Tuesday, September 27, 2022

குருவாயூரில் பறவைக்கரசு - VI

                         குருவாயூரில் பறவைக்கரசு   - VI

லேசருக்கு தூக்கம் கண்ணில் இறங்க மறுத்தது. நைசா தன்னையும் 'மாமி' என்று சொல்லிவிட்டாளே என்று குமைச்சல். அவளின் மனசாட்சி சொன்னது " நீ ஏன் தேவை இல்லாமல் அவளை இரண்டொருமுறை 'மாமி மாமி' என்று நீ ஏதோ சின்னவள் மாதிரி சொல்லிஅவளை இந்த நிலைக்கு தள்ளி விட்டு இப்போது புலம்பி என்ன? ஒன்று தெரிந்து கொள் -ஸ்ரீரங்கம், தஞ்சாவூர், காஞ்சீபுரம் மற்றும் தெற்கத்தி மாமிகள் உங்களை எளிதாக புரட்டிப்போட்டு விடுவார்கள். அந்த அம்புஜம் எவ்வளவு எளிதாக 'உனக்கும் வயசு கம்மி இல்லடி  என்று செல்லமாக கன்னத்தில் அறைந்துவிட்டாள் பார் . அது தான் ஆழம் தெரியாம காலை விடாதேன்னு சொல்லிருக்கு என்று அவளுக்கு Moral class நடத்தியது மனம். .லேசரும், டெல்லியும் லௌகீக மாமிகளிடம் செல்லுபடி ஆகாது, வலிக்காம உலக்கையால இடிப்பாங்க உள்ளூர ரணம் வந்துரும். இவ்வளவும் தனக்குத்தானே உணர்ந்து புரிந்து  கொண்டாள், அப்படியே உறங்கி விட்டாள்; 

மணி 2.00 வேதாந்தம் குளித்துவிட்டு, வித்யாவை உலுக்கி எழுப்பி, குளி என்றான், உடனே பல் துலக்கி குளித்து, புடவையில் லேசர் . சும்மா சொல்லக்கூடாது லேசருக்கு புடவை அற்புதமாக பொருந்தியது. புடவையின் வசீகரம் அதை அணியும் நேர்த்தியில் இருக்கிறது என்று உணர்த்தும் பெண்களில் வித்யா தனித்துவம் உடையவள் எனில் மிகை அல்ல. வித்யா அசப்பில் ஹேமமாலினி என்பது சற்று குறைவு.கிட்டத்தட்ட ஹேமமாலினியே தான். ஹேமமாலினி சாரி,  வித்யா  வெளியில் வந்ததும்  அம்புஜம் ஓடி வந்து ஏ உனக்கு புடவை ரொம்ப நன்னா இருக்கு என்று திருஷ்டி கழிப்பது போல் முகத்துக்கு நேரே கைகளைக்காட்டி , விரல்களை மடக்கி கன்னத்தில் வைத்து பட பட பட என்று விரல் முறித்தாள். வித்யாவுக்கு புரிந்தது அம்புஜம் வன்மம் இல்லாதவள், 

வம்பிழுத்தால்  வார்த்தையாலேயே  தொலைத்துவிடுவாள்.இப்படிஎண்ணிக்கொண்டே வந்தவளுக்கு இப்போது கோயில் கியூவில் இருக்கிறோம் என்று புரிந்தது .நிர்மால்ய தரிசனம் முடிந்து வந்தால் இன்னும் இருள் விலகவில்லை. லேசான தூறல் வேறு

கழுகுகளுக்கு காபி நினைவுக்கு வந்தது. வேதாந்தம் சொன்னான்- இது என்ன தமிழ் நாடா கூட்டம் வருவதை பொறுத்து காபி கடை திறக்க. அதெல்லாம் நம்மூர்ல தான் ராத்திரி 3.00 க்கு கூட BUS STAND ல காபி, டீ    கிடைக்கும். வேற எல்லா ஊரும் சோம்பேறிகள். 6..00 மணிக்கு கொறஞ்சு திறக்கவே மாட்டான். கொஞ்ச நேரம் தூங்கிட்டு வருவோம் வேற வழியில்லை, முனகிக்கொண்டே ரூமில் வந்து மீண்டும் தூக்கம்.   பெரிய கழுகுக்கு காபி குடைச்சல் 5.30 ஆகிறதே என்று ஆவலுடன் கீழே இறங்கி, INDIA COFFEE HOUSE இல் எட்டிப்பார்த்தான் ஒரே இருட்டு. காப்பியாவது பீப்பியாவது என்று முகம் சோர்ந்து திரும்பினான். 

