Why is cinema infirm?
சினிமா ஏன் தடுமாறுகிறது ?- 4
சினிமாவின் வீழ்ச்சிக்குக்காரணம் அந்தத்துறை குறித்த ஆழ்ந்த புரிதலும், முறையான திட்டமிடலும், சரியான செயல் திட்டங்களும் வகுக்காமல் 'நானும் படம் தயாரிக்கிறேன்' என்று கிளம்பிய அரைகுறை அறிவாளிகளும், பலவீனத்தை பயன்படுத்திக்கொள்ள தயார் நிலையில் இருக்கும் ,இடைத்தரகர்களும், நடிக்கத்தயார் --அதனால் தாயார் ஆனாலும் தயார் எனக்கிளம்பிய பெண்களும், பரட்டைத்தலை, வாயில் பீடியை இடம் வல மாகத் தள்ளுபவனும், காரணமின்றி மூக்கை உறிஞ்சுபவனும், கழுத்துஓடிந்தவன் போல கோணப்பார்வைபார்க்கும் கோணங்கிகளையும் கதாநாயகன் நிலைக்கு உயர்த்தியது 'நானும் படம் தயாரிக்கிறேன்' வகை தயாரிப்பாளர் அன்றி வேறுயார்?
அது மட்டுமா ? திடீர் இட்லி போல கிளர்த்தெழும் இன்னோர் பட்டாளம் இயக்குனர் என்று வந்துவிட்ட நபர்கள். நான் பல கனவுகளோடு சாதிக்க வந்திருக்கிறேன் என்று பேட்டி கொடுத்து, [சுமார் 20 நாள் தாடியுடன்] எங்கோ வானத்தைப்பார்த்தபடி பூப்பூவாய் அச்சிட்ட துணிச்சட்டை அணிந்து படம் -பார்ப்பவன் பைத்தியக்காரன் என்ற தீர்மான உணர்வோடு இந்த சமுதாயத்தை த்திருத்திக்காட்டுகிறேன் என்று முழங்கும் இளைஞர்கள்.
இவர்கள் சமுதாயத்தைத்திருத்திக்காட்டுவது என்ன வெனில் வீட்டிற்கு தெரியாமல் ஒரு பெண்ணை இழுத்துக்கொண்டு ஓடி மணம் முடித்து , வேரூன்றிய நடைமுறைகளை எதிர்த்து கனல் தெறிக்கும் வசனங்கள் பேசி விசனித்து விக்கித்து இறந்து போவான் ஹீரோ இறுதிக்காட்சியில். பட்ட மரம் ஒன்று ஓரமாக நிற்க இறந்தவன் மீது ஈக்கள் மொய்க்க , இந்நிலை தொடர வேண்டுமா ? என்ற டைட்டில் கார்டு படத்தை முடித்துவைக்க -இதுதான் இவர்கள் கனவோடு வந்த லட்சணம்.
இந்த லட்சண புருஷர்கள் , தம் வீட்டு பெண்ணை ஒருவன் [பிற சமுதாய குறியீடுகள் கொண்டவன்] காதலித்துவிட்டால் கொந்தளிப்பதைப்பார்க்க வேண்டுமே --சமுதாயமாவது கத்தரிக்காயாவது , பிழைப்புக்கு பெனாத்தும் இவர்களை இயக்குனர் என்று அங்கீகரித்தால் நாம் தான் மடையர்கள் --வேறென்ன சொல்ல. சொந்த வாழ்வில் ஜாதிப்பிடியில் இருந்து வெளிவர இயலாதவர்கள் 'சமுதாயத்தை . மாற்றிக்காட்டுகிறேன் என்பதை என்ன வென்பது? ஒரு வேளை, வரும் பொழுதே சமுதாயத்தை ஏமாற்றி காட்டுகிறேன் என்று சொன்னதை சமுதாயத்தையே 'மாற்றிக்காற்றிக்காட்டுகிறேன்' என்று நாம் நினைத்துவிடுகிறோம். இது தவிர இதை எளிதில் விளக்க முடியாது.
