Sunday, June 30, 2024

Teacher –Beyond your Image- 3

 Teacher –Beyond your Image- 3

ஆசியர் -- உங்கள்  பிம்பத்தை தாண்டி -3

ஆசிரியயப்பணியில் கையால் ஆகாதவர்களை, அவர்களே தங்களை மாற்றிக்கொண்டால் அன்றி பிறர் எவரும் உதவி செய்து முன்னேற்றிட வழியே இல்லை என்பது எனது திடமான தீர்மானம் .

ஆம், அவர்கள் தங்களிடம் இயலாமை இருப்பதை உணர்வதையோ உணர்த்துவதையோ விரும்பாதவர்கள். மாறாக, தாங்கள் மாபெரும் திறமைசாலிகள் என்பதாக சுயதம்பட்டம் அடித்துக்கொண்டு, பிறரிடம் கூனிக்குறுகி பிழைப்பு நடத்துவதை கலையாக கடைபிடிப்பவர்கள். வகுப்பறைகளில் ஆசிரியர் என்ற நிலையில் இருந்து வழுவி கீழிறங்கி நட்பு பாராட்டுதல் குற்றம் காணாதிருத்தல் , மார்க் வழங்குவதில் வரைமுறை இல்லாதவர்கள் [ விடைத்தாள்களை ஆழ்ந்து படித்தால் தான் ., முறையான மதிப்பெண் வழங்கும் துணிவும் தெளிவும் பிறக்கும்.; அதற்கு பாடப்பகுதியின் அனைத்து மூலை  முடுக்குகளையும்  தெளிவாக மனதில் இருத்தினால் அன்றி, நியாயமான நிலைப்பாடு எடுத்தல் வெகு கடினம். கையாலாகாதவர்கள், உடல் வருத்தி உழைப்பதை துவக்கம் முதலே பின்பற்றாமல் வாளா இருந்ததனால் தான் கையாகாதவர்கள் என்ற அடைமொழி தாங்கி வாழ்பவர்கள்] அவர்கள் திருந்தப் போவதில்லை.

ஆசிரியயப்பணியில் முறையான முன்னேற்றம் காண விரும்புவோர் மேற்கொள்ளவேண்டியன : முன்னேற்பாடுகள் / கவனம்தொழில் கட்டமைப்புகள் , செயல் கட்டமைப்புகள் யாவை என்று உணர்வோம் .

முன்னேற்பாடுகள்

இவற்றை,  இரு வேறு  தேவைகளாக அறியலாம.

1 புற வடிவம்,  2 செயல் வடிவம்

புற வடிவம்

ஆடை அணிதல், சீராக வாரிய தலை, ஒழுங்காக அணியும் ஆடை, காலில்  அணியும் ஷூ /செருப்பு என இவை உங்களை ஒரு கவனம் மிக்க கனவானாக அடையாளப்படுத்தும்.

இவற்றை கவனிக்க வைப்பது  நடை.

நடை

 தளர்ச்சி, சோர்வு இல்லாமல் மிதமான சீரான வேகத்தில் நிமிர்ந்து நடப்பவர்கள் பெரும் ஆளுமைகளாக ஏற்கப்படுகின்றனர். நடக்கும் போதே சுற்றிலும் என்ன நடக்கிறது என பார்த்துக்கொண்டே வந்தால் ஆங்காங்கே நின்று கதை பேசும் கும்பல் மெல்ல கலைவதை காணலாம். அப்படி எனில் அவர்கள் உங்களிடம் நேரடியாக பயிலும் மாணவ மாணவியர் என்று உணரலாம்.அவர்கள் உங்களுக்கு தெரிந்தோர் எனில், அவர்களின் வகுப்பில் யாரையும் குறிப்பிடாமல், வளாகத்தில் பேசித்திரிவதற்கு பதில் லைப்ரரி சென்று நல்ல   நூல்களைப்படித்து குறிப்பெடுத்து தேடுதலை விரிவு படுத்துங்கள் என்று பொதுவாக சொல்லிவிட்டு வகுப்பை துவங்குங்கள்.  அரு மருந்தாக வேலை செய்யும்.

இப்படி விரைந்து சுறுசுறுப்பாக நடந்து வந்தாலும், வகுப்பறை வாயிலில் சுமார்  2 வினாடி நின்று பின்னர் வகுப்பினுள் நுழையுங்கள்-- ஏன்?     

 நீங்கள் வருவதை கவனிக்காதோர் கூட, உங்கள் வருகையை உணர்வர். உரிய மரியாதையுடன் எழுந்து நிற்பர். திடீரென்று வகுப்பில் நுழைந்தால், சிலர் உங்களை கவனிக்காமல் அமர்ந்தே இருப்பர். மரியாதைக்குறைவாக நடந்து கொள்வதாக ஒரு கோபம் தேவை இன்றி கொழுந்து விடும்.

வகுப்பில் கோபத்துடன் செயல் படுவது, பயிற்றுவிக்கும் ஆர்வத்தைக்குன்ற வைத்து விடும்.

புற வடிவம்-- இரண்டு . 

ஆசிரியர்வகுப்பில்-- மேடையில் நின்று வானத்தைப்பாராமல்,  அனைவரையும் மளமள வென்று ஒரு நோட்டம் விடுங்கள், ஆங்கங்கே கவனம் இன்றி இருப்போர் மிக எச்சரிக்கையாக  கவனிக்கப்படுகிறோம் என்று ஒழுங்கான நிலை யில் அமர்வர்..