வராண்டா வில் அமர்ந்து குருவிகளின் கீச்கீச் கீச் குரலை ரசித்தான். மணி 6.10 மெல்ல இறங்கி எட்டிப்பார்க்க, INDIA COFFEE HOUSE திறந்திருந்தது. உயிர் வந்தவனாக ஓடி சூடாக ஒரு காபியை ருசித்தான். அவர்களும் வந்ததும் இன்னொரு ரவுண்டு பாத்துருவோம் என்று எண்ணிக்கொண்டான்.  

6.40க்கு எல்லோரும் கீழே இறங்கி காபி, டீ முடித்து, மீண்டும் ஸ்ரீவேலி பார்க்க புறப்பட்டு போய் அற்புதமான சேவை, சன்னதியிலும்,பிராகாரத்திலும். ராமக்ரிஷ்ணா ஹோட்டலில் புட்டு, கடலை டிபன், காபி  / டீ. 2 நாளில் சர்வர் நன்கு பழகிவிட்டார். தெரிசனம் ஆயோ என்றார். இவர்கள் தலை ஆட்டிக்கொண்டே மத்தியானம் சாப்பாடு என்றதும், 11.00 மணி என்றார். இரவு தான் ரயில் வேறென்ன பார்க்கலாம் என்று பேசிக்கொள்ள சர்வர் 'புன்னத்தூர் கோட்டா கண்டோ’ என்றார். அங்கென்ன என்றனர், ‘ஈ அம்பலத்திண்டே ஆனகளு அவடதன்னே தாமசம் ஒரு 65 எண்ணம் இரிக்கும்,     ‘அதே ஆனகொட்டாரம்’ என்று புரியவைத்தார். அதை மத்தியானம் பார்ப்போம். முதலில் காலையில்  தன்வந்திரி சேவிக்க ஆட்டோவில் நீண்ட பயணம் 45 நிமிடம்.. தன்வந்திரி யில் 10 பேர் தான் கூட்டம். வெண்ணைக்காப்பு சேவை, ரூபங்ஙள் எனும்  [உருவாரம் -கை  கால், வயிறு , கண் , அமிர்த கலசம் என்று எல்லாம் சமர்ப்பித்து] வேண்டுதல் வைத்து , உடல் உபாதைகளைப்போக்கு என்று வேண்டி, நிறைவான சேவைக்குப்பின்  மீண்டும் ஆட்டோவில் 40 நிமிட பயணம் , வழியில் பச்சைப் பசேல் இளநீர் வயிறு முட்ட பருகி ஏவ் என்று ஏப்பம் விட்டு குருவாயூரில் இறங்கும் போது மணி 11.40. 

ராமக்ரிஷ்ணா ஹோட்டலில் சாப்பாடு.12.45க்கு அம்புஜத்துக்கு இந்த சாப்பாடு பரவாயில்லை என தோன்றியது. சாம்பார் சாதம் ஆயிற்று; ரசம்எங்கே? வழக்கமான கிண்ணங்களைக்காணோம். இருந்த ஒரு கிண்ணத்தில் பாயசம். பொறுக்க மாட்டாமல் ரசம், மோர் கிடையாதா ? என்றாள் அம்புஜம். அடுத்த டேபிளில் இருந்த விஸ்வநாதன் [சர்வர்-தமிழர்] இரண்டு ஜக்குகளை   காட்டி இதோ என்றார். இது தீர்த்தம் இல்லையா? என்றாள் அம்புஜம்.  “மாமி அது தூத்தம் இல்லை” என்றார் சர்வர், திறந்து பார்த்தால் ஒன்றில் ரசம் மற்றதில் நீர்க்க , இஞ்சி, கொத்துமல்லி யுடன் மோர் . ஒரு பிடி பிடித்தனர் அம்புஜமும் வித்யாவும். [ஐயங்கார்களுக்கு நாக்கு கொஞ்சம் நீளம் தான் -சாப்பாட்டிற்கும் / பேச்சுக்கும்]

