Tuesday, October 28, 2025

LET US PERCEIVE THE SONG -44

 LET US PERCEIVE THE SONG -44                  

பாடலை உணர்வோம் -44

POSTING   /   பதிவு 1500

அந்த மாப்பிள்ளை காதலிச்சான் [பணம் படைத்தவன் -1963] வாலி, விஸ்வநாதன் -ராமமூர்த்தி குரல்கள் சுசீலா , டி எம் சௌந்தரராஜன்

இப்போது ஏன் இந்தப்பாடல் என்று சிலர் கேட்கக்கூடும். ஆனால், பலர் நீ என்ன செய்தாலோ சொன்னாலோ எனக்கென்ன நான் ஒன்றும் கவலைகொள்ளப்போவதில்லை. அவ்வளவு ஏன்?- நான் படிக்கவே மாட்டேன். அதுமட்டும் தானா ? இந்தப்பாடலை நான் பலமுறை கேட்டிருக்கிறேன் என்று கடந்துபோகும் அதீத புத்திமான்கள் பலர். அதில் ஏதாவது பேச நேர்ந்தால் ஹி ஹீ ஹி நான் வீடியோ பார்க்கல என்று நழுவப்பார்ப்பதையும் நான் நன்கு அறிவேன். அடிப்படையில் நான் ஓர் ஆசிரியன் .அதனால் பலர் நினைப்பதை விட என்னால் எதையும் உணர இயலும். சரி உருட்டு உலகநாதன்களை ஒரு புறம் ஒதுக்கி விட்டு பாடலுக்கு வருவோம் .சமீபத்திய பதிவில் அமைந்த 'அமைதியான நதியினிலே ஓடம் ' பாடலுக்கும் 'அந்த மாப்பிள்ளை பாடலுக்கும் ' பல சமன்பாடுகளையும்  வேற்றுமைகளையும் பார்க்கவும் ஆய்வுசெய்யவும் நல்ல வாய்ப்பு.

ஒற்றுமைகள்

1 இரண்டுமே வெற்றிப்பாடல்கள்

2 ஒரே இசை அமைப்பாளர்கள்

3 ஒரே குரல்கள்

4 ஒரே வகையான [ஆண்   பெண] பாடல்கள்

5 நெஞ்சை அள்ளும் அமைப்பு -நேர்த்தியான இசை

6 முதல் குரலை இரண்டாம் குரல் விழுங்கி ஏப்பம் விடும் சிறப்பு இரண்டு பாடல்களிலும்

வேற்றுமைகளுக்கும் பஞ்சமில்லை

1 வெவ்வேறு கவிஞர்கள் [கண்ணதாசன் / வாலி ]

2 வெவ்வேறு திலகங்கள் [சிவாஜி , எம் ஜி ஆர் ]

3 வெவ்வேறு நாயகியர் [ தேவிகா , கே ஆர் விஜயா ]

4 மாறுபட்ட அமைப்பு [முன்னதில் ஆண் துவங்க, பின்னர் இணைந்த பெண் குரல் -["அமைதியான "]

பின்னதில் பெண் துவங்க பின்னர் இணையு ம் ஆண் குரல் -["அந்த மாப்பிள்ளை" ]

5 முதல் பாடல்- ஒரு மன ஏக்கம், 2 ம் பாடல் -இரு மன ஏக்கம்

6 முன்னதில் மேற்கத்திய இசைக்கோலம் , பின்னதில் மண் வாசனை அதிகம்

7 முன்னது இசையில் துவங்க, பின்னது குரலில் துவக்கம் 

இப்படி இசை அமைப்பில் விஸ்வநாதன் -ராமமூர்த்தியின் இசை மாண்புகளை இது போல் பல தருணங்களில் பார்த்திருக்கிறோம். அவற்றை பேசினால் கூட எனக்கென்ன என்று இருப்பவர்களை நினைத்தால் ஒன்றும் எழுத வேண்டாம் என்றே தோன்றுகிறது ஆனால் படிக்கும் ஒரு 10 பேரையும் புறக்கணிக்க இயலவில்லை.

பாடலை ஆய்வு செய்ய வலுவான காரணங்கள் உள்ளன.

தனது காதல் உள்ளம் உவகை கொள்ள பாடலை துவக்குகிறார் நாயகி. சராசரி மனிதர்கள் பெரும் பாலும் குளியல் அறை, பம்ப்செட் , நீரோடை , கிணறு போன்ற சூழலில்பாடி பாத் ரூம் singers என்று புகழ் பெற்றவர்கள்.எனவே பாடலின் துவக்கம் சரியான பின்னணியில்.

