Friday, September 25, 2026

I PERCEIVED THE SONG

 I PERCEIVED THE SONG

பாடலை உணர்ந்தேன்

ஒரு பாடல் முதல் முறை கேட்டதுமே நம்மை பிடிக்கும் பின்னர் பீடிக்கும் . அதுபோன்ற பாடல்களை தரும் இசை அமைப்பாளர்கள் ரசிகர்களை வசீகரிக்கிறார்கள். இதிலென்ன வியப்பு இருக்கிறது என்கிறீர்களா ? நிச்சயம் வியப்புதான். ஆம் 1964 ம் ஆண்டு தமிழ் சினிமாவின் பொற்காலம் -திரைக்கதையில், நடிப்பில், தொழில்நுட்ப வசதிகள் குறைவு ஆனால் படக்காட்சிகளில் நளினமும் கம்பீரமும் 'பிரம்மாண்டம்' என்ற பெருமைக்குரிய வகை சார்ந்தவை. அந்த ஆண்டில் 36 தமிழ் சினிமாக்கள் களம் கண்டன. ஒவ்வொன்றிலும் 6 முதல் 8 பாடல்கள் சிலவற்றில் 12 -14 பாடல்கள். இன்று போல் படத்திற்கு 3 பாடல் 4 பாடல் உருவாக்கிவிட்டு நான் 1200 படங்களுக்கு இசை அமைத்தேன் என்ற 'மார் தட்டல் ' இல்லவே இல்லாத காலம்

படத்திற்கு 6 பாடல் என கணக்கிட்டால் சுமார் 800 படங்களுக்கு அன்று இசை அமைத்த எவரும் 1200 படங்களின் 4800 பாடல்களை உருவாக்கிய பெருமைக்கு சற்றும் குறைந்தாரில்லை. மேலும் அவர்கள் முற்றிலும் மனித முயற்சியில் கருவிகளை இசைத்து சிறிதும் பிழையின்றி பாடல் பதிவிட எவ்வளவு உழைத்திருப்பர். கம்பியூட்டர் , கட் , பேஸ்ட் , பஞ்ச் என்று வெட்டி ஒட்டும்  பின்னாளைய செயலும் தொழில் நுட்ப தாங்கலும், மனித முயற்சியும் -  சமமா ?  சரி காலப்போக்கில் முன்னேற்றம் ஏற்படுவது செயலை வேகப்படுத்தும் ;  கற்பனையையும் , பாடலின் ஆழ்ந்த உணர்வுகளையும் வலுப்படுத்துமா எனில் இல்லை என்றே எண்ண த்தோன்றுகிறது. எனவே ஒரு பாடலை பல கோணங்களில் ஆழ்ந்து நோக்க வேண்டியிருக்கிறது.

அப்படி ஒருமுயற்சியில் இறங்கினால் ஒரே ஆண்டில் [1964] 14 படங்களுக்கு மெல்லிசை மன்னர்களின் இசை. அவை வெவ்வேறு கதை, காலம் ,களம்,  உணர்வு சூழல் கொண்டிருப்பினும் ஒவ்வொன்றிற்கும் பொருத்தமான இசை, வடிவம், குரல் தொகுப்பு அனைத்திலும்  முழு கவனம் வியாபித்திருந்ததை கவிதையும் இசையும் பறைசாற்றிய நாட்கள் அவை. அப்படி விளைந்த நல் முத்துக்களில் ஒன்று 'கர்ணன்' படம் . 14 பாடல்கள் , 3 நாட்களில் எழுதி ட்யூன் அமைக்கப்பட்டு தயாரான வெற்றிப்பாடல்கள் அவை. படம் கிருஷ்ணர் பூமியில் நிகழ்ந்தது என்பதால் வட புலத்து இசைக்கூறுகளும் கருவிகளும் பாடல்களுக்கு வலுவும் சிறப்பும் சேர்த்தன எனில் மிகை அல்ல. பிரத்தியேக கருவிகள் சந்தூர், சாரோட் , ஷெனாய் இவற்றை  கையாள மும்பை திரையுலக கலைஞர்களை வைத்து இடை இசை கட்டமைத்தவர் எம் எஸ் வி. அவற்றுள் இன்றைய தேர்வு

"கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே". விரகதாபம் மிளிர்ந்த கவிதை கவி அரசரின் சொல்லாடலில்  . சொல்லில் தோன்றும் நளினம் கண்ணதாசனுக்கே அமைந்த திறன்

கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே [காதலில் வீழ்ந்ததை உணர்த்தும் சொற்கட்டு ]

கண்டபோதே சென்றன அங்கே [காதலின் தீவிரம் அது]

