Thursday, July 20, 2023

                                      CYCLE                                                                                                                       

                                    சைக்கிள்

இந்த கதைக்களம், காலம் சுமார் 65 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழக ச்சூழல்

சைக்கிள் சைக்கிள் என்று முனகிக்கொண்டு தகப்பனின் பின்னே அலைந்து கொண்டிருந்தான் கோவிந்தன் -5 ம் வகுப்பு , வயது 10 ; அந்நாளில் சுமார் 5 வயதில் ஒன்றாம்  வகுப்பில் நுழைத்து விடுவர் . பிறப்புச்சான்றிதழ்  அம்மை தடுப்பூசி க்கான ஆதாரம் என்று எதுவும் இல்லை ; பள்ளியில் போய் வகுப்பில் அமர வைத்தால் அட்மிஷன் முடிந்தது. தெருப்பையன்களைக்கண்டதும் புதிய மாணவன் அவர்களோடு அமர்ந்து விடுவான். நல்லா சொல்லிக்கொடுங்க என்று பெற்றோர் ஆசிரியருக்கு அறிவுரை சொல்வர் ;அவரும் சரி சார் , சாயங்காலம் நீங்க வந்து கூப்பிட வருவீங்களா , இல்ல தெரிஞ்ச பையன்களோட அனுப்பிடலாமா ?என்பார் ஆசிரியர் .அதோ அந்த பச்சை சட்டை ப்பையனோட அனுப்பிடுங்க என்பர் பெற்றோர் . எவ்வளவு சவுகரியம் ? uniform கூட்டத்தில் பெற்றபிள்ளையே பெரும் சவால் உருவமாக இருக்கும் இக்கால இளம் பெற்றோருக்கு நான் சொல்வது ஏதோ கற்பனை அல்லது 'புருடா ' என்பதாகத்தோன்றலாம். நான் சொன்ன எதைத்தான் நம்பியிருக்கிறீர்கள் இதை நம்புவதற்கு.? ஆசிரியர் என்பவர் காந்தியின் சகோதரர் போல் வழுக்கை, முட்டிக்குக்கீழே6 அங்குலம் வரை இறங்கியவேட்டி, தொள தொள  .சட்டை , பசி எடுத்தால் சர் என்று உறிஞ்ச மூக்குப்பொடி அதுவும் வாழை மட்டையில் , இடுப்பில் வேட்டி முனையில் சுருட்டி சொருகி , புயல் வந்தாலும் அவிழாத வேட்டி , அடங்காத மாணவனை அடைத்து உதைக்கும் போது அவரிடம் ஏற்படும் உத்வேகம் அலாதியானது.

  ஆனால் கரும்பலகையில் எழுதினார் எனில் குருடனுக்கு க்கூட தெரியும் தெளிவில் எழுத்துக்கள் முத்துமுத்தாக , எண்கள் அச்சடித்த பரிமாண ங்க ளில் . எந்த விடைக்கும் இடது புறம் ANS என்று எழுதாவிட்டால் முதுகு நார் நாராகக்கிழிந்து விடும்  இரண்டே அறையில் . இவர்தான் வகுப்பு ஆசிரியர் கிளிமூக்கு வாத்யார் எனும் கிஷ்ணமூர்த்தி.

கிளிமூக்கு வாத்யார் " கோவிந்தா -இந்த போர்டில் ஜனகன் என்று எழுது--

எழுதினான் ஐநகன்  என்று  கி .மூ வாத்யார் முதுகு பிய்ந்துவிடும் போல ஓங்கி அறைந்தார் . கோவிந்தனுக்கு புரிந்தது ஒழுங்காக எழுதாவிட்டால் சட்டையும் முதுகும் சல்லி சல்லி யாக கிழிந்துவிடும் என்று.

