Friday, November 11, 2022

பெரும் மனங்கள் /ஆளுமைகள்- 4

                   பெரும் மனங்கள் /ஆளுமைகள்- 4

நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் அரங்கேறிய பல புதுமைகளில் மிகுந்த வியப்பளித்த புதுமை க்ளைமாக்ஸ் எனப்படும் உச்ச கட்ட இறுதிக்காட்சி---- பாடல் வாயிலாகவே பதிவிடப்பட்டு ,வசனங்கள் இல்லாமல் உணர்ச்சி சிறிதும் தளராமல் நிறைவேற்றப்பட்டமை அன்றைய புதுமை. ஏனைய சோகப்பாடல்களுக்கு சிறிதும் குறையாத சோக ரசம்         "  ஒருவர் வாழும் ஆலயம்" பாடல். கவிஅரசின் ஆழமான சொற்களுக்கு செவி அரசர் அமைத்திருந்த இசைப்பண்புகள் இதயம் பிழியும் திறன் உள்ளவை. அதிலும் குறிப்பாக கோரஸ் எனப்படும்சேர்ந்திசை வழங்கிய சோகம்  சோகத்தில் ஒரு சுகம் என்ற வகை கொண்டது. 1960 களில் கிளைமாக்ஸ் பகுதி வசனங்களின் பேராதிக்கமாக உலவி வந்த நிலையில், நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தின் இறுதிக்காட்சி; இழந்துவிட்ட மகனுக்கு இடுப்பளவு சிலையை தாயே திறந்து வைக்கும் அவலம். நோயாளிகள் பிழைத்து நிற்க, பிழைக்க வைத்தவன் மறைந்துவிட்ட நிலையில் கணவன் -மனைவி வாழ்ந்ததும், காதல் நினைவில் உழன்று காதலன் மட்டும் வீழ்ந்ததும் மாறுபட்ட கற்பனை.   இப்படி தமிழ்த்திரையின் சில எழுதப்படாத விதிகளை மாற்றி எழுதிய அசுரக்கூட்டம் மீண்டும் ஒரு விஸ்வரூபம் எடுத்தது -அன்றிலிருந்து இன்று வரை பேசப்பட்டுவரும் வண்ணக்காவியம் "காதலிக்க நேரமில்லை" . வாயிலாக. இந்தப்படம் குறித்த பல தகவல்கள் சுவாரஸ்யமானவை என்பதோடு, நுணுக்கமாக அறிய மற்றும் ஆராயப்படவேண்டிய உண்மை, --- எவ்வளவு எளிதாக தமிழகத்தைப் புரட்டி போட்டுவிட்டனர் இந்தக்குழுவினர் [சித்ராலயா நிறுவனம்].

இந்தப்படம் ஆளுமைகளின் களஞ்சியம் அல்லது LIBRARY அல்லது SHOW CASE  -என்றே சொல்லலாம். நான் அறிந்தவற்றை இதோ தொகுத்துத்தருகிறேன் ஊன்றிப்படியுங்கள், ஊறித்திளையுங்கள் ..

பண முதலீடு நீங்கலாக பல "முதல்" கள்  "காதலிக்க நேரமில்லை" படத்திற்கு உண்டு.

1 அது வரை காதல் முக்கோணம் சார்ந்த கதைகளை வழங்கியவர்கள் முதன் முதலில் முழு நீள வண்ணப்படம் என்று கோதாவில் இறங்கியது இப்படத்தில் தான். ஏன் 'தேன் நிலவு' கூட ஒரு எளிமையான light subject என்போருக்கு எனது பதில் : அந்தப்படம் காஷ்மீரில் எடுத்திருந்தது எனினும் முழு நீள நகைச்சுவையும் வண்ணமும் கை கோர்த்தது "கா நே"  யில் தான்.

