வளர்ப்பு கிளி அல்லது அணில் போல தோளில்  தொற்றிக்கொள்ளும் அன்பன் ஜோல்னா பை  தான் அய்யா.. ஏன் வளர்ப்பு குரங்கு கூடத்தான் தொற்றிக்கொள்ளும் என்று யாரோ முணு முணுப்பது தெரிகிறது. எந்த ஊரினில்  இருந்து முணுமுணுத்தாலும்  கேட்டு விடும். அதுவும் வாத்திக்கு இது போன்ற சூழலில் உள்ளுணர்வு அதிகம், முணுமுணுத்தல் , ஓரக்கண் பார்த்து சிக்னல் போடுதல் , எட்ட இருந்து உள்ளங்கையில் எழுதி டேபிளுக்கு அடியில் காட்டுதல் இதெல்லாம் மிக எளி தில் மாட்டிக்கொள்ளும் , இந்த ஆய கலைகள் அறியாமல்  வாத்தியார் என்று சொல்லிக்கொள்வது தொழிலுக்கே அவமானம் அல்லவா. எப்படி ஒன்றுமில்லாத விஷயத்தை சந்தைப்படுத்தி விட்டேன் பார்த்தீர்களா -அதுவும் ஆய கலைகள் வரிசையில் ஒன்று தான்.

சரி இன்றைய தலைப்பை சற்று கவனிப்போம். . யார் பெயரிட்டார்களோ தெரியவில்லை ஆனால் ஜோல்னா என்ற அடைமொழியை பயன்படுத்தினால் தான் எதைச்சொல்லுகிறோம் என்பது தெளிவு படுகிறது. பையை எடு  என்று சொன்னால் ,எந்தப்பை என்று கேட்டு இடத்தை விட்டு நகராமலேயே எதிர்கேள்வி கண்டிப்பாகப்பாயும்.. எதிர் கேள்வி பாயக்கூடாது என்று கண்டிப்பு காட்டுபவராக இருந்தால், முதலிலேயே அடைமொழி உள்ளிட்ட அலங்கார மொழிகளையும் சேர்த்தே சொல்லிவிடுதல் நன்மை பயக்கும் . ஆம் -நீல ஜோல்னா பையை என்று ஒரே முயற்சியில் வெற்றிக்கனியை எட்டி அல்ல எட்டாமலே  பறிக்க வேண்டாமா?

    இதென்ன ஜோல்னா பை புராணம் என்று ஆத்திரப்பட்டுஆவதென்ன? வேண்டவே  வேண்டாம்.  தற்கால மாந்தருக்கு [இரு பாலரையும் தான் குறிப்பிடுகிறேன் ] நிச்சயம் அடையாளம் தேவை . என்ன ஆதார் கார்டு கேட்பீர் போலிருக்கிறதே என்று கலங்க வேண்டாம். "அடையாளம்"அதான் IDENTITY என்று எளிய தமிழில் சொன்னால் தான் புரிகிறது.

 எளிதாக நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள ஜோல்னா பை உதவு வது போல் வேறு ஏதும் உண்டா -யோசித்துப்பாருங்கள். . சரி நம் நாடறிந்த ஜோல்னா மனிதர்களை திடீரென்று minus ஜோல்னா நிலையில் பார்த்தால் சற்று குழம்பித்தான் போகிறோம். குறைந்த பட்சம் எங்க சார் / மேடம் பையைக்காணோம் என்று குசலம் விசாரிக்காமல் அகன்ற து உண்டா?

 சும்மா For a change என்று அவர் சொன்னால்-- பாவம் சில்லறைக்கு அலைகிறார் போலும் என்று கூடநினைத்துக்கொள்கிறார்கள். நல்ல வேளை இன்று  ஒரு தர்மம் செய்வோம் என்று கையில் 1 ரூபாய் நாணயத்தை திணிக்காமல் விட்டார்களே என்றெல்லாம் கவலைப்படும் நிலை ஏற்படுகிறது[அவருக்கு--[ஜோல்னா மனிதர்  எப்போதாவது ஜோல்னா இல்லாமல்  நம் முன் தோன்றினால்]. அதிருக்கட்டும் இந்த ஜோல்னா என்பது Fast food இன் பெரியப்பா வகை . பெரியப்பா வகைகளை இளைய தலைமுறைக்கு பிடிக்காது. மூத்த தலைமுறைக்கு fast food  முகம் சுளிக்க வைப்பது.

 ஜோல்னா விரும்பிகள் பழைய தலை முறை , FAST FOOD விரும்பிகள் இளைய தலைமுறையினர். [புதிய தலைமுறை என்று எழுதப்போக ஓஹோ TV காரர்கள் போலும் என்று நினைக்க த்தோன்றும்].. சரி இந்த இளைய தலைமுறை முதுகில் வெளுக்க வேண்டிய துணியை சுமக்கும் உயிரினம் போல புத்தக மூட்டையை முதுகு ஓடிய சுமப்பார்கள்;  ஆனால் எந்த துன்பமும் தராமல் தோளில் அமைதியாக வரும்ஜோல்னாவை ஏற்பதுமில்லை ரசிப்பதுமில்லை. நல்லதே பிடிக்காது என்று பெரியவர்கள் சொல்வது புரிகிறதா?. சுவையான காய் கறி வகைகள், கோயில் புளியோதரை, அக்கார அடிசல் போன்ற வை என்ன என்று கேட்டு தெரிந்துகொள்ள வேண்டிய பிஸ்சா தேடி அலையும்  கூட்டம் -நமது இளைய தலைமுறை [நல்லவேளை பிசாசு என்று எழுதாமல் விட்டதே ட்ரான்ஸ்லிட்டரேஷன் என்று நிம்மதி அடைகிறேன்]. -இதில் நாங்கள் காபி சாப்பிடுவதில்லை என்று பெருமை அவர்களுக்கும், பேருவகை அந்த அம்மாக்களுக்கும்.

