VAIKUNTA EKADHASI – POSTING NO. 500
வைகுண்டஏகாதசி [பதிவு என் -500]
இந்த BLOG பதிவுகள் துவங்கப்பெற்றது
22-09-2021 [ எனது மனைவி மறைந்து
3 வாரங்களுக்குப்பின் ]. இன்று எனது பதிவு,
எண் 500 ஐ தொட்டுள்ளது.
ஊக்கம் அளித்து வாசித்தவர்களுக்கும், தூக்கம் பெரிதென
வாசிக்காமல் விட்டவர்களுக்கும் , வாசிக்காமலே வாசித்தது விட்டதாக சூப்பர் என்று ஒற்றை
வார்த்தையில் விட்டவர்களுக்கும் ஒரே மாதிரி நன்றி
பாராட்ட விழைகிறேன். எல்லா தகவல்களையும் சீர்
தூக்கிப்பார்த்தால் சுமார் 50-55 நபர்களுக்கு அனுப்பினாலும் தவறாமல் படிப்பவர்கள் 10 பேர்கள்
மட்டுமே. அவர்கள் என்ன என்
போல வேலை அற்றவர்களா ? அவர்களுக்கு
பல்லாயிரம் பணிகள் இருக்கும் [அவர்களைக் குறை
காண்பது தவறு]. மாறாக ,அந்த
மனித தேனீக்களை தொடர்ந்து துன்புறுத்தாமல் அவர்களுக்கு பதிவுகளை அனுப்பாமல் இருந்தால் -நிச்சயம் மகிழ்ச்சி கொள்வர் / அவர்களின் மகிழ்ச்சிக்கு இடையூறாக இனியும் என்னிடமிருந்து இது
போன்ற BLOG POSTS தொடராது
என்று உறுதி அளிக்கிறேன். அனைவருக்கும்
எனது நன்றிகள் . அன்பன் ராமன்
வைகுண்டஏகாதசி
சுறுசுறுப்பும் பரபரப்பும் , கூட்டமும், க்யூ வரிசையும், பட்டாணியும், பாத்திரக்கடையும், கோயிலின் அமைப்பையே அறியாத போலீசும் , ஒழுங்காக போய்க்கொண்டிருப்பவனை , அங்கே போ என்று தவறாக அனுப்புவதும் காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பும், பெருமாளைத்தவிர அனைத்து விஷயங்களையும் அலசும் உள்ளூர் கூட்டமும்,சேர்ந்த மொத்த கலவை தான் ஸ்ரீரங்கம் -அதுவும் வைகுண்ட ஏகாதசி காலங்களில் . அதுவும் பரமபத வாயில் நுழைவுக்கு முயற்சிக்கும் பலரும் பலவரிசைகளில் நிற்க கூட்டம் மெதுவாக , நகர திடீரென்று நகர்வு நின்று போய் அங்கிமிங்கும் எட்டிப்பார்க்க சண்டை துவங்கி விடும்,."ஏன்டா என் காலை மிதிச்ச? நான் எங்க மிதிச்சேன் என்று எதிர் வாதம் ; நீ வெளிய வாடா உன்னைப்பார்த்துக்கறேன். வெளியே வந்தாதான் பாப்பியா நான் இப்பவே பாத்துருவேன் என்று சும்மா உதார் விட்டுக்கொண்டிருக்க பலூன் விற்பவன் பலூனில் கீச் கீச் என்று தேய்க்க இடுப்பில் இருக்கும் சிறுவன் பலூ என்று அழ , பலூனை வாங்கி சிறுவனும் தேய்க்க பட்டீர் என்று வெடித்து முன்னால் இருந்த கிழவன் காதில் ங்கொய் ய்ய்ய் என்று குடைய , கிழவன் மயங்கிச்சரிய ஒருவன் தாத்தா செத்துட்டாரு என்று பீதியைக்கிளப்ப . வரிசையில் முன்னும் பின்னும் இருந்த 25-30 பேர் சிதறி ஓட பலூன் வெடித்த சிறுவன் அடி வாங்கி ஊ ஊ ஊ என்று முனக , மூச்சுவிட்ட மென்னியை முறிச்சுருவேன் தாத்தாவ கொன்னுட்டியேடா பாவி என்று நைசாக நழுவி வெளியேற, தாத்தா எழுந்து சோம்பல் முறித்துக்கொண்டு வேகமாக முன்னேறி ஓட ஒருவன் என்ன தாத்தா பரமபதம் போயிட்டு வந்தாச்சு போலிருக்கு என்று கிண்டல் பேச , நீ தான் கனவுல பரமபதம் போயிட்டு வர அதான் பெனாத்திக்கிட்டிருக்க என்று அவன் வாயை அடைத்து விட்டு வேகமாக முன்னேறி பரமபத வாயில் சமீபம் வந்துவிட , ஒரு பெண்மணி “ ஏ குண்டு வேகமாப்போ “ என்றாள்.
