Teacher –Beyond your Image- 2
ஆசியர் -- உங்கள் பிம்பத்தை தாண்டி -2
போதிப்பவன் தன்னை மாணவன் நிலைக்கு இறக்கிக்கொள்ள வேண்டும்
என்று சென்ற பதிவில் இறுதிப்பகுதியில் தெரிவித்திருந்தேன். அது என்ன ?
1. தனக்கு தெரியும் என்ற மன நிலையை விலக்கிவிட்டு , இவர்கள் அனைவர்க்கும் நம்மால் விளக்கி விளங்க வைக்க முடியுமா என்று யோசியுங்கள். இது என்னால் முடியும் என்பது அடிப்படை நம்பிக்கை.
2. அதில் தவறில்லை. ஆனால் தவறு எங்கே துவங்கும் எனில் -வெறும் நம்பிக்கையை மட்டுமே நம்பி வகுப்பறைக்குள் நுழைந்து பின்னர் எப்படி முன்னெடுத்துச்செல்லலாம் என்று யோசிப்பவர் ஆசிரியராக வெல்வது எளிதல்ல.
களத்தை மனக்கண்ணில் நிறுத்துங்கள்.
வகுப்பறையில் பெரும் கூட்டம் அமர்ந்திருக்கிறது. எப்போதும் சலசத்துப்பேசி பாடம் நீங்கலாக பிறவற்றில் நாட்டமும் கவனமும் செலுத்தும் பெரும்பான்மை, எப்படியும் முறையாகக்கற்கவேண்டும் எனும் நாட்டத்துடன் . ஒரு சிறுபான்மை. இந்த சிறுபான்மையில் பலரும் பெண்கள். ஒரு சில ஆண்கள்.
நீங்கள் ஆசிரியப்பணிக்குப்புதியவர்.
நீங்கள் பாண்டவர்களில் ஒருவர் ;எதிரே துரியோதனாதிகள் .கூட்டம் . இது தான், வகுப்பறை என்னும் போர்க்களம்.
நீங்கள் அர்ஜுனன் என்றே வைத்துக்கொண்டாலும் க்ரிஷ்ணபரமாத்மா நமது குருக்ஷேத்ரத்தில் நம் கண்ணுக்கே தெரியமாட்டார்.
எதிரணி உங்களை தாக்கி நிலைகுலையச்செய்ய தருணம் பார்த்து காத்திருக்கிறது. மாணவர்கள் என்ன போர் தொடுப்பவர்களா எனில் ஆம் என்றும் இல்லை என்றும் சொல்லலாம்.
ஆசிரியர் அனுபவமில்லாத புதியவர் எனில் வம்பிழுத்து உங்களின் தொழில் திறனை சோதனைக்குட்படுத்தி ஒருவித தயக்கத்தை உங்கள் ஆழ்மனதில் ஏற்படுத்திவிடுவர். [எனவே போர் தொடுப்போர் தான் மாணாக்கர்கள்].
ஆசிரியன் தேர்ந்த திறமையாளனெனில் சேவகன் போல் கைகட்டி ஒடுங்கி அமர்ந்து பாடம் கேட்க காத்திருப்பர்.[எனவே போர் தொடுக்க வரவில்லை அவர்கள்]. அவர்கள் ஆயுதம் தொட நினைக்கும் முன் உங்களின் அஸ்திரம் பாய்ந்து திக்கெங்கும் முழங்க வேண்டும்..
ஆசிரியனின் அஸ்திரம் ஓங்கி ஒலிக்கும் குரல்.
நடுக்கம் தயக்கம் இரண்டுமின்றி குலை நடுக்கும் தாக்குதல் போல சீறிப்பாயும் சொல்லாட்சி பாடம் துவங்கிய 2 நிமிடங்களுக்குள் வெளிப்பட அவனவன் ஆயுதத்தை க்கீழே போட்டு –இவன் [இவ்வாசிரியர்] நம்மை எளிதாக வீழ்த்திவிடுவான் என்று உயிர் பயம் கொள்வர்.
எனவே தான், நான் ஒவ்வொருமுறையும் மொழியின் வலிமையை நன்கு கைக்கொண்டு முன்னேறுங்கள் என வலியுறுத்துகிறேன். .மொழியின் வீரியத்திற்கு அடிபணியாமல், எந்த மனிதனும் தப்பிக்க இயலாது. அப்படி ஆனால், அந்த உரிமையை சரியாக கையாள ஒவ்வொரு தனி நபரும் மொழி ஆளுமையை முற்றாக வசப்படுத்துதல் ஆசிரியப்பணிக்கு மிக மிக அவசியம். நான் ஆங்கிலத்தை மட்டுமே சொல்லவில்லை. எந்த மொழியிலும் ஆளுமை கொண்டவன் ஆசிரியனாக பரிமளிப்பது எளிது.
