கும்மாங்குத்து ரெங்கம்மா
பெயரிலேயே
தெரியுமே இது ஒரு பெண் பற்றிய விவரிப்பு என்று. ஆம் ரெங்கம்மாவிற்கு சுமார் 32 வயதிருக்கும்
.அவள் மாத்திரம் சரியான தரகனைப்பார்த்திருந்தால் அவள் பத்து பதினைந்து ஆண்டுகள் முன்னமே
சினிமாவில் சேர்ந்து பலரைக்கிறங்கடித்திருப்பாள். . பல
தருணங்களில் வழி காட்டுதல் இல்லாமல் திறமையும் அழகும், ஏன் அறிவும் கூட புகை மண்டி
மங்கி கால வெள்ளத்தில் பிழைப்புக்குப்போராடிக்கொண்டு தான் இருக்கிறது. நகர்ப்புற வாசிகளுக்கு பிழைக்கும் வழி தெரியும், அவர்கள் குறுக்கு
வழியிலாவது முன்னேறி விடுவார்கள். சிற்றூர் மற்றும் கிராம மக்கள் ஒரு சில தர்ம நியமங்களால் சுயகட்டுப்பாட்டில் சிக்கி மீள்வது அறியாது கிடைத்ததைக்கொண்டு
வாழ பழகிக்கொள்கின்றனர்.
ரெங்கம்மாவும்
அப்படித்தான். மதுரை திண்டுக்கல் சாலையில் உள்ள கிராமம் அவளது ஊர். 22 வயதில் திருமணம்.
கணவன் டாஸ்மாக் விற்பனைக்குத்ததோள்கொடுத்து தன்னையே பலி கடா ஆக்கி மகிழ்பவன்.. ரெங்கம்மாவுக்கோ இந்த போக்கே கட்டோடு பிடிக்காது. மேலும் எட்டு
வகுப்புக்கல்வியுடன் செய்திகளை தெரிந்து வைத்திருப்பவள்.அன்றாடம் இலவச வாசக சாலையில்
அனைத்து செய்தித்தாள்களையும் படிப்பவள். சரி
இந்தக்குடிகாரனுடன் போராடுவதை விட , சோற்றுக்கடை நடத்தி பிழைக்கலாம் என்று தீர்க்கமான
முடிவுடன் ஒரு சில பாத்திர பண்டங்களுடன் சாலை ஓரம் தொழிலாளர்கள் நடமாடும் இடமாக தேர்ந்தெடுத்து
கடை அமைத்தாள். வியாபாரம் சுமாராக ஓடிற்று . ஆனால் வருபவன் எவனும் நல்ல கண்ணோட்டத்தில்
ரெங்கம்மாவை பார்க்கவில்லை என்பதை பெண்களுக்கே உரிய நுட்பத்தால் உணர்ந்தாள். இவனுகளை
இப்படியே விட்டால் தனக்கு உடல் ரீதியாக ஆபத்து வரும் என்று நன்கு யோசித்தாள். ஒரு உருவமாற்றம்
நிச்சயம் தேவை என்று ஒரு பெரிய சைடு கொண்டைபோட்டு, வாய் நிறைய வெற்றிலை , நெற்றியில்
பெரிய இரண்டு ரூபாய் நாணய சைசில் குங்குமப்பொட்டு, முட்டி ங் கால் வரை உடுத்திய நூல்
புடவை என்று தன்னை மாற்றிக்கொண்டாள். ஒரு பெண் தாதா உருவம் வந்து விட்டது. இருந்தாலும் விதி யாரை விட்டது?
இந்தக்கோலத்திற்கு ரெங்கம்மா மாறிய மூன்றாம் நாள் மாலை ஆறு மணி இருக்கும், ஒருவன் உடலில் லுங்கி, வாயில் பீடி, ஒரு நீண்ட துண்டு கழுத்தில் -யாரோ லாரி டிரைவர் போலும் , ரெங்கம்மா கடையில் ஏதாவது சாப்பிடலாம் என்று வந்தான் கடையில் கூட்டம் அதிகம் இல்லை. இருவர் ஒரு மர பென்ஜி மீது டீ பருகி அமர்ந்திருந்தனர்.
வந்தவன் ரெங்கம்மாவை கவனம் ஈர்ப்பதாக எண்ணிக்கொண்டு, "குங்குமப்பொட்டின் மங்கலம், நெஞ்சம் இரண்டின் சங்கமம் " என்று பாட ஓரக்கண்ணால் ரெங்கம்மா இவன் யார் என்று பார்க்க , அவன் ரெங்கம்மா தனது பாடலில் வீழ்ந்தாள் என்று எண்ணிக்கொண்டு டாக டாக டட்டாக ட்யன் இன் என்று இசையுடன் மீண்டும் குங்குமப்பொட்டின் என்று தொடங்க, அவன் பிடரியில் ஓங்கி ஒரு அறை விட்டாள் ரெங்கம்மா . குப்புற வீழ்ந்தான் லாரி ஓட்டி.. மின்னல் வேகத்தில் அவன் முதுகும் இடுப்பும் சந்திக்கும் பகுதியில் சுவாமி ஐயப்பன் போல ஏறி அமர்ந்து கொண்டு, தோசை தயாரிக்க கல்லை அடுப்பில் ஏற்றி மாவை வேகமாக கலக்கினாள். லாரி ம்ம் என்று முனகினான்.அய்யப்ப சாமி [ரெங்கம்மா] நன்றாக அமர்ந்து கொண்டு, தோசை வேணும்னா இங்க வந்து வாங்கிக்குங்க என்றாள். ஏன் தாயீ இங்க வந்து தோசையை தரமாட்டியா என்று வாடிக்கை பெட்டிக்கடை சரவணன் கேட்டான்.
