Saturday, March 7, 2026

Madurai-5

Madurai-5                                                 

மதுரை -5

என்ன மீண்டும் மதுரையா?  என்று சிலர் புலம்பக்கூடும் . எவ்வளவு சுருக்கினாலும் விவரங்களும் வீடியோக்களும் உலா வரும்போது , இயன்ற வரை எழுதிவிடலாமே என்ற உணர்வு மேலிடுகிறது என்ன செய்ய ? அன்பர்கள் பொறுத்தருள வேண்டும்.

மீண்டும் மீண்டும் நான் ஏதோ மதுரையை உயர்த்திப்பிடிப்பதாக எவரும் எண்ண வேண்டாம். மாறாக வீடியோக்களை ஊன்றி கவனியுங்கள். வெளியூர் ஓட்டல்களில் கொட்டிகொடுத்து  பணம் இழந்து டூரிஸ்டுகள் புலம்பித்திரிவது சர்வ சகஜம் .சற்று விரிவான தகவல்களுடன் மதுரையை சுற்றினால் மன/வயிறு  நிறைவோடு உண்டு மகிழலாம். அதே நேரத்தில் மதுரைக்கென்று சில பிரத்தியேக அடையாளங்கள் எப்போதும் உண்டு-அது தடுக்கி விழுந்த இடமெல்லாம் ஏதோ ஒரு சிற்றுண்டிச்சாலை -சிறியதோ பெரியதோ -"வாங்க என்று வாய் நிறைய , கை கூப்பி    அழைக்கும் நிர்வாகிகள் அல்லது அவரின் சார்பாக ஏதோ ஒருவர் என்பது ப்ரத்தியேகம்..

ஒரு நாளின் எந்தப்பகுதியிலும் நேரத்திற்க்கேற்ப தயாராகும் சிறு சுண்டல் முதல் முழு சாப்பாடு மற்றும் நொறுக்குத்தீனிகளின்  தலைமையகம் மதுரை என்று தைரியமாக சொல்லலாம். இவை தவிர வேறெங்கும் கேட்டிராத பருத்திப்பால், ஜிகர்தண்டா, தேங்காய்ப்பால் முறுக்கு,, பீம புஷ்டி ஹல்வா , காலிபிளவர் பக்கோடா, பஜ்ஜி, போண்டா என பட்டியல் நீளும். இவை தவிர இடியாப்பம், தேங்காய்ப்பூ , மல்லி தோசை,, 5 வகை சட்டினிகளுடன் இட்டிலி, தோசை, மஞ்சள்பொடி பனங்கல்கண்டுபால், சோடாவில் இஞ்சி எலுமிச்சைபிழிந்து குடல்  நலம் காக்கும்   சிறிய பெட்டிக்கடைகள். இவற்றிற்கிடையே தேடித்தேடி வாங்கும் நாட்டுப்பழம் என்னும் வாழைப்பழம் மதுரையில் விற்பனை ஆவதுபோல் வட தமிழகத்தில்    இல்லை , சென்னை வாசிகளுக்கு தெரிந்ததெல்லாம் மாடர்ன் பிரெட் , பெரிய விளம்பர ஓட்டல்கள், பழமுதிர் சோலை என்ற பெயரில் பணம் கறக்கும் நிலையங்கள் மற்றும் சில குறிப்பிட்ட உணவக அடையாளங்கள் இவ்வளவே.

