Tuesday, October 4, 2022

TV கடையில் முத்திருளாண்டி

                      TV  கடையில் முத்திருளாண்டி

முத்திருளாண்டி ஒரு விவசாயி, கடும் உழைப்பாளி , உழைப்பை மட்டுமே நம்புபவன். அவனை ஏமாற்ற நினைத்தால் ஏமாற்றப்பார்த்தவனுக்கு எப்படி சிக்ஷை செய்வான் என்பது இறைவனுக்கே விளங்காத புதிர். அவனுக்கு ஒருநாள் வீட்டில் சொந்தமாக [இலவச டிவி அல்ல], ஒரு T V யை ஊர்மெச்ச வாங்கி வைத்து மாலை வேளைகளில் நல்ல சினிமா [அதாவது எம் ஜி ஆர் படம்] பார்க்க வேண்டும் என்ற தீராத ஆசை. [ ரேடியோவில் சின்ன சின்ன ஆசை என்ற பாடல் ஒலிக்க ], முத்திருளாண்டிக்கு மூக்கின் மீது கோபம் வந்து, எந்த ஆசையும் சின்னது கிடையாதுடா , உங்குளுக்கு அப்பத்துல நெய் மெதக்குது பாட்டு எளுதுறீங்க

அதெல்லாம் பட்டுக்கோட்டை , நாட்டுக்கோட்டை -அதேன் கண்ணதாசன் இவங்களோட போச்சு, சும்மா தக்கடி  புக்கடி னு எளு திக்கிட்டு இதாண்டா பாட்டுன்னு ஊரவே  ஏமாத்துறீக என்று கடுப்பானான்.

பாருங்கடா சீக்கிரத்துலே ஒரு d v ய வாங்கி வெக்கலைன்னா எம்பே ரு முத்திருளாண்டி இல்ல -ஆம்மாம் என்று சூளுரைக்க , அவன் மகன் என்னப்பா ஏதோ வாங்கின்றியே  -என் னா அது என்றான் . DEE VEE தேன் என்றான் மு. இ.  

அப்பேய் அவசரப்படாத நாளைக்கு நான் நல்ல டிவி எதுன்னு கேட்டுக்கிட்டு வாறன் அப்புறமா வாங்குவியாம் என்றான் . மெட்றாசுல போய் கேப்பியா   என்று வம்பிழுத்தான் மு. இ .

நானு ஒரு சாமி வீட்ல வேலைக்கு போனன்ல , அங்க 'பொன்னியின் செல்வன்' படம் பாத்துக்கிட்டிருந்தாக  அவுக வீட்ல அந்த சூப்பர் டீவி இருக்குது, பேரக்கேட்டுக்கிட்டு வாறன் என்றான் . உடனே மு இ. அடே அது பளைய படம்டா . நான் ஒண்ணாப்பு [ஒன்றாம் வகுப்பு]  படிச்சப்ப வாத்யார் சோமு, கல்கியை ஒளிச்சுவச்சுக்கிட்டு இந்த கதையபடிச்சுக்கிட்டிருந்தார். பூன மாதிரி வந்த எட்மாஸ்டர் சுந்தரம் அய்யரு , வேலையப்பாக்காம கத படிக்கிறியா உன்னைய சஸ்பண்ட் பண்ணிப்புடுவேன் என்று கோபித்தார். சோமு சார்  சிறுபிள்ளை மாதிரி அளுதார். இப்ப எனக்கு 52 வயசு , அந்த சினிமாவ இன்னுமா பாக்குறாக என்றான்.

மாலையில் ஒரு சீட்டில் ஏதோ பெயர் இருந்தது அதை மு. இ இடம் தந்தான். மு இ ன் மகன்.            மு .இ 2 ம் வகுப்பு வரை படித்தவன் , சீட்டில் எழுத்துக்கூட்டி முனகிக்கொண்டிருக்க , அவன் பேத்தி, தாத்தா இங்க தாங்க என்று சீட்டை வாங்கி சோனி என்று படித்தாள். மு இ. வெத்திலை பற்கள் தெரிய சிரித்தான் .

