Saturday, October 22, 2022

நாளை தீபாவளி

                              நாளை தீபாவளி

அப்பா .....

என்ன இப்ப அப்பாவுக்கு ?   

பையன்:பட்டாசு ..              அப்பா : ஆமாம்  பட்டாசு யாரோ வெடிக்கிறான் தல வேதனையா இருக்கு . அந்த தல வேதனை நம்ம வீட்டிலே வாசல்லியே வரணுமாக்கும்.

பையன்:எல்லாரும் வெடிக்கிறாங்கப்பா .

அப்பா : கோபமாக முறைத்துக்கொண்டு ஆமாம் எல்லாரும் ஒழுங்கா படிக்கிறானே அதைப்பத்தி நீ என்னிக்காவது கவலைப்பட்டதுண்டா ? வெடிக்கிறானாம் வெடி , போடா என்று       எறி ந்து விழ,

சிறுவன் வராண்டாவில் நின்றுகொண்டு வீட்டின் உள் பக்கம் பார்த்து வாயை ஸ்ட்ரோக் வந்தவன் போல நன்கு ஒரு புறமாக இழுத்து 'வெவ்வே ' காட்டி விட்டு, சைக்கிள் ரிம்மை எடுத்துக்கொண்டு, பீரோவின் கிழே  பதுக்கி இருந்த 2 அடி நீள குச்ச்சி யை எடுத்துக்கொண்டு , சரிந்து தொங்கி மானம் காக்க மறுக்கும் டிரௌசரை இழுத்து மேலேற்றி ஒரு safety pin உதவுடன் இரு பக்கங்களையும் பிணைத்துவிட்டு, [ அந்தக்காலத்தில் காலேஜ் வரும் வரை உள்ளாடை அணியும் வழக்கம்ஆண்  பெண் இருவரிடத்தும் பரவலாக இல்லை எனலாம்இல்லை, தப்பித்தவறி "உள் " ஆடை பற்றி பேசப்போக , உள்ள ஆடையும் போய்விடும் என்று ஆண் , பெண் பேதமின்றி அனைவருக்கும் தெரியும் . இன்றோ உள்ளாடை இல்லாத , குழவி முதல், கிழவி வரை எவரேனும் உண்டோ ? அதற்கு செல்லப்பெயரே  'FUNDAMENTAL DRESS'  என்பதுதானே?.]

 "ஆண்டவன் படைச்சான் ,எங்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜா ன்னு அனுப்பிவச்சான்' என்று ரிம்மை உருட்டிக்கொண்டு தெருவில் பாய்ந்து வேகமாக ரிம்முடன் போட்டிபோட்டு ஓடி நகர்வலம் கிளம்பிவிட்டான்; தங்கை மங்களம் , உலர்த்தப்பட்டிருந்த துணிகளை எடுத்து மடித்து வைத்து விட்டு அடுத்தவீட்டுப்பெண் சீதா வுடன் பேச கிளம்பி விட்டாள் .

தகப்பன் சாமி [அதாவது சாமிநாதன்] பேபே என்று விழித்துக்கொண்டு தெருவைப்பார்த்தான் .

சிறுவர்களின் இரைச்சல் ஆரவாரம். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருந்த TRAIN வெடியை பார்க்க ஒரே கூட்டம். தெருவை மறித்து எதிரும் புதிருமாக நூல் கட்டி அதில் TRAIN ஓடும், நெருப்பு பற்றவைத்தபின். அது ‘சுய்’ என்று கத்திக்கொண்டு புகையை யும் நெருப்பையும்  உமிழ்ந்து கொண்டே ஓடும். இந்தியாவிலேயே சிறந்த ஆராய்ச்சி நிலையங்கள் சிவகாசி பட்டாசு தொழில் முனைவோர் என்பதை ஒவ்வோர் ஆண்டும் நிரூபித்தவர்கள் அவர்களே. ISRO விண்ணில் கால் பதிக்கும் முன்  வான் வெளியில் பாய்ந்ததென்னவோ சிவகாசி ஐட்டங்கள் தான். சிறுவர்களைக்கவர்ந்தால்  தான்  சில்லறையைப்பிடிக்க முடியும் என்று உணர்ந்தவர்கள் பட்டாசு முதலாளிகள். இத்தனை ஈர்ப்புகள் மத்தியில் மங்களமும், அண்ணன் சங்கரும் பட்டாசு கேட்பதில் வியப்பென்ன?

