PATTU IYENGAR- LYRICIST
பாட்டு எழுத வந்த பட்டு ஐயங்கார்
என்னது பட்டு ஐயங்காரா? அவர் என்ன பட்டு வ்யாபாரியா அல்லது எல்லா தொழிலிலும் அடி பட்டு அதனால் பட்டு ஐயங்கார் என்று பெயர் வந்ததா? அல்லது அவருக்கு ஏதாவது பிடிக்கவில்லை என்றால்
"பட்" என்று அறைந்து விடுவார் எனவே பட்டு ஐயங்காரோ? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு நம் நண்பர் டைப் அடிக்க விடாமல் தொண தொணக்கிறார். இதற்குத்தான் பக்கத்தில் யாராவது இருக்கும் போது கம்ப்யூட்டரை திறக்கவே கூடாது . தெரியாமல் மாட்டிக்கொண்டேன். சரி நண்பரின் ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாமல் மௌனம் காத்து ஒரு வழியாக வெறுப்படைந்து அவரே "நான் வருகிறேன்" என்று சொல்லும்படி செய்தாயிற்று. இதற்கு ஏதாவது பதில் சொல்லப்போக நண்பர் இங்கேயே டேரா போட்டுவிட்டால் நம்ம பாடு ஆபத்து. கரண்ட் இருக்கும் போது வேலையை முடிக்கலாம் என்றால், இது போன்ற ஆர்வலர்கள் வேறு . இவர்கள் ஆர்வலர்களா ? எனில் ஊர்வலர்கள் என்று சொல்லலாம்.ஊர்வலமாக தெருத்தெருவாக நடந்து ஆங்காங்கே டேரா போட்டு சம்பந்தமில்லாமல் காபி பொடி என்ன விலை தெரியுமோ ஆரம்பித்து
BRAZIL இல் காபிக்கொட்டை ஏலம் பற்றி தத்ரூபமாக [நாகேஷ் பாலையாவுக்கு கதை சொன்னது போல்] விவரித்து, நம் நேரம் வீணாகும். எனவே மௌனம் சர்வ ஒளஷதம் என்று வால்மீகி சொன்னார் என்று ஒரே போடாகப்போட்டு ஏதாவது செய்யவில்லையேல்
BLOG WRITING நாள் முழுவதும் சாத்தியமே இல்லை.. அப்பாடா ஒரு வழியாக நண்பர் தெருமுனை தாண்டி போய்விட்டார் தலை கண்ணுக்கெட்டிய வரை தென்படவே இல்லை.
பட்டு [பட்டாபி] ஐயங்கார் பள்ளி ஆசிரியர் ரிட்டயர்டு
-22 வருஷங்களாக , ஆனாலும் புலம்பல் ஓயவில்லை -எனக்கு ஹெட்மாஸ்டர் போஸ்ட் தராமல் ஏமாற்றிவிட்டான் அந்த கரஸ்பாண்டெண்ட் கணபதி ஐயர் ;அவனுக்கெல்லாம் நல்ல சாவே வராது என்று வாரம் இருமுறை சாபம் தருவார் பட்டு ஐயங்கார் .
அந்த சமயத்தில் யாரவது வந்து விட்டால் பாடத்தொடங்கிவிடுவார். அப்படி பலமுறை பாட்டு கேட்டு அசந்தவன் பால்கார திருப்பதி. சாமி நீங்க ஸ்கூல் ல பாட்டு வாத்தியாரா என்றான்.
அவர் [Maths –BSc., BT]. பட்டு ஐயங்காருக்கு கோபம் தன்னை பாட்டு வாத்யார் என்கிறான் இவன்
after all -மில்க் vendor என்று ஏகாதசி சிங்கம் போல் கர் புர் என்றார். இல்ல சாமி நீங்க அளகா பாடுறீங்க அதான் கேட்டேன் என்றான் திருப்பதி .
இப்போது திருப்பதி --ஏழுமலையானாகவே தெரிந்தான் பட்டு ஐயங்காருக்கு.
கன்னத்தில் போட்டுக்கொள்ளாத குறை பட்டு ஐயங்காருக்கு -நீ நன்னா புரிஞ்சுட்டிருக்கிறேயே என்னோட சங்கீத ஞானத்தை பத்தி பேஷ் பேஷ் என்று பாராட்டினார். திருப்பதிக்கு தலை கால் புரியவில்லை -சாமி தன்னை மனதார ப்பாராட்டி விட்டார் என்று. . வரேன் சாமி என்று சைக்கிளில் ஏறி பால் விநியோகத்துக்கு கிளம்பி விட்டா ன். இது நடந்து ஒரு வருஷம் இருக்கும் ;
இப்போதெல்லாம் திருப்பதி வருவது இல்லை அவன் பையன் வெங்கடேசு தான் அன்றாடம் வருகிறான்.
