Monday, August 25, 2025

LET US PERCEIVE THE SONG -35

 LET US PERCEIVE THE SONG -35          

பாடலை உணர்வோம் -35

காதல் சிறகை காற்றினில் விரித்து [பாலும் பழமும் -1963] காண்ணாதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி , குரல் பி சுசீலா

இப்படி ஒரு பாடல் அதற்கு முன்னரோ , பின்னரோ வந்ததே இல்லை. நான் சொல்ல நினைப்பது பாடலின் சொல்லாடலில் வெளிப்படும் பெண்ணீய உணர்வுகளின் பூரணத்துவம் குறித்து . ஆம், இது போல் சொல்லுக்கு சொல் உணர்ச்சி தெறிக்கும் கவிதை யாத்திட கவியரசு கண்ணதாசனால் மட்டுமே எளிதாக இயலும். சொல்லில் துல்லியம், உணர்வில் ஆழம் என பாடல் விண்ணில் தவழ்கிறது.

தொகையறாஎன்ற மறந்து பட்ட அந்நாளைய கவிதை மரபிலே பாடலின் துவக்கம்

தொகையறா

தாவி வரும் மேகமே

என் தாய் நாடு செல்வாயோ

ஊர் உலகம் போற்ற வரும்

என் உத்தமனைக்காண்பாயோ

இன்று மணமுடித்த பேதை போல்

நான் இங்கே சொந்தம் கொண்டாடுவதை

சொல்லி விட மாட்டாயோ                               

 என்று குமுறி விட்டு துவங்குகிறாள் உணர்வின் பிரவாகத்தை.

காதல் சிறகை காற்றினில் விரித்து

வான வீதியில் பறக்கவா

கண்ணில் நிறைந்தா கணவனின் மார்பில்

கண்ணீர் கடலில் குளிக்கவா

கண்ணீர் கடலில் குளிக்கவா     

அவளின் துயர் மறக்க 'வான வீதியில் பற க்கவா ' என்று கே ட்டவள்

உடனே கணவன் மார்பில் கண்ணீர் கடலில் குளிக்கவா என்று கேட்பது அலை பாயும் மனதின் சோகக்குமுறல் இதற்கு கவிஞன் தொடுத்த வினாவே வானில் பறக்கவா , கண்ணீரில் குளிக்கவா . அப்படியாவது மனம் ஆறுதல் கொள்ளுமா என்ற பெண் மன குழப்ப நிலை . பல்லவியிலேயே கவிஞன் சோகத்தை உணர்த்திவிட, இசை அமைப்பாளர் அந்த சோகத்தை வலுவாக கட்டமைக்க வேண்டுமே . ஆம் எப்போதும் கவியின் கருத்தை மேலும் மெருகேற்றுதலே இசை அமைப்பாளரின் தொழிலும் கடமையும்.  அதற்கு இப்பாடலில் மெல்லிசை மன்னர்கள் முன் எடுத்த  உத்தி - துயர் மிக்க சொல் வரிசைகளை இரண்டு- 3 முறை அடுத்தடுத்து பாட வைப்பது.

அதன் மூலம் சோகத்தின் தாக்கமும் பெண்ணின் ஏக்கமும் இசையின் பாதையில் பின்னிப் பிணைய.,  பாடல் வேறொரு பரிமாணம் காட்டுகிறது. இன்றளவும் இப்பாடலில் சோகச்சுவை மங்கவே இல்லை, கேட்டவர் எவரும் மறுக்கவும் இல்லை. பாடலில்சொல் நயமும் இசை நயமும் போட்டிபோடுவதைக்காணலாம் 

சரணம்

எண்ணங்களாலே பாலம் அமைத்து

இரவும் பகலும் நடக்கவா

இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி 

இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி 

இரு கை  கொண்டு வணங்கவா

இரு கை  கொண்டு வணங்கவா

இந்த சரணத்தில் அவள் காலம் குறுக்கிட்ட நிலையை சொல்ல  இரு கை கொண்டு வணங்கவா என்கிறாள் அந்த சோகத்தின் ஆழத்தை இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி என்று இருமுறை பாடி வலு சேர்க்கப்பட்டுள்ளது. இசை அமைப்பினால் கவிஞனின் வாதம் மெருகேறியுள்ளதை கவனியுங்கள்