அடுத்து, முதலில் வருகைப்பதிவை முறையாகப்பதிவிடுங்கள். இதனால், லேட்டா வந்தவர்கள், பின்னர் உங்களை அணுகி அட்டெண்டன்ஸ் வழங்குமாறு வருவர். அப்போது ஏன்லேட் என்று கேட்டு ஒரு நோட் புத்தகத்தில் ஒவ்வொருவரின் காரணத்தைக்குறித்துக்கொண்டு இனிமேல் லேட்டா   வந்தால் அட்டெண்டன்ஸ் கிடையாது என்று சொல்லிவிட்டால்,  லேட்டா வந்தால் மென்மேலும் பிரசினைகள் தோன்றுமோ என கவலை கொண்டு லேட்டா வருவதை தவிர்ப்பர். இந்த சின்ன அச்சுறுத்தல் ஒரு உயர் பண்பை அமைதியாக இளம் மனங்களில் விதைத்து விடும்.

புதிதாக துவங்கும் எந்த வகுப்பிலும் முதல் இரண்டு முறை, மாணவ/ மாணவியரை பெயர் மற்றும் நம்பர் சொல்லி அழையுங்கள். அவர்கள் எழுந்து பதில் சொல்லும் போது, நபர் யார் என்று பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால், பின்னர் வரும் வகுப்புகளில் நம்பர் வாசித்து வருகைப்பதிவை நிறைவு செய்தால், ஆசிரியர் என் பெயரையும் அறிவார் என்று உணர்வர். அதோடு, பொதுவாக கிட்டத்தட்ட ஒரே இடத்தில் குறிப்பிட்ட நபர்கள் அமர்வர்.

இடம் /ஆள் மாறி இருந்தால் கண்டுபிடித்துவிடலாம். இதனால் ஆசிரியர் நம்மை கண்காணிக்கிறார் என்று புரிந்துகொண்டு பல குழப்பங்களை அவர்களே தவிர்த்தோ தடுத்தோ, வகுப்பு சீராக நடை பெற உதவுவர். இவை அனைத்தும் புற வடிவங்களாக இருப்பினும் , ஆசிரியன் ஆளுமை மிக்கவன், வலுவானவன் என்ற தோற்றத்தை நிறுவ இயல்பாக உதவி செய்யும் . 

கவனம்

ஆசிரியன் சில வலுவான சுய கட்டுப்பாடுகளோடு இயங்கினால், தேவையற்ற விமரிசனம், சுவர்களில் ஆசிரியனின் உருவம், பெயர், கேலிச்சித்திரம் போன்ற அவலங்களை பெருமளவு தவிர்க்கலாம். எனினும் தொழில் சார்ந்த பெயர்கள், கழுகு, புலி, வேட்டைநாய், டிக்ஷனரி, என்சைக்ளோ என்ற பெயர்கள் பொருத்தமாக சூட்டப்படும். அவை, ஆசிரியப்பணியின் தவிர்க்கவொண்ணா பாரம்பரிய முத்திரைகள். அவற்றுக்கெல்லாம், சஞ்சலம் அடையவே கூடாது.

பின்னாளில் வாழ்வில் ஏற்றம் பெற்ற ஒவ்வொரு மாணவ/மாணவியும் மாபெரும் உவகையுடன் உங்கள் வகுப்பறை செயல் பாடுகளை விவாதித்து மகிழும் போது நீங்கள் இறைவரம் கொண்டோர் என்பது அம்மாணவர்களுக்கு நிதரிசனம் ஆகும். அவ்வப்போது சந்திக்கும் பழைய மாணவர்கள்,சார் உங்களைப்பற்றி பேசாத நாளே இல்லை என்பர். அதாவது யதார்த்த உலகில் சுற்றிலும் நம்பகமற்ற சூழலை பார்த்தபின் ஐயோ, எவ்வளவு தன்னலமின்றி பயிற்றுவித்த ஆசிரியர்களிடம் பயின்றேன் என்று நன்றி கொள்ளும் போது தனி நபர் ஒவ்வொருவரும் வாய்ப்பு கிடைத்தால் அந்த ஆசிரியரை சந்திக்க வேண்டும் ஆசி பெற வேண்டும் என்றே காத்திருப்பர்.

எனவே, ஆசிரியப்பணியின் ஆளுமை, செம்மையாகப்பலன் தர வேண்டும் எனில் நமது செயல் ஒவ்வொன்றிலும் 'கவனம்' முதல் இடம் கொள்ள வேண்டும்.        எந்த தனி நபருக்கும் சலுகை /விசேஷ மதிப்பு தராதீர்கள்.

அது உங்கள் மதிப்பை தாழ்த்தி விடும்.

குறிப்பாக பயிலும் பெண்கள் இருக்கும் பகுதிகளில் நீங்கள் விலகியே நில்லுங்கள். தனி நபர் நெருக்கங்கள் ஆபத்தானவை.. விலகி நிற்க நிற்க, பயில்வோர் சொந்த நலன்களுக்கு    அவரை அணுகுவது எளிதல்ல என்ற தார்மீக வேலி நம்மை காத்து நிற்கும்.  அவச்சொல் பேச, தயங்குவர்.

பாடங்களில் ஐயம் தீர்ப்பது ஆசிரியன் கடமை, ஆனால் தனியே வரும் [குறிப்பாக பெண்கள் ] யாருக்கும் விளக்குவதைக்காட்டிலும் குறைந்தது 4 பேர் இருந்தால் விளக்கி தெளிவுபடுத்தலாம். இன்றேல், பலர் முன்னிலையில் விளக்கம் சொன்னால் தேவையற்ற விமரிசனங்கள் எழாமல் பார்த்துக்கொள்ளலாம். அதற்கும் 'கவனம்' தேவை   உங்களின் களப்பணி செம்மையாகும் போது நீங்கள் எட்டாத உயரம் நோக்கி பயணிப்பது திண்ணம்.   

தொடரும்  அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...