எவடி அவ என்று 'குண்டு' திரும்ப நான் தான் என்று திமிராக பார்க்க, 'குண்டு ' அவள் குடுமியைப்பிடித்துக்கொண்டு கொத்தாக கத்தரிக்காய் போல உயரத்தூக்கி " நீ யாடி எனக்கு சோறு போடற 'குண்டு 'ங்கறியே , குண்டு அடி எப்படி இருக்குனு பார் ரீ என்று ஒரு அரை விட்டாள்.
அரை வாங்கியவள் “பாஸ்கர் இங்க வாயேன் என்று புலம்ப, ஒரு 30 வயது ஆள் ஓடி வந்தான், கழுத்தில் ID அட்டையை தொங்க விட்ட படி. குண்டு சரே ரென்று , பெண்ணை இடக்கையில் பிடித்துக்கொண்டு, வந்தவனின் ID பட்டியை .கழுத்தைச்சுற்றி இறுக்கி , என்னடா பண்ணிப்புடுவ -நான் யார் தெரியுமில்ல என்றாள் பெரிய பத்ரகாளி குங்குமப்பொட்டுடன். இறுக்கிய வலிமையில் பாஸ்கர் என்ற அவன் கண்கள் வட இந்திய காலண்டர்களில் நாம் பார்க்கும் சிவபெருமானின் கண்கள்போல மெல்லிய கீற்றாகத்திறந்து ஒரு புறம் சொருகிக்கொண்டிருக்க, இரண்டு கையிலும் தவளை மாதிரி தொங்கிக்கொண்டு இருந்தவர்களை கோயிலுக்கு வெளியே கொண்டுவந்து , ஒரே கையில் பிடித்துக்கொண்டு நையப்புடைத்தாள்; அடி வேகத்தில் பாஸ்கர் கும்பிடு போட்டான், அந்த பெண் நான் போலீசக்கூப்பிடுவேன் என்றாள் . கூப்புடுறீ என்றாள் குங்குமப்பொட்டு. போலீஸ் போலீஸ் என்று அலற போலீஸ் ஓடி வந்தவுடன் , குண்டு “என்ன ரெங்கசாமி உனக்கு கோயில்ல டூட்டியா இங்க எப்ப வந்த ?..
ஆத்தி நம்ம ரெங்கம்மா அது தப்புத்தண்டா வுக்கு போகாதே இவனுக ஏதோவம்பு பண்ணிருப்பாங்க அதான் ரெங்கம்மா சாத்துது என்று ரெங்கம்மாவுக்கு என் ஓட்டு என்பது போல் அகன்று போனான். சிறுகூட்டம் கூடிவிட கீரைக்கார பொன்னம்மா நீ எப்ப டீ வந்த என்று கேட்க குண்டு [ரெங்கம்மா] காலைலதான் வந்தேன் கொரோனாவுல 2 வருசமா சாமி பாக்கல , குலசாமி ஆச்சே னு வந்தா இவ குண்டுங்கரா அதன் நாலு போட்டேன் , இன்னும் நல்லா சாத்தணு ம் அதுக்குதான் வெளியே கொண்டாந்துட்டேன்.போலிசக்க கூப்புடுவாளா மில்ல. . அவன் என் கடையில இட்லி தோசை திங்கற வன் .ஒன் பப்பு எங்கிட்ட வேகாதுடீ , என்று முதுகில் அறைந்தாள் ஐயோ என்ன வீட்டிடுங்க என்று கும்பிட்டாள் அந்தப்பெண் -அட இவ இங்க டீச்சர் இப்படித்தான் வம்பு வளப்பா இன்னக்கி ஒங்கிட்ட மாட்டிக்கிட்டா என்று பொன்னம்மாள் சொல்ல, எப்போது தன்னை விடுவாள் என்று நடுங்கிக்கொண்டிருந்தான். பாஸ்கர் .
அடி வாங்கியது நீலகண்ட ஐயருடன் தகராறு செய்யும் டீச்சர் . அடித்தது திண்டுக்கல் கும்மாங்குத்து ரெங்கம்மா.. ரெங்கம்மா குடும்பம் ரெங்கநாதரை குலதெய்வமாக வழிபடுவர்கள் அதனால் தான் அவள் பெயரே ரெங்கம்மா. . இப்படி ரெங்கமாக்கள் இந்த சமுதாயத்திற்கு தேவை தான். .
அன்பன் ராமன்
வைகுண்ட ஏகாதசி என்றாலே நான் சிறு வயதில் என அம்மாவுடன் மாமா வீட்டிற்கு திருச்சி போன நினைவு வருகிறது். வைகுண்ட ஏகாதசியன்று ஶ்ரீரங்கம் கோவிலுக்குப்போன போது கூட்டம் அதிகமானதால் என்னை எங்க அம்மா இடுப்பில் வைத்துக்கொண்டு பெருமாளை பார்த்த ஞாபகம்
ReplyDeleteவெங்கட்ராமன்