Monday, March 6, 2023

MANGO'S THREAT

 MANGO'S THREAT 

மாங்காயிடம் சிக்கிய தேங்காய்

இது என்ன இவன் மீது வெய்யிலின் தாக்கம் அதிகமாகிவிட்டது போல் இருக்கிறதே என்று சிலர் முணுமுணுப்பது நன்றாக தெரிகிறது. செவிடர்களுக்கு உள்ளுணர்வு சற்று அதிகம் என்பதை நினைவில் கொள்வீர் . இது என்ன தலைப்பு என்போருக்கு எனது பதில் தலைப்புமில்லை முந்தானையுமில்லை இது இருவர் குறித்த பார்வை . சரி இதற்கான முகாந்திரம் என்ன என்று சொல்லாமல் விட முடியாதே .

நமது அன்பர் திரு லக்ஷ்மணன் கண்ணன் [மாடபூசி ]அவர் கிளப்பிய பூதம் தான் இது . பூதமா ? ஆம் நவீன உலகில் 60க்கு மேல் மற்றும் 50க்குக்கீழ் என்று இரு சாரார் உளர். இவர்களில் முன்னவர் பேச்சு உளறல் என்று பின்னவர் நினைக்க,  பின்னவர் பிதற்றுகின்றனர் என்று 60+ சொல்லிக்கொண்டு ஒரே குடும்பமாக முனகிக்கொண்டே வாழ்க்கை இயங்குகிறது.

கதையின் கரு இதோ

60+வகையினர் ஏழுமலை ; அதாவது செல் போன் உள்ளிட்ட எந்தக்கருவியும் வெடித்து விடும் என்று எந்த பட்டனையும் தொடவே அஞ்சும் பெருசு -கிராமீய மனமும் மணமும் கலந்த யதார்த்த வாதி அவனை எளிதாக ஏமாற்ற எண்ணி ஒரு SIM CARD 1000/- ரூபாய் 6G என்று சொல்லி இது   5G என்று அநியாய விலைக்கு சிம் கார்டை ஏழுமலையின்  தலையில் கட்டிவிட்டான் கடைக்காரன் ; அதாவது ஏழுமலை ஒரு மாங்காய் மடையன் என்பது கடைக்காரனின் எண்ணம் .

இது வரை இருக்கும் கருத்துகள் திருவாளர்  மாடபூசியின் கற்பனையில் உதித்தவை, அவரின் ஒப்புதலோடு எனது வழியில் கதையை நகர்த்துகிறேன், ஆனால் திரு கண்ணன் அவர் எண்ணப்படி அவர் எழுதட்டும் , எனது வழியில் நான் பயணிக்க அனுமதிப்பார் என்று எண்ணுகிறேன். அவருக்கு ஏதேனும் ஆட்சேபம்  உண்டு எனில் நான்எனது எண்ண  ஓட்டத்தை  நிறுத்திக்கொள்ள முற்றிலும் சம்மதிக்கிறேன். -ராமன்  .

சரி போனை எடுங்க சிம் ம மாட்டிறலாம் என்று கடைக்காரர் சொல்ல

க்கூம் அது அன்றாயர் போன் [அதாவது under  wear ல் ஒளி த்து வைக்கும் என்று பொருள்] அதை யாருக்கும் தராதீங்க என்று என் மவன் சொல்லிருக்கான் அதுனால வீட்டுலேயே வெச்சுருக்கேன் -ஏழுமலை

சரி இந்தாங்க  இது 5G -வீட்டுல போய் மாட்டிக்குங்க என்று [அது 3G யோ என்னவோ] ஏழுமலையை வீட்டுக்கு அனுப்பிவிட்டான். [சரியான மங்கா மடையன் என்று கடைக்காரன் அக மகிழ்ந்தான் மணி 11.00 காலை .டீ சாப்பிடலாம் என்று கிளம்ப [மணி சுமார் 11.20]  மீண்டும் கதவை மறைத்துக்கொண்டு கோபாவேசமாக ஏழுமலை நரசிம்மாவதாரம் போல் உறுமிக்கொண்டு நிற்க, கடைக்காரன் வாங்க என்று ஏழுமலையை கூப்பிட ஏழுமலை திடீரென்று பாய்ந்து கடைக்காரனை சட்டைக்காலரை சேர்த்து பிடித்துக்கொண்டு எங்க ஓடப்பாக்கற ? என்று பிடியை இறுக்கினான்; கடைக்காரன் கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது .

ஏன்யா -ன்னா அது 5G யா எவன்கிட்ட ஒன்  வேலையைக்காட்டற - நான் என்ன மாங்கா மடையன் னு பாத்தியா? [ஐயோ நான் முணுமுணுத்தது இவனுக்கு எப்படி தெரியும் ? பையன்க யாரும் இன்னும் வெளியே போகவே இல்லையே என்று நடுங்கிக்கொண்டிருந்தான். இவன் அந்த சிம் கார்ட் 15/-ரூபாய் என்று தெரிந்து கொண்டுவிட்டான் போலும், பணத்தை திருப்பிக்கொடுத்தாலும் செமத்தியாக உதை பிய்த்துவிடுவான் ஐயோ இப்படி காலை வேளையில் மாட்டிக்கொண்டேனே போலிஸைக்கூப்ப்பிட்டல் அவன் ஏகமாக க்கறந்து கொண்டு 4 செல் போன் ரெண்டு  ஆண்டிராய்டு,+ ஹெட் போன் என்று வாங்கிக்கொண்டே இருப்பானே என்று உள்ளூர பொருமினான்.

