Sunday, January 12, 2025

ANGER AND EGO -7

 ANGER AND EGO -7

கொந்தளிப்பும் அகம்பாவமும்-

ஈகோ [அகம்பாவம்] என்பதைஅடக்குவதை விட தவிர்த்தல் எளிது , மேலும் நமது சமுதாய அங்கீகாரம் பெரிதும் வலுப்படும்.. எனவே தான் ஈகோ என்னும் தற்கொலை நோக்கித்தள்ளும் அரக்கனிடம் இருந்து தற்காத்துக்கொள்ளும் முயற்சிகளை விவாதித்து வருகிறேன் .

2 [LISTENING TO OTHERS ] பிறர் கருத்தை /[அறிவுரையை] செவிமடுத்தல்..

 ஈகோ தவிர்த்திட மிகச்சிறந்த ஆயுதம் இதுவே. ஏனெனில் , செவிமடுத்தல் ஈகோவின் அஸ்திவாரத்தைமுற்றாகத்தகர்த்துவிடும்.. மேலும் இந்த பண்பு வளர வளர கருத்துகளை சீர் தூக்கி ஆராயும் ஆய்வு மனோபாவம் விஸ்தரிக்கும்.  செவிமடுத்தல் கேட்பதற்கு ஏதோ "கேலிப்பொருள்" என்பதாக தோன்றினால் உங்கள் மனம் ஈகோவின் பிடியில் சிக்கியுள்ளது என புரிந்து கொள்ளலாம்.

அப்படி சிக்குண்டவர்கள் முதலில் அவசரமாக பின்பற்ற வேண்டிய அணுகுமுறையே "செவிமடுத்தல்" என இப்போதேனும் புரிந்துகொள்ளுங்கள். இன்றேல் காலப்போக்கில் ஈகோவில் பயணித்த எவனும் /எவளும் நிச்சயம் "கேலிப்பொருள் " ஆவது உறுதி. பிறரை மட்டமாக நினைத்துவிட்டு அந்தநினைப்பிலேயே தன்னை உயர்வாக எண்ணுதல் என்பது 'நம்மை நாமே' ஏமாற்றும் ' பகற்கனவு. இதை உணராவிடில் உலகம் உணர்த்தும். அப்போது புலம்பித் தவித்து , தானம் தருமம் , யாகம் யக்ஞம் என்று முயற்சி கொண்டாலும், நீங்கள் தவித்து த்திண்டாடுவது  ஒன்றே நிகழும் .

காலவிரயம் பொருள் விரயம், பிறர் அனுதாபத்துக்கு ஏங்கும் நிலை உருவாகும். ஆரம்பகட்டத்தில் பிறரை கேலி பேசிவிட்டு,  இப்போது யாரவது உதவமாட்டார்களா என்று அலைவது இயற்கை தரும் சம்மட்டி அடி. முதலில் பணிவுகொள்ளுதல் பின்னாளில் ஈட்ட இருக்கும் வெற்றிக்கனிகள்    சிறியதோ பெரிதோ, எனினும் நமக்கு உதவ எவரேனும் ஒருவர் உரிய நேரத்தில் தோன்றுவார். இது இயற்கையின் இயக்கத்தில் நிகழும் அனுகூலம்.

நிச்சயம் பிறர் நம் மீது வெறுப்பு கொள்ளமாட்டார்கள். ஏனெனில் உங்களது பொதுவான அணுகுமுறையில் நீங்கள் எவரையும் இழி பார்வை பார்த்ததில்லை என்பது உங்கள் மீது பிறர்க்கு இயல்பாக தோன்றும் மரியாதையும் அன்பும் ஏற்பட நன்கு உதவி செய்யும். எனவே, பிறர் தரும் கருத்துகளை ஏற்பதோ தவிர்ப்பதோ உங்கள் மனம் எடுக்கும் முடிவு. ஆனாலும், பிறரை மதித்து, காதுகொடுத்துகேட்பவர் என்ற பிம்பம் நீங்கள் ஈகோ பாராட்டாதவர், எனவே 'பெரிய மனம்' படைத்தவர் என்ற பொது ஜன அங்கீகாரத்திற்கு வழி வகுக்கும்.

பிறர் சொல் செவிமடுப்பதால் என்ன ?

