தமிழ்த்தொண்டர்
திரு உ வே சாமிநாத ஐயர்
Noble men always
remain noble even in penury...
A SPECIAL POSTING TO
UNDERSTAND THE TOIL OF UV S
மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்திய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாதையர் கூறியது...(சற்று சுருக்கிய வடிவம்-இப்படியும் கண் கலங்க வைக்கும் மனிதர்கள் இருந்திருக்கிறார்கள்!)
மிதிலைப்பட்டி என்னும் ஊரை நான் எந்தக் காலத்தும் மறக்கமுடியாது. 'மணிமேகலை'யை ஒழுங்குபடச் செப்பஞ் செய்து கொடுத்தது அந்த மிதிலைப்பட்டியில் கிடைத்த பிரதியே. புதுக்கோட்டையைச் சார்ந்த திருமெய்யம் என்னுமிடத்திலிருந்து சில மைல் தூரத்தில் உள்ளது. அங்கிருந்து சில ஏட்டுச்சுவடிகளைப் பெற்றிருக்கிறேன். அந்த வகையில் எனக்கு உதவியவர் 'அழகிய சிற்றம்பலக் கவிராயர்' என்னும் ஓர் அன்பர்.
தமிழ் வித்துவான்கள் பரம்பரையில் வந்த இந்தக் கவிராயர் நல்ல செல்வர். அவர் வீட்டின பக்கத்தில் பழைய காலத்தில் யானை கட்டிய கல்லையும் சிவிகையையும் பார்த்திருக்கிறேன். அவர் தம்முடைய முன்னோர்கள் பற்றியும், தம்முடைய சொந்த அனுபவங்கள் பலவற்றையும் என்னிடம் சொன்னதுண்டு. அவற்றுள் ஒன்று...
ஒருநாள் எங்கேயோ நெடுந்தூரமுள்ள ஓரூருக்கு ஒரு கல்யாணத்திற்கு அவர் போயிருந்தார். மீண்டும் ஊருக்குத் திரும்ப எண்ணி ஒரு வண்டிக்காரனிடம் பேசி அமர்த்திக் கொண்டார். இரவு முழுவதும் பிரயாணம் செய்ய வேண்டி இருந்தது. வண்டிக்காரன் மூன்று ரூபாய் வாடகை கேட்டான். அன்றியும், "ஊருக்குப் போகையிற் பொழுது விடிந்துவிடும் ஆகையால், எனக்கு நாளைக் காலையில் சாப்பாடு போட்டு அனுப்ப வேண்டும்" என்றும் தெரிவித்துக் கொண்டான். அவ்வாறே செய்விப்பதாக அவர் உடன்பட்டார்.
இராத்திரியில் வண்டி புறப்பட்டது.
கவிராயர் அதிற் படுத்துக் கொண்டார். அந்த நல்ல நிலா வெளிச்சத்தில் வண்டிக்காரன் ஆனந்தமாய தெம்மாங்கு முதலியவற்றைப் பாடிக்கொண்டே வண்டியை ஓட்டினான். கவிராயர் அந்தப் பாட்டுக்களைக் கேட்டுப் பாராட்டிக் கொண்டே வந்தார். பிறகு வண்டிக்காரன் அவரைப்பற்றி விசாரிக்க அவர் தம்முடைய குடும்ப வரலாற்றைச் சொல்ல ஆரம்பித்தார்.
"நான் இருப்பது மிதிலைப்பட்டி தான். என் முன்னோர்கள் பெரிய வித்துவான்கள். பல ஜமீன்தார்களிடம் கௌரவம் பெற்றவர்கள்.
இந்த மிதிலைப்பட்டி கிராமம் கூட அக்காலத்தில் இந்தப் பக்கத்தில் ஜமீன்தாராக இருந்த வெங்களப்ப நாயக்கர் என்பவரால் எங்களுக்குக் கொடுக்கப்பட்டது.
அது சம்பந்தமான சாஸனம் எங்கள் வீட்டில் இருக்கிறது. எங்களுக்கு இப்பொழுது ஜீவானாதாரமாக இருப்பதும், எங்கள் குடும்பத்தில் லக்ஷ்மீகடாக்ஷம் குறையாமல் இருக்கும்படி செய்வதும் அந்த வெங்களப்ப நாயக்கர் கொடுத்த கிராமமே. அவருடைய அன்னத்தைத் தான் இப்பொழுது நாங்கள் சாப்பிட்டு வருகிறோம். என்ன, கேட்கிறாயா?".
"ஆமாம், சொல்லுங்கள்" என்றான் வண்டிக்காரன்.
"அந்த ஜமீன்தாரால் ஆதரிக்கப்பட்ட,
எங்களைப் போன்ற, பல பரம்பரையினர் இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள்.
ஆனால் அவருடைய பரம்பரையோ இருந்த இடம் தெரியாமற் போய்விட்டது. அவருடைய பரம்பரையினர் இப்படிக் கொடுத்துக் கொடுத்துப் புகழைச் சம்பாதித்தனர்.
ஆனால் செல்வமெல்லாம் போய்விட்டது. அவருடைய பரம்பரையினர் யாரேனும் இப்போது எங்கேயாவது இருக்கிறார்களோ இல்லையோ தெரியவில்லை.
