Saturday, November 9, 2024

TEACHER BEYOND YOUR IMAGE-22

 TEACHER BEYOND YOUR IMAGE-22

ஆசிரியர்- உங்கள் பிம்பத்தை தாண்டி-22

ஆசிரியப்பணியில் பயில்வோர் நாட்டம் கொள்வது சுமார் 40% என்பது பொதுவான கணக்கீடு, அதை மேலும் அதிகரிக்கச்செய்யும் உத்தியும் கடமையும் ஆசிரியர்க்கே உண்டு. இதில் ஆண்  பெண் பேதம் இல்லை . எனினும்  ஆசிரியைகள் சொல்லொணா துன்பத்தை மனதளவில் சுமந்து கொண்டு பணியாற்ற வேண்டிய நிலை குறிப்பாக இருபாலர் கல்வி நிலையங்களில். இந்தநிலை +2 அதற்கு மேலும் கற்பிக்கும் சூழலில் நிச்சயம் உண்டு. இது குறித்து நிர்வாகங்கள் விரிவான ஆராய்ச்சி செய்து , ஆசிரியர் நலன் சார்ந்து நிலைப்பாடுகள் எடுத்தல் காலத்தின் கட்டாயம். குறிப்பாக இந்த அதிர்ச்சி சூழலில் ஆசிரியைகள் உடை சார்ந்த கோட்பாடுகள் முக்கியத்துவம் கொண்டவை. இது குறித்து எனக்கு சில கருத்துகள் உண்டு அவற்றை எழுதினால் வீண் வாதங்கள் தோன்றும். பொதுவாக உணர வேண்டியது கல்வி நிர்வாகிகள் பங்களிப்பு மிக மிக அவசியம். 

இதை பெண்கள் [ஆசிரியைகளும்] அலட்சியப்படுத்தாமல், வசீகரங்களை, வேலைபார்க்கும் நாட்களில் தவிர்த்தல் நலம். உடனே என் மீது கோபம் கொப்பளிப்பர் -இதை நான் அறிவேன். எவன் எவனோ உங்கள் மீது வக்கிரப்பார்வை கொள்கிறான்; அதை நிறுத்தவோ, தடுக்கவோ முயலாமல், கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொந்தளித்த தங்களின் பாதுகாப்புக்கு உதவாது. 

இது போன்ற தேவையற்ற நிலைகள் தோன்றாது இருக்க, பயில்வோரின் கவனம் கல்வியின் பால் வரவேண்டும் எனில் ஆசிரியரின் சொல்லாட்சியும், கருத்துத்தெளிவும் , முன்னிலை பெறுமானால், எளிதாக ஆசிரிய ஆளுமை விரிவடையும். அதனாலேயே பல முறை நன்றாக படித்து புரிந்து கொண்டு வளமான மொழிக்கட்டமைப்புடன் வகுப்பறைக்குள் கம்பீரமாக செயலாற்றுங்கள் என்று இயன்றபோதெல்லாம் வலியுறுத்துகிறேன்.

இவை ஏதோ வேற்று கிரகவாசிகளுக்கே சாத்தியம் என்பது போல் பழைய நோட்டை    பார்த்து செய்தி வாசிப்பது ஆசிரியப்பணி என்று மனதளவில் நிம்மதி கொண்டு தேர்வில் மதிப்பெண்களை பாரிவள்ளலென வாரி வழங்கி விட்டால் பயில்வோர் மகிழ்வர் என்று குறுக்கு வழிகளில் புகலிடம் கொள்கின்றனர். அத்துணை பலனையும் ஈட்டிக்கொண்ட உங்கள் சீடர்கள், உங்களைப்பற்றி எவ்வளவு மோசமான கருத்துகளை  பரப்புகிறார்கள்  என்று தெரிந்தால், பலனில்லாத பயனை தந்து நற்பெயர் எட்ட இயலாது என்று உணர்வீர்கள் / . உணரவேண்டும். நமது நேர்மையான, பயில்வோர் நலம் சார்ந்த செயல்பாடுகளன்றி வேறெதுவும் நம்மை கம்பீரம் கொள்ள உதவாது.

ஆசிரியப்பணியில் நற்பெயர் ஈட்டாமல், காலம் தள்ளுபவர்கள் தொடர்ந்தும் வெகுஜன வெறுப்பையும், தகுதியின்மையையும் வேரூன்றச்செய்து விட்டு, நான் 30 ஆண்டு அனுபவஸ்தன் 20 ஆண்டு துறைத்தலைவராக இருப்பவன் என்ற வாதங்களை [அதாவது விதண்டா] முன்னிலைப்படுத்திக்கொண்டு பெருமை கொள்ளுதல் எவர்க்கும் பலன் தராது. எனவே செய்ய வேண்டியது என்ன எனில்

அனைத்து கருத்துகளையும் ஆசிரியர் தெளிவாகப்புரிந்து கொள்ளுதல்

புரிந்து கொண்ட கருத்தினை வெவ்வேரு கோணங்களில் விளக்குதல்

மேலும் ஒரே கருத்து வெவ்வேறு பாடப்பகுதிகளில் எப்படி  பொருந்துகிறது என்று தெளிவாக விளக்கும் திறனை வளர்த்துக்கொள்ளுதல் மாணவ சமுதாயத்திற்கு நன்மை தரும்; உங்களின் ஆளுமையின் தேவையும் பங்களிப்பும் அதிகரிக்கும் . அதுவே ஆசிரிய அனுபவத்தின் அளவுகோல்; இல்லை எனில் ஆசிரியர் என்ற நிலையை நிர்வகிக்கவொண்ணாமல் , ஆ -- சிறியன் என்ற வீழ்ச்சிக்கு முழுத்தகுத்தி பெற்றவர் ஆவது திண்ணம்.