அவன் நோட்டில் கி. மூ வா எழுதிக்கொடுத்தார் "ஐ " மற்றும்  "ஜ " இரண்டையும் அருகருகே ;நாளை 50, 50 முறை இதை எழுதி கொண்டுவந்து காண்பி என்றார் .இப்போது கி.மூ வின் மூக்கை கோவிந்தன் உற்று கவனித்தான் .ஐயோ இவர் மூக்கு இப்படி உள்புறமாக வளைந்திருக்கிறதே , இந்த வளைவில் எப்படி பொடியை உள்ளே தள்ளுவார் -ரொம்ப கஷ்டம் பாவம் என்று அனுதாபப்பட்டான் . மூக்கு வளைவு இவனை அமைதி இழக்க வைக்கிறது . பொறுக்க முடியாமல் பச்சை சட்டை சுந்தரிடம் கேட்டான் இந்த வளைவில் பொடியை எப்படி உள்ளே தள்ளுவார் --என்று. சுந்தர் சொன்னான் அவர் உள்ளே தள்ள மாட்டார் , இரண்டு விரலில் பொடியை பிடித்துக்கொண்டு மூக்கு ஓட்டையில் வைத்து மூச்சை உள்ளே இழுப்பர் --பொடி சும்மா ராக்கெட் மாதிரி மூக்கு உள்ள பாஞ்சுரும் . கோவிந்து க்கு இதை செய்து பார்த்துவிட வேண்டும் என்று ஆவல். .வலதுகை கட்டை விரல்+ஆள்காட்டி விரல் இரண்டையும் மூக்கு ஓட்டையில் வைத்து காற்றை உறிஞ்சினான் , இரண்டு விரலும் மூக்கில் நன்றாக ஒட்டிக்கொண்டு ஓட்டையை அடைத்துவிட நுனிமூக்கு பக்கவாட்டிலொட்டிக்கொண்டு சுருங்கியது தெரிந்தது. அப்படியே பேசிப்பார்த்தான்  . அவன் குரலே வினோதமாக ஒலித்தது பக்கத்து வீட்டு ரெட்டியார் [போஸ்ட் ஆபிஸ் ஊழியர்]  குரல் போல் ஒலித்தது . மாலையே வீட்டில் அந்த ரெட்டியார் போல் பேசி காட்டினான் . அனைவரும் வியந்தனர் ஒரே நாளில் எவ்வளவு கற்றுக்கொண்டு வந்திருக்கிறான் ? முதுகு வீங்கியது யாருக்கு தெரியும். இரவுக்குள் ஐ /ஜ , 50, 50 தடவை எழுதிவிட்டான் ;மீண்டும் மூக்குப்பயிற்சியில் இறங்கினான்.

இரவு 8.10 க்கு தகப்பனார் திரும்பி வந்தார் ;மீண்டும் ஆரம்பித்தான் அப்பா சைக்கிள், அப்பா சைக்கிள் என்று ஜபம் மாதிரி சொல்லிக்கொண்டிருந்தான் .பசியில் இருந்தவருக்கு கோபம் அதிகமாயிற்று. லூசுப்பயலே சைக்கிளே ஓட்டவோ, stand போடவோ தெரியாது , எப்பப்பாரு ஒரே புலம்பல் ;இன்னிக்கு ஸ்கூல் என்ன படிச்சோம் என்ன தெரிஞ்சுக்கிட்டோம் அதெல்லாம் சொல்லாம சைக்கிள் சைக்கிள் னு ஏன் அலையற . உன் நோட்டைகொண்டா என்றார் அப்பா. அனைத்துப்புலன்களும் அடங்கி ஒடுங்கி நோட்டுல ஒண்ணும் எழுதல என்றான்.  எழுதாம என்ன பண்ணின ஒரு நாள்  முழுவதும் ? நாளைக்கு வந்துஉங்க வாத்யார் கிட்ட   கேக்கறேன் என்று மிரட்டினார். எந்த தகப்பனும் வாத்யாரைப்பார்ப்பது கிடையாது , சும்மா பையனை மிரட்டி வைப்பதற்கு நாளைக்கு ஸ்கூலுக்கு  வரேன் என்று ஒரு வைத்தியம் .மறுநாள் காலை 12 மணி வரை ஒரே அமைதி ;அப்பாடா அப்பா ஸ்கூலுக்கு வரவில்லை என்றதும் மீண்டும் குதூகலம் . பச்சை சட்டை சுந்தரிடம் போட்டி -நீ மூக்கால் பேசு பார்ப்போம் என்று .அவனால் முடியவில்லை ஒரே வெற்றிக்களிப்பில் கோவிந்து

