Saturday, November 2, 2024

TEACHER BEYOND YOUR IMAGE-21

 TEACHER BEYOND YOUR IMAGE-21

ஆசிரியர்- உங்கள் பிம்பத்தை தாண்டி-21

“ஆசிரியப்பணி பிறர் நலம் சார்ந்தது . அதை மறவாது செயல் புரிந்தால் வள்ளுவன் வாக்கு போல் 'முயற்சி தன்  மெய் வர்த்தக்கூலி தரும்"

என்று சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன் . மேலும் சிந்திப்போம்

உனக்கு வேறு வேலையே இல்லையா ? எப்போதும் ஆசிரியப்பணி என்று கொல்கிறாயே என்றொருவர் கொதிக்கிறார். அதாவது பலர் உள்ளூரைக்கொதித்துக்கொண்டிருக்கிறார்கள்.. மன்னிக்கவும் என்னுடைய பொழுது போவதற்காக இதை பேச வரவில்லை. எவ்வளவு செம்மையான ஆசிரியர்கள் இருந்தமண்ணில் இன்று ஆசிரியப்பணி மண்ணில் விழுந்துவிடும் போல் இருக்கிறதே என்ற கவலையில் நான் அறிந்தவற்றை சொல்கிறேன். உனக்கு தெரிந்தது தான் இலக்கணமா நீ என்ன ஆசிரியப்பணிக்கு தொல்காப்பியனா என்றெல்லாம் எண்ணாமல், ஏன் சொல்கிறேன் என்பதை புரிந்துகொள்ளுதல் பலன் தரும் , பணம் தருமா ? எனில்-- இல்லை. எனவே பணம் விழைவோர் ஏதேனும் வேறுபணி நோக்கி செல்லுங்கள், தயவுகூர்ந்து புரிந்து கொள்ளுங்கள் ஆசிரியப்பணி [இருக்கவே இருக்கிறது என்று] வேண்டாவெறுப்பாக செய்வதைவிட ஜேப்படி திருட்டு கூட உயர்வானதாக வே தோன்றுகிறது. ஆம் ஜேப்படி திருடன் வெகு நேர்த்தியாக செயல் படுகிறான் ஆனால் கூலிக்கு மாரடிக்கும் ஆசிரியன் பணியில் நேர்மையும் இல்லை,  நேர்த்தியுமில்லை, நேர்த்திக்கடன் செலுத்தும் ஈடுபாடு கூட இல்லை எனவே தான்சொல்கிறேன் மனம் ஒன்றாமல் , ஏனோ தானோ என்று செய்யும் பணிக்கு பெயர் -நிச்சயம் மகோன்னதப்பணி [NOBLE PROFESSION] எனப்படும் ஆசிரியப்பணி அல்ல. அந்த சொல்லாடலை கவனியுங்கள்

‘NOBLE PROFESSION’ என்கிறார்கள். அதை, WORK என்றோ, JOB என்றோ, BUSINESS என்றோ அழைப்பதில்லை. ஏன் அதற்கு- PROFESSION என்ற உயரிய கௌரவம் வழங்கப்பட்டுள்ளது?என்றுசிந்தியுங்கள்.              ஒன்று நிச்சயம்-- ஆசிரியல்லாத எவரோ முன் காலத்தில் அதை PROFESSION என்று பெயர் சூட்டியுள்ளனர்; அவர்களுக்கு வாய்த்த      ஆசிரியர்கள் அந்த உயரிய தொழில் விற்பன்னர்கள் போலும் அதன் வெளிப்பாடாக இந்த நாமகரணம் என்று புரிந்துகொள்கிறேன்.

இவ்வாறிருக்க ஏனோ தானோ செயல்கள் எப்படி noble ஆகும்? மேலும் ஒன்றை நினைவில் கொள்வது நலம்

பயில வருபவர்கள் எடுத்த எடுப்பிலேயே ஆசிரியரை கிண்டல் செய்யும் நோக்கத்துடன் வருவது கிடையாது. ஆசிரியரின் செயல் பாடுகள், குறிப்பாக உளறல்கள், மொழிக் குறைகள், முன்னுக்குப்பின் முரணான விளக்கங்கள், ஏதேனும் சந்தேகம் கேட்டா ல் கேட்பவரை அச்சுறுத்துவது அல்லது இது கூட தெரியாதா என்று ஏளனம் செய்வது, பயில்வோரிடையே, இனம் மொழி மதம் சார்ந்த பாகுபாடு காட்டுதல் போன்ற பணிக்குப்புறம்பான தர்ம நிலைப்பாடுகள் தென்படும் போது ஆசிரியர் கேலிப்பொருள் ஆவது உறுவது.அப்படி கேலிக்கு ஆட்படும் ஆசிரியர்  எவரும் அப்போது தனது வீரத்தைக்காட்ட முனைவதில்லை; மாறாக ஹி ஹி ஹி என்று அடங்கி முடங்கி பையனின் முதுகைத்தடவிக்கொடுத்து பிழைப்பு நடத்தும் அவலத்தையும் அதிகம் காண்கிறோம். அவ்வகை ஆசிரியர்களுக்கு முனகுவதும் முடங்குவதும் மாத்திரமே புகலிடம்.  ஏனெனில் கம்பீரமாக செயல் படும் அளவிற்கு, தகவலையோ, தகவல் மேம்பாடுகளையோ, முறையான சொல்லாடலையோ, நேர்த்தியாக வடிவமைத்துக் கொள்ளாமல், பயில்வோரிடம் ஆசிரிய தோரணையை அரங்கேற்ற முடியாது. பட்டவர்த்தனமாக சொல்வதானால், அவர்கள் சுயமரியாதை என்ற சொல்லையோ அதன் முறையான கம்பீர ஆதிக்கத்தையோ அரியாதவர்கள்; ஆனால் வீரவசனம் பேசுவர். பிறர் அதை நம்புவதாக இவர்கள் நம்புவது, கிணற்று தவளைகளுக்கு சரியான எடுத்துக்காட்டு.