திடீரென்று தகப்பன் சாமி மனைவி அகிலாவிடம் ஒரு பையையும், 5 ரூபாயும் வாங்கிக்கொண்டு கடைத்தெருவுக்கு சென்றான். அப்பா எங்கம்மா போறார் ? என்று கேட்டாள் மங்களம். அம்மா அகிலாவோ 'தெரியாதுடீ , எங்க போறீங்க கேட்டா ரொம்ப கோவம் வந்து, சகுனம் சரியில்ல னு கடைக்கே போகமாட்டார். நமக்கேன் வம்பு? திரும்ப வந்ததும் பையில என்ன இருக்குனு பாத்தா தெரிஞ்சுடும் என்றாள்.  அம்மா,   குடும்பத்தலைவி எவ்வளவு நாசுக்காக குழந்தைக்கு சொல்லிக்கொடுக்கிறாள்..

அடுத்த 10  நிமிடங்களில், சங்கர்,  சக்கரத்தை பீரோவின் பின்புறம் தள்ளி விட்டு, குச்சியை கீழே பதுக்கி விட்டு , கை, கால் முகம் கழுவ ஓடினான்.

அம்மா,...  அப்பா பட்டாசுக்கடையில கூட்டத்தில நிற்கிறார்என்றான். மங்களம் முகம் மலர்ந்து சங்கரிடம், பாதி எனக்கு தரணும் என்று கோரிக்கை வைத்தாள் . உடனே சங்கர் எதற்கு பாதி ? நீயே எல்லாத்தையும் வெடி என்றான். மங்களம் பயந்து விட்டாள். ஆனால் சங்கருக்கு இப்போது பட்டாசு மீது வெறுப்பு வந்துவிட்டது.                               ஏன்?

 எப்படி எரிந்து விழுந்தார் , எல்லோரும் படிக்கிறானே என்று  குத்திக்காட்டினாரே,  மானம் கெட்டு அந்த பட்டாசை வெடிப்பதை விட துறவி போல் அதை வெறுத்தால் தான் தனக்கு மரியாதை என்று முடிவெடுத்தான்.

7.45 மணிக்கு தகப்பன் சாமி பையில் Rs. 4.30 காசுக்கு வாங்கி வந்த மத்தாப்பு, வெடி, சக்கரம் என்று முறம் நிறைய பரப்பிக்கொண்டிருந்தார். அருகில் மங்களம்.      தலை நிமிர்ந்தால் சங்கர் அருகில் இல்லை. இதையெல்லாம் பாரடா என்று அவனைக்கூப்பிட்டார் தகப்பன் சாமி. அவன் சுவாமி விவேகானந்தர் போல கைகளைக்கட்டிக்கொண்டு, சுவற்றில் சாய்ந்து நின்றிருந்தான். தகப்பன் சாமி வாடா என்று அழைப்பு விடுத்ததை புறக்கணித்தான். ஏனெனில் சிறுவனாயினும், ஆசையைப்புறக்கணித்து உயந்து நின்றான்.   

அவன் எதையும் இழந்துவிட்டதாக நினைக்கவில்லை. போகட்டும் நமக்கு இதற்கு தகுதி இல்லை என்று அப்பா நினைக்கிறார் . பரவாயில்லை , வெடி வெடிக்காமல் எத்தனையோ நாட்கள் இருக்கிறோமே அதே போல் ஆகட்டும் என்று தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக்கொண்டு அக்கம் பக்கத்தில் நண்பர்கள்  வீடுகளில் வாண வேடிக்கை காணப்போய் விட்டான். அம்மா பட்டாசுகளை இரவு கண கண என்ற சூட்டுடன் அடுப்பின் மீது வைத்து அனைவரும் உறங்கிப்போயினர். சங்கர் நன்கு உறங்கி 5.15 மணிக்கு கண் விழித்தான், எண்ணை தேய்த்து கங்கா ஸ்நானம் செய்தான்,புத்தாடை அணிந்து கொண்டான்.  அம்மாவின் கெஞ்சலுக்காக ஒரே ஒரு கம்பி மத்தாப்பை க் கொளுத்தினான்.அது முடிந்ததும் நண்பர்களைக்காண போய்விட்டு 8.30 மணிக்கு வீடு திரும்பினான். அப்பா கேட்டார் ஏண்டா வெடிக்காமலே கிளம்பிட்ட என்றார். நான் என்ன சின்னக்குழந்தையா ? வெடிக்காவிட்டால் ஒன்றுமில்லை என முதிர்ச்சியாகப்பேசினான்.

