Sunday, June 21, 2026

Madurai -15

 Madurai -15

மதுரை-15

திருமோகூர்

மதுரையின் எண்ணற்ற பெருமைகளில், அந்நகரைசுற்றியுள்ள திருத்தலங்களுக்கும் ஒரு சிறப்பிடம் உண்டு. அவ்வகையில் அமைந்தவையே -அழகர் கோயில், பழமுதிர்ச்சோலை, திருவாதவூர், திருமோகூர் மற்றும் நரசிங்கம் எனும் பெயரில் விளங்கும் திரு யோகநரசிம்மர் கோயில்.

இதில் மற்றுமோர் சிறப்பு யாதெனில் இவை அனைத்தையுமே கிட்டத்தட்ட ஒரு நேர்கோட்டில் பயணிப்பது போல பழமுதிர்ச்சோலையில் துவங்கி, கீழிறங்கி அழகர் கோயில்சென்று அங்கிருந்து கிழக்கே சுமார் 6 கிலோமீட்டர் பயணிக்க வரும் தலம் நரசிங்கம், தொடர்ந்து கிழக்கு திசையில் மேலும் சுமார் 5 கிலோமீட்டர் சென்றால்  திருமோகூர் , மேலும் கிழக்கில் சுமார் 5,6 கிலோமீட்டர் பயணத்தில் திருவாதவூர். இப்படி ஒரு சிவ தலத்தில் [பழமுதிர்ச்சோலை]  துவங்கி மூன்று வைணவ தலங்களை தரிசித்து இறுதியில் இன்னுமோர் சிவதலத்தில் [திருவாதவூர்]  நிறைவுறும் ஆன்மிக அமைப்பு சற்று அரிதானதாகவே எனக்கு தோன்றுகிறது. நான் இந்தியத்திருநாட்டின் பல பகுதிகளை அறியாதவன். ஆயினும் நான் மேலே கூறியுள்ள அமைப்பில் பிற பகுதிகளில் இருப்பின் அன்பர்கள் தெரிவிக்கலாம். ஆனால் நமது அன்பர்கள் மௌனம் காத்து கடந்து செல்வார்கள். அவர்கள் நமக்கென்ன? என்றே எண்ணும்  த்ரிகாலஞானிகள்.

போகட்டும்

இன்றைய நமது பதிவு  திருமோகூர் எனும் வைணவ திவ்யதேசம் பற்றியது. மிகவும் பழமையான திருக்கோயில். எவ்வளவு பழமை என்றால் இக்கோயிலை வடிவமைத்ததே 'விஸ்வகர்மா' எனும் தேவ கலைஞன் தான் எனப்படுகிறது. மேலும் இக்கோயிலுக்கென்றே அமைந்த திருக்குளம்,  திருப்பாற்கடல் குளம் என்ற புராண மகத்துவம் கொண்டது. ஆம், தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து வரவழைத்த அமுதத்தின்    ஒரு துளி பூமியில் வீழ்ந்த இவ்விடமே திருமோகூர் கோயிலின் குளமாக திருப்பாற்கடலின் குளமாக  கோயிலின் வடக்கு பகுதியில் பெரும் விஸ்தார தடாகமாக எண்ணற்ற தாமரை மலர்களுடன் அமைந்திருப்பது கண்கொள்ளாக்காட்சி. நம்மாழ்வார் முக்திபெற்ற ஸ்தலம் என்ற பெருமை கொண்ட ஊர் . நம்மாழ்வார் , திருமங்கையாழ்வார் இருவராலும் மங்களாசாசனம் செய்விக்கப்பெற்ற தலம் இது 

இவை ஒரு புறம் இருக்க இத்திருக்கோயில் பலவகைகளிலும் புகழ்மிக்கது. எங்கோ ஒரு கிராமத்தில் அமைந்திருந்தாலும் பக்தர்கள் கூட்டம் எப்போதும் இத்தலத்திற்கு வந்தவண்ணம் இருப்பதைக்காணலாம். எவ்வளவோ பிரம்மாண்ட பெருமாள் கோயில்கள் இருப்பினும் அவற்றில் இல்லாத அமைதியும் தூய்மையும் இக்கோயிலின் தனிச்சிறப்பு..   மனித சஞ்சாரம் என்பது பக்தர்களால் மட்டுமே.

