Sunday, September 22, 2024

TEACHER BEYOND YOUR IMAGE-`15

 TEACHER BEYOND YOUR IMAGE-`15

ஆசிரியர்- உங்கள் பிம்பத்தை தாண்டி-15

ஆசிரிய பிம்பம் என்பது பயனாளிகளின் மனநிலை சார்ந்து உருவாகவேண்டும். ஆசிரியர் தனது பிம்பத்தை கட்டமைக்க பிற குறுக்குவழிச்செயல்களில் ஈடுபடாது இருத்தல் அவரது உண்மையான உயரம் என்ன என்று பலரையும் சிலாகித்துப்பேச வைக்கும். அதனால், ஆசிரியர் தனது வகுப்பறை செயல், சமுதாய பணிகளில் ஈடுபடுதல் ஒன்றே போதுமானது. ஆனால் அவ்விரண்டிலும் முழுமையான  அர்ப்பணிப்பு நீங்கலாக வேறெதுவும் உதவாது. எனவே அந்த இலக்கு நோக்கி பயணிக்க எவ்வகை நிலைப்பாடுகள் உதவும் என்பதே இன்றைய பதிவின் நோக்கம்  

வகுப்பறையில் 100% முயற்சி என்பது மிகச்சரியான அணுகுமுறை. என்னது100% முயற்சி யா என்று புலம்ப வேண்டாம். சொல்லப்போனால் நமது கவனம் வேறெதிலும் விலகாமல் சிதறாமல் பயணிப்பது எளிதான ஒன்று தான். எப்படி ? 

என்னது100% முயற்சி யாஎன்று அலறுபவர்கள் ஏன் கதி கலங்குகிறார்கள் ? அவர்கள் பெரும்பாலும் வகுப்பில் நேரம் செலவிடுவதே [spending time ] ஆசிரியர் பணி  செயததற்கான அடையாளம் என்று நினைக்கிறார்கள். அந்த அடிப்படை தவறானது எனவே நேரம் செலவிடுதல் என்பது நேரத்தை முறையாக செலவிடுதல் என்பதை விடுத்து வெவ்வேறு செய்திகளைப்பேசி [5 நிமிடம் வருகைப்பதிவு , ஏன் அவன் வரவில்லை,இவன் வரவில்லை என்று நீலிக்கண்ணீர் வடித்து மேலும் 3 நிமிடம் பாழ் , நோட்டு கொண்டுவந்திருக்கிறாயா? நேற்று என்ன பாடம் படித்தோம் என்று நோட்டை வாங்கிப்பார்த்து அப்படி ஒரு 3 நிமிடம் [மொத்தம் 11 நிமிடம் இவ்வாறு கழிய] பின்னர் நேற்று சொன்னதில் பாதி யை மீண்டும் சொல்லி  இன்னொரு 3 நிமிடம் வீண். இப்போது தொடர்ந்து பாடத்தின் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்து ஒரு 18-20 நிமிடம் பேசி , இந்தா எழுதிக்கொள் என்று இன்னொரு 20 நிமிடம் கடத்திவிட்டு, [அப்பாடா 54 நிமிடம் ஆயிற்று என்று பெரு மூச்சு விட்டு ஆசிரிய இருக்கையில் தலையில் கை  வைத்து சோர்வாக அமர்ந்து 5 நிமிடம் ;பின்னர் மணி ஒலித்ததும் மான் போல துள்ளி ஓடும் வேகம் என்ன என்று இவ்வளவை யும் நமது மாணவர்கள் அக்கு வேறு ஆணி வேறாக பிய்த்து மோனோஆக்டிங் செய்து கேவலப்படுத்தினாலும் பரவா  இல்லை நான் முழுநேரமும் முறையாக செலவிட மாட்டேன் என்று சபதம் ஏற்றுக்கொண்டு என்ன பயன்?. அவர்கள் மாணவர்களை மார்க்கெட்டினுள் பார்த்தால் கூட கூழைக்கும்பிடு போடுவதைத்தவிர வேறு வழி இல்லை. அப்படியாவது பிழைப்பை ஒட்டுவேனே அன்றி உழைப்பை தவிர்ப்பேன் என்பவர்கள் ஆசிரிப்பணிக்கு நேர்ந்த கொடூர விபத்துகள் [grieveous accidents] என்பது மறுக்கவொண்ணாத யதார்த்தம்..

இவர்களைப்பற்றி பேசுவது தான் நமது வேலையா? எனில் இல்.லை. ஆனால், இவர்களின் நாடகம் ஊருக்கே தெரியும் என்று சொல்லவே இவ்வளவு தகவல்களும் பேசப்பட்டுள்ளன.

நீங்காப்புகழ் தேடும் ஆசிரியர் கள்- மனதில் கொள்ள வேண்டியது இதுவே.

