Wednesday, July 5, 2023

RENGAA RENGAA-54

 RENGAA RENGAA-54

ரெங்கா ரெங்கா -54

 2 காபியை யும் குழல் போல் சுருட்டி வந்த மாடசாமி செக்ஷன் பக்கம் திரும்ப திடீரென எதிர்ப்பட்ட ராமசாமி [கழுகல்லவா இந்த ராமசாமி ?] என்னடா எந்த யூனிவர்சிட்டி ல டிகிரி வாங்கிண்டு வர ? என்றார். வாய் பேசாமல் ராமசாமி ஒரு பிரதியை ரா சாவிடம் தந்தார் .பிளாட்பார ஓரத்தில் போய் நல்ல வெளிச்சத்தில் தகவலைப்படித்த ராமசாமி ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி என்னடா , எப்பிடிடா இது , பிரளயமே வந்தாலும் எருமை மாடு மாதிரி தூங்கிக்கிட்டு இருப்பானுக , என்னால நம்பவே முடியலடா -GOD IS GREAT என்று கைகுலுக்கிய ரா சா அப்போது தான் கவனித்தார் கண்ணீரில் தோய்ந்த கண்களுடன் பேச முடியாமல் மாடசாமி , தொண்டைக்குழிக்குள் எச்சில் விழுங்கி தன்னைக்கட்டுப்படுத்திக்கொள்ள முயன்றார். ஏண்டா பேசமாட்டேங்கற ? என்று ராமசாமி உண்மையான கவலையுடன் வினவினார். மாடசாமி "இது தாண்டா அந்த ராஜாங்க ரகசியம் " அப்புறமா விவரமா சொல்றேன் , இப்ப என்னால பேசமுடியலடா மன்னிச்சுக்க டா என்று தழுதழுத்தார் . டேய் உணர்ச்சிவசப்படாத .நான் சொல்றத கவனமா கேளு . வர பக்ரீத் அன்னிக்கு ஆபிஸ் லீவு , நீயும் , கௌரியும் வீட்டுக்கு வாங்க , பகல் முழுதும் என்னோட இருங்க வேணும்னா காலையிலே வந்தா  சமயபுரம் போய் மாரியம்மனை சேவிச்சுட்டு வரலாம். அன்னிக்கு கௌரிக்கும் லீவாத்தான் இருக்கும் , நீங்கல்லாம் வீட்டுக்கு வந்தே நாளாச்சு அதுனால சொல்றேன் என்றார் ராமசாமி. மாடசாமி சொன்னார் "நான் ஒரு டாக்ஸி எடுத்துக்கிட்டு காலைல 6.30க்குள்ள உங்க வீட்டுக்கு வரோம், நீயும் உங்க wife எல்லோரும் வாங்க கோயில் போயிட்டு வந்துட்டு அப்புறம் சாயங்காலம் வரை உங்க வீட்டில இருக்கோம் அது சரியா இருக்கும் னு நெனக்கிறேன் .சரிடா அப்பிடியே செய்வோம் congrats என்று கை குலுக்கினார் ராமசாமி .ஆழ்ந்த நட்பல்லவா இந்த சாமிகளின் சரித்திரம்?

