TEACHER BEYOND YOUR IMAGE-`10
ஆசிரியர்- உங்கள் பிம்பத்தை தாண்டி-10
Mouldimg Your Authenticity
நம்பகத்தன்மையை கட்டமைத்தல்
எந்த தொழில் / செயல்/ பணி எதுவாயினும் நுகர்வோர் [Consumer ] மத்தியில் மதிப்பும் வரவேற்பும் பெற வேண்டும். இவ்விரண்டையும் நுகர்வோர் அனுபவத்தினால் ஈட்டமுடியுமே அன்றி விளம்பரங்களால் அல்ல. புதிய பொருளுக்கு அறிமுக விளம்பரம் உதவும், தொழிலுக்கு அல்ல. ஆம் தொழிலின் மகத்துவம் செயலில் விளங்கும் .
அவ்வாறிருக்க, ஆசிரியன் தனது திறனை, ஒவ்வொரு நாளும் வெளிப்படுத்தவேண்டும். அவன் சந்திக்கும் ஒவ்வொரு நாளும் இந்த எதிர்பார்ப்பும் ,அது குறித்த ஆவலும் பயில்வோர் மனங்களில் குடிகொள்ளும். ஏதோ சில காரணங்களால் ஆசிரியன் சரியாக கற்பிக்க வில்லை எனில் ஓரிரு வகுப்புகளுக்கு பொறுமை காக்கும் மாணவர்கள், மெல்ல மெல்ல விமரிசனம் வைப்பதும் அவ்வகுப்பை தவிர்ப்பதும் என்ற நிலைப்பாடுகளை மேற்கொள்வர்.
குறிப்பாக கல்லூரி /பல்கலையில் பயில்வோர் வகுப்புகளை தவிர்ப்பது பல தருணங்களில் இயல்பான ஒன்று. எனவே இது போன்ற நிகழ்வுகள் ஒரு ஆசிரியனின் வகுப்புகளுக்கு நடக்கத்துவங்கியதும், அவ்வாசிரியன் கண்டிப்பாக தனது செயல் பாடுகளை சுயாவிமரிசனத்துக்கு உட்படுத்தி , அவர்பால் குறைகளோ /தவறோ இருப்பின் அவற்றைக்களைய முழு கவனம் செலுத்தி வெகு விரைவில் போதனா திறனை முற்றாக வெளிப்படுத்தவேண்டும். இது ஒவ்வொரு ஆசிரியனுக்கும் வழங்கப்படும் வாய்ப்பு; இதை புரிந்துகொள்ளாமல் புறக்கணித்தால் நீங்கள் எவ்வளவு அன்பு பாராட்டினாலும் பயில்வோரை மகிழ்விக்க முயன்றாலும், கற்பிக்கும் திறன் மழுங்கிய நிலையில் உங்களை பொருட்டாகவே கருத மாட்டார்கள் என்பதை மனதில் ஆழமாக பதித்துக்கொள்ளுங்கள். இவ்விடத்தில் ஒரு யதார்த்தம் தெளிவாக்கப்படவேண்டும்..
அதுதான் பாரம்பரிய செய்தி [HEREDITARY MESSAGE ] ;அது உங்களின் பிம்பம் பற்றிய நீண்ட நெடுங்கால மதிப்பு -பயில்வோர் இடையே உலா வருவது. . .HEREDITARY MESSAGE மிக வலுவானது எளிதில் மாற்ற முடியாதது; எனவே நற்பெயர் ஈட்ட வேண்டியது தனது சமூக அங்கீகாரம் குறித்து அக்கறை உடைய ஒவ்வொரு ஆசிரியனுக்கும் மிக மிக அவசியம் .
நம்பகத்தன்மையை வடிவமைத்தல் என்பது, அன்றாட இடையறா முயற்சி, இது வேறெந்த சவாலுக்கும் குறைந்ததல்ல.
நீரில் மூழ்கி முத்தெடுப்பவன் எப்படி மூச்சடக்கும் கலையை முறையாகப்பயில வேண்டுமோ
அதைப்போன்றே கற்பிக்க நினைக்கும் ஆசிரியன், தகவலிலும் அதை முறைப்படுத்தி வெளிப்படுத்துவதிலும்
முழு கவனம் வகிக்க வேண்டும். திசை மாறுதல் ஆசிரியனின் பெருமைக்கும் மாண்புக்கும் பெரும்
ஊறு விளைவிக்கும். இவ்வனைத்தையும் நன்கு உள்வாங்கி மனதில் இருத்தி மேலே தொடருங்கள்.
வகுப்பறையை- நீங்கள் பணியாற்றும் புனித தலமாக நினைத்து பணியை துவக்குங்கள்.