திடீரென்று கடைக்காரனைஏழுமலை ஓங்கித்தள்ள அவன் கண்ணாடி டேபிளில் மோதி கீழே சரிய, ஏழுமலை கையில் இப்போது நல்ல அகலமான பனங்காய் சீவும் அறிவாள் .ஒன்ன வெட்டாம விடப்போறதில்ல ,நீ போலீசக்   கூப்புடு,, ராணுவத்தையே கூப்பிடு நான் எதுக்கும் அசரமாட்டேன்.. நீ எல்லாம் இந்த ஊரிலேயே இருக்கக்கூடாது .

நல்ல கேட்டுக்க , நீ 5 G னு தானே சொன்ன? வளியில நகைக்கடையில் போய் இது எம்பூட்டுனு எடை பாருங்கனு  சொன்னேன் . ஏன் சொன்னேன் , ஒரு காதுக்கு நான் போட்டிருக்கன் பாரு தோடு அது அம்புட்டு இளுக்குது காதுல அது 4 கிராம் கடை பில்லு வெச்சிருக்கேன் 4G னு எளுதி குடுத்திருக்காக , நீ தகடு மாதிரி ஒண்ண தந்துட்டு 5G ங்கிறியே என்ன விவரம்னு பாத்துப்பிடுவோம் னு எடையை போட்டா 310 மில்லிதான் தேறுது ஒன்ன  வெட்டினா த்தான் சரிப்படும் மவனே நீ 10 நாள் ஆனாலும் வீட்டுக்கு போக முடியாது பாத்துருவமா , நீ வேற வளி போகமுடியாது நா இந்த முக்குலயே தான் நிப்பேன் நீ வெளிய வா உன்ன வெட்டுவேன் பாக்கறியா என்று ஏற்கனவே சீவப்பட்ட இளநீர் ஒன்றை இடது கையில் பற்றி வலது கையால் "சத்" என்று வெட்ட 3 அங்குல விட்டம் உள்ள ஒரு இளநீர் ஓடு மின்னல் வேகத்தில் வெளியே பாய்ந்து எதிர் வரிசையில் இருந்த மோட்டார் சைக்கிள் டாங்க்கி ன் மீது  டங் என்று விழுந்தது.   நீண்ட நாட்களாக  சிறுநீர்குழாயில் இருந்த அடைப்பு விலகியது போல வேகமாகவும் ஏகமாகவும் சிறுநீர் பிய்த்துக்கொண்டு கொட்டும் போல ஆகி விட்டது கடைக்காரனுக்கு .அப்போது ஒரு போன் வீட்டிலிருந்து " என்னங்க சீக்கிரமா வந்து சாப்பிட்டிட்டு கடைக்குப்போங்க சிக்கன் செஞ்சு வச்சிருக்கேன். நீங்க சாப்பிட்டுட்டு போனதும் நானும் செல்வியும் எக்சிபிஷன் போயிட்டு வரலாம்னு நினைக்கிறோம் , லேட்டா பண்ணாம வாங்க”. . என்னது சிக்கனா அதெல்லாம் ஒண்ணும் வேணாம் நான் சாப்பிட வரல்ல கடையில ஏகப்பட்ட பிரச்சினை இருக்குது என்றான்.

இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று ஏழுமலை ,ஏன்யா சிக்கனை வேண்டாங்கற , கடையில கொண்டாந்து குடுக்கசொல்லுய்யா , உனக்கு வேணாட்டியும் நான் தின்பேன் ல அதையும் கெடுக்கற , சுத்த மடையன் யா நீ ,சீக்கிரம் கொண்டாரா சொல்லு சிக்கன் சாப்புட்டு 2 மாசம் ஆவுது ,மொதல்ல சிக்கனை வெட்டுவேன் அப்புறம் ஒன்னய என்று ஏழுமலை திகிலூட்டினான் .என்னய்யா சிக்கன் சாப்புட்டாலும் வெட்டுவயா கொஞ்சம் கருணை காட்டுய்யா என்றான் கடைக்காரன்.

அடுத்த மாசம் காட்டறேன் அப்பத்தான் மார்க்கெட்டுல கருணைக்கிழங்கு நெறையா வரும் அப்ப காட்டறேன் இப்ப ஒண்ணவெட்டணும் [அவன் காதில் ஒன்ன என்றொலித்தது] யோவ் யோவ் என்று கெஞ்சினான் .