தகப்பனார் சைக்கிள் வாங்கித்தர மாட்டார் என்றுசுந்தர் எனக்கு சைக்கிள் ஓட்ட கத்துத்தா” என்றான்  கோவிந்து மாலை க்ளாஸ் விட்டதும் 10 நிமிஷம் கத்துத்தரேன் என்றான் சுந்தர்.

அவ்வளவு தானா ? -கோவிந்து .அப்புறம் நான் வீட்டுக்குபோகணும் இல்ல ? -சுந்தர்

சரி என்று தலை ஆட்டினான் கோவிந்து .

மாலை 4.10க்கு குரங்குப்பெடல் பயிற்சி துவங்கியது .3 நிமிடப்பயிற்சியில் சைக்கிளை ஆட்டி ஆட்டி வேகமாக குரங்குப்பெடல் போட்டான் கோவிந்து. .விதி யாரை விட்டது ? வேகமாகப்போன சைக்கிள் துணை முதல்வர் கணேசமூர்த்தி யின் மீது பின்புறமாக சென்று மோத , கணேசமூர்த்தி மடார் என்று கீழே சாய்ந்து , கண்ணாடி உச்சி மண்டையின் மீது ஏறி மலங்க மலங்க விழிக்க அவருக்கோ வெள்ளையாக வானம் தான் தெரிந்தது. கணேசமூர்த்தி ஒரே நொடியில் மரணித்து சொர்க்கம் வந்து விட்டேன் போல் இருக்கிறது தலையை சுழற்றிப்பார்த்தார் -நன்கு பரிச்சயமான தூங்குமூஞ்சி மரம் தெரிந்தது. இடுப்பில் விண் விண்  என்று  வலி.. செத்தப்புறம் வலி தெரியுமா என்ன என்று யோசிக்க --சீ சொர்க்கத்தின் ஆசையிலும் மண் ,இன்னும் பள்ளிக்கூட கிரௌண்டில் தான் கிடக்கிறேன் . PT மாஸ்டர் ஞானதேசிகன் விசில் அடி த்துக்கொண்டு ஓடுகிறாரே என்று மெல்ல  எழுந்தால் சைக்கிள் ஒருபுறம் கோவிந்து ஒரு புறம் கிடைக்க கணேசமூர்த்தி எழுந்துகொண்டார் . அதைப்பார்த்த கோவிந்து மான் குட்டி எனத்துள்ளி ஓடி தப்பிக்கப்பார்க்க, ஞானதேசிகன் அவனைப்பாய்ந்து பிடித்துவிட்டார்.

தொடரும்                        அன்பன் ராமன்

2 comments:

  1. ஒரு மணி நேரத்துக்கு ஒரு அணா என்று வாடகை சைக்கிள் எடுத்து நானே தனியாக ஓட்டிப்பழகியது நினைவிற்கு வருகிறது்.
    எத்தனை தடவை கீழே விழுந்து முட்டுல காயம்பட்டதும் மறக்க முடியுமா!
    அடுத்த கட்டத்தில் பெரிய சைக்கிளில் குறங்கு பெடல் போட்டு ஓட்டியதும்
    நினைவிற்கு வருகிறது.
    சைக்கிளுக்கு லைசென்ஸ், எண்ணை திரியுடன்கூடிய விளக்கு,டைனமோ கொண்ட சைக்கிள், டபுள்ஸ்போனால் போலீஸில் பிடிபட்டதெல்லாம் ஒரு காலம்
    வெங்கட்ராமன்

    ReplyDelete

PATTU IYENGAR- LYRICIST

 PATTU IYENGAR- LYRICIST  பாட்டு எழுத வந்த   பட்டு ஐயங்கார்   என்னது பட்டு ஐயங்காரா ?   அவர் என்ன பட்டு வ்யாபாரியா அல்லது எல்...