Saturday, July 27, 2024

TEACHER- BEYOND YOUR IMAGE-7

 TEACHER- BEYOND YOUR IMAGE-7

ஆசிரியர்- உங்கள் பிம்பத்தை தாண்டி- .  7

ஆசிரியப்பணியில் சேர்ந்துவிட்ட பின் , நாட்டம் இன்றி ஏனோ தானோ என்றியங்கநினைப்பவர்கள் சமூகவிரோதிகள்.

நன்கு சிந்தித்தால் ஒரு உண்மை புலப்படும், நமது செயலும் பலப்படும். என்னைப்பொறுத்தவரை, ஆசிரியப்பணி கிடைத்தற்கரிய ஒன்று.

பின் வரும் வாய்ப்புகள் வேறெங்கும் கிடைக்காது.

1 எப்போதும் இளம் மனங்களுடன் பயணிப்பதால் மனமுவந்து கற்பிக்கும் ஆசிரியர்கள் முதுமைத்தோற்றம் அடைவதில்லை. [மனம் முழு ஈடுபாட்டுடன் செயல் படும் ஆசான்கள் , வழுக்கை போன்ற பாரம்பரிய மாற்றங்கள் தவிர வேறெந்த உருமாற்றமும் பெற்று அடையாளம் இழத்தல் வெகு அரிது. சொல்லப்போனால் அதியமான் நெல்லிக்கனி வைத்தியம் இன்றியே இளமைகாக்கும் அருமருந்து ஆசிரியப்பணி தான். உங்கள் ஆசான்களை [நல் ஆசிரியவகையினர்] தேடிப்பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள்.

2 மனமும் சொல்லாட்சியும் சற்றும் சோர்வடையாமல் இயங்குதல் ஆசிரியப்பணியில் அமைவது போல் வேறெங்கும் வாய்க்காது. -ஏன் ?

3 வகுப்பறையில் ஆசிரியர் சர்வ சுதந்திரமாக இயங்க முடியும் , எவரது அனுமதியும் ஆமோதிப்பும்  தேவை இல்லை. இதுவே தான் உங்களுக்கு இயல்பாகவே அமைந்துவிட்ட வேலி. நீங்கள் எல்லைமீற முடியாது-சொல்லிலும் செயலிலும். .

4. இப்படித்தான் பேசவேண்டும், இன்ன வாசகங்களை சொல்லித்தான் விளக்க வேண்டும் என்பனப போன்ற தளைகள் எவையும் இல்லை, முற்றாக இல்லை.

5 ஆசிரியனின் அன்றாட பணிக்கு மேலதிகாரி அவரே தான்.

6 களமறிந்து தனது செயல் முறையை மாற்றிக்கொள்ளஎ ஆசிரியருக்கு எவரின் ஒப்புதலும் தேவையில்லை.. வேறு துறைகளில் இப்படி இயங்க முடியாது ;அதிகாரப்பூர்வ ஒப்புதல் பெற்றே மாறுதல்களை செய்யமுடியும்.

7. இதுவே செயல் சுதந்திரம். இதை முறையாக பயன்படுத்துவதே ஆசிரியரின் செயல் தந்திறம். இதற்கான ஒரே நோக்கம்-- எப்பாடுபட்டேனும் அனைவரையும் விளங்கிக்கொள்ளச்செய்வது தான். சிலநேரங்களில் சிலர் புரிந்துகொள்ளாமல் போகலாம் .ஆனால் பலரும் ஆசிரிய முயற்சியை வரவேற்பர் , ஏற்றுக்கொள்வர் , பாராட்டுவர்.

8 அவ்வகை ஆசான்கள் எங்காவது தென்பட்டால்ஓடி வந்து காலில்விழாத குறையாக 'நல்லா இருக்கீங்களா சார்' என்று நன்றிப்பெருக்குடன் கேட்கும் சமுதாய நடைமுறை வேறெந்த அதிகாரிக்கும் கிட்டாது. ஏனெனில் இப்பணியில் தான் தனிப்பட்ட ஒவ்வொரு பயில்வோரும் ஆசிரியரின் பங்களிப்பை நேரடியாக பெற்று பலனை உணர்கின்றனர் . . .  

9. ஒரு சில வயதினர் விளையாட்டாக ஆசிரியரை கேலி பேசியதை பின்னாளில் தவறென உணர்வதும் நல்லாசிரியர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய பின்னாள் அங்கீகாரம். குறிப்பாக, வேறு பலரும் அவ்வாசிரியர்களின் பெருமைகளை பற்றி எப்போது சந்தித்தாலும் பரிமாறிக்கொள்வர் என்பது சில ஆசிரியர்களுக்கு தெரிவதில்லை. இங்கு தான் கவனம் தேவை .