மற்றபடி ஒரு சில பட்டர்கள், பூ வியாபாரம் செய்வோர் என கோயிலின் கிழக்கு வாயிலில் அமைந்துள்ள கோயில் சார்ந்த மனிதர்கள் சிலரோடு இந்தஊர் என்ற அமைப்பை வர்ணிக்கலாம். ஏனைய விவசாயக்குடிமக்கள் பிற பகுதிகளில் இருப்பார்கள். சமீப காலமாக இப்பகுதி நோக்கி குடியிருக்க வருவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு பெருகி வருவதைக்காணலாம்.

இக்கோயிலின் மற்றுமோர் குறிப்பிடத்தக்க அம்சம் அனைத்து சன்னதிகளிலும் அலங்காரம், ஆபரணம், புழங்கும் பாத்திரங்கள் அனைத்தும் ஜொலித்துப்பாளபளக்கும் நிலையில் பராமரிக்கப்படுவது. எத்துணையோ நல்ல வருமானமுள்ள கோயில்களைக்காட்டிலும் இந்த அலங்காரகம்பீரம் இத்தலத்திற்கு மேலும் பெருமை சேர்க்கிறது என்பது அடியேனின் தாழ்மையான கருத்து. இங்கே அமைந்துள்ள அனைத்து தெய்வசந்நிதானங்களுமே தத்தம் வழியில் பெருமை மிக்கவை. அனைத்து தெய்வங்களும் வரப்ரசாதிகள்.கடந்த 15 -20 ஆண்டுகளில் இத்திருத்தலம் பெரும் ஈர்ப்பு பெற்றுள்ளதை நான் கண்கூடாக உணர்ந்துள்ளேன். பெரும் அமைதி , சந்தோஷம்,  மன அமைதி இவை அளவின்றி கிடைக்கும் தலம் இது என்று அனுபவபூர்வமாக சொல்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறையேனும் சென்று வாருங்கள் எனது பார்வையின் நியாயம் புரியும்.

இத்திருக்கோயிலின் மூலவர் சுவாமி காளமேகப்பெருமாள் என திருநாமம் கொண்டவர். இவர் மோஹினி அவதாரம் கொண்டு அசுரர்களை வீழ்த்தியவர். அவர் இருந்து அருள்பாலிப்பதால்  இவ்விடம் , திருமோகூர் என்றாயிற்று என்பவர் உளர். உண்மையில் இது மோஹினி அவதார நாயகன் தலம் என்பதால் திரு மோகனூர் என்ற பெயர் மருவியதாக சொல்வோரும் உளர். எப்படியோ மூலவரின் பெயரைத்தழுவாமல் உற்சவர் மோகனூர் ஆப்தன்  /மோகூராப்தன் என்று புகழ் கொண்டவர். வேண்டுகோளை விரைந்து நிறைவேற்றி பக்தர்களின் துயர் தீர்க்கும் நண்பன் என்பதால் ஆப்தன் என்று பெயர்கொண்டுள்ளார்.

மூலவர் காளமேகப்பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். சன்னதியில் நின்றாலே பரவசம் தோன்றும் வசீகரமான தெய்வம் [மோஹினி அவதாரமல்லவா?] இங்குள்ள பட்டர்கள் முழு கவனத்துடன் செயல் படுவது குறிப்பிடப்படவேண்டிய ஒன்று.

தாயார் சன்னதி மூலவர் சந்நிதத்திற்கு வெளியே தெற்குப்பகுதியில் அமைந்து அருள்பாலிப்பது நல்ல அமைப்பில் அமர்ந்த மோஹனவல்லித்தாயார் . ஒரே ஒரு நாள் மட்டும் சன்னதிக்கு வெளியே எழுந்தருள்வார் . ஏனையே தினங்களில் சன்னதியில் மாத்திரமே உறைபவர் எனவே 'படிதாண்டாப்பத்தினி' என்ற கௌரவ நாமமும் இவருக்கு உண்டு. இவரும் கண்கண்ட தெய்வம் எனப்பெயர் பெற்றவர்.. தாயார் சன்னதியின் நேர் பின்புறம் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது                       ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சன்னதி.. கிட்டத்தட்ட திருமோகூரின் முக்கிய தெய்வமே சக்கரத்தாழ்வார் தானோ என்னும் அளவிற்கு பிரசித்தி பெற்றவர். 16 திருக்கரங்கள் ஒவ்வொன்றிலும் ஆயுதம் தாங்கிய சுதர்சனாழ்வார்    ஸ்ரீ நரசிம்மருடன்   உறையும் மஹாஜ்வாலா மூர்த்தி, பெரும் சக்திகொண்ட வரப்பிரசாதி .