2 இப்படத்தின் கதை க்கருவும் , சில காட்சிகள் பற்றிய விவாதமும் உருவான இடம் சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகில் [விவாதித்தோர் ஸ்ரீதரும் கோபு என்று அறியப்படும் திரு. சடகோபன் அவர்களும்] கோபு அவர்கள் விளையாட்டாக குறிப்பிடுவது - கதைக்கு ரூம் போட்டு யோசிக்கிறார்கள் . நாங்கள் காற்றாட உட்கார்ந்து பேசி உருவாக்கிய சப் ஜக்ட்  "கா நே" என்பார்

3 சென்னையின் முதல் வண்ணப்படம் என்ற பெருமை "கா நே "க்கு உண்டு. தமிழில் அதற்கு முன்பே வண்ணப்படங்கள் இருந்தன எனினும் சென்னை ஜெமினி வண்ணக்கூடத்தில் PROCESS மற்றும் PRINT செய்யப்பட்ட முதல் படம். சமகாலத்திய அநேக படங்கள் பம்பாய் FILM CENTRE வழியே வெளிவந்தவை..தனது  முதல் வண்ண படத்தினை ஜெமினி நிறுவனத்தின் முதல் வண்ண உருவாக்கமாக வெளிக்கொணர்ந்த முதல் தயாரிப்பாளர் ஸ்ரீதர் .

4 நடித்தால் கதா நாகியாகத்தான் என்று "தவக்கோலம்" பூண்டிருந்த சச்சுவை நகைச்சுவை பாத்திரத்தில் களமிறக் கிய  முதல் படம் "கா.நே " தானே .[ உபாயம் மற்றும் உபயம் திரு கோபு அவர்கள்]

5 தமிழில் விமானப்பணிப்பெண் ஒருவர் [ காஞ்சனா] நடிகையாக அறிமுகமும் "கா, நே" இல் தான்

6 ஒரு இளம் புதுமுகம் திரு ரவிச்சந்திரனின் அறிமுகமும் இதே படத்தில் தான்.

7 பெரும்பாலும் வில்லன் பாத்திரங்களை ஏற்று நன்கறியப்பட்ட பாலைய்யா முதலில் முழு நேர நகைச்சுவை வேடம் பூண்டதும்  இதே படத்தில் தான் .

8 நம் எண்ணத்தில்  உயர்ந்து நிற்கும் ஒளிப்பதிவாளர்கள் வின்சென்ட்-சுந்தரம்  முதல் படத்திலேயே வண்ணத்தில் முத்திரை பதித்ததும் இதே படத்தில் [கா நே இல் ] தான்.

9  மொத்தம் எட்டு பாடல்கள் வெவேறு வகை இசைக்கோலங்களால் ஆனவை எட்டும் வெற்றி ஈட்டியது மட்டுமல்ல யேசுதாஸ் அவர்களை பெரும் அளவு புகழுக்கு உயர்த்திய பாடல்கள் 2 இதே படத்தில் தான்  கண்ணதாசன், விஸ்வநாதன் -ராமமூர்த்தி   கூட்டணியின் மற்றுமோர் மெகாஹிட் இப்படம் வழங்கிய பாடல்கள்

10 தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் வெள்ளிவிழா [சில்வர் ஜூபிலி =25 வாரம்] மட்டுமல்ல பலரும் பலமுறை பார்த்தபின்பும் இப்போதும் அலுக்காமல் சலிக்காமல் அமர்ந்து பார்க்க விழையும் ஒரு அபூர்வ திரைப்படம் " கா. நே" பல ஆளுமைகளை இன்றும் வெளிச்சம் போட்டு காட்டுவது இப்படத்தின் பெருமைக்கு சான்று .

 https://www.youtube.com/watch?v=MhnRf4eMZrA= ஒருவர் வாழும் ஆலயம்"

https://www.youtube.com/results?search_query=kadhalikka+neramillai+songs+original+= k.neramillai

மேலும் வரும்             பேரா. ராமன்

1 comment:

  1. நான் நெஞ்சில் ஒர் ஆலயம் , காதலிக்க நேரமில்லை இந்த இரண்டு படங்கள் தவிர தேன் நிலவு படத்தை தங்க வேலுவுக்காகவும் பார்த்து மகிழ்ந்த காலம் . இப்போது எந்த ஒரு திரை படமும் நான் பார்ப்பதில்லை. என் போன்றார்களால் தான் திரைஅரங்கங்கள் மூடப்பட்டுவிட்டனவோ என்ற எண்ணம் கூட என்னிடம் உண்டு.
    வெங்கட்ராமன

    ReplyDelete

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...