ஈவு இரக்கம் இல்லாமல் மாலை 5 மணிக்கு, தோசை, பஜ்ஜி போண்டா இவை இல்லை  என்று    சொல்லி நோகடிக்கும் ஓட்டல்களின்  தலைநகரம் ஸ்ரீரங்கம். . கேட்டால் 3 மணிக்கு பஜ்ஜி, 31/2 மணிக்கு பூரி மசால் 4 மணி யோட முடிஞ்சுடும் என்று பெருமை பேசும் ஓட்டல் சிப்பந்திகள். எல்லா ஊரிலும் மாலை 3 வரை சாப்பாடு சீரங்கத்தில் சாப்பாடு க்கு காலை 9.30 முதல் 12.30-1.0 மணிவரை, அப்புறம் புளியோதரை தயிர்வடை 2.30 மணி வரை என்று வெறுப்பேற்றும் பூலோக வைகுண்ட ஓட்டல்கள். இவை மதுரை வாசிகளுக்கு வியப்பை மட்டும் அல்ல வெறுப்பையும் தரும். இரவிலும் உணவு கிடைக்கும் தூங்கா  நகர் பிரஜைக்கு மாலையில் தோசைஇல்லை  என்பது பேரதிர்ச்சி.

வடை என்பதை ஒரு வேள்வியாகவே பார்க்கும் மதுரையில் வடைகளின் எண்ணிக்கை, வகைகள் இரண்டிலும் தனி முத்திரை பதிக்கும் நகர் மதுரை [வீடியோவில் பாருங்கள் -3 வடை 5 ரூபாய் என்ற அறிவிப்புடன் ]. பொதுமக்களின் வடை குறித்த வாதங்களையும் விளக்கங்களையும் பாருங்கள். வடையில் இவ்வளவு லாஜிக்கா என்று மிரள வைக்கும் விற்பனை கோணங்கள். பார்த்து ரசியுங்கள்.

இது என்ன மதுரை வெறும் தின்னிப்பயல்களின் கூடாரம் போலிருக்கிறதே என்று எவரும் நினைக்க வேண்டாம். மாறாக எல்லா வகை ருசிகளையம் நன்கு பயன்படுத்திக்கொள்ளும் விற்பனை யாளர்கள் மற்றும் உணவு வகை 'மாஸ்டர்கள் ' நிறைந்த ஊர் மதுரை. எனவே தான் அன்றாடம் வந்து போகும் சுற்றுலாப்பயணியார் கூட மதுரையை வியந்து ரசித்து ருசிக்கின்றனர்.

இவ்வனைத்திற்கும் மேலாக வேறு கலைகளையும் போற்றும் ஊர் மதுரை அவ்வகையில் 1960 களிலேயே நாதஸ்வர இசையில் கலக்கிய முதல் பெண்மணி திருமதி பொன்னுத்தாயி மதுரை தந்த வித்தகர். கர்நாடக இசையில் கொடிகட்டிப்பறந்த மணி அய்யர் [மதுரை மணி] எம் எஸ் சுப்புலக்ஷ்மி, திரு டி என் சேஷகோபாலன், திரு ஜீ எஸ் மணி, திரு டி ஆர் மஹாலிங்கம் மற்றும் திரு டி எம் சௌந்தரராஜன் என பெரும் பட்டியலுக்கு மதுரை உரிமை கோரும். பொன்னுத்தாய் அவர்களின் வீடியோ இணைப்பு கீழே. , அனைத்தையும் கண்டு மகிழ்வீர் .

🔥மதுரையில் குறைந்த விலையில் வீட்டுச் சுவை டிபன்! ஸ்ரீ ஈஸ்வரி டிபன் சென்டர் 🍛” /Sudar /Madurai  Can  we imagine ?

மதுரையும் வடையும் - Vadas of Madurai - MSF An endless range of vadais that MADURAI            BOASTS OF 

10 ரூபாய்க்கு 4 வடை | மதுரையின் அதிவேக வடை மனிதர் | MSF

https://www.youtube.com/watch?v=kJciQ879rGI  Madurai Ponnuthaayi.

நன்றி அன்பன் ராமன்

No comments:

Post a Comment

AUTOBIOGRAPHY [Equus asinus] - 2

  AUTOBIOGRAPHY   [ Equus asinus ] - 2 என்   சுயசரிதை -2 ஹலோ நான் கழுதை பேசுகிறேன் .. Blog   எழுதும் திரு ம வ சொன்னது சரிதான்...