பெரும் மனங்கள் /ஆளுமைகள்--6
நாளாம் ,நாளாம் திருநாளாம் ..continued
பாடலின் துவக்கம் மீட்டல் கருவிகள் மாண்டலின், சித்தார் மெல்லிய ஆனால் அழுத்தமான விரைவிய அதிர்வுடன் துவங்க வயலின் கூட்டம் மென் அருவியென தாழ்ந்து இறங்க தபலா டக் தக் என்று உயிர்த்த வுடன் சுசீலா நாளாம் நாளாம் என துவங்க ரசிகர்கள் மெய்ம்மறந்து கேட்பது இப்போதும் நாளையும் என்றென்றும் மாறாத ஈர்ப்பு
அசுரர்கள் மாண்டலின் ராஜு, யூனுஸ், வயலின் கூட்டத்தின் தலைமை அரக்கர்கள் டி கே ராமமூர்த்தி ஹென்றி டேனியல் உள்ளிட்ட வயலின் அரக்கர்கள், ஹனுமந்தப்பா தபலாவில் என ஆதிக்கம் செய்த இப்படைப்பின் தலைமை அரக்கன் விஸ்வநாதன்என்பது உலகறியும் .
இசை
அமைப்பின் மற்றும் இசைக்கருவிகளை மீட்டிய
பாங்கினை எழுதி விளக்க முடியாது.
எனினும் மனங்கவரும் இடங்களை நினைவு கூர்ந்தாலே மனித உழைப்பின் பெருமை நினைவு கூறப்படும்
மேலும் வசதிகள் இல்லாத சூழலில் எப்படி உழைத்திருக்கிறார்கள்..
வசதி இன்மை என்பதை வரப்ராசாதமாக நினைப்பவர் எம் எஸ் விஸ்வநாதன். எப்படி என்போருக்கு எனது அனுபவத்தை பகிர்கிறேன்.
நான்: "சார் வசதியே இல்லாத அந்தக்காலத்துல " என்றதும் எம் எஸ் வி : " வசதி வந்தா அசதி வந்துடும் வேலை சரியா நடக்காது " என்று கூசாமல் கடந்து போனர்.என்ன ஒரு ஆளுமை ? வியப்பு தான் மேலிடுகிறது.
சரி இந்தப்பாடலில் வரும் ஒரு சில விந்தைகளை கவனிப்போம்.
தபலா வின் இடையறாத பயணம் இப்பாடலின் மற்றும் எம் எஸ் வியின் உத்தி அலாதியாக உணரலாம்.
பல்லவியின் முடிவில் சரணம் துவங்க ஏதுவாக ப் ர்ர்ர்ர் ர்ர்ர் என்று சீறும் ஹனுமந்தப்பாவின் தபலா மிரட்டல் வெகு சுகமானது . குறிப்பாக ப் ர்ர்ர்ர்ர்ர் என்ற உருட்டல் இரண்டு சரணங்களும் துவங்கும் முன் [மணமகன் இன்ப ஊஞ்சலில் என துவங்கும் முன்னரும் , பின்னர் இளமையின் இந்த ரகசியம் ] துவங்கும் முன்னரும் இசைப்பதை ரசியுங்கள் . பாடல் முழுவதிலும் குறிப்பாக பாடகர்களுடன் இயைந்து பயணித்த தபலா நடை மிகவும் பெருமையுடன் நினைவுகொள்ளத்தக்கது.
தாளம் என்பது எத்துணை மென்மையும் மேன்மையும் வாய்க்கப்பெற்றது என்பதை நாம் உணர இப்பாடல் ஒரு நல்ல களம் . இடை இசையில் ஒஹ் ஹோ ஒ என்று பாடகர்கள் மெருகு ஏற்றும் பொழுது பின்னணியில் மென்மையாக வயோலா மற்றும் ட்ரம் ட் ச் ட் ச் ட் ச் ட் ச் என ஒலிப்பதை ரசிக்கலாம்
எவ்விடத்திலும் வெற்றிடம் இல்லாமல் இசைப்பதும் , கருவிகள் சுமுகமாக சங்கமித்து பயணிப்பதும் எம் எஸ் வி இசையின் அக்மார்க் முத்திரைகள். ஆகவே இப்பாடலில் இடை இடையே நுழையும் குழல் மிக இயல்பாக ஒலிப்பது மற்றுமோர் ரம்மியம். இடை இசையில் வயலின்களின் சுறுசுறுப்பான இயக்கம் மாண்டொலி னுடன் இணைவதும் இழைவதும் செவிக்கு விருந்து. அத்தகைய பகுதிகளில் நஞ்சப்பா வின் குழல்ஓசை வசீகரமாக ஒலிப்பது மேலும் மெருகூட்டுவதை உணரலாம்.
இவ்வாறு முற்றிலும் மனித பங்களிப்பினால் மட்டுமே முகிழ்ந்த வை இன்றளவும் உயிர்த்துடிப்புடன் மிளிர்வதை பதிவிடாமல் கடந்து போக இயலவில்லை. அக்கலைஞர்களை அசுரர் என வகைப்படுத்துதல் முறையானது என்றே தோன்றுகிறது
https://www.youtube.com/watch?v=le-63cu7KUQ
என்பது இப்பாடலுக்கான இணைப்பு க் குறியீடு
மேலும் வளரும்
பேரா. ராமன் .
உம்மைப்போல் எனக்கு இசை ஞானம் அதிகம் கிடையாது. நீவீர் எவ்வளவு இப்பாடலை ரசித்திருக்கிறீர்கள் என்பது இந்த விமரிசனத்திலிருந்து தெரியும்.
ReplyDeleteவெங்கட்ராமன்