மதியம் சாப்பிட்டு ஓய்வுக்குப்பின் யானைக்கொட்டாரம் பார்க்க கிளம்பியாயிற்று. சிறுவன் முதல் கிழவன் வரை என வெவ்வேறு வயது, சைஸ் களில் யானைகள் இயற்கை சூழலில் சுமார் 63 யானைகள், நல்ல அனுபவம்   

வேதாந்தம் மாலை செஷன் என்று கிளம்பினான். வித்யா அவனை அனுப்பி விட்டு சிறிது கண் மூடி ஓய்வெடுத்தாள்  . சரி காப்பி/ டீ முடித்து மாலை ஸ்ரீவேலி  போகலாம் என்று பிறரை எழுப்பத்தலைப்பட்டாள்  வாய் வரை வந்து விட்ட 'மாமி' யை அடக்கிவிட்டு , ஹலோ என்றாள், வித்யா.  அம்புஜம், வா வா என்றாள் . மீண்டும் ஸ்ரீ வேலி தரிசனம், மனமின்றி வெளியே வந்தனர். இரவுக்கு ராமக்ரிஷ்ணாவில் சப்பாத்தி மற்றும் கேரளத்து SIDE DISH . இரவு 8. 50 . வேதாந்தம் " நீங்க ரயிலுக்கு போங்கோ, நாங்க ரெண்டு பேரும் த்ரிசூர் போரோம்.

மிகுந்த வாஞ்சையுடன் கனத்த மனதுடன் விடை பெற்றனர். கழுகுகள் ரயிலில் தூங்கி விட்டனர். அரை குறை உறக்கத்தில் டிக்கெட் செக்கிங் ஆயிற்று. கண்விழித்தால் நாகர்கோயில் ஜங்ஷன்.டீயுமில்லை காபியுமில்லை. 7.30 மணிக்கு நெல்லை . மணியாச்சியில் நல்ல டிபன் கிடைக்கும் இன்னும் முக்கால் மணியில் என்றனர். வாஞ்சி மணியாச்சியில் அற்புதமான ருசியான சட்டினி சாம்பாருடன்   4 இட்லி 1 வடை, அல்லது  3 பூரி மசால் வகையறா பாக்கெட்  ரூ 25/- ஒருமணி நேரம் நின்று கிளம்பி மதுரை வழியே ஸ்ரீரங்கம் போகும்போது மணி 2. 20 மதியம். 60/- ரூபாய் ஆட்டோக்கு வீடு போக. முன் பின் பார்த்திராத குருவாயூரில் மனம் லயித்துப்போய் மீண்டும் எப்போ போகலாம்? க்ரிஷ்ணனுக்கே வெளிச்சம்.                   

                                       நான் விளக்க வேண்டியது

அது என்ன பறவைக்கரசு? தென் தமிழ் நாட்டில் பக்ஷி ராஜன்' என்னும் வடமொழிப்பெயரை தூய தமிழில் பறவைக்கு அரசு [பறவைக்கரசு] = கிருஷ்ண பருந்து, [கருடன் [கழுகு ] என்பர். நம்ம கழுகு குருவாயூரில் உலவும் காட்சிகளை களப்படுத்த குருவாயூரில் பறவைக்கரசு என்ற பெயரில் எழுதலாம் என்று தோன்றியது. அன்பர்கள் ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இனிமேலும் கழுகு கழுகு என்று சொல்லிக்கொண்டிருந்தால்  வண்டி ஓடாது.  பார்ப்போம்  குருவாயூரப்பன் வழி காட்டுவான்.             

                                           முற்றும்           நன்றி.  பேரா. ராமன்       

2 comments:

SRIRANGAPATNA

  SRIRANGAPATNA Curiously, the name has no association with either Srirangam of Tamilnadu or Patna of Bihar; in its own right –it is Srira...