Thursday, November 3, 2022

சு ழி ச் சா ச் சா

                                                         சு ழி ச் சா ச் சா

இது என்ன என்று தலை சுற்றுகிறதா? சுழி= 0 , சுழிச்சல் என்பது சுழி எனும்  [0] உருவாக்குதல் , சுழிச்சாச்சா என்பது 0 க்கு வழி செய்தாகிவிட்டதா  எனும் கேள்வி. இதுதான் 1950௦, 60 ஏன் 70 கள் வரையில் கூட வரவேற்புச்சொல் ஆக இருந்தது. யாருக்கு?  பரீட்சை எழுதிவிட்டு வீட்டிற்கு திரும்பும் மாணவனுக்கு, வீட்டில் உள்ள பெரியவர்கள் வழங்கும் தனி மரியாதை இதுவே. ஆம் அவன் மனம் புண் படும் என்பதை எவரும் நினைத்ததாக தெரியவீல்லை. ஆனால் எங்கள் மனங்கள் பண் பட்டதென்னவோ உண்மை. [ புண்  பட்டதும்,  பண்பட்டதும் பின்னாளில் 'தத்தை நெஞ்சம்' பாடலில் வந்த கவி நயம்].   

பெரும்பாலும் சோழ தேசத்து ப்ராம்மணக்குடும்பங்களில் மிக இயல்பாக தங்கள் வீட்டு பிள்ளைகளை எளிதாக எடுத்ததற்கெல்லாம் கேலியும் கிண்டலும் செய்வர். சிறுவன் உள்ளூர விசனப்பட்டாலும், இதை கடந்து போவான். உண்மையில் மார்க் ஷீட் வந்ததும்,  சொல், செயலாக மாறி, அடி உதை என்று   வீடே திமிலோகப்படும். ஒரு சில மாணவர்கள் இன்னும் மார்க் ஷீட் தரவில்லை என்று சுமார் ஒரு வாரம் வரை சமாளிப்பார்கள். இதற்கிடையில் வீட்டில் உள்ள பெரியவர்களில் யாராவது ஒருவர் தகவல் சேகரித்து மார்க் ஷீட் போன திங்கட்கிழமையே தந்தாச்சு என்று நடுக்கூடத்தில் அறிவிப்பு வெளியிட உடனே C B I ரக விசாரணை மற்றும் சோதனை இடல் துவங்கும். இந்த அறிவிப்பு வெளியிட்டவருக்கு அன்றைய நாமகரணம்  "கிழம்"  அதாவது பாதிக்கப்பட்டவன் வழங்குவது.          

சரி மார்க் ஷீட் கிடைத்ததா என்றால் --இல்லை. ஏன்? சிறுவன் அதை வேறோரிடத்தில் [அதாவது பழைய பேப்பர் அடுக்கில் அடியில்] பதுக்கிவிட்டான்.  அவனுக்கு தெரியாதா புத்தகப்பையும் அலமாரியும் தான் C B I ன் உடனடி red zone என்று. விழுந்தஅடியில் முகம் சிவந்து நின்றாலும், சித்திரைமாதக்காவிரிபோல் வறண்ட,  ஒரு சொட்டு கண்ணீர் கூட வெளிப்படாதமுகம்;  கல் நெஞ்சன் அல்ல அல்ல  குற்றவாளி யாக நிற்பான்.

இத்தனை அடி விழுந்துருக்கு --ஒரு சொட்டு க்கண்ணீர் வரதானு பாரு என்று அம்மா சொல்ல,  ஆமாம் சரியான கல்லுளிமங்கன் என்று ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு செய்வதறியாமல் அனைவரும் விக்கித்து நிற்க வேறொரு கிழம்  மிஸ்ஸிங்’. 

மிஸ்ஸிங் கிழம் இப்போது கடைத்தெருவில். " ஏம்ப்பா   சுப்ரமணியா நீதானே எட்டாங்கிளாஸ் கிளாஸ் டீச்சர், இன்னும் குவாட்டெலி [quarterly ] மார்க் தரல்லியா என்று கேட்க ; சார் போன திங்கள் கிழமையே குடுத்தாச்சே சில பேர் வீட்டுல கையெழுத்துகூட வாங்கி return வந்திண்டுருக்கே என்றார்  . இப்போது கிழம் வேகமெடுத்து புயலென வீடுநோக்கி பயணித்து 5 நிமிடங்களில் வீட்டை அடைந்தது.                 இப்போது கிழம் பையனிடம் உங்க க்ளாஸ் டீச்சர் பேர் சுப்பிரமணி  தானே? என்றது  .

பையன் "இல்ல அவர் பேர் வேங்கட சுப்பிரமணி” என்று தப்பிக்கப்பார்த்தான். சரி ஏதோ ஒரு சுப்பிரமணி -அவர் மார்க் ஷீட் தந்தாச்சு னு CONFIRM பண்ணிட்டாரே . நீ  மார்க் ஷீட்டை எங்க ஒளிச்சு வெச்சிருக்க என்று ED எனும் அமலாக்கப்பிரிவு போல் இரண்டாம் கட்ட விசாரணை தொடங்கியது. இதற்கு மேல் சால்ஜாப்பு சொன்னால் குற்றப்பத்திரிகைபெரிதாகும் என்று சிறுவன் [சுந்தர்] நன்கறிவான். தானே அலமாரியில் பழைய பேப்பர் அடியில் இருந்து பச்சை நிற அட்டையை உருவினான்.

