Saturday, January 21, 2023

WHY IS CINEMA INFIRM ?

 WHY IS CINEMA  INFIRM ? 

சினிமா ஏன் தடுமாறுகிறது

தடுமாற்றம் என்பது மிகுந்த முதிர்ச்சியினால் இயக்கங்களில் ஏற்படும் நிலை தவறுதல் [ poor balancing ] மூலம் நிகழக்கூடியது. காதில் ஏற்படும் குறைபாடுகள் கூட தடுமாற்றத்திற்கு காரணமாகலாம் , பிறிதோர் காரணி மங்கிய பார்வை [poor vision ] என்றெல்லாம் மருத்துவக்குறிப்புகள் உள . என்னடா நீ சினிமா என்றாய் , மருத்துவக்குறிப்பு என்று ஏதேதோ தடுமாறுகிறாயே என்கிறீர்களா -இல்லை நான் காட்டும் அடையாளங்கள் சரி எனில் ஏற்றுக்கொள்ளுங்கள் , இல்லையேல் இன்றைய சினிமா புறக்கணிக்கப்படுவது  போல் என்னையும் புறக்கணியுங்கள் .என்ன கதை அளக்கிறாய் என்று ஒருவர் குமுறுவது தெரிகிறது. இந்த சினிமாவின் [குறிப்பாக தமிழ் சினிமாவின் ] அவலம் ஆரம்பித்த இடமே கதை அமைப்பதில் துவங்கியது தானே.

ஆம் 1960 கள்  முதல் சுமார் 15 ஆண்டுகள் நல்ல கதை அம்சம் கொண்ட தமிழ் படங்கள் இன்றும் பேசப்படுகின்றன அதற்கு முன்னர் சரித்திர அல்லது புராண கதைகள் திரையில் வலம் வந்தன [1960-1975] சமூகப்படங்கள் களம் கண்டன . அவை பெரும்பாலும் நடுத்தர மக்களின் வாழ்க்கை யதார்த்தங்களை வெளிப்படுத்தி சினிமா ஒரு ஆரோக்கியமான பொழுது போக்கு நிலையை எட்டியது. அது இயக்குனர்களின் சாம்ராஜ்ஜியம் , கிட்டத்தட்ட எந்த ஆளுமையும் இயக்குனரை ஒதுக்கி விடமுடியாது ; எனவே நல்ல சிந்தனையாளர்கள் இயக்குனர் பீடத்தை பிடித்தனர்.அவர்களில் சிலர் தயாரிப்பாளர் ஆனதால் மனம் விரும்பிய ஆக்கங்களை படமாக்கினர் .நடிகர்கள் உள்பட .அனைவரும் தயாரிப்பாளர்-இயக்குனர் களுக்கு கட்டுப்பட்டுதான் இயங்க முடியும், இயங்கினர். ஒரு சில ஆளுமைகள் சினிமா என்பது ஒரு காட்சி ஊடகம் என்பதை செம்மையாக நிறுவின.

சினிமா ஈட்டிய பொருளாதார வெற்றியை மாத்திரம் கணக்கில் கொண்ட பல பணக்காரர்கள் படம் எடுக்க வந்தது முதல் கதைக்கு பதில் சதை முக்கியத்துவம் பெற்று abdominal dance எனும் தொப்புள் நடனம் மையப்படுத்தப்பட்டது. சிறிய தொப்பையும் ஆழ்ந்த தொப்புளும் உள்ள நங்கையர் நடிகையர் ஆகினர். தொப்பையும் தொப்புளும் கிடைத்தால் தோப்பையும்  துரவையும் விற்று திடீர் பணக்காரர்கள் [தயாரிப்பாளர்]  முளைக்க மேற்படி நடனம் ஆக்கத்தெரிந்த சிலர் நடன இயக்குனர் ஆயினர்

[தண்டபாணி பிள்ளைகள் 'தண்ட' பாணிகள் ஆயினர்] .அதற்கேற்ற ஒலி  எழுப்பும் தாள வித்தகர்கள் இசை அமைப்பாளர் ஆயினர். . நடனமும் பாட்டும் தான்  சினிமா  என்று ஒரு போதை போன்ற நிலைக்கு வந்தது சினிமா ரசிகர் பட்டாளம். நடிக்கத்தெரிந்தால் வீட்டில் கிட, குதிக்கத்தெரிந்தால் நீ ஹீரோ என்று குதியாட்ட குப்பன்கள் முன்னணி நடிகர் ஆயினார். கதை போனதால் கதை பண்ண [கதை அளக்க] துவங்கினர் சில நாரி மணிகள் கொழித்தனர், நல்ல கெளரவமான தயாரிப்பு நிறுவனங்கள் கடையையும் நடையையும் கட்டினர் , தொப்பைகள் கல்லா கட்டினர் இளம் ரசிகர்கள் பல்லைக்காட்டினார், சினிமா லோக் அதாலத் என்பதற்கு பதில் லோகத்தின் அதல பாதாளத்தில் விர்ரென்று வீழ்ந்து 3 காட்சிகள் ஓடினால்  வெற்றி வெற்றி என்ற முழக்கம் ஒலிக்கின்றது.  ஆஹா புரட்சி யல்லவா இது?

தொடரும்

1 comment:

  1. நம்ப முடியாதவை, நடக்காதவை கதையே இல்லாமல் ஒருவன் நாற்பது பேரை அடிப்பது போன்ற சிங்கம் 1, 2 என்று மக்களை ஏமாற்றுவதுதான் இக்கால சினிமாபடங்கள்
    வெங்கட்ராமன்

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-23

  TEACHER BEYOND YOUR IMAGE-23 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-23 அன்பர்களே இதுகாறும் ஆசிரியப்பணியில் ஆசிரியர் மேற்கொள்ள உகந...