மாரியம்மன் கோயிலுக்குப்போய் விட்டு ராமசாமி வீட்டிற்குப்போய்விட்டு மாலையில் திரும்பலாம் என்றதும் கௌரி குஷியானாள். நினைத்தபடியே தெரிந்த நண்பரின் டாக்ஸியை அமர்த்திக்கொண்டு ஸ்ரீரங்கம் -சமயபுரம் -ஸ்ரீரங்கம் என்று வாடகை பேசி சரியாக குறித்த நாளில் காலை 6.20க்கு ராமசாமி வீட்டில் மாமாவுடன் கௌரியும். வாங்கோ வாங்கோ என்று வரவேற்றாள் அம்ஜம் . அடுத்த நொடியில் ராமசாமியும் வந்துவிட்டார். டேய் நீங்க ரெண்டு பேரும் கிழக்கு பார்த்து நில்லுங்க என்றார் ராமசாமி . எதுக்குடா என்றார் மாசா ;சொன்னதை செய் என்றார் ரா சா . 2 வினாடியில் பெரிய தாம்பாளத்தில் திகு திகு என்று கொழுந்துவிட்டெரியும் சூடக்கட்டிகளை   இடம் வலமாக மற்றும் வள இடமாக மும்மூன்று  முறை சுழற்றி திருஷ்டி கழித்து தெருவில் கொட்டி விட்டு ஓடி வந்தாள் அம்ஜம். . உங்களுக்கு மேலிடத்துலேந்து பாராட்டு வந்திருக்குனு இவர் சொன்னார்.. கௌரியும் யூனிவர்சிட்டி ப்ரோக்ராம்ல ரொம்ப நன்னா ஆடினா னு சொன்னார். இதெல்லாம் திருஷ்டி படக்கூடிய சமாச்சாரம் அதுனா ல அப்பப்ப திருஷ்டி கழிப்பது நல்லது. சித்த உக்காருங்கோ இதோ காபி கொண்டு வரேன் என்று உள்ளே ஓடினாள் .ஆவியும் மணமும் ஒருசேர 2 காபி டம்ளரில் காபியுடன் வந்தாள் . மாடசாமி காபி பிரியன் , ஒரு சொட்டு விடாமல் அருந்தி மகிழ்ந்தார். கௌரிக்கு காபி அமிர்தமாய் தோன்றியது. வீட்டைப்பூட்டிக்கொண்டு டாக்ஸியில் சமயபுரம் விரைந்தனர் மணி 7.10    4--100 ரூபாய் டிக்கட் ராமசாமி வாங்கினார். கூட்டமே இல்லை .அற்புதமான ஆழ்ந்த தரிசனம் .சாமிகள் மனம் குளிர்ந்தனர். அம்ஜம் இவ்வளவு நேர்த்தியாக மாரியம்மன் சேவை காண்பது இதுவே முதல் தடவை. கௌரியைக்கண்ட சிவநேச பட்டர் , சித்தி வரலியா? என்றார். ஒரு கணம் தடுமாற இருந்த கௌரி சுதாரித்துக்கொண்டு மெட்றாஸ் போயிருக்கா என்று பிராம்மண ஸ்டைலில் சொல்லி தப்பித்துக்கொண்டாள் .

வெளியே வந்ததும் கோரஸாக எழுந்த கேள்வி -சித்தி யார்? கௌரி விளக்கினாள் .போன தடவை சுபத்திரா மேடம் என்னை அவர்களுடைய பெரியம்மா பேத்தி என்று அறிமுகம் செய்தார் அதனால் பட்டர் மேடத்தை சித்தி வரலியா னு கேட்டார். நல்ல வேளை அது ஞாபகம் வந்திடுச்சு,  நானும் அய்யர் மாதிரி மெட்ராஸ் போயிருக்கா   னு  சமாளிச்சுட்டேன். டேய் உன் மருமாள் சுபியை தூக்கி சாப்புட்டுருவா போல இருக்கு என்றார் ராமசாமி. போங்க சார் என்று வெட்கப்பட்டாள் கௌரி.

ஸ்ரீரங்கம் வந்ததும் அம்ஜம் சரி மெனு என்ன என்றாள் . எவருக்கும் என்ன சொல்வதென்றே புரிய வில்லை . அம்ஜமே தீர்மானித்தாள் , பிரண்டை துவையல், வாழைப்பூ உசிலி , எலுமிச்சை ரசம் +தயிர்/ மோர் , மாவடு ஊறுகாய். கௌரிக்கு முதல் இரண்டு ஐ ட்டங்களும் புதுமையாக தெரிந்தன . எனினும் மரியாதை நிமித்தம் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா மேடம் என்றாள் கௌரி. நல்ல வேளை கேட்டாய் , இந்தா வாழைப்பூவிலே இருந்து கள்ளன் எல்லாம் எடுத்துவிட்டு வெறும் பூவை மாத்திரம் பிரித்துக்கொடு. என்று பெரிய வாழைப்பூ,  முறம், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து வந்து கௌரியின் முன் வைத்துவிட்டு உள்ளே போய் விட்டாள் .கௌரி விழிப்பதைப்பார்த்ததும் ரா சாவுக்கு புரிந்து விட்டது கௌரிக்கு கள்ளன் பிரிக்க தெரியாது என்று

தொடரும்  அன்பன் ராமன்   

 

1 comment:

  1. "கள்ளனை"ப் பிடிக்கிறதென்றால் கஷ்டம்தான். 😀😀

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...