ஒரு ஞாயிறு காலை திடீரென்று திருப்பதி ப்ரசன்னமானான் -சாமி என்று கூப்பிட்டபடி. . இப்போது திருப்பதியை அடையாளம் தெரியாது -ஒரு ஜீன்ஸ் , வெள்ளை அரைக்கை சட்டை, கையில் தங்க செய்னில் வாட்ச், முன் நெற்றியில் சிறிய முடிக்கொத்து ஸ்பிரிங் போல் ஆடிக்கொண்டிருக்க, வணக்கம் சாமி என்று கை கூப்பினான் .
பட்டு ஐயங்கார் உண்டமயக்கம் 10.30 மணிக்கு மோர்க்குழம்பு, பின் பருப்பு உசிலி, என்று வெளுத்துக் கட்டிவிட்டு அவ்வப்போது ஏவ், ஏவ் என்று ஏப்ப ஒலியுடன் சாய்ந்து கிடந்தவருக்கு திருப்பதியை அடையாளம் தெரியவில்லை. யாரூ என்று கேட்டுக்கொண்டே ஏவ் என்றார்.. நான் தான் சாமி திருப்பதி என்றார் வந்தவர். ஆ நமது ரசிகனல்லவா , வா வா வா வா என்று வாய் நிறைய அழைத்து உன்ன எங்கே ஆளையே காணும் என்றார் ஐயங்கார். அதுவா சாமி -சினிமாவுல அசிஸ்டன்ட் டைரக்ட ர் ஆயிட்டேன். வர தீபாவளிக்கு நம்ம படம் வருது அஜீத் தம்பி சுகேசு -அப்புறம் மோனா னு பம்பாய் பொண்ணு [நீங்க பாத்தீங்கன்னா அசந்துருவீங்க].
ஐயோ வேணாம் அன்னத்ரேஷம் என்று முகம் சுளித்தார் ஐயங்கார். . சாமி நீங்க பாட்டு பாடுவீங்க-தெரியும் . பாட்டு எளுதுவீங்களா
?
சாஹித்யமா ? பின்னிப்பிடுவேன் பிரமாதமா
இழுதுவேன் . பாவ நாசம் சிவனே என்னக்கண்டு பயப்புடுவர் அந்த நாள் ல. [ சாமி நீங்க அந்த
நாள் சினிமால நடிச் சீங்களா என்றார் நவ -திருப்பதி ]
ஐயங்கார் நறநறதத்தார் அப்போது பார்த்து
ஒரு ஏவ் வெளிப்பட்டது. சாமி வாயு இருக்குது பூண்டு சாப்பிடுங்க எத்தன வருசத்து காத்தா
இருந்தாலும் கலச்சிறும். என்று திருப்பதி நாட்டு வைத்தியம் சொன்னார்.
சாமி பாட்டு எளு தணும் . அடுத்தவாரம் கம்பெனிக்கு கூட்டிக்கிட்டு போறேன்
வாங்க. நீங்க 6 மாசம் வாங்குன சம்பளத்தை ஒரே பாட்டுலேயே வாங்கிறலாம்என்றார்திருப்பதி.
ஐயங்கார் மிதந்தார்.
மன்மத லீலை யை வென்றார் உண்டோ, மாதரசி ஏ ஏ என்று மூக்கால் உச்சஸ்தாயியில்
பாட , வரேன் சாமி என்று திருப்பதி கிளம்பினார்.
மறு வாரம் செவ்வாய் இரவு
8.00 மணிக்கு திருப்பதி வந்தார்-- "சாமி ,
நாளைக்கு காலைல எனக்கு போன் வரும் , அப்படி வந்தா நன் வந்து கூட்டிக்கிட்டு போறேன் இல்லைன்னா அடுத்த நாள் கண்டிப்பா நான் வந்து கூட்டிக்கிட்டு போறேன் ரெடியா இருங்க வரேன் என்று அவசரமாக கிளம்பிப்போனார்.திருமதி பட்டு ஐயங்கார் இப்ப எங்க சஞ்சாரம் பால்காராளோட ?
என்றாள் .
தொடரும் [3ம் பகுதியில் நிறைவு
பெறும் ]
நன்றி அன்பன் ராமன்
ஏகாதசியில் விரதம்
ReplyDeleteஏக பசியில் சிங்கம்.