இப்பாடல் குதூகல துவக்கம் அதுவும் துள்ளும் உள்ளத்தின் வெளிப்பாடாக என்று நளின ஹம்மிங் சுசீலாவின் குரலில். பல்லவி நேரடி யாக  தகவல் சொல் கிறது   

அந்த மா ..பிள்ள காதலிச்சான் கைய புடிச்சான்

என்ன கைய  புடிச்சான் அங்கே முன்னால்  நின்றேன் பின்னால் சென்றேன் வா வா  என்றான்       கூடவே வா வா என்றான் [இது சென்சார் கண்ணில் மண்ணை தூவிய சிலேடை ]

இந்த பல்லவியில் உச்சரிப்பை கவனியுங்கள் பேச்சு வழக்கில் "மாப்பிள்ளே " "கைய புடிச்சான்" என பாடி  உள்ளார்ந்த கிராமிய மனம் [மணம் ] பரிமளிக்கிறது

முற்றிலும் உள்ளத்தை பறிகொடுத்த பெண் மனம் அதீத உவகையில் 'அவனின்' நெருக்கத்தை விளக்க , ஆடிப்பாடி குதூகலிக்க மறைவாக அறையில் இருந்த நாயகன் என்று பாடலின் பிற்பகுதியில் நுழைய இனி கம்பீர ஆண் குரலின் ஆதிக்கம் இந்தப்பாடலில். 'அவளின் கற்பனையை அடி ஒற்றியே 'இவனின்' கற்பனை விரிய, பாடல் காதல் வீரியம் காட்டுவது கவிஞனின் ஆளுமைக்கு சான்று

ஆண் பகுதி சரணம் பெண் பகுதிக்கு சற்றும் சளைத்ததல்ல -குறிப்பாக உள்ளார்ந்த காதல் வேகத்தில். சொற்களும் , இசையும் ஒரு புறம் பாடலுக்கு மெருகேற்ற , காட்சிக்கு நாயகன் -கிராமீய பாணி நடன அசைவுகளால் அழகூட்டியுள்ள எம் ஜி ஆர் ஒரு பெரும் வசீகரன் எனில் தவறல்ல

என்னவோ தமிழ் சினிமாவில் 1990 களில் தான் நடனம் தோன்றியது போல் சிலர் ஆடும் நர்த்தனத்தை ப்பார்த்தால் எங்கே போய் முட்டிக்கொள்வது -தெரியவில்லை.தனது பிறப்பிற்கே முன்னேயே தமிழ் சினிமா எட்டி விட்ட உயரங்கள்   அறியாமல் பேசுவது -உளறல் என்ற வகை சார்ந்தது. இப்பாடலில் அதுவும் இறுதிப்பகுதியில் இருவரும் நிகழ்த்தியுள்ள நடன பங்களிப்பையும் அதிலும் எம்ஜி ஆர் கால்களில் காட்டியுள்ள ஸ்டெப் [step] நேர்த்தியை கவனியுங்கள்

ஆண்  பகுதியில்   சரணத்தில் சென்சார் காட்டிய தீவிரம் பாடலின் வீரியத்தை குறைத்துள்ளதை காணலாம். அம்மம்மா என்ன சொல்ல அத்தனையும் கண்டதல்ல என்று இப்போது பாடியுள்ள இடம் முன்னர் அம்மம் மா என்ன சுகம்  அத்தனையும் கன்னி சுகம் என்று இருந்தது. பழைய இசைத்தட்டில் இப்போதும் கேட்டால் நான் குறிப்பிடுவது தெளிவாகும்.

மிக ரம்மியமான நெளிவுகளுடன் பயணிக்கும் பாடலில் தபலா , குழல் ஆங்காங்கே மாண்டலின் 2, 3 பகுதியில்     -இவைதான் இசைக்கருவிகள். ஆயினும் பாடலின் தாக்கம் வலுவானது. 1960 களிலேயே இசை வெகுவாக ஆய்வுக்கோணங்களில் பயணப்பட்டிருந்ததை இது போன்ற பாடல்கள் சிறப்பாக உணர்த்துகின்றன. பாடலுக்கு இணைப்பு கீழே

https://www.youtube.com/watch?v=gZtHEfwlPac&t=3s

andha mappillai panam padaiththavan   v r ps tms

நன்றி

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

LET US PERCEIVE THE SONG -44

  LET US PERCEIVE THE SONG -44                    பாடலை உணர்வோம் -44 POSTING     /    பதிவு 1500 அந்த மாப்பிள்ளை காதலிச்சான் [ பண...