Sunday, November 13, 2022

பெரும் மனங்கள் /ஆளுமைகள் --- 5

 பெரும் மனங்கள் /ஆளுமைகள் --- 5

நாம் ஒரு காரண நிமித்தம் இப்போதும் காதலிக்க நேரமில்லை என்ற ஆக்கத்தில் வியந்து பார்க்க ஏராளமான தரவுகள் இருந்தாலும் ஒரே ஒரு பாடல் குறித்துப்பேசலாம் என்று நினைக்கிறேன்.

பாடல் நாளாம் நாளாம் திரு நாளாம் - சுசீலா, பி. பி ஸ்ரீனிவாஸ் குரல்களில் ஒலித்துக்கொண்டிருக்கும் ஓர் உன்னதம். இந்தப்பாடல் அந்நாளைய குழந்தைகள் போன்றது. ஐயோ இவன் ஏதோ குழப்புகிறானே என்று கவலை வேண்டாம்.   நான் சொல்ல வருவது இது தான் . ஆம் ஆரம்பத்தில் [அதாவது படம் வந்த புதிதில்] பெரும் வரவேற்பை பெறாதது போல் தோன்றினாலும் இதே பாடல் இப்போதும் அதன் கவி நயம், காதல் நயம், இசை வளம், இசைக்கோலம் இசைக் கருவிகளின்   அநாயாச  ஒருங்கிணைப்பு என்று ஒரு காலப்பெட்டகமாக தோன்றுகிறது. நான் அடிக்கடி உணர்த்தும் LATE BLOOMING எனும் பண்பில் அக்கால குழந்தைகள் போன்றதே இப்பாடலும்.  .குழந்தைகள் நமது அவசரத்திற்கு உட்படுத்தப்பட்டு துன்புறுவது போல நல்ல திரைப்பாடல்கள் சில, ஆரம்பத்திலேயே புறக்கணிக்கப்படுவது ஒரு துரதிர்ஷ்டம். அதையும் மீறி கம்பீர பீடு நடை போடும் காவியப்பாடல் தான் “நாளாம் நாளாம் திரு நாளாம்”  இப்பாடலை உருவாக்கிய அனைவரும் போட்டிபோட்டு செயல் பட்டுள்ளனர். 

இவர்களில் எந்த அசுரன் பேராற்றல் மிக்கவன் என்றால் நாம் உதட்டை பிதுக்கும் நிலைக்கு தள்ளப்படுவது உறுதி. இதே பாடலில் பொது மக்கள் அறிந்திராத திரை மறைவு அசுரர்கள் சிலர் இசைக்கலைஞர் களாக விஸ்வரூபித்ததை பாடலை ஆழ்ந்து கவனித்தால் உணர முடியும்.

அசுரன் 1 : இந்த இடத்திற்கு கடும் போட்டி. யார் -முதலிடம் காட்சியை விளக்கிய ஸ்ரீதரா , அதை உள்வாங்கி பாடல் எழுதிய கண்ணதாசனா - இதற்கு நேர்மையான விடை எளிதில் கிடைக்காது.

அசுரன் 2 இசை யாத்த விஸ்வநாதன் அதை ஏன் "யாத்த " என்கிறேன்.? இது போன்ற ஒரு இசைப்பின்னல் காண்பதரிது.

அசுரர் 2 a : இசைக்கலைஞர்கள் யாவருமே அதிலும் குறிப்பாக தபலா ஹனுமந்தப்பா வின் விரல்   ஆதிக்கம்    

அசுரர் :3  இப்பாடலைப்பாடிய P B ஸ்ரீனிவாஸ் , P சுசீலா அற்புதமாக ஒரு ஓட்டப்பந்தயம் அல்லவா ஓடி இருக்கிறார்கள் இருவரும் ஆனால் யாரும் தோற்கவில்லை எனவே ஜெயிக்கவும் இல்லை.

அசுரர் 4: மீண்டும் போட்டி இவ்விடத்திற்கு - ஒப்பனையாளரா ஒளிப்பதிவாளரா என்றே ஒரு ஆழ்ந்த விவாதப்பொருள் இந்த 4ம் இடம் அது குறித்து பின்னர் விளக்குகிறேன்

அசுரர் 5 காட்சியில் இடம் பெற்ற ராஜஸ்ரீ /ரவிச்சந்திரன் அனுபவம் இல்லாத நிலையில் இயல்பாக நடித்துள்ள பெருமைக்குரியவர்கள்.