காலச் சக்கரம் தான் எப்படிச் சுழல்கிறது பார்!" என்று சொல்லிக் கொண்டே கவிராயர் அயர்ச்சி மிகுதியால் தூங்கி விட்டார்.
விடியற்காலையில் வண்டி மிதிலைப்பட்டி வந்து சேர்ந்தது. வீட்டை அடைந்த கவிராயர் காலைக் கடன்களை முடித்துக் கொண்டார். தம்முடைய வேலைக்காரனை அழைத்து வண்டிக்காரனுக்குப் பழையது போடும்படி சொன்னார். அப்பொழுது வண்டிக்காரன், "எனக்குச் சாப்பாடு வேண்டாம். நான் போய் வருகிறேன். உத்தரவு கொடுங்கள்" என்று சொன்னான்.
"நீ ஊர் போய்ச் சேர்வதற்கு அதிக நாழிகை ஆகுமே, சாப்பிட்டு விட்டுப் போ" என்று வற்புறுத்தினார் கவிராயர்.
"இல்லை.. இப்பொழுது எனக்குப் பசி இல்லை. போகும் வழியில் தெரிந்தவர்கள் வீட்டில் சாப்பிடுவேன்" என்றான் வண்டிக்காரன்.
"சரி, இதோ வாடகை ரூபாயை வாங்கிக் கொண்டு போ" என்று சொல்லி ரூபாயைக் கொடுக்க ஆரம்பித்தார் கவிராயர்.
"ரூபாய் தங்களிடம் இருக்கட்டும்.
நான் போய் வருகிறேன்" என்று பணிவோடு அவன் சொன்னான்.
கவிராயர் திகைத்து விட்டார். அவன் ஒருவேளை அதிக வாடகை விரும்பக் கூடுமோவென்று எண்ணினார்.
"நான் பேசினது மூன்று ரூபாய் தானே" என்று கவிராயர் கேட்டார்.
"இது கிடக்கட்டும் ஐயா! நான் போய் வருகிறேன். தாங்கள் வேறு ஒன்றும் நினைத்துக் கொள்ளக் கூடாது!" என்று கம்பீரமாக வண்டிக்காரன் சொன்னான்.
"ஏனப்பா? இவ்வாறு சொல்வதற்குக் காரணம் ஒன்றும் விளங்கவில்லையே!"
என்று இரக்கத்தோடு அவர் கேட்டார்.
சிறிது நேரம் கவிராயரையே பார்த்துக் கொண்டிருந்த வண்டிக்காரன் சொன்னான்,
"ஐயா, நேற்று ராத்திரி உங்கள் முன்னோர்கள் கதையைச் சொல்லி வந்தீர்களே! அவர்களை ஆதரித்த வெங்களப்ப நாயக்கர் பரம்பரையிற் பிறந்தவன் அடியேன். ஏதோ தலைவிதி இப்படி என்னை வண்டியோட்டச் செய்தது. 'என்ன செய்தாலும் கொடுத்ததை மட்டும் வாங்கக் கூடாது' என்று எங்கள் பெரியவர்கள் சொல்வார்கள். எங்கள் முன்னோர்களால் கொடுக்கப்ட்டவைகளில் ஒரு துரும்பையாவது உங்களிடமிருந்து வாங்கிக் கொள்ள என் மனம் சிறிதும் துணியவில்லை. மன்னிக்க வேண்டும்.
இவ்வளவாவது தங்களுக்கு நான் உபயோகப்படும் படி கடவுள் கூட்டி வைத்தது என் பாக்கியந்தான்".என்று சொல்லிவிட்டுக் கவிராயர் மேலே பேசத் தொடங்குவதற்குள் வண்டியை அவன் ஓட்டிக்கொண்டே போய்விட்டான்.
நீர் ததும்பும் கண்களுடன் கவிராயர் அவன் போய் மறையும் வரை பார்த்துக் கொண்டே இருந்தார்.
இந்தச் செய்தியைப் பிற்காலத்தில் எனக்குக் கூறும்பொழுதுகூட இந்தக் கடைசிச் சந்தர்ப்பத்தைச் சொல்லுகையில் அவர் கண்களில் நீர்த்துளிகள் புறப்பட்டு, நாத் தழுதழுத்தது.
உயர்ந்த பரம்பரையில் பிறந்தவர்களுடைய கம்பீரமும் உதார குணமும் எக்காலத்தும் அழியாதவை. "கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே" என்ற அருமையான வாக்கியத்திற்கு இந்த வரலாற்றை விட வேறு சிறந்த உதாரணம் கிடைக்குமோ!
தகவல் உதவி : திரு ரகுநாதன் [கோவை],
தொழில் நுட்ப உதவி: செல்வி: யஷஸ்வினி [சென்னை]
நன்றியுடன்
பேரா ராமன்
கெட்டாலும் மேன்மக்கள்மேன்மக்களே என்பதற்கு பல பேர்உள்ளார்கள் . அவர்களை நினைத்தாலே அவர்களுக்குப் பெருமை சேர்ப்பதாகும்.
ReplyDeleteவெங கட்ராமன்