காசு போட்டு குண்டா வாங்காம சோனியா வா வாங்குவாக என்றான்.      மு இ. விளக்கினான். ஒருதஞ்சாவூர் அய்யரூட்ல வேலைபாத்தேன்  . அவங்க மக கம்பி மாதிரி மெலிஞ்சு இருக்கும்.'சோனி', சோனி ' னு கூப்புடுவாக ; அதைத்தேன் சொன்னேன் என்றான் மு. இ . அப்பா இது கம்பணி பேரு என்றான் மகன்

மு .இ இந்த மாதிரி விஷயங்களில் ஆழ்ந்த அனுபவம் உள்ளவன் . கிராமவாசி ஆனாலும், புரிந்துகொள்ளாமல் எந்த வேலையையும் செய்ய துவங்க மாட்டான். கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை ஒரு சுருக்குப்பையில் போட்டு, இடுப்பில் சொருகிக்கொண்டு , மகன் தந்த சீட்டை , உள்ளாடை பையில் திணித்துக்கொண்டு மனைவி செல்வியிடம் மருதைலி ருந்து ஏதும் வேணுமா என்றான். கருப்பட்டிவேணும் நான் பிறகு வாங்கிக்கிறேன் என்றாள் . அடுத்த 40 நிமிடத்தில் முத்திருளாண்டி மதுரை யின் முக்கிய வீதிகளில் கடைகடையாக அலசி ஒரு நல்ல கடையில் நுழைந்து dee vee தாங்க என்றான். கடையில் மூவர் இருந்தனர். என்ன டீவி என்றனர். உள்ளாடைப்பையில் இருந்த காகிதத்தை எடுத்து நீட்டினான்.

இது யார் தந்தது? என்றனர். மு. இ "எம்  மயன்" .என்றான். [மயன் = மகன்]  மயன் தேவதச்சன் அல்ல, சாதாரண கார்பெண்டர் . அதுல எளிதிருக்குல்ல அதைத்தாங்க என்றான் மு. இ. சோனி தான் வேணுமா என்றனர். முதலாளி ஏதோ சமிஞை செய்யஇருவர் பின் புறம் சென்று சோனி என்ற பெயருள்ள பெட்டியுடன் வந்தனர். மு .இ அவர்கள் எங்கிருந்து வருகின்றனர் என கேட்க ஒருவன் -"தோப்பூர்" மற்றவன் செல்லூர்'" என்று தெரிந்து கொண்டான் மு. இ

நல்ல dee vee தாங்க. ஏதாவது கோக்கு மாக்கு பண்ணுனீங்க ஒரு பயலும் மருதைக்குள்ள நடமாட முடியாது போலீசு கீலீசு னு கெளம்புனீங்க அப்புறம் பெரியாஸ்பத்திரி தேன் 4 நாளைக்கு:

அப்புறம் தத்தனேரிதேன் என்று எச்சரிக்கை விடுத்தான். [தத்தனேரி மதுரையின் பழம்பெரும் மயானம்]. DEE VEE யப்போடுங்க என்றான் . ஏதோ செய்தி வாசித்துக்கொண்டிருந்தார்கள். இதுல எம் ஜி ஆர் படம் வருமா? . வரும்  . உங்களுக்கு எப்படி வரணும்?

த பாருங்க எம் ஜி ஆர் வரவும், அம்மளுக்கே கை  எடுத்துக்கும்புட்டு வாங்கண்ணே வாங்கண்ணே னு வாய் நெறய கூப்புடணம்னு எண்ணம் வரணும்--ஆம்மா என்றான். மு.இ. மீண்டும் 45 நிமிடத்தில் செக்கானூரணியில். மு.இ. வெற்றிப்புன்னகையுடன் வீட்டுக்கு வந்து மகனிடம் "வாங்கியாந்துட்டன் பார்" என்றான். டீ வீ யை மாட்டினான் , சுவிட்சை போட்டான் படம் வரவில்லை . கோபம் கொப்பளிக்க கிளம்பிய மு. இ. யை தடுத்து, அப்பா கேபிள் மாட்டுனா தான்  படம் வரும் என்றான் மகன். அடுத்த 1/2 மணியில் கேபிள் இணைத்து விதவிதமான காட்சிகள் அரங்கேறின ஆனால் எம் ஜி  ஆரை காணோம். கடைக்கு போன் செய்தான் மு. இ. ஆனால் கடையை பூட்டிவிட்டிருந்தனர். நாளைக்கு வெச்சிக்கறேண்டா உங்களுக்கு என்று உறுமிக்கொண்டிருந்தான் மு. இ..

காலை 9.30 பஸ்ஸில் மு. இ மதுரைக்கு பயணித்தான் , கையில் ஒரு பெரிய பை . 10. 20 மணிக்கு கடையில் மு. இ.