இது மிக நன்றாக உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டிய   ஒரு வாழ்வியல் பாடம். ஆம், பலதரப்பட்ட கருத்துகளை கேட்கிறோம் [ஏற்கிறோமோ, எதிர்க்கிறோமோ -அது வேறு] . அப்போது மாறு பட்ட சிந்தனை ஓட்டங்கள், சுயநல பொது நல  நிலைப்பாடுகள் பற்றி நாம் புரிந்து கொள்ளும் போதே, ஐயோ இதை கவனிக்கத்தவறி  விட்டோமே,  இது ஏன் நம் எண்ணத்தில் உதிக்கவே இல்லை, [அவன் ஒரு முட்டாள் என்று நினைத்தேன், மிக நுணுக்கமாகப்பார்க்கிறான், நல்ல வேளை, பெரும் வீழ்ச்சியில் இருந்து தப்பித்தேன் என நமது குறைகளை [LIMITATIONS லிமிடேஷன்ஸ்= நம்மால் இயலாதவை]ப்பற்றிய தெளிவு பிறக்க உதவும். இனி-- உங்களது  தன்னிச்சையாக செயல் படும் போக்கு மட்டுப்படும். இதன் மூலம் மெல்ல மெல்ல ஈகோ மடியத்துவங்கும்.

3 OWNING MISTAKES [தவறுகளுக்கு பொறுப்பேற்பது] பல தருணங்களில் நான் வியப்பும் வெறுப்பும் கொண்டது , இந்த ஒரு மகோன்னத பண்பில் பலரும் தயக்கம் கொள்வதுபற்றித்  தான்.

பல விதங்களிலும் பிறரோடு அனுசரித்துசெல்வோர், ஏதேனும் தவறு நிகழ்ந்து விட்டால், யார் மீதாவது பழி போட்டு தப்பிக்கப் பார்க்கிறார்கள். அலுவலங்களில் இது சர்வ சகஜம். இது மாபெரும் மரணக்கிணறு என்று உணர்தல் அவசியம். ஓடிச்சென்று ஒருவரை குற்றத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற முடிந்தால் தயங்காமல் செய்யுங்கள். பலரும் காப்பாற்ற போனால், செலவு வந்து விடுமே என்று பின் வாங்குகிறார்கள்.

எனது இந்த வாதம் மேல்நிலை பதவி வகிப்போருக்கு சாலப்பொருந்தும்.  எனது வழிகாட்டலில் தான் குறை; நான் சொன்னதைத்தான் அவர் செய்தார், எனவே அந்தத்தவற்றில் எனக்கும். பொறுப்பு என்ற    பங்கு உண்டு- என உயர் அதிகார வர்க்கத்துக்கு சொல்லுங்கள்.  அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

உங்களுக்கு தெரியாமல் ஊழல் செய்பவர்களை இப்படியெல்லாம் காப்பாற்ற வேண்டியதில்லை; அதையும் நினைவில் கொள்ளுங்கள். தவறில் பங்குகொள்ளுதல் ஒரு சீரிய பண்பு,  ஆனால், ஊழலில் பங்கு கொள்ளுதல் குற்றத்திற்கு சிவப்புக்கம்பளம் விரித்த இழி நிலை. இந்த நிலைப்பாட்டினை தெளிவாக கடைப்பிடித்தால் பணியில் சுணக்கம் இன்றி வேலைகள் நிறைவேறும் ;ஆனால் ஊழலில் சிக்கினால் அவர் உதவிக்கு வரமாட்டார் என்பதோடு நீங்கள் ஊழல்கறை படியாதவர் என்று சகபணியாளர்கள் நன்கு உணர்வர்..

 அப்படி ஒரு சூழல் ஏற்படும் போது, உங்கள் மீது எவரும் பழி சொல்ல மாட்டார்கள். தவறுகளுக்கு மட்டும் பொறுப்பேற்பார் என்பதால், உங்களின் நேர்மையில் மாற்றுப்பார்வை ஏற்படாது.. தவறுகளுக்கு பொறுப்பேற்றல் என்பது மாவீரர்களுக்கே சாத்தியம் - கோழைகளுக்கு அல்ல- இதுவே ஒரு மனிதனின் பேராண்மை/ மேலாண்மை மற்றும் அஞ்சாமைப்பண்புகளான அணிகலன்கள். எனவே , இந்த மன வலிமை , எதிராளியின் ஈகோவைக்கைக்கூட புரட்டிப்போட்டு துவம்சம் செய்துவிடும். அதற்காகவேனும் ஈகோ அற்ற நிலைநோக்கி சிறு வயது முதல் பயணித்தல் நன்று,.

பிற, கடைப்பிடிக்கத்தக்க உத்திகள் குறித்து வரும் பதிவுகளில் காண்போம். .   

      தொடரும்

அன்பன் ராமன்

2 comments:

  1. இந்நற்பண்புகள் திருக்குறளில் கூறப்பட்டுள்ளன. அதன்படி நடப்பவர் சிலரே.

    ReplyDelete
  2. பிறர் சொல்லுவதை கேட்டு ஆராய்ந்து செயல்படும்போது நம்மையும் அறியாமல் நாம் ஈகோவிலிருந்து வெளியே வருகிறோம் என்பத நிதர்சனமான உண்மை.

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...