பல்லவி

சரணம்-2

முதல் நாள் காணும் மணப்பெண் போல

முகத்தை மறைத்தல் வேண்டுமா

முறையுடன் மணந்த கணவன் முன்னாலே

முறையுடன் மணந்த கணவன் முன்னாலே

பரம்பரை நாணம் தோன்றுமா 

பரம்பரை நாணம் தோன்றுமா 

திருமண பந்தம் ஒரே நாளில் பெண்ணின் நாணம் விலகிவிடுதலை பேசுகிறார் கவிஞர் . முகத்தை மறைத்தல் பரம்பரை நாணம் இரண்டையும் சற்று அடக்கி வைக்க "முறையுடன் மணந்த " என்ற அங்கீகாரம் கொண்ட மண வாழ்வின் மாண்பினை சுட்டிக்காட்டி , இவ்வளவு நெருங்கியும் பின்னர் பிரிவில் ஏற்பட்ட மனச்சுமையை இப்பாடலில் விளக்கும் கவிஞர்/ இசை அமைப்பாளர்கள் .

பல்லவி

சரணம்-3

பிரிந்தவர் மீண்டும் சேரும் போது

அழுதால் கொஞ்சம் நிம்மதி

பேசமறந்து சிலையாய் இருந்தால்

பேசமறந்து சிலையாய் இருந்தால்

அதுதான் தெய்வத்தின் சன்னதி

அதுதான் காதல் சன்னதி

“பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோஎன்ற சொல்லாடல் இப்பாடலின் இறுதிச்சரணத்தின் மையக்கருத்தாக மிளிரக்காண்கிறோம். பிற சரணங்களைப்போலின்றி , இச்சரணத்தில் "பேச மறந்து சிலையாய் இருந்தால்" என்ற பகுதி மட்டும்  இரு முறை பாடப்படுகிறது , பேச மறந்த நிலை யில் அமைதி தான் மனச்சுமையை குறைக்கும் என்ற தத்துவம் உணர்த்தப்பட்டுள்ளது.

பல்லவி

ஆழ்ந்து கவனித்தால், பல்லவிக்கும் சரணத்திற்கும் பெரும் வேற்றுமை இல்லாத ராக அமைப்பு. ஏனெனில், பாடல் முழுவதிலும் பிரிவாற்றலின் சோகமே மையப்பொருள்.         அதே போல ஆர்ப்பாட்டம் இல்லாத மெல்லிய நுண் இசை.

 ஆனால் ஒரு சிறு இடை வெளிகூட இல்லாத பாடல் பயணம். பாடலில் சோகம் இருந்தாலும் கேட்பவர்மனம் சஞ்சலம் கொள்ளாத வகை இசை அமைப்பு எளிதில் விளக்கிட முடியாத நுணுக்கம். பாடலை ஆழ்ந்து உணர்ந்து கவனித்துக்கேளுங்கள் நான் சொல்லாத வேறு பல வியப்புகளும் உங்களை வசீகரிக்கும்.

 கேட்டு உணர இணைப்பு இதோ  .

https://www.youtube.com/watch?v=CQU5jX55UWA kaadhal siragai paalum pazhamum  kd v r ps

கவியரசரின் எண்ணற்ற நுணுக்கங்களளை / இசையின் லாவகங்களை  சுபஸ்ரீ விளக்க QFR பதிவினைக்கேட்டு இன்புறுங்கள் இணைப்பு இதோ

https://www.google.com/search?q=kaadhal+siragai+QFR+VIDEO&oq=kaadhal+siragai+QFR+VIDEO+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIHCAEQIRiPAtIBCTMxNTY0ajBqNKgCALACAQ&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:0cc89c25,vid:MbnG61JBq4s,st:0 QFR VIDEO

பிறிதொரு பாடலுடன் பின்னர் சந்திப்போம்

நன்றி

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

UNABLE TO UNDERSTAND ANYTHING -8

  UNABLE TO UNDERSTAND ANYTHING -8               ஒன்றும் புரியவில்லை -8 LEARNING [ BASICS -7] அறிதல் [ அடிப்படை-7 ]   ஆசிரியரின் ...