Sunday, July 21, 2024

Teacher –Beyond your Image- 6

 Teacher –Beyond your Image- 6    

ஆசியர் -- உங்கள் பிம்பத்தை தாண்டி -6

சொந்தக்காலில் நிற்பது

மாணவ மாணவியர் சொந்தக்காலில் நிற்பதை நான் ஏன் வலியுறுத்துகிறேன் எனில் அதற்கு இணை அது தான்.

தமிழில் ஒரு சொலவடை உண்டு 'கட்டுச்சோறு" எத்துணை நாளுக்கு வரும்.?  மற்றுமோர் சீனப்பழமொழி "மீனைக்கொடுக்காதே , மீன் பிடிக்கக்கற்றுக்கொடு  இவை உணர்த்தும் பொருள்- தன்னிறைவு அடைதல் என்னும் வாழ்வியல் உத்தி என்பதே. அவ்வாறிருக்க சொந்தக்காலில் நிற்பது அறிவின் அடிப்படையில் எழும் செயல் திறன், புரிதல் மேம்பாடு மற்றும் ஆளுமை என விரிவடைதல் முறையான கல்வியின் முற்றான வெளிப்பாடு.                      எனவே, சொந்தக்காலில் நிற்பது எந்த நிலையிலும் வரவேற்கத்தக்கதே.

அது எப்படி சாத்தியம்?

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு செயல்பாடு, உத்தி மற்றும் நுணுக்கங்களை யாரிடமிருந்தாவது பார்த்து உணர்ந்து, புரிந்து கொண்டு செயல் படுத்த முனைகிறோம். குழந்தை நடப்பது, பேசுவது, பல கோணங்களில் பார்ப்பது, எழுதுவது-- என அனைத்தும் பார்த்துப்        பார்த்துப்புரிந்துகொண்டதன் விளைவே. ஆகவே சொந்தக்காலில் நிற்பது என்னும் தன்னிறைவு முறைகளையும் பார்த்து அனுபவித்து தானே கற்க இயலும்?

யாரிடம் போய் கற்க?, அதுவும் கல்லூரி பருவத்தில் UG / PG நிலையில்  இருக்கும் பயில்வோர் தன்னை விட மேம்பட்ட தளத்தில் இருக்கும் பயிற்றுவிப்போர் எனும் ஆசிரிய, பேராசிரிய பெருமக்களைத்தானே பார்த்து புரிந்துகொள்ள முயல்வர் ? அப்படியெனில் அம்மக்களின் பொறுப்பும் திறனும் பன்மடங்கு சுயசார்பு எனும் தன்னிறைவு பற்றிய கட்டமைப்பாக இருந்தால், அவ்வகை செயல் முறைகளை நேரடியாக கண்கூடாக உண்பர்ந்து பின்பற்றிட உதவும் .எனவே போதிக்கும் ஆசிரிய / பேராசிரிய பெருமக்கள் தன்னிறைவு  மாதிரிகளாக [SELF SUFFICIENT  MODELS ]  என்றால் பயில்வது பெரும் மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் விதைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். எனவே,ஆசிரியர்கள் தன்நிறைவு அடைதல் சரியான வழிகாட்டும் அணுகுமுறை என்று உணர்வீர்.

ஆசிரியர் தொழில் ரீதியாக செம்மைப்பட வேண்டும்.                                                       அதற்கான செயல் முறைகள் வருமாறு :

ஒரு மணி நேர வகுப்பு எனில் முதல் 30 நிமிடங்கள், புத்தகம், நோட்ஸ் போன்ற உபகரணங்களை பார்த்து படிப்பதை முற்றாக தவிருங்கள். புத்தகம் பார்த்து படிப்பவர் தனது அறிவின மற்றும்நினைவாற்றலின் ஏழ்மையை     கூச்சமின்றி வெளிச்சம் போட்டு காட்டுகிறார் என்று பயில்வோர் நினைக்கின்றனர்.

இதனால் அவரின் ஆசிரியபணி குறித்த செயல்பாடுகளில் நம்பிக்கை அற்றவர்களாக , அவர்கள் தரும் 'நோட்ஸ்' என்ற உதவிக்காக கோயில் வாயிலில் குவியும் யாசகர்கள் போல காத்திருக்கின்றனர்.

