Sunday, December 8, 2024

ANGER AND EGO -2

 ANGER  AND  EGO -2                               

கொந்தளிப்பும் அகம்பாவமும்-2

யாருக்கு கோபமோ, அகம்பாவமோ, அல்லது இரண்டுமே இருந்தால் நமக்கு என்ன என்று  கேட்கத்தோன்றுகிறதல்லவா?

மேலோட்டமாக உங்கள் கேள்வி இயல்பும் நியாயமும் நிரம்பியது என நம்மை நம்ப வைக்கும். ஆனால் இது போன்ற தனி மனித 'விபரீதங்கள்' உரிய காலத்தில் கட்டுக்குள் வர வில்லை எனில் அவை பொது அமைதிக்கும்  ஒழுங்குமுறைகளுக்கும் இடையூறு செய்யும். மேலும், இது  போன்ற மனநிலைகள் . தவறான மதிப்பீட்டில் வடிவமைக்கப்பட்டவை என்று புரிந்து கொள்ளாமல் இயங்கும் மனிதக்கூட்டங்களால் பின்னாளில் எந்த அமைப்பினாலும் கட்டுப்படுத்த இயலாத வக்கிரங்கள், வன் முறைகள் என ஒவ்வொன்றாக அரங்கேறி, "தடி எடுத்தவன் தண்டல் காரன்' என்று அலைவதை நாம் இப்போதே புரிந்துகொள்ளுதல் நலம்..

எனது இந்த அடிப்படை வாதம் இன்னும் கல்வி முற்றுப்பெறாத நிலையில் இருக்கும் மாணவர்கள் மற்றும் அவர் தம் பெற்றோர் வெளிப்படுத்தும் [எனக்கென்ன போன்ற] அக்கறை பற்றியது தான்..

 அன்றாடம் செய்தியில் பஸ் பயணிகளுக்கு இடையூறையும் அச்சத்தையும் ஏற்படுய்த்தும் விதமாக இயங்குவதோடின்றி, மாணவர்கள் வெவ்வேறு அடிப்படைகளில் குழுக்களாக இயங்கி ஒரு பிரிவு, இன்னொன்றின் உறுப்பினர்களை தாக்குவது, பின்னர் அடிவாங்கியவர்கள் படை திரட்டி வந்து சந்தேகிக்க நேரும் எவரையும் சுற்றிவளைத்து தாக்குவது என உள்நாட்டுக்கலவரம் போல் சில குறிப்பிட்ட பகுதிகளில்   அவ்வப்போது நிகழக்காண்கிறோம்.

இதில் வருத்தம் யாதெனில் இவைபோன்ற வன் செயல்கள் காலை / மாலை நேரங்களில் அரங்கேற, போக்குவரத்து பாதிப்பினால் பிறர் பள்ளி, கல்லூரி, அலுவலகம், மருத்துவமனை வெளியூர் பயணம் செல்ல உரிய ரயிலையோ, பஸ் ஸையோ பிடிக்கவொண்ணாமல் பெரும் இன்னலுக்கு ஆளாவதுடன் மனஉளைச்சலும்  அடைவது ஏன் இவர்களுக்கு புரிவதில்லை ?

இவர்கள்--- யார் என்னை கேள்வி கேட்பது என்றல்லவா இயங்குகிறார்கள். இவர்களை வழிப்படுத்தவேண்டிய பெற்றோர் எதுவுமே நடவாதது போல் பாராமுகம் காட்டுவர். பள்ளி/கல்லூரி நிர்வாகத்திற்கு காவல் துறை அறிவுறுத்தியபின் குறிப்பிட்ட சில மாணவர்கள் "சஸ்பெண்ட் [ suspend ] " செய்யப்பட்டு வீட்டிற்கு தகவலும் எச்சரிக்கையும் போன பின் பெற்றோர் [பெரும்பாலும் தாயார் ] பள்ளிக்கோ /கல்லூரிக்கோ சென்று இனிமேல் இது போல் நிகழாது என்று உறுதி அளித்து கடிதத்தில் கையெழுத்திடுவது அவ்வப்போது நடக்கிறது. .