வாங்க என்றார் கடைக்காரர். வாங்கவா, உங்கள நாலு வாங்கலாம்னு வந்துருக்கேன். ஏ செல்லூரு, நீயுந்தேன் ஏ தோப்பூரு ரெண்டு பேரும் ஒளுங்கா வீடு சேர மாட்டீங்க , இடுப்புக்குக்கீள வண்டிய மாட்டிக்கிட்டு தேன் நடமாடணும் .ம், கலியாணம்காச்சியெல்லாம் மறந்துருங்க. ஏன்டா எம் ஜி  ஆர் வருமான்னா ஆ வரும்நீங்க , எங்கடா வருது. சாயங்காலத்துக்கு நீங்க ரெண்டு பயகளும் எம் ஜி  ஆர் இருக்குற எடத்துக்கு போகப்போறீக ; கோக்கு மாக்கு மாணாம்னு  சொன்னேன் ல , அப்புடீயும் சேட்ட பண்றீகளாடா , வாறேன் சாயங்காலத்துக்கு வாறேன் என்று சிட்டாய் பறந்தான்.

வீட்டில் போஸ்ட் மாஸ்டர் சுந்தரம் பிள்ளை இவனுக்காக காத்திருந்தார் டெபாசிட் திட்டத்தில் மு. இ. ஐ சேர்த்துவிட.. எம் ஜி ஆர் படம் வர மாட்டேங்குது என்று மு. இ புலம்ப, சுந்தரம் பிள்ளை சொன்னார், நான் DVD பிளேயர் வெச்சிருக்கேன் அத CD யோட கொண்டாறேன் எம் ஜி ஆர் , சரோஜா தேவி , ஜெயலலிதா எல்லாரும் வருவாங்க என்று சொல்லி,ப்பையனுக்கு போன்  செய்து , பிளேயர் , 6 CD சகிதம் பையன் வந்தான். . போஸ்ட் மாஸ்டர் முறையான இணைப்பு கொடுத்து CD யை ஓட ஏவிட  படகோட்டியில் எம் ஜி ஆர் , அன்பே வா, நான் ஆணையிட்டால், கண்ணன் என் காதலன்,  குடியிருந்த கோயில் மற்றும் ஒளி விளக்கு என CD வரிசையாக .  முத்திருளாண்டி ஜென்ம சாபல்யம் அடைந்தவனாக போஸ்ட்மாஸ்டர் சொன்னதை செய்ய சித்தமானான்.

மாலை மணி. 5.30  சார் 2 -3 நாள் லீவு தங்க சார் திருப்பதி போகணும் என்றனர் செல்லூரும், தோப்பூரும் முதலாளியிடம்.

உண்மையில் கிராமத்து ஆசாமி நம்மை நர பலி போட்டு விடுவான் என நடுங்கி சிதறி அடித்து ஓடினர். 4 ம் நாள் மொட்டை தலையுடன், சார் நாங்க மஹால் கடைக்கு போறோம் அங்கிருந்து 2 பேரை இங்க பாத்துக்க சொல்லுங்க அந்த க்ராமத்தானை நெனச்சா  குலை நடுங்குது என்று இடமாற்றம் பெற்றுக்கொண்டனர்.

முத்திருளாண்டி எளிதாக இவர்களை நடுங்க வைத்துவிட்டான்

பேரா . ராமன் .

6 comments:

  1. சூப்பர் நகைச்சுவை.

    ReplyDelete
  2. ஏல மு.இ. நீ என்ல சோனியா டி வி வாங்கப்போர மோடி டி வி வாங்குல
    நம்ம தலைவரு பேர்ல இருக்கும்லா
    ஏல மூதி இது கம்பெனி பேராம்ல
    தலவரு பேரில்லையாம்
    அப்போ வசந்த் கம்பெனியிலே வாங்காதே
    அது காங்கிரசுக்காரனோடது
    நம்ம கட்சிக்காரன் கடையில வாங்குடா
    சரிதாம்ல எனக்கு எங்க வாங்கினாலும் எம் ஜி யார் படம் வரமாதிரி டிவி வேணும்
    என்னோட கூட வா. நல்ல கடையா பார்த்து வாங்குவோம்.
    இப்பலே கிளம்புல
    வெங்கட்ராமன்

    ReplyDelete
  3. அண்ணே நீங்க திருநெல்வேலி பாச பேசுதீக அம்ளுக்கு வெளங்குதில்ல.

    ReplyDelete
  4. சொந்த ஊர். பாஷை நம்ம விட்டு போகாதில்ல

    ReplyDelete
  5. அய்யங்கார் பாஷை வரலை
    அம்பாசமுத்திர பாஷை தான் வருது

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-23

  TEACHER BEYOND YOUR IMAGE-23 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-23 அன்பர்களே இதுகாறும் ஆசிரியப்பணியில் ஆசிரியர் மேற்கொள்ள உகந...