என்று பாடல் துவக்கத்திலேயே பெண் மனம் பேசுகிறது

மேலும் பாருங்கள்

இனமென்ன , குலமென்ன குணமென்ன அறியேன்

ஈடொன்றும் கேளாமல் என்னை அங்கு கொடுத்தேன் [உள்ளம் பறிபோனதை சொல்லும் கவி]  எங்காவது பொருந்தாத சொல்லோ தரக்குறைவான பொருளோ தோன்றுகிறதா ? அதுதான் கவித்துவம்

அந்த உணர்வுகளைப்பிழிந்து வடித்த குரல் பி சுசீலா . நீட்டி முழக்கிப்பாடவும், நெடிய ஆலாபனைகளையும் ஸ்வரம் பிசகாமல் கோரஸில்  இனைந்து ஒலித்து , பின்னர் வெளியேறி தன்னிலைக்காத்துப்பாடவும் அவரன்றி வேறு யார்? இந்தப்பாடலின் ஜ்வலிப்புக்கு  அந்த குரலும் ஆலாபனையும் மூலதனம் என்றால் தொடர்ந்து நிழல் போல் வந்த இசைக்கோர்வைகளும் 62 ஆண்டுகளுக்குப்பின் இன்றும் கூட எவராலும் செயல்படுத்தவொண்ணாத இசை சாம்ராஜ்ஜியம். ஆம் பாடலின் போக்கும் , ஏற்ற இறக்கங்களும் , ஊற்றெடுத்துப்பாயும் கோரஸ் ஒலிகளும் , அவற்றிற்கு அணி சேர்க்கும் சித்தார், . சந்தூர், குழல், தபலா நீண்ட ஒலி வீச்சு ஷெனாய் என அனைத்தும் குழப்பமும் சஞ்சலமும் இன்றி பயணித்த பங்கினை என்னென்று சொல்ல?  இவை அனைத்தையும்  தாண்டி  சோகத்தையும் சுகத்தையும் ஒரே நூலிழையில் பிணைத்த இசைவிந்தையை வர்ணிக்க சொல்லும் ஞானமும் அடியேனுக்கில்லை.. எனினும் மிகச்சிறப்பான தன்னிகரில்லா இசைக்காவியம் இது என்று என்னால் சொல்ல முடியும்.  இது போன்ற பாடல்களைக்கையாளும்  வல்லமை அன்னை கலைவாணியின் அருள்பெற்ற மானிடர்க்கே கைகூடும் . பாடலின் ஒவ்வொரு நகர்விலும் இதை உணரலாம். நான் உணர்ந்தேன் பிரமிக்க வைக்கும் பெண் மன உணர்வுகள், அதை கட்டமைக்கும் ஸ்வரக்கூட்டுகள், உணர்வினைக்காட்டும் உயர்நிலை சஞ்சாரங்கள் என பல மென் உணர்வுகளின் பிரதிபலிப்பு இப்பாடல். இப்பாடல்நெடுகிலும்  வரும் சொற்கள் அனைத்தும் உணர்ச்சிக்குவியல் தான் அவற்றிற்கு உயிரும் உரமும் தந்தது எம் எஸ் வி யின் அனாயாச ஹிந்துஸ்தானி பாணியில் அமைந்த ட்யூன் , பாடும் போதே அவ்வப்போது உச்சஸ்தாயில் சஞ்சரித்து வான் பறவை போல் ஆடி ஊர்ந்து தவழ்ந்து கீழிறங்கி நம்மை தன்னோடு ஐக்கியப்படவைக்கும் இசை நுணுக்கம் எம் எஸ் வியின் சிறப்பு முத்திரை என்பது அடியேனின் பார்வை. அது இப்பாடலில் விரவிக்கிடப்பதை நன்கு உணரலாம்   எனவே இப்பாடலை  இங்கே பதிவிடுகிறேன். பாடலுக்கான இணைப்பு

https://www.youtube.com/watch?v=1_6asN_lz9o  kangal enge  kd v r , ps

இதே பாடலின் பன்முகத்தன்மையை சுபஸ்ரீ அவர்களின் விளக்கம் மற்றும் இசை க்கோலங்கையும் விளக்க வல்ல வீடியோ இணைப்பு கண்டு மகிழ்வீர்    https://www.youtube.com/watch?v=atYGwpXxXHs&t=14s  karnan 1964 qfr

நன்றி அன்பன் ம வ

 

No comments:

Post a Comment

I PERCEIVED THE SONG

  I PERCEIVED THE SONG பாடலை உணர்ந்தேன் ஒரு பாடல் முதல் முறை கேட்டதுமே நம்மை பிடிக்கும் பின்னர் பீடிக்கும் . அதுபோன்ற பாடல்க...