ஆசிரியர் எவ்வளவு கற்றவர் என்பதை விட , எவ்வளவு எளிதில் கற்பிப்பவர் என்பதே மாணவர்களுக்கு தேவை.. எவ்வளவு  கற்றாலும் "கற்றது கைம்மண் அளவு" என்று சொல்லிக்கொண்டு எதையும் கற்காமல் காலம் தள்ளுவது எளிது என்றும் சிலர் வியாக்யானம் பேசிக்கொண்டு  இருப்பது தற்கால நிகழ்வு. இவை நமக்கு பயன் தராத வீண் வாதங்கள்.

எளிதில் கற்பிப்பது என்பது யாது?

மையக்கருத்தை தெளிவாகச்சொல்லி, விளக்கம் தருவது என்பதே நல்ல அணுகுமுறை. . மையக்கருத்தை விளங்கும் படி சொல்லாமல் புத்தகங்களில் இருக்கும் சொற்றொடர்களை மீண்டும் மீண்டும் சொல்வது தேவையான உதவிக்கு உகந்தது அல்ல. வாசகங்களின் பொருளை நிதானமாக விளக்கினால் புரிதல் எளிதாகும். வாசகத்தை- பொருள் உணராமல் பேசுவது கல்விக்கு இடையூறாகும்.

 இவ்வாறுதான் கலைச்சொற்களை கவலை தரும் சொற்களாக மாற்றிய தெய்வீகப்பணியை பல ஆசிரியர்கள் அரங்கேற்றி கல்வியின் மீது வெறுப்பும் ஆத்திரமும் கொண்ட இளைஞர் கூட்டம் பல்கிப்பெருகிட வழி வகை செய்து விட்டனர். திடீரென்று நிகழும் வன்முறைகள் கிளம்ப இதுபோன்ற உள்ளக்கொந்தளிப்புகளே   அடிப்படை.

எனவே பொருளை விளக்கும் அணுகுமுறைகளை பின்பற்றினால் வகுப்பில் மாணவர் மனம் ஒன்றி பயணிப்பது சாத்தியம்.

ஒரு சில வகுப்புகள் அமைதியாக இயங்க, வேறு சில [pandemonium] போர்க்களங்கள் போல் கிளர்ச்சியுற-- பின்னவற்றில்    பொருள் விளங்கா போதனை எனில் மிகை அல்ல.

சிறந்த திறமையாளன் என பெயர் பெற விரும்புவோர் சில உத்திகளை பின் பற்றுங்கள்.

1  பேசும்போது நோட், புத்தகம் இவற்றில் இருந்து மதபோதகர்கள் போல் படிக்காதீர்கள் பேசுங்கள் . பேச்சு அந்தந்த கல்வி மொழியிலேயே வழங்குங்கள் . ஆங்கில வழி எனில் ஆங்கிலத்திலும் , தமிழ் வழி எனில் தமிழிலும் ஒன்றோடொன்று கலக்காமல் தூய மொழியில் பேசுவது ஒரு வலிமையான உத்தி. இவன் பார்த்துப்படிப்பதில்லை , இவன் புரிந்துகொண்டு பேசி விளக்குகிறான் எனவே மிகுந்த கவனம் செலுத்தி புரிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு சிறப்பு உங்களை வந்தடையும். பார்த்துபார்த்து படிக்கும் ஆசிரியர் "சமாளிக்கிறார்" என்று கிசுகிசுப்பர். அவர்களை ஆசிரியராகவே ஏற்பதில்லை.

2 பேசும்போது [பேசிக்கொண்டே] முழு வகுப்பையும் கவனித்தபடியே பேசுங்கள். அது நீங்கள் மனதில் இருந்து பேசுவதையும், காகிதம் இல்லாமல் கருத்துகளை விளக்கும் திறமையாளர் என்றும் மதிப்புக்கூட்டல் [value addition]  பெற்று   பெரும் மதிப்பு பெறுவீர்கள். ஏனெனில் நீங்கள் தெளிவாக விளக்குவதில் வல்லவர். இந்த கண்பார்வை உத்தி பயில்வோரை கட்டுப்பட வைக்கும். அவர்கள் அங்குமிங்கும் பாராமல் ஆசிரியரையே கவனித்துக்கொண்டிருப்பதால் கவனச்சிதறல் இன்றி ஒருமுகப்பட்ட கவனம் செலுத்தி பாடங்களைப்பயில்வர். 

நாளடைவில் இந்த வகை வகுப்புகள் பெரும் ஊக்கம் தருவதாக பயில்வோர் உணர்வர். இன்னும் பிற நல்ல செயல் முறைகள் ஆசிரியரின் செயல் திறனை விரிவாக்கம் செய்யும் அவற்றை பின்னர் காண்போம்.

தொடரும்

அன்பன் ராமன்  

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...