பழைய நண்பர்களிடையே இரு வகை ஆசிரியர்களும் அவர்களுக்குப்பொருத்தமான மரியாதை எனும் அளவுகோல் கொண்டு பெரும் விவாதப்பொருளாக அலசி ஆராயப்படுவது தவிர்க்க வொண்ணாதது. வெறெந்தப்பணி சார்ந்தும் 'காலம் கடந்த' அந்நாள் பார்வைகள் வருவதில்லை. எனவே ஆசிரியப்பணி மாத்திரம் [எவ்வகைத்தாயினும் ] பயில்வோர் மனங்களில் வேரூன்றி  நிற்கும்

10  எனவே, வேறெவர்க்கும் இல்லாத தனி இடம் ஆசிரியர்களுக்கு உண்டு. ஆனால் ஒன்று. எந்தெந்த நிலைகளில் மாணாக்கர் கல்வியை நிறைவு செய்கின்றனர் என்பதை பொறுத்து நெஞ்சில் நிறைபவர்கள்-  பள்ளி ஆசிரியரோ கல்லூரி ஆசிரியரோ , பேராசிரியர்களோ மொத்தத்தில் ஆசிரியர்களே.                           இதுவே இப்பணியில் மகத்துவம்.

அத்தகைய உத்தம பணி நமக்கு வாய்த்துள்ளதெனில் நமது ஈடுபாடும் பங்களிப்பும்-- அதற்கு ஈடாக வேண்டாமா?

என்னென்ன செய்யலாம் -சிந்திப்போம். .

இதற்கு முன்னர் பேசப்பட்ட கருத்துகள் கல்வி விவரங்களை தொகுத்தல், வரிசைப்படுத்தி குறிப்புகள்/ நீண்ட கட்டுரை தயாரித்தல் என்பன அடங்கும். அவை உங்கள் மனவள மேம்பாட்டு செயல் முறைகள். அவற்றை செம்மைப்படுத்தப்படுத்த மென் மேலும் தகவல் சேகரிக்கும் ஆவலும் திறனும் அதிகரிக்கும். இவை தான் ஆசிரிய வளர்ச்சிக்கான சரியான அணுகுமுறைகள். நோட்ஸ் என்ற பெயரில் வெளியிடப்படும் தொகுப்புகள் பல நம் போன்ற வேறொரு நபரால் உருவாக்கப்பட்டது தானே,அது எப்படி நமது புரிதலையும் , தகவல் திரட்டையும் / திறத்தையும் மேம்படுத்தும் ? . மேலும் அவற்றில் பல சுருக்கமாக தொகுப்பதற்கென, குறைந்த விவரங்களை தருவன. நமக்கு [அதாவது +1, +2 அதற்கு மேலும் கற்பிக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள்] நோட்ஸ் உதவியால் திறன் மேம்பாடு அடைய முடியாது, காலம் தள்ளலாம் [அதாவது காலத்தை தள்ளலாம் ] எந்த போட்டித்தேர்வின் நுணுக்கங்கங்களையும் எதிர்கொள்ள கண்டிப்பாக மிக ஆழ்ந்து பயில வேண்டும்.. அதனால் தான் ஆகச்சிறந்த நூல்களை நாடுங்கள் என்பது நியாயமான கோரிக்கை. இது உங்களுக்கு ப்புரிய வில்லை என்றால் நீங்கள்ஆசிரியப்பணியில்     முத்திரை பதிக்க எண்ணுவது முடவன் கொம்புத்தேனுக்கு அலைவதை விட மோசமானது.; அவனுக்கு உடலில் ஊனம் நமக்கு சிந்தனையில் முடக்கம்.

  இரண்டும் இலக்கை எட்ட உதவாது. நான் சொல்வது வேம்பென கசக்கும். மாமருந்துகள் எவையும் அவ்வாறே; ஆனால் மனிதவளம் மேம்பாடு அடையாமல் [100/100] ,[200/200] என்று மதிப்பெண் பீற்றல்கள் யாருக்கும் எந்த நிலையிலும் உதவாது. தொலைக்காட்சியில் முகம் காட்டி  முதல் மதிப்பெண் என்று பேருவகை கொள்ளலாம். கடந்த 40 ஆண்டுகளில் இதுபோல் தொலைகாட்சியில் தோன்றிய நபர்கள் இப்போது நோபல் பரிசு வாங்கும் போட்டியில் இருக்கின்றனரா? தேடிப்பாருங்கள் என் நிலைப்பாடு சிறிதேனும் விளங்கும்.  ஆசிரியன் என்ற பெருமையை அடையவும் தக்கவைத்துக்கொள்ளவும் செயல் முறைகள் யாவை. பேசுவோம்.

தொடரும்

நன்றி அன்பன் ராமன் 

No comments:

Post a Comment

WHAT OF THESE “GET-TOGETHERs?

  WHAT OF THESE “GET-TOGETHERs?                             [ My Blog Posting No.1259 ] Quite some opinion may emerge seeing the very titl...