பாட்டில் குளிர் பானங்களை விட காபி கொடியது அல்ல என்று யார் புரியவைப்பது? என்று தணியும் இந்த குளிர்பான மோகம் என்று சுதந்திர வேட்கை ஏற்படவில்லையா? ஜோல்னாவை மறந்து விட்டதா ?  அதெப்படி . இதோ தொடர்கிறது..உடன் பிறவா சோதரன் அந்த ஜோல்னா.கூட இருந்தாலே ஒரு தனி தெம்பு . மார்க்கெட்டில் தென்படும் முக்கிய பொருட்களை வாங்குவது தான் நம் வேலை .சுமப்பது அவன் வயிற்றில் .அவனை நீ தானே சுமக்கிறாய் ? என்ற வினா புரியாதவர்கள் எழுப்புவது. ஏனெனில், ஜோல்னா சுமப்பது ஒரு சுமையே அல்ல . ஐயோ பஸ்ஸில் வைத்துவிட்டேன் மெடிக்கல் ஷாப்பில் வைத்துவிட்டேன் போலிருக்கிறது என்றஎல்லாம் வீடு திரும்பியவனை /வீடு திரும்பியவளை விசனப்படுத்தாத ஒரே நண்பன் ஜோல்னா தான் என்பதை உணர்வீர்.  இஷ்டத்துக்கு டிரைவர் கள் இயக்கும் பஸ் களில் பிறர் தயவின்றி இரு கை பிடித்து இருக்கை இல்லாவிடினும், கௌரவமாக பயணிக்க உதவுவது ஜோல்னாவே என்பதை ஜோல்னா உபயோகிப்போர் ஏகமனதாக ஏற்றுக்கொள்வர ;ஏனையோர் ஏகடியம் பேசக்கூடும்.

 நல்லதை ஏற்க நாளாகும், எனின்

அல்லது  அன்றே தொற்றிவிடும்  என்ற குறட்பாவகையில் சொல்லிடஜோல்னாவின் மாண்புதனை பரிந்துரைக்கும். இத்துணை மாண்புடைய ஜோல்னாவை அத்துணை எளிதில் வாங்கி விட முடியுமா என்ன? முயல், மைனா, புனுகு பூனை இவற்றை வாங்குவதற்கு சற்றொப்ப இணையானதே ஜோல்னா வாங்குதல். அதற்கென்று தீர்க்கமான பார்வையும், ஒருவித மோப்ப சக்தியும் இருந்தால் மட்டுமே ஜோல்னா வாங்குவது சாத்தியப்படும்.

ஜோல்னாவில் தீமை இல்லையா?. உண்டு, திருடர்களுக்கு -எளிதில் திருடிச்செல்ல உதவிடும் வாயில்லாப்பூச்சி அது.

"வாயிருந்தும் சொல்வதற்கு மூளை இன்றி தவிக்கிறேன்-ஆஹா” என்பதேஜோல்னாவின் கையறு நிலை .

பாவம் செய்தவன் ஒருவன், பழி பையின் மீதா? பாவம், வாயிருந்தும் அழத்தெரியாத பிறவி ஜோல்னா .

தொங்கியே வாழ்வது ஜோல்னா [தோளிலோ, ஆணியிலோ]] எனவே பரிதாப வாழ்வன்றோ அஹ் து [அக்கன்னா எழுதத்தெரியாத ட்ரான்ஸ்லிட்டரேட்டர்  ,

நன்றி பொறுமை காத்தமைக்கு .                                     பேரா. ராமன் 

2 comments:

  1. ஜோல்னா பை என்றால் என் கண்முன் நிற்பவர்கள் இருவர்கள். Dr. MSK &Dr.KGS. இப்போது நீரும் தான்.
    நான்வெளியூருக்குச்செல்லும்போது
    என்தோளிலும் அது தொங்கும்.
    ஜோல்னாபை என்றாலே MUTA member என்ற அடையாளம் காட்டும்
    வேஷ்டி கட்டிண்டு வெளியே செல்லும்போது இந்தப்பை மிக அவசியம்
    வெங்கட்ராமன்

    ReplyDelete
  2. Right or wrong, ஜோல்னா பை is more often considered a symbol of intellectualism. Surprisingly, there was more of digression uncharacteristic of the author.

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-23

  TEACHER BEYOND YOUR IMAGE-23 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-23 அன்பர்களே இதுகாறும் ஆசிரியப்பணியில் ஆசிரியர் மேற்கொள்ள உகந...