மிகவும் தீவிரமான குழப்பம் எனில் தந்தை இது போல் உறுதிமொழி அளிக்கிறார். அவ்வப்போது உறுதிமொழி, சிறைவாசம் என அரங்கேறிக்கொண்டே இருக்கிறதே; பெற்றோர் கல்வி நிறுவனம் ஆசிரியர் கூட்டங்கள் நடக்கின்றன, ஆனால் உறுதிமொழியைத்தவிர , வேறெந்த உறுதியான நடவடிக்கையும் இல்லையே?. உயர்ந்த பட்சம்-- சில கல்வி நிலையங்கள் மிகவும் கீழ்த்தரமான நடிவடிக்கைகள் ஈடுபட்ட 2, 3 பேரை டிஸ்மிஸ் செய்யும்.

உடனே, இதுவரை இயங்கிவந்த தலைமறைவு தகப்பன்கள் ஓடிச்சென்று விழாதவர் கால்களில் விழுவதும், அரசியல் அழுத்தங்களை உருவாக்க, அத்துணை உத்திகளையும் கையில் எடுப்பதையும் காண்கிறோம். அரசியல் தலையீடு துவங்கியபின் வேறென்ன--- மீண்டும் 'நல்லிணக்க கூட்டங்கள்', பெற்றோர் ஆசிரியர் நிர்வாக கூட்டமைப்புகள் கூடிப்பேசி கைகுலுக்கி  விடைபெற்று தேநீர் அருந்தி விட்டு செல்வது .

இதனால், கண்ட பலன் என்ன? 

கல்லூரி என்றால் கேட்பதற்கு எவனும் இல்லை என்ற மனநிலைக்கு பலரும் வந்து விட, சினிமாக்காரர்கள், கல்லூரி வளாகம் என்ற பெயரில் பெண்களையும் ஆண்களையும் கும்மாளமிட செய்து, அங்கே கூட்டத்தின் இடையே சில ஆசிரியர்களும்   டப்பாங்குத்து டான்ஸ் ஆடுவதாக படம் எடுத்துத்தள்ளுகின்றனர்.

இனி வருங்காலத்தில் இது போன்ற கேளிக்கைகளில் ஆசிரியைகளும் களி நடனம் புரிவதாக காட்சிகள் வரத்தான் போகின்றன.. 'அந்த நாளும்  வந்திடாதோ 'என்ற பழைய பாடல் போல இப்போதே ஆர்வத்துடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். . இதைப்போன்ற சம்பவங்களை, சீர்தூக்கிப்பார்த்தால், கல்வி குறித்த தெளிவான புரிதல் பரவலாக இல்லை என்றே அடித்துச்சொல்லலாம்.

 ஏன்?

பெற்றோர் என்றோர் குழந்தை பெற்றோர், ஆசிரியர் என்போர் [எப்படியோ] வேலைபெற்ரோர், அதிகாரிகள் [பதவி] பெற்றோர் , ஆகவே கல்வி கற்றோர் என சான்றிதழ் வைத்திருக்கலாமே தவிர முறையான கல்வி கற்றோர் என ஏற்க இயலவில்லை..

வள்ளுவர் வாக்கு --நினைவிற்கு வருகிறதா?

ஒழுக்கம் கல்வியின் விழுப்பம் தரலான் , ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்"

பாவம், வள்ளுவர் நியாயவாதம் செய்தார். அவருக்கு தெரியுமா இந்த குறட்பாக்கள் தேர்வெழுத மாத்திரமே கண்டு கொள்ளப்படும் என்பது? வேறென்ன  சொல்ல?

தொடரும்

நன்றி அன்பன் ராமன் 

                                      

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...