Sunday, May 18, 2025

AVOIDING MISTAKES-10

 AVOIDING MISTAKES-10

பிழை தவிர்த்தல் – 10

   ஆங்கில மொழியின் சிறப்பும் குழப்பமும் அம்மொழியின் எழுத்துக்கோர்வை அவற்றின் ஒலி மற்றும் பொருள் மாறுபாடு [இடம் பொருள் ஏவல்] என பலதரப்பட்ட விதிமுறைகள்.

எங்களது ஆங்கில பரிச்சயம் வேறு வகையானது .எங்கள் ஆசான்கள் ஆங்கிலேயர்களிடம் நேரடியாக ஆங்கிலம் கற்று அடைந்த தெளிவு பின்னாளில்வந்த ஆசான்களிடையே மெல்ல மங்கி மழுங்கி, மென்று முழுங்கி "இப்படியும் சொல்லலாம் " என்று தங்களுக்கு தாங்களே சான்றிதழ் வழங்கி மகிழும் புதிய தலைமுறை உருவாக வழி செய்தது.

புதிய தலைமுறையினர்; குறையென்றுமில்லை என்று இறுமாந்திருக்க, கள யதார்த்தம், என்னவோ குறை தவிர வேறொன்றுமில்லை என்று விவரமறிந்தோர் உள்ளூர கொள்ளும் நகைச்சுவை தான் . இவ்வகை புதிய புலவர்கள்  little /a  little இரண்டும் ஒன்றே என்பர். little என்பது கௌரவ மறுப்பு YOU HAVE LITTLE FREEDOM ON THIS எனில் இதில் உங்களுக்கு சிறிதும் சுதந்திரம் இல்லை என்று பொருள். YOU HAVE A LITTLE FREEDOM ON THIS என்றால் இதில் உங்களுக்கு ஓரளவு சுதந்திரம் உள்ளது என்று பொருள் .

DEBRIS,

உச்சரிப்பு டெப்ரி [ S -அமைதி ] நம்மவர் வாய் நிறைய டெப் ரி ஸ் ஸ் என்று பாம்பு போல் சீறுவர்.

DATA [DATAS]

DATA =புள்ளிவிவரம் [அதுவே பன்மையை உணர்த்துவது. ஆனால் பலர் DATAS என்று ஒரு 'S' சேர்த்து பெருமிதம் கொள்வர். முறையான சொல்வழக்கில் DATUM [SINGULAR] DATA [PLURAL]   I have given all  the  datas என்று பெருமிதமாக உளறுவதைக்காணலாம்

DEFUSED / DIFFUSED  

இரண்டும் வெவ்வேறு சொல்வரிசை , உச்சரிப்பு பொருள் கொண்டவை

 

DEFUSED =டீபியூஸ்ட்  செயலிழக்க வைக்கப்பட்டது [THE BOMB WAS  DEFUSED ]

DIFFUSED =டிப்யூஸ்ட்  , குறைக்கப்பட்டது அல்லது மங்கலாக்கப்பட்டது  THE LIGHT WAS  DIFFUSED

POSTPONED /PREPONED [RESCHEDULED]

அடுத்து நாம் காண இருப்பது ஒரு பரவலாக நிகழும் தவறு . ஆம் ஆங்கில அகராதியில் இல்லாத ஒரு சொல்லை மாய்ந்து மாய்ந்து பேச்சிலும் எழுத்திலும் சரளமாக அள்ளி  வீசும் ஒரு கூட்டம்  நமது நாட்டில் உலவுவதைக்காணலாம் . இது ஒரு தவறான அடிப்படையில் துவங்கிய சொல்லாடல்.

வினோதமாக படித்தவர் பாமரர் என்ற வேறுபாடின்றி  உபயோகிக்கும் சொல் "PREPONED" . இது அங்கீகரிக்கப்பட்ட சொல் அல்ல. இந்த தவறின் துவக்கம் ஒரு பொது நடைமுறை சார்ந்து தோன்றியது.

ஏன் எனில் "postponed " என்ற சொல் உண்டு அது ஒரு நிகழ்வு தள்ளிப்போடப்படுவதை குறிப்பது. அப்படியானால் ஒரு நிகழ்ச்சி முன்கூட்டியே நடை பெறுவதை உணர்த்த "preponed" என்று சொல்லிவிட்டால் இயல்பாகத்தோன்றும் என்று நினைத்து சொல்லித்திரிகின்றனர். அதற்குரிய முறையான சொல் 'advanced ' என்பதே preponed அல்ல. இதை சுட்டிக்காட்டினால் கோபம் பொத்துக்கொண்டு வருவதைக்காணலாம்.

PREPONED /POSTPONED  இரண்டையுமே  தவிர்த்து விட்டு RESCHEDULED என்று சொல்லலாம். சொல்லப்போனால் RESCHEDULED   என்பது கம்பீரமான குழப்பமில்லாத சொல் [மாற்றிஅமைக்கப்பட்டுள்ளது என்று பொருள் தரும்]      

05- 06 -25  நிகழ்ச்சி  03-06-25 க்கு மாற்றப்பட்டுள்ளது PREPONED IS WRONG. [ADVANCED to  03-06-25]

06-06-25 நிகழ்ச்சி 08-06-25 க்கு மாற்றப்பட்டுள்ளது [postponed]  இரண்டையும் மிக எளிதாக The programmes  scheduled for 05-06-25 and 06-06-25 are  rescheduled respectively to     03-06-25 and 08-06-25  என அறிவித்துவிடலாம்

UPDATING /UPDATION [n]

UPDATING  என்ற சொல்லுக்கு மேம்படுத்துதல் அல்லது அவ்வப்போது புதிய தகவல்களை தொகுத்து [பின்தங்கி விடாமல் ]முன்னேற்றப்பாதையிலேயே பயணித்தல் என்று பொருள்

பலர் இந்த பண்பிற்குரிய பெயர்ச்சொல் UPDATION என்று நம்புகின்றனர். மரபு வழி ஆங்கிலத்தில் UPDATION என்ற சொல் கிடையாது. காலப்போக்கில் பலரும் அதை உபயோகித்து இப்போது ஆங்கில அகராதியில் UPDATION - இது இந்திய ஆங்கிலத்தில் வழங்கும் சொல் என்று குறிப்பிடுவதைக்காணலாம். இந்திய ஆங்கிலம் என்று நையாண்டி செய்வது போல் உள்ளது .

இந்தியாவில் பரவலாக புழங்கும் மற்றுமோர்,  ஆங்கிலச்சொல் 'REDRESSAL"  அதாவது குறைகளைதல் அல்லது தவறை திருத்தி  நன்மை செய்தல் .அதற்குரிய சொல்  'REDRESS' மட்டுமே.

ஆனால் நாம் தான் "நானே ராஜா-  மனமே மந்திரி "  வகையினர் ஆயிற்றே  ஆங்கிலேயன் யார் எனக்கு மொழி கற்பிக்க என்று கொந்தளிப்போம் அல்லவா . பாவம் ஆங்கிலேயன் இப்படி தான்தோன்றிகள் இருப்பதை அறியான் .

வளரும்

அன்பன் ராமன்   

No comments:

Post a Comment

UNABLE TO UNDERSTAND ANYTHING -8

  UNABLE TO UNDERSTAND ANYTHING -8               ஒன்றும் புரியவில்லை -8 LEARNING [ BASICS -7] அறிதல் [ அடிப்படை-7 ]   ஆசிரியரின் ...