இந்தப் படத்தின் இறுதிக்காட்சியும் வசனங்களும் தான் யதார்த்தம் என்று நம்பிய இளைஞர்கூட்டம் வீட்டில் குழந்தைக்குப் பால் வாங்கித்தராமல் கட் அவுட் எனும் ஆளுயர அட்டைப்படத்துக்கு பால் குடம் சுமந்து , அதன் மீதேறி , மூங்கில் முறிந்து கீழே விழுந்து மண்டைபிளக்க 'தலைவா' என்று [ஆதிமூலமே வுக்கு ஒப்பாக] அரற்றி உயிர் நீப்பது புதுப்படங்கள் தரும் வெகுமதி.. இந்த அவலத்தை அரங்கேற்றும் கூட்டத்தினர் அவ்வப்போது தெரு முனையில் வித விதமாக முகபாவங்களில் தங்களின் FLEX BOARD நிறுத்தி "ஆணையிடு தலைவா " என்று சும்மாதிரிந்தவனை அரசியல் அபிலாஷைகளுக்கு ஆட்படுத்தி [அப்படியே அந்த ஆளையும் படுத்தி] சொந்த வாழ்க்கையைத்துறந்து மதுக்கடை வாடிக்கையாளனாகி - பஞ்சபராரியாகி இன்னும் சினிமா போஸ்டரை வெறித்துப்பார்க்கும் சில கிறுக்கர்களை பல ஊர்களிலும் தமிழகமெங்கும் காணலாம். இது போன்ற உப்பு சப்பில்லாத கதைகளை உயர்த்திப்பிடிப்பது பஞ்ச் டயலாக் எனப்படும் பஞ்ச டயலாக்.
அதாவது இவன் படிக்கவோ பணிக்கோ போக மாட்டான் ஆனால் இவனது அவலத்திற்கு அம்பானியும் அதானி யும், டாடாக்களும் காலில் மிதிபடுவார்கள் வசனங்கள் வாயிலாக .
உதாரணத்திற்கு ஒன்று பஞ்சத்தில் சிக்கியவன் பேசினால் பஞ்ச [பன்ச்] டயலாக்
உனக்கு எப்படி இவ்வளவு செல்வம் குவிந்தது ? நீ ஏழைகளை அட்டை போல் உறிஞ்சுகிறாய் , எங்கள் உழைப்பை சுரண்டுகிறாய் என்று வேலைக்கே போகாதவன் சூளுரைத்து , ரத்தம் கக்கி மயங்கிச்சரிவான். இது போல் பஞ்ச டயலாக் [அதான் பன்ச் டயலாக்] எழுதுபவன் மிக கவனமாக இந்தியநாடு முழுவதும் அந்த முதலாளிகள் உருவாக்கிய தொழிற்சாலைகள், அவற்றில் முதலீடுகள், அவை தரும் வேலை வாய்ப்புகள் பற்றி மூச்சு விடமாட்டான். அதே சமயத்தில் அரசியலில் மிதக்கும் பண முதலைககள் அவர்களின் கண்ணுக்கு சமுதாய சிற்பிகளாக தெரிவார்கள். அந்த முதலைகள் பற்றி மூச்சு விட்டால் , மறுநாளே எழுதியவனுக்கு மூச்சில்லாமல் செய்து விடுவார்கள் என்பதை உணர்ந்து 'நெளிவு சுளிவுடன்' வசனம் எழுதி பிழைப்பை தக்கவைத்துக்கொள்வான். செல்வந்தர்களை வசை பாடியவன் எடுக்கும் படத்தில் செல்வச் சீமானின் மகள் ஷீலா வை [ III B .Sc Comp .Sci ] மூன்றாம் பிறை போன்ற அழகியை, 3ம் கிளாஸ் drop out முத்துப்பாண்டி விழுந்து விழுந்து முழுநேரப்பணியாக காதலிப்பார். அவளுக்கோ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தாலும் மூளை மழுங்கி , மு. பா எப்போது வருவான் என்று ஜன்னலில் நின்றுகொண்டே இருப்பாள் . செல்வச்சீமான் வீட்டில் ஜன்னலுக்கு கதவே இருக்காது -மு பா காதலிக்க வேண்டாமா? - இது தான் சமூக சிந்தனை கொண்ட பார்வை.
பணக்காரி -ஏழை பேதம் காதலுக்கு கிடையாது , அது வசனத்துக்குத்தான். இப்படிப்பட்ட இயக்குநர்களைப்பெற என்னதவம் செய்தோம்?
இது போன்ற மாய் மாலங்கள் , அவற்றை தூக்கிப்பிடிக்கும் ஊடகங்கள், பாலுணர்வே சினிமா என்றே தீர்மானித்துவிட்டவர்களை ஆதரிக்கும் வரை சினிமா பிழைத்து எழ வாய்ப்பு இல்லை என்பது நிதர்சனம்.
நிறைவு
சினிமாவில் சேர வேண்டும் என்ற வெறித்தனம் கொண்ட பெண்கள்ajdustment க்கு அடிபணியும் பெண்கள்
ReplyDeleteநேற்று பெய்த மழையில் விளைந்த காளான்கள எல்லாம் director ஆவது
கதையேயில்லாமல்படம் எடுப்பது
இப்படி இருந்தால் சினிமாத்துறை எப்படி விளங்கும்
வெங்கட்ராமன்