ஆசிரியர் பேசும் எந்த சொல்லையும் அவர்கள் செவிமடுப்பதில்லை, ஏனெனில் அவர் 'பார்த்து படிக்கிறார்' அதில் நேரடி செயல்பாடு இல்லை. எனவே அவருக்கே ஒன்றும் தெரியாது' என்று மறுக்கவொண்ணாத விமரிசனம் வைக்கின்றனர். விலை உயர்ந்த புத்தகத்தில் இருந்து ஆசிரியர் வாசிக்கும் வாசகங்கள், ஆசிரியரை விட உயர்ந்தவை என்ற தகுதியுடன் பயில்வோரிடம் வரவேற்பு பெறுகின்றன.

இப்படி ஒரு அவலநிலையில் பல ஆசிரியர்கள் உழலுவது இன்றைய தமிழகத்தின் யதார்த்தம்   இதைக்களைந்து விட்டு திறமையாளர் என்ற நிலையை எட்ட அனைத்து தகவலையும் உள் வாங்கிக்கொள்ளுங்கள். .. ஆகச்சிறந்த, 3, 4 புத்தங்கங்களை அலசி ஆராய்ந்து, குறிப்பிட்ட பாடப்பகுதியை மிகத்தெளிவாகப்புரிந்து கொள்ளுங்கள். அனைத்தையும், உரிய வரிசையில் உங்கள் நடையில் எழுதிக்கொள்ளுங்கள். அதையே நன்கு உள்  வாங்கிக்கொண்டு. வகுப்புகளை கையாளுங்கள்.

முதலில் உங்களின் தன்னம்பிக்கையும் தன்னிறைவும் மேம்படுவதை உணர்வீர்கள். பின்னர் பாருங்கள் பயில்வோர் உங்கள் வகுப்புகளில் ஆர்வம் காட்டுவதை.

அவர்களையும் 'நோட்ஸ்' என்ற மனநோயிலிருந்து மீட்கும் விதமாக . 'நோட்ஸ்' வழங்கும் செயலை நிறுத்துங்கள். வகுப்பின் இரண்டாம் பகுதியில் முன்னர் சொன்ன கருத்துகளை மீண்டும் நிதானமாகப் பேசி அவர்களை குறிப்பெடுத்துக்கொண்டு, உரிய  நோட்ஸ் ஒன்றை அவரவரை உருவாக்கச்சொல்லுங்கள். வெகு விரைவில் இந்த அணுகுமுறை  மாணவ மாணவியரை தன்னிறைவு, தன்னம்பிக்கை மற்றும் உயர்வகை புத்தகங்களை நாடும் உயர்   பழக்கத்தை ஏற்படுத்தும் . ஆரம்பத்தில் வேப்பங்கொழுந்து உண்பது போல் இருக்கும்; போகப்போக அது சுவைக்கும், உடல் ஆரோக்கியம் வலுப்பெற்றது போல் மனஆரோக்கியம் மேம்பட்டு வலுவான சுயசார்புடன் கல்வி ஒரு ஆரோக்கியமுயற்சி என்று ஏற்கப்படும்.

 உழைப்பின் மகத்துவம் பற்றிப்பேசும் நாம் உழைக்கத்துவங்கினால்  பிறர் [பயில்வோர்] நம்மைப்பார்த்து  அவர்களும் தன்னிறைவு முறைகளை கையில் எடுத்து   .மகிழ்வுடன் முன்னேற்றம் காண்பர்.. முறையான முயற்சி சரியான வெற்றி தரும்.

ஆசிரியர்கள் மனதளவிலும் செயல் முறைகளிலும் சில பிரத்தியேக வலிமைகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும்

இவற்றிற்கான செயல் முறைகளை, வரும் பதிவுகளில் காண்போம்.

வளரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

OLD MOVIE SONGS -4

  OLD MOVIE SONGS -4 பழைய திரைப்படப் பாடல்கள்-4 சென்ற பதிவில் கலைக்கோயில் படத்தில் " நான் உன்னை சேர்ந்த செல்வம் " பாட...