இனிமேல் தகப்பன் சாமி தன்னை விமரிசிக்காதபடி படிப்பில் கவனம் செலுத்துவதென முடிவெடுத்தான். அன்று மாலையே  வீட்டுப்பாடங்கள் எழுதி முடித்தான். முற்றிலும் மாறிப்போனான் சங்கர். ஆசிரியர்கள் கூட வியப்படைந்தனர். இதுதான் LATE  BLOOMING வகை மாற்றம். யாருக்கு எப்போது இவ்வகை மாற்றம் சம்பவிக்கும்தெரியாது .ஆனால் மனம் வேதனைப்பட்டால் நிச்சயம் மாற்றம் நிகழும்.

 

வெடியில் வைத்துள்ள  பொடி

சரி .இது என்ன தீபாவளி அன்று இதை ப்பேச வேண்டுமா என்போர் புரிந்து கொள்ள வேண்டியன இதில் உள்ளன. சங்கர் இந்தக்கால பையன்கள் போல் துவண்டு போகவில்லை. 5 000/-ரூபாய்க்கு வெடி வேண்டும் என்று  வீட்டில் ரசாபாசமாக நடந்துகொள்ள வில்லை. மாறாக கம்பீரமாக தன்னை மாற்றிக்கொண்டான். ஏன் ? அக்காலத்தில் எதுவும் விரும்பிய வேகத்திலோ விதத்திலோ கிடைக்காது. தொடர்ந்து போராட வேண்டும். போராட்டம் வாழ்வில் ஒரு அங்கம். எனவே, தான் தோற்றுப்போய் விட்டதாக அவன் நினைக்கவே இல்லை. தகப்பனார் தான், நீ ஏன் வெடிக்காமல் கிளம்பிட்ட என்று ஆதங்கமுற்றார்.

சிறு வெடியை வைத்து என்னை அடக்க நினைத்ததனால், எனக்கு வெடி ஒன்றும் பெரிதல்ல என்று சில மணிகளில் உணர்த்தினான். ஆனால் அவன் தன்னை தோல்வியுற்றவனாக எண்ணாமல் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு முறையாக நகர்த்தினான். ஆதலால் யாரும் எப்போதும் தாற்காலிக இழப்புகளையோ, தோல்வியையோ பெரிது படுத்தாமல் முன்னேறலாம் என்பதே அன்றைய மனோ பாவம். இன்றோ எது கிடைக்காவிட்டாலும் துவண்டு சுருங்கி மரணிக்கத்தலைப்படுகிறார்கள். மரணம் தீர்வல்ல, பெரும் குழப்பங்களுக்கு அடித்தளம். எனவே நியாயமான போராடும் தன்மையை குழந்தைகள் வளர்த்துக்கொள்ளட்டும். அவர்களை வாழ்வியல் அறிய ,  போராட்ட நிலைகளை உணரச்செய்ய வேண்டும். நினைப்பதெல்லாம் கிடைத்துக்கொண்டே இருந்தால் சிறு ஏமாற்றம் விஸ்வரூபம் எடுத்து வாழ்வை சிதைத்தது விடும். 

பேரா. ராமன்                              

2 comments:

  1. 5 ரூபாய்க்கு வெடி வாங்கின காலம் போய் 5000 ரூபாய்க்கு இப்ப வாங்கினாலும் காணலை .
    புது சட்டையை மாட்டிக்கிட்டு சரவெடியை போட்ட காலம் போய் இப்ப காலத்துக்கு தகுந்தாற்போல கம்ப்யூட்டர் வெடி வந்திடுச்சு.
    புஸ்வாணம் என்ற பேச்சுக்கு இடமில்லை.
    காலம் கல் காலம்
    வெங கட்ராமன்

    ReplyDelete
  2. One of the best messages ever conveyed through a blog. The undercurrent of humour adds strength to it. Perhaps NEET failures and resulting deaths have been the power behind the thought.

    ReplyDelete

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...