நான் அறிந்த பெரும் ஆளுமைகொண்ட பேராசிரியர்கள் வகுப்பினுள் நுழையும் முன் தங்களின்
பெரும் மதிப்பிற்குரிய ஆசிரியர்களை மானசீகமாக வணங்கி "தங்களின் ஆசி வேண்டும்
" என்று பிரார்த்தித்தபின் வகுப்பறைக்குள் நுழைவர். ஏனெனில் பல தருணங்களில் வகுப்பறை
ஒரு சூடான களம். அங்கே நின்று நிதானம் இழக்காமல்
கருத்துப்பரிமாற்றம் செய்ய முதலில் ஆசிரியனின் ஆளுமை விரைவில் வெளிப்படவேண்டும். அதற்கு
அவசியத்தேவைகள் சில. [சான்றோர் ஆசி]
1 ஆழ்ந்து உள்வாங்கியுள்ள கருத்துகள்
2 அவற்றை விளக்கவும் விவாதிக்கவும் தேவையான தகவல் களஞ்சியம் மற்றும் சீரான உரையாற்றும்
திறன் [எம்மொழியாயினும் இது ஒன்றே ஆசிரியனின் ஆளுமை தனை செம்மையாக நிறுவும் உத்தி]
3 வரிசை பிறழாமல் தகவல்களும் தரவுகளும் அந்தந்த தேவைகளுக்கு உகந்த வடிவில் கற்பிக்கும்
ஈடுபாடு. ஈடுபாடு இல்லாமால் கற்பிக்க நினைப்பது,
கைகள் இல்லாத ஒருவன் யுத்தகளத்தில் நிற்பதற்கொப்பான தகுதியற்ற நிலை ..
கருத்துகளை உள்வாங்குதல்
ஒரு பாடப்பகுதி தொடர்பான தகாவல்களை, பலமுறை ஊன்றி கவனித்து புரிந்து கொண்டு
நினைவில் நிறுத்துதல் என்பதே உள்வாங்குதல்.
ஏதோ சடங்காக இருமுறை மும்முறை படித்தல், புரிதலையும் நினைவாற்றலையும் செம்மைப்படுத்தாது.
மாறாக காபி/டீ பானங்கள் சூடு போல சிறிது நேரம் தாங்கும் /தங்கும் , பின்னர் பருகவோ
புகட்டவோ தகுதி இழந்து பயனற்றுப்போகும். எனவே நினைவில் தங்கி சொல்லில் பாய்ந்து வெளிப்படும்
வீரியம் கைவரப்பெற்ற, நன்கு புரிந்து மனதில் இருத்துதல் அத்தியாவசியத்தேவை.. இந்த பழக்கத்தை
ஏற்படுத்திக்கொண்டு பயிலத்துவங்கினால், வெகு
விரைவில் ஏராளமான கருத்துகளை எளிதாகவும் விரைவாகவும் உள்வாங்கி நிலைப்படுத்தி, எந்த
நேரத்திலும் தகவல் வெளிப்பாடு தங்கு தடை இன்றி அமையும்.
இந்த உயர்திறன் எட்டுதல் ஒவ்வொருவரும் பெறக்கூடியதே.. ஆரம்பகட்டத்தில், மலைப்பாக
தோன்றும் ஆனால், படிப்படியாக திறன் விரிவாக்கம் பெறும் போது, ஆர்வமும் ஆளுமையும் ஒருசேர
இணையும்.. அது ஏற்படுத்தும் உற்சாகம், மென்மேலும்
தகவல் சேகரிக்கவும் அவற்றை அழகாக எடுத்துரைக்கவும் மிகுந்த ஆவலை ஏற்படுத்தும். இப்படித்தான்
பெரும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள்-- பலரும் வியக்கும் வண்ணம் ஆளுமைதனை எளிதில் வெளிப்படுத்துகின்றனர்.
நான் முன்னம் இரு வகை முன்னேற்பாடுகளை தன்னிறைவடைதலின் அங்கங்களாக அடையாளப்படுத்தியிருந்தேன் . அவை
1; நீண்ட நெடிய கட்டுரை வடிவம் [ESSAY] சொந்த முயற்சியால் பல ஆதாரங்களில் இருந்து திரட்டப்பட்டு, தத்தம் சொற்களில்
வடிவமைக்கப்பட்ட தகவல் திரட்டு
2 அந்த தகவல் சிறு சிறு பகுதிகளாக பகுக்கப்பட்டு [brief
sub-titles] இவற்றை [இவ்விரண்டையும்] ஒரே சமயத்தில் செய்வது
நன்று.
இவை இரண்டும்- வளமான ஆயுதங்கள் ஆம் தகவலும் தகவல் சுருக்கமும் என்பதாக ஒவ்வொரு
பாடப்பகுதிக்கும் உருவாக்கி வைத்துக்கொள்ளுதல் மிகுந்த பலன் தரும்.
வீட்டில்/அறையில் நன்கு பயில கட்டுரை வடிவமும், தகவல் சுருக்கம் வகுப்பறையில்
செயல் படவும் மிகவும் உதவியாக இருக்கும் ..
இவற்றை எவ்வாறு பயன்படுத்தி, திறமை மிக்க வளமான ஆசிரியர்
என்ற பெருமையை அடைய முடியும்.
.எவ்வாறு என வரும் பதிவில்
காணலாம்.
வளரும்
நன்றி அன்பன் ராமன்
No comments:
Post a Comment