சனிக்கிழமைகளில் குவியும் பக்தர் கூட்டம் 99% சக்கரத்தாழ்வாரின் பக்தர்களே எனில் உண்மை. இப்படி பல பெருமைகள் கொண்ட திருத்தலத்தில் கோயில் வளாகத்தினுள் வடக்குப்பகுதியில் ஆண்டாள் நாச்சியாருக்கு பிரத்தியேக சன்னதி உண்டு. இவற்றை விளக்கும் வீடியோ 3 உள்ளது. அதில் சக்கரத்தாழ்வார் குறித்த விவரங்கள் வெகுவாக விளக்கப்பட்டுள்ளன. கவனமாக பார்த்து பயன் அடைவீர். இணைப்புகள் இதோ

 

https://www.youtube.com/watch?v=WnYrNShHt58 thirumohoor

https://www.youtube.com/watch?v=NmlRubpv9Rs  Thirumohoor [INFORMATIVE VIDEO]

https://www.youtube.com/watch?v=tiwC-RRyKng  mohur

நன்றியுடன்      அன்பன்

அன்புடையீர்

                                                                             அறிவிப்பு

வாரம் 2 நாட்களில் பதிவுகளே இல்லை. ஏதாவது எழுதலாமே என்று சிலர் கேட்டுக்கொண்டே இருந்தனர் .     ஆம் 'சிலர்' தான்.

எழுதி என்ன ஆகப்போகிறது.? ஆவது ஒன்றுமில்லை. படிப்பவர் உளர் , படிக்காமலே உளர் பவர் சிலர், படித்தேன் இன்னும் படிக்கவேண்டும் என்ற சமாளிப்புகளுக்கு   பஞ்சமில்லை. படித்து விட்டு புரிந்ததை வைத்துக்கொண்டு 'உனக்கு கற்பனை வறண்டு விட்டது [அதாவது மண்டை வறண்டவன் என கான்வகேஷன் [convocation]  நடத்தாமலேயே பட்டம் தரும் துணை வேந்தர் பெருமக்கள் இங்கு உண்டு. எதுவாயினும் மண்டை வறண்டவன் வேறென்ன செய்வான்? 

மீள் பதிவு என்றொரு செயல்பாடு தமிழ் மக்கள் வாழ்வியல் நடை முறையில் மறுக்கவொண்ணாத ஒரு பதிப்பு உத்தி எனில் பிழையே அல்ல.

எண்ணற்ற நாடகங்கள், டி வி என்ற ஊடக த்தில் திரும்பத்திரும்ப அரங்கேறும் ஆனாலும் பார்ப்போர் பார்த்துக்கொண்டே இருப்பதில்லையா? அவ்வளவு ஏன்  'பொன்னியின் செல்வன்' எத்துணை முறை அச்சேற்றியாயிற்று ? அதனல்   . 'அரைத்த மாவை மீண்டும் மீண்டும் அரைக்கலாம்' எனவே இனி செவ்வாய்க்கிழமைகளில்  'மீள் பதிவு   இடம் பெறும்.  .

ஆனால் நான் சற்று மாறு பட்டவன். அரைக்கும் மாவு ஆரோக்கியத்திற்கு உதவட்டும் என்றெண்ணுபவன். எனவே பொதுவாக நல்ல பலன் தரும் மற்றும் அறிவுசார் கருத்து பகிர்வது நல்லது என்பதனால் ஒரு உயர் அணுகுமுறையில் முன்னம் வெளிவந்த வாக்சின்கள் [VACCINES ] இடம் பெற இருக்கிறது. படித்து மறந்தவர் . மீண்டும் நினைவு கூற உதவும். புதிதாய் வந்துள்ள பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல  வாய்ப்பு  .

               செவ்வாய் [23-06-26] முதல் மீண்டும் வாக்சின்கள் [VACCINES ]

நன்றி    அன்பன்   

No comments:

Post a Comment

Madurai -15

  Madurai -15 மதுரை -15 திருமோகூர் மதுரையின் எண்ணற்ற பெருமைகளில், அந்நகரைசுற்றியுள்ள திருத்தலங்களுக்கும் ஒரு சிறப்பிடம் உண்டு ....