இந்த மன வீழ்சிக்கு வித்திடுவது ஒப்புநோக்கும் [தேவையற்ற] செயல் முறை. அவன் வகுப்புக்குப்போவதில்லை, இவன் அரைமணி நேரத்திற்கு மேல் வகுப்பில் இருப்பதில்லை என்று தரம் தாழ்ந்த மாதிரிகளைப்பார்த்துக்கொண்டு, நானே பரவாயில்லை 50நிமிடம் வகுப்பில் செலவிடுகிறேன் என்று பெரும் நிறைவு காண்கின்றனர்.  ஓட்டப்பந்தய வீரனுடன் ஒப்பிடாமல், முடவனைப்பார்த்து நான் வீரன் என்று ஏமா[ற்]றுவது , சூட்டிக்கொள்ளவேண்டிய பெயர் 'நொண்டிச்சாக்கு'. அவனுக்கு உடலில் முடம், நமக்கு மனதில் / சிந்தனையில் முடம். எனவே இது போன்றவர்களை ஏமாற்றுத்திறனாளிகள் என்று அழைத்தால் தவறில்லை. 

இயலாதவன் [குறைகொண்ட உடலமைப்பினால்] துயர் கொள்கிறான்;முயலாதவன் [மன ஈடுபாடற்றவன்] முன்னவனைவிட நான் உயர்ந்தவன் என்று நியாயம் தேடுகிறான்.

கவலையே படாதீர்கள், உலக இயக்கத்தில் ஒவ்வொருவர் அளிக்கும் பங்கிற்கேற்ப, இயற்கை சிறப்பான வெகுமதி தரும்; இது உறுதி; 

ஆம்    சில ஆசிரியர்களின் சந்ததியினர், உறுப்புக்குறைகள், கல்வியில் நாட்டமின்மை, அல்லது பெற்றோர் சொல்கேளாமல் தான்தோன்றிகளாக அலைவது போன்ற செயல்களால் வாழ்நாள் முழுவதும் பெற்றோருக்கு உளைச்சல் ஏற்படுத்தும் வரம் பெறுவதை நன்கு கவனியுங்கள். ஆம் "ஊரார் குழந்தையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும் " என்ற முதுமொழியின் உள்ளார்ந்தபொருள் இதுவே.  எனவே நமது பொறுப்பில் [கல்வியில்] வளரும் குழந்தைகளுக்கு, மனசாட்சிக்கு விரோதமின்றி தெளிவாகக்க்கற்பியுங்கள், 

அதுவே இந்த சமுதாயத்திற்கு நாம் செய்ய வேண்டிய கைம்மாறு -ஏனெனில் உலக இயக்கம் எப்போதும் முகம் தெரியாத மாந்தர்களுடனேயே செயல் பட வைக்கும். எனவே, வேற்றுமை பாராட்டாது அனைவரும் நாம் வளர்த்து ஆளாக்கவேண்டிய சமுதாய உறவுகள் என்று உறுதியேற்று பணி புரியுங்கள், காலம் உங்களுக்கு புகழ் சேர்க்கும்.

ஆசிரியப்பணியின் உண்மையான தேவையும் பண்பும் இவையே..

பெற்றவர்கள் கடன் -பிள்ளைகள் தலையில் என்ற முதுவாக்கின் பொருள் பணம் /சொத்து சார்ந்தது மட்டும் அல்ல; நமது இன்றைய செயல் தவறுகள், வருங்காலத்தில் நமது சந்ததியினரை சந்து முனையில் நிறுத்திவிடும் என்பதே.

அந்த இயற்கைசீற்றத்தை, தவிர்ப்பதற்கான செயல்-- 'நமது பணியினை இயன்ற அளவு குறையின்றி செவ்வனே செய்தல் நன்று' என்றுணர்வோம்.       

எனது கருத்தில் பிழை இருப்பின், புறக்கணித்துக்கடந்து செல்லுங்கள், காலம் உணர்த்தும் எது தவறென்று.

நன்றி அன்பன் ராமன்

1 comment:

  1. ஆசிரியர் கருத்தில் பிழை ஏதுமில்லை. நிறை நிறைவாக இருக்கிறது. ஏற்றுக் கொள்ள வேண்டியவர்கள் ஏற்றுக்கொண்டால் எல்லோருக்கும் வளமான எதிர்காலம் நிச்சயம்.

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-23

  TEACHER BEYOND YOUR IMAGE-23 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-23 அன்பர்களே இதுகாறும் ஆசிரியப்பணியில் ஆசிரியர் மேற்கொள்ள உகந...