க்கும் சிக்கனக்குடுத்து ஏமாத்தப்பாக்குறியா , அதுக்கு வேற எவனையாவது பாரு என்று மிரட்ட கடைக்காரனுக்கு சிறுநீர் முட்ட கடையில் பின் பகுதிக்கு [கழிப்பறை] ஓடப்பார்த்தான். இரு நான் பின்னாடி கதவை பூட்டிட்டு வரேன் அப்புறம் நீ போ இல்லாட்டி அப்பிடியே ஓடிருவ சிக்கனும் தரமாட்ட என்று பின் புற சாவியை பிடுங்கி கொண்டு தானே போய் கதவை சரி பார்த்து வந்தான்.

சிறுநீர் கழித்து விட்டு கை /கூப்பியபடி வந்தான் கடைக்காரன் . சரி வீட்டுக்கு போன் போடு சூடா  சிக்கன் கொண்டாரச்சொல்லு  நேரம் ஆவுதுல்ல என்றான் ஏழுமலை. வேறு வழியின்றி கடையில் அதிக வேலை இருப்பதால் மறக்காமல் சிக்கன் சூடாக அனுப்புமாறு தெரிவித்தான் கடைக்காரன் . அடுத்த 20 நிமிடத்தில் சூடான சாப்பாடு ,சிக்கன் எல்லாம் வந்தது..

போகட்டும் நல்ல சாப்புடுய்யா ஆனா என்ன உட்ருய்யா என்றான் கடைக்காரன். “உடறதா வேலை மெனக்கெட்டு அருவாளக்கோண்டாந்துருக்கேன்” என்று மீண்டும் புளியைக்கரைத்தான் ஏழுமலை. சாப்பிட்டபின் மனம் இறங்குவான் என்று வேண்டாத தெய்வத்தையெல்லாம் வேண்டினான் கடைக்காரன் .

சிக்கன் அவ்வளவு ஒண்ணும் ருசியா இல்லையே , காக்கா குஞ்சக்கலந்து சிக்கன் னு குடுத்திருக்கான் நீ வாங்கிக்கிட்டு வந்திருக்க.. நீ சிம் ல ஏமாத்தற அவன் உன்ன கறி யில ஏமாத்திப்புட்டான்ல -நீ தான்யா மாங்கா மடையன் என்று திட்டிக்கொண்டே தின்று தீர்த்தான். . இதற்கிடையில் பணத்தைக்கொடுத்துவிட்டால் வெட்டுப்படாமல் உயிர் பிழைக்கலாம் என்று சரி ய்யா நான் உன்னை ஏமாத்தல  2000/- தர்றேன் என்ன  விட்றுயா என்றான் கடைக்காரன். சரி ஒழியட்டும் என்று ஏழுமலை . எண்ணு பணத்தை என் கண்ணு முன்னால இல்லாட்டி நீ ஏமாத்துவ என்று அரிவாளை உயர்த்திப்பிடித்தான். கடைக்காரன் பணத்தை எண்ண த்தொடங்கினான் . முதல் 1000/- ஆனதும் இங்கே வை என்று டேபிளில் இடம் காட்டினான். அடுத்த 1000/-முடிந்ததும் பக்கத்தில் வை என்றான். ஒளுங்கா எண்ணி இருக்கியா ? கடைக்காரன் நடுங்கிக்கொண்டே மீண்டும் எண்ணி ஆயிரம் வந்ததும் தனது மஞ்சப்பையில் போடச்சொன்னான். இரண்டாவது ஆயிரத்தை பையில் போட வந்ததும்  ஏழுமலை சொன்னான் "உன் காசு எனக்கு வேணாம் ஒளச்சு  வேல செய்யற ஜனங்களை ஏமாத்தாத . அதுனால நீ சிக்கன் னு நெனச்சுக்கிட்டு காக்காயத் திங்கற .உன்னால 1/2 நாள் வேலை போச்சு. . இன்னொரு தடவ எவனையாவது ஏமாத்துன கண்டிப்பா அருவா;ள்  பேசும் ஆமா சொல்லிப்புட்டேன். பொளச்சுப்போ என்று தெருவில் இறங்கி நடந்தான். ஆள விட்டாப்போதும் என்று மாலை 5.00 மணிக்கு கடையைப்பூட்டிவிட்டு கடைக்காரன் கோயிலுக்கு ஓடி சாமி ஏழுமலையான் பேருக்கு அர்ச்சனை என்று தட்டை நீட்டினான் அரிவாள் ஆசாமியின் பெயர் தெரியாமலே .

நன்றி அன்பன் ராமன்

1 comment:

  1. சிம்கார்டை எடை போட்டு 4 ஜியா 5ஜியா என்பவன் மாங்கா மடையன் இல்லை தேங்கா மடையன்தான்
    வெங்கட்ராமன

    ReplyDelete

SALEM SUNDARI- 53

SALEM SUNDARI- 53 5  நாட்களுக்கு பின் மாடசாமிகாலை 9.45 க்கு வந்துவிட்டார் பின்னர் ஒவ்வொருவராக வர கடைசியில் 9.57 க்கு சுப்பு ரெத்த...