அசுரன் 6  நடன இயக்குனர் தங்கப்பன் 1963 க்குப்பின் தமிழ் சினிமாவில் மிகுந்த வரவேற்பை பெற்றவர். இப்படத்தில் அவர் மறக்கவொண்ணாத பங்களித்துள்ளார் .

இப்[படி ஒரே பாடலில் இவ்வளவு ஆளுமைகள் 1964ல்

 

அசுரன் 1     கவியரசர் கண்ணதாசன்;

இந்தப்பாடலை ஒரு இலக்கியச்செறிவுடன் வடிவமைத்துள்ளார். திரைப்பாடல்களில் காணப்படாத சொற்கள் இப்[பாடலை அலங்கரிப்பதை காணலாம்

நங்கை , நம்பி இரண்டும் தமிழ் வைணவ இலக்கியத்தில் பவனி வருவன. இளைய கன்னிகை மேகங்கள் என்னும் இந்திரன் தேரில் போன்ற யாப்புகள் திரை உலகில் அதிகம் புழங்காச்சொற்கள்.

“மணமகன் இன்ப ஊஞ்சலில் மணமகள் மன்னன் மார்பினில்அங்கு ஆடும் நாடகம் ஆயிரம் அது காதல் தேவனின் காவியம்”  என்று மற்றுமோர் ;லக்கிய சுவை காட்டும் இடம்.

அதில் ஒருவர் ராகமாம் ஒருவர் தாளமாம் இருவர் ஊடலே பாடலாம் [ இதில் ராகம் விளைவிக்கும் நபர் யார் தாளம் யார் என்பது அவ்வப்போது மாறும் என்பதாக மறைபொருள் உணர்த்துகிறார் கவிஞர் ]

இந்த இளமை போகலாம் முதுமை சேரலாம் இருவர் காதலும் மாறுமோ என்று மாட்சிமை உணர்த்தும் சொல்லாட்சி. 

இந்த அசுரனுக்கு மாற்றாக இன்னோர் அசுரன் பிறக்கவே இல்லை; அவன் போன்றோர் யுக புருஷர்கள் அன்றோ ?

அசுரன் 2 : எம் எஸ் விஸ்வநாதன்

ஆரம்பத்தில் அவர் பெயர் விஸ்வநாதன் என்பதாகவே அறியப்பட்டிருந்தது. பின்னாளில் இனிஷியல் சேர்ந்துகொண்டது [அது ஒரு தனிக்கதை]. அந்தகாலகட்டத்தில் விசு இல்லாமல் படங்கள் என்பது குறைவு .இந்தப்படத்தில் விசு ஒரு பெரும் இசை விருந்து படைத்தார் என்பது சரித்திரஉண்மை

8 பாடல்களும் தனித்துவம் கொண்டவை. 4 டூயட் வகையில்; 4ம் மாறுபட்ட அமைப்பில்  நாளாம் நாளாம் மேலோட்டமாக கர்நாடக வடிவமைப்புபோல தோன்றும், இந்துஸ்தானி களையும் சொட்டும். இரண்டும் உண்டு என்போரும் இல்லை என்போரும் அநேகர். ஆயினும் பலரையும் வியக்க வைத்த கம்பீரம் இப்பாடலுக்கு. விமரிசகர் சுப்புடு இப்பாடலை சிலாகித்ததுடன் விஸ்வநாதனுக்கு மண்டையெல்லாம் சூசகம் என்றுவிசுவை பாராட்டி உள்ளார்.   

மேலும் வளரும்

பேரா ராமன் 

1 comment:

  1. காதலிக்க நேரமில்லை படத்தில் எனக்குப்பிடித்த பாட்டே இந்த நாளாம் நாளாம் திருநாளாம் பாட்டு தான் . கர் நாடக வடிவில் அமைந்த பாடல் . இப்பாடலை ஒராயிரம் முறை கேட்டிருப்பேன் . இன்னமும் கேட்பேன் . ஆரம்ப இசையிலே மயக்கம் தரும் பாடல் . இந்தப்படத்தை என் MSc பரிட்சைக்கு முந்திய நாள் பார்த்தேன் . இந்தப்படத்தை 100 தடவைக்கும் மேலாகப் பாரத்திருப்பேன் . இன்னும் பார்ப்பேன்.
    வெங்கட்ராமன்

    ReplyDelete

Oh Language –14

  Oh Language –14                          Needless to recall the purpose of these Sunday blog postings-I beliecve. Proceed   Spring, Sw...