ஆசிரியப்பணியில் வெற்றி நாட்ட விழைவோருக்கு [அர்ஜுனன் களுக்கு] மொழி ஆளுமை தான் க்ரிஷ்ணபரமாத்மா. வெளியே தெரியாமல் உள்ளிருந்தே இயக்கும் கிருஷ்ணன். சொற்கள் சிறப்பாக வெளிப்பட, கேட்பவன் மலைத்துப்போவதும் சரணாகதி என பணிவதும் ஆசிரியர் தனது பணியை சிறப்பாக நிறைவேற்ற உதவும் அடிப்படை தேவைகள்.
ஆசிரியர் போதிக்கும் போது, குறுக்கீடு செய்து, தங்களை பெரும் விவரமறிந்த அறிவாளிகள் போல் காட்டிக்கொள்ள சில தனவந்தர் வீட்டு குழந்தைகள் முயல்வது எப்போதும் உண்டு. அவர்களின் நிலைப்பாடு குறித்து ஆராய்ந்தால் அந்த சிறுவனுக்கு தனது மொழிகுறித்த நம்பிக்கையும் அகம்பாவமும் ஆசிரியரைவிட தன்னை உயர்வானவான் என்று நினைக்க வைக்கிறது. உங்களின் ஆளுமை பலம் பொருந்தியதாக இருந்தால், வெலவெலத்து விலகிச்செல்வர் அவ்வகை மாணாக்கர்கள்.
ஆசிரியரின் ஆளுமையின் அடுத்த அங்கம், பாடத்தின் எந்த பகுதியின் மீதும் அவருக்கு இருக்கும் குரல்வளைப்பிடி எனும் GRIP. [ subject command]விவரம் அறிந்த ஆசிரியர்கள் பாடத்தின் மீது தமக்கு இருக்கும் பிடியை நழுவ விடாமல் மென் மேலும் வலுப்படுத்திக்கொண்டே இருப்பர். அதாவது எப்போதும் சிலபஸ் [SYLLABUS ] என்ற எல்லையை தாண்டி மேலும் பல தகவல்களை சொந்த அறிவு மேம் பாட்டிற்கான இடையறா முயற்சியாக மெருகும் வலிமையையும் ஏற்றிக்கொண்டு எப்போதும் தயார் நிலையின் எல்லையில் நின்றிருக்கும் போர் வீரர்கள் போன்றவர்கள்.
வேறு சிலர் பாடத்திட்டத்தின் தேவை என்ற அளவில் மட்டும் பாடங்களை பயின்று கற்பிக்க முயல்வர். இவர்கள் சர்க்கஸ் வட்டத்தில் ஸ்கூட்டரில் பயணிக்கும் கரடியைப்போன்றவர்கள். வட்டத்தை தாண்டி வெளியே செல்ல முடியாத சர்க்கஸ் கரடி போன்றவர்கள். அந்த கரடியைப்போன்றே வையைப்பிளந்து கொண்டு வேறேதும் தெரியாமல் பேதலித்து விழிக்கும் ஆசிரியர்கள். இந்த கரடிகளை கேள்வி கேட்டால் take down என்று நோட்ஸ் வாசித்து பிழைத்துக்கொள்ளும் ஆசாமிகள்.
மாணவர்கள் இவர்களை செழிப்பாக வம்பிழுத்து கேலி பேச, இவர்களால் ஏதும் செய்ய இயலாது . ஏனெனில், கையில் சரக்கு இல்லை.
எனவே ஹி ஹி என்று அசடு வழிந்து புகலிடம் தேடுவர். ஆனால் இவர்கள் தான் பெரும்பான்மையினர் , எனினும் உள்ளூர அழும் பிறவிகள்.
குரலை உயர்த்திப்பேச வக்கில்லாதவர்கள். இவர்கள் தரமான கல்விக்கு உதவுவதில்லை ஆனால் அமைதியாக ஊறு விளைவிப்பவர்கள். மாணவ சமுதாயம் இவர்களை மிகவும் கேவலமாக பழிக்கிறது எனினும் ஆளுமை இல்லாதவர்கள் எதுவும் செய்ய இயலாது.
வளரும்
அன்பன் ராமன் .
NTA " வழியில்" NET லும்
ReplyDeleteCSIR லும் SET லும் "தேறி"
பணி புரியும் ஆசிரியர்களில் எத்தனை பேர் இப்பதிவில் குறிப்பிட்டுள்ள தகுதிகள் உடையவர்களாக இருப்பார்கள்?
😢😢