புது ஜனனத்தை எட்டிப்பார்த்து ஒவ்வொரு மார்க்காக  வாசிக்கப்பட்டது    ஆங்கிலம் =48 .தமிழ்=62 , விஞ்ஞானம் =51 , கணக்கு= 24 , சோஷியல் = 40 .

எதுலயும் அம்பதத்தாண்டால  என்று பெயவர்கள் உறும, சுந்தர் சயன்ஸ் என்று இழுக்க அடேயப்பா அவனவன்எழுவது, எண்பது னு வாங்கறான் நீ  பழைய பேப்பர் விலை மாதிரி கீழ போயிண்டிருக்க, சூடு, சொரணை, வெக்கம், மானம், குடும்ப கௌரவம் எதுவும் இல்லாத பாஷாண்டி டா நீ என்று பொரிந்து தள்ளினர். முதன் முதலாக கண்ணீர் வந்தது சுந்தருக்கு           அம்மா ஒரு moratorium அறிவித்தாள் . அடுத்த பரிட்சையில் 60 க்கு மேல  வாங்கல , வீட்டுல உனக்கு இடம், சோறு எதுவும் கிடையாது. சரி இப்ப கொட்டிக்க வா என்று வெறுப்பை உமிழ்ந்தாள் . அவனிடம் பிறர் குறை கண்ட[எப்போதும் இல்லாத]  சூடும் சொரணையும் இப்போது பீறிட , சுந்தர் வேண்டாம் என்று இரவுசோற்றை தவிர்த்தான். இன்னும் தகப்பனார் வரவில்லை ; அவர் இன்னொரு குருக்ஷேத்திரத்தை எப்போது துவக்குவாரோ, இறைவனுக்கே வெளிச்சம்.    

பக்கத்து வீட்டு சீனு, கணக்கில் 76தான் என்று அவன் தகப்பன் சொல்ல சுந்தரின் வீட்டாரோ அதெப்படி அவன் 100 வாங்க முடியும்? எங்கவீட்டுப்பையன் தான் மீதி 24 வாங்கிவிட்டானே என்று கூசாமல் வெளிப்படுத்துவர்.            

 இப்படி பன்முனைத்தாக்குதல் நடத்தி பெரியோர் சாதித்தது என்ன ?

அவர்களுக்கு என்று எதுவும் இல்லை ஆனால் பையன் இளம் வயதில் கடினமான சூழலை எதிர்கொள்ளும் பக்குவம் பெற்றான்.  ஏன்?  வீட்டில் மார்க் மார்க் என்று வற்புறுத்தினாலும் இன்று போல் 100 க்கு 100 கனவில் கூட பெற முடியாதது . அன்றைய 55 = இன்றைய100; மேலும் யாருமே மிகச்சிறந்த மாணவ மாணவியர் உட்பட 70% க்கு மேல் SSLC தேர்வுகளில் ஈட்டியதில்லை. எனவே குறைந்த மார்க் என்பது கணக்கில் சுந்தர் ஈட்டிய 24 தான் அதைக்கூட அவன் போகப்போக  சரி செய்துவிடுவான். இது தான் அக்கால நிலை.

எனவே சுந்தர் சிறுவயதில் சற்று கவனக்குறைவாக இருந்தான் எனினும், பின்னாளில் மிகச்சிறந்த ஆளுமைகளில் ஒன்றாக ஒரு MNC இல் உயர் மட்ட நிர்வாகியாக ஆறு இலக்க மாத ஊதியம் பெற்றான். இப்படித்தான் அந்த பிராம்மணர்கள் குழந்தைகளை மிகுந்த இறுக்கமான சூழலில் புடம் போட்டு வளர்த்தனர் . பிறர்க்கு அவர்களின் சொல்லாடலும், உடைகளும்  கேலிப்பொருளாக தோன்றலாம் ஆனால் வாழ்வில் எது தேவை, எப்படி தங்களை வளப்படுத்திக்கொள்வது என்பதையும் நன்கு உணர்ந்தமையினால் அவற்றில் கவனம் செலுத்துவர். அவர்களுக்கு புறத்தாக்குதல்கள் ஒரு பொருட்டல்ல. 

பேரா . ராமன்           


1 comment:

  1. Progress report என ற வார்த்தையை நான் படிக்கும்போது எனக்குத்தந்ததில்லை். என் பெற்றோர்கள் என்னிடம் படி என்று ஒரு நாளும் சொன்னதில்லை்்
    சுழிச்ச மார்க் நான் வாங்கவில்லை என்றாலும் கணக்கில்40ஐ தாண்டியதில்லை.
    SSLC பரிட்சையில் எனக்கு கணக்கில் தான்71 மார்க்
    600க்கு 361 மார்க் வாங்கியதால் நான் 1classல் பாஸ் பண்ணினதாக நினைப்பேன் . அப்போது state first mark 461. College ல் அப்போது 60 percent வாங்குவது சிரம்ம்.
    ஏதோ சழச்சலில்லாமல் படிப்பை முடிச்சுட்டேன்
    வெங்கட்ராமன்

    ReplyDelete

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...