இப்போது மீண்டும் ஆசிரியப்பணியின் மேன்மை தனை, நினைவு கூர்தல் பொருத்தமானது.

ஆம், பயில வரும் எவருக்கும் -அவளுக்கு/ அவனுக்கு என்ன தெரியும் என்றெண்ணி அவலத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள். சிறிய ஊர்களில் கூட, பெற்றோரின் பணி நிமித்தம் வெளி மாநிலங்களில் படித்துவிட்டு இங்கே உயர்கல்வி பெற வருகின்றனர். அவர்கள், அடிப்படைக்கல்வித்தரம் சிறப்பாக இருப்பதால், இங்கே ஆசிரியரிடம் மேலும் சிறப்பான விளக்கம் / சொல்லாடல் கிடைக்கும் என எதிர்நோக்குகின்றனர். சொல்லாடல் "டல் [dull] "ஆனால், கேலிசெய்யாமல் பின் வெண்சாமரமா  வீசிக்கொண்டிருப்பர்?. இன்றைய சூழலில் பல மாநிலங்களில் பள்ளிக்கல்வியிலேயே மாணவ மாணவியர் நல்ல மொழிப்பயிற்சி -உரையாடும் திறன் வளர்ப்பும் பெற்று எளிதில் ஆளுமையுடன் பேச இங்கே கையில் நோட் இருந்தால் தான் படிக்க இயலும், பேச்சு என்பது ஒரு சில சொற்கள் என்ற எல்லைக்குள் முடங்கிப் போய் . ஏதேனும் கேள்வி கேட்டால் வியர்த்து வெலவெலத்து நடுங்கும்ஆசிரியர்  எண்ணிக்கை  உயர்ந்து கொண்டே வருகிறது.

என் மீது கோபம் கொள்ளாதீர்கள். எனது கூற்றில் உண்மை இருக்கிறதா இல்லையா?  உண்மை எனில்- செய்ய வேண்டியது என்ன என்று சிந்தியுங்கள். உயர் கல்வியில் ஆசிரியர் என்ற பெருமை நம்மை நோக்கி வரவேண்டும், நாமாக எனது எக்ஸ்பீரியன்ஸ் எவ்வளவு தெரியுமா என தம்பட்டம் ஒலித்தல் கூடாது. நமது எக்ஸ்பீரியன்ஸ் மிக நேர்த்தியாக செயலில் வெளிப்பட வேண்டும் -வீர வசனங்களால் .அல்ல. எனவே மூன்று வகை கட்டமைப்புகள் அவசியம் தேவை

1. உயர் தகவல் திரட்டல் 2   அவற்றை முறையாக ஒருங்கிணைத்தல் 3 சீராக முறையாக நல்ல மொழி வழி கற்பித்தல். இவற்றை கைக்கொள்ளாமல் ஆசிரியராக பரிணமிப்பது பகற்கனவு என்பதையும் கடந்து, பாகற் கனவு [bitter dream] என்பதாக வடிவு பெறும்.

நான் அந்தப்படம் பெற்றுள்ளேன், இந்தத்தகுதி பெற்றுள்ளேன் என்பதெல்லாம் ஆசிரியப்பணிக்கு பெருமை சேர்க்காத வரை அவற்றால் எந்த பெருமையும் இல்லை.  .

பிற தேவைகளை மீண்டும்விவாதிப்போம் .   

 

 

 

2 comments:

  1. Sir, thank you for instilling values that dignify our profession and inspire true purpose. As both your former student and now a faculty, I am continually motivated by your example, proving that even amidst challenges, there are educators who draw strength from shared ideals to bring lasting integrity to teaching.

    ReplyDelete
  2. Nice that there are genuine fans to the arduous path for a successful tenure as a teacher at higher levels. GOD BLESS YOU.

    ReplyDelete

PATTU IYENGAR- LYRICIST

 PATTU IYENGAR- LYRICIST  பாட்டு எழுத வந்த   பட்டு ஐயங்கார்   என்னது பட்டு ஐயங்காரா ?   அவர் என்ன பட்டு வ்யாபாரியா அல்லது எல்...