ரெங்கம்மா "சரவூ ,எங்க மாமனுக்கு சுளுக்கு முதுகு பிடிச்சிக்கிச்சு அதான் சுளுக்கெடுத்திக்கிட்டு இருக்கேன்" இங்க வா ராசா தோசையை தரேன் என்றாள். அப்போது தான் ஒருத்தன் கீழே கிடப்பதை சரவணனும் பிறரும் பார்த்தனர். "இப்பிடி உக்காந்தாவே சுளுக்கு போயிருமா?"ன்றார் பெரியவர் தவசி.
இல்ல பெரியப்பா , நல்லா சூடு காச்சி இழுத்தா தேன் சரியாவும், செத்த நேரம் கிடக்கட்டும், நீங்க சாப்புடுங்க என்று உபசரித்தாள் . இருக்க இருக்க அய்யப்ப சாமியின் எடை அதிகரிப்பதாக தோன்றியது லாரிக்கு. ஆமா நீ ட்ரைவரா என்று கீழே கிடந்தவனை கேட்டாள் ரெங்கம்மா ; அவன் ஆமா என்றான். எந்தூரு என்றாள் .அவன் மூச்சிரைக்க விழுப்புரம் பக்கம் என்றான். அவன் கழுத்து துண்டை உறுவிக்கொண்டாள் ரெங்கம்மா. சரி இங்க எதுக்கு வந்த ? என்றாள் ரெங்கம்மா . டீ குடிக்கலாம்னு வந்தேன் என்று மூச்சிரைத்தான் லாரி .
ஆங் அதுக்குத்தான் குங்குமப்பொட்டுனு பாடுறீயா , ஒரு அறையிலே யே கீழ விழுந்துட்டியே ,முகத்துலயே நாலு குத்து குத்துனா , ரெண்டு மாசத்துக்கு எந்திரிக்க மாட்ட , பெட் டுல சேர்க்கணும் , இந்த வட்டாரத்திலுயே எவனும் எங்கிட்ட வம்பு வச்சுக்க மாட்டான் , என்னை என்ன மெட்றாசு பொம்பள னு நெனச்சியா கொடல உருவிப்புடுவேன் ஆமா , ஒரு குத்து உடறேன் பாக்கறியா என்று "னங்" என்று இடது கையினால் விலா வுக்கு கீழே பக்கவாட்டில் இடி போல் இறக்கினாள். அவன் கிடுக்கிப்பிடியில் மாட்டி யவன் போல நெளிந்தான். எழுந்து நின்று ரெங்கம்மா இடுப்பில் இரண்டிலும் கை வைத்துக்கொண்டு, போர்க்கள வீராங்கனையாக நின்றாள்.
உள்ளூர்க்காரர்கள் , ஏம்பா , சாப்பிட வந்தா கவுரதையா சாப்பிட்டிட்டுப்போவியா , தேவை இல்லாம வம்பு பண்ணாத.. அவ காளியாத்தா மாதிரி. ஏழை புள்ளைங்களுக்கு கஞ்சி ஊத்தரவ , இருவது இருவத்தஞ்சு ரூவா வரைக்கும் கடன் சொல்லலாம் அதுக்கு தாண்டுனா, அடி விட்டுருவா; சாதா அடி இல்ல சும்மா கும்மாங்குத்து. சின்ன ப்புள்ளயானாலும் நல்ல மறுவாதியா பழகுவா, வம்பியழுத்த , அடி வாங்கி சாக வேண்டியது தேன் என்று அறிவுரைத்தனர்.
இந்தா உன் துண்டு , மொகத்தைகழுவிக்கிட்டு டீ சாப்புடு என்று ஒரு நல்ல டீ தந்தாள் ரெங்கம்மா . அவன் டீ குடித்து விட்டு "எவ்வளவு காசு " என்றான். நீ இப்ப காசு தர வேணாம் , பசிக்குதா தோசை தரவா? காசில்லாட்டியும் பரவால்ல; பொம்பளபிள்ளய சுளுவா நினைக்காத , உனக்கு அக்கா தங்கச்சி னு நெனச்சுக்க. இந்த ரூட்ல வந்தா போனா , இங்க வா வயிறார சாப்பாடு தர்றேன் மனசா சாப்பிடு, காசு முன்னப்பின்ன இருந்த என்னய்யா ? ஒழுக்கமா இருக்கணுமய்யா. என்றாள் .
அப்போது கடையில் இருந்தவர்கள் பாத்தியா தம்பி எவ்வளவு அன்பா,தன்மையா பேசுது. அது தான் அய்யா எங்கூரு கும்மாங்குத்து ரெங்கம்மா என்றனர், ரெங்கம்மா உள்ளூர மகிழ்ந்தாள் தன மீது அன்பு கொண்ட வர்களைப்பற்றி. நடுத்தர வயதுப்பெண்கள் பாடு மிகவும் கொடூரமானது. யாரை நம்புவது? இளம் பெண்கள் நிலை மேலும் துயர் நிறைந்தது. வாழ வேண்டியிருக்கிறதே -என்ன செய்ய?
பேரா.. ராமன்
குங்கும்ப்பொட்டு ரெங்கம்மா
ReplyDeleteகும்பாலங்கிடி ஜக்கம்மா
விட்டாபாரு டிரைவருக்கு
விழுந்தடிச்சு ஓடிட்டாரு