Friday, August 18, 2023

TEACHERS‘ ROLE- 3

 TEACHERS‘ ROLE- 3

ஆசிரியப்பணி -3

நேர்மையாக திறம்பட செயல் படவேண்டுமாயின் ஆசிரியப்பணி குழப்பங்களும் நிர்ப்பந்தங்களும் நிறைந்தது. நிஜ வாழ்வில் பிறர்க்கு இருக்கும் சில சுதந்திரங்கள் ஆசிரியருக்கு அறவே இல்லை. ஆம் பிறர்க்கு நிகராக ஆசிரியன் குழாயடிச்சண்டையில் இறங்க முடியாது . மறந்தும் 'கெட்ட' சொல் இயம்புதல் கூடா து. பொது இடங்களில் சிறிதும் கவனக்குறைவாக செயல்பட முடியாது . கோயில் திருவிழாக்களில் பிறர் போல் முட்டி மோதி சண்டையில் பங்குகொள்ள முடியாது. இருபாலர் பயிலும் கல்விநிலைய ஆசிரியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியிருக்கும் . 

இன்னும் கற்பிக்கும் வகுப்பு நிலை உயர இன்னலும் உயர்வதைக்காண்கிறோம் .ஆம் கல்லூரி நிலை மற்றும் PG வகுப்புகளை கையாள்வோர் மிக குறுகிய நேரத்தில் விரிவாகத்தகவல் பரிமாற்றம் செய்திட வேண்டும் ,இல்லையேல் பலத்த விமரிசனத்துக்கு ஆளாக வேண்டிய சூழல் விரைவாக உருவாகும். ஏனெனில் உயர் வகுப்பில் பயில்வோர் அடுத்த சில மாதங்களில் ஆராய்ச்சி அல்லது போட்டித்தேர்வுகளை சந்திக்க நேரிடும் .அப்போது பல அடிப்படை க்கேள்விகள் விடை தெரியாமல் மாணவ மாணவியர் திணறும் போது நீங்கள் எங்கு பயின்றீர்கள் உங்கள் ஆசிரியர் யார் போன்ற வினாக்கள் எழும். கூசாமல் ஆசிரியர் பெயர் தெரிவிக்கப்படும் . இதைப்போன்ற இரண்டொரு நிகழ்வுகள் போதும் ஒரு ஆசிரியன் விமரிசனப்பொருள் ஆவதற்கு. ஆசிரியர்களில் பலர் இவற்றைக்குறித்து புரிதல் கொண்டவர்கள் போலவே தோன்றவில்லை. யார் என்ன நிலைப்பாடு எடுத்தாலும் இந்த "பலனை" அனுபவித்த அனைவரும் வசைமாரி பொழிவார்கள் என்பது காலத்திற்கும் அழியாத உண்மை. இவை கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டியன .

எனில் ஆசிரியர் தன்னை வளப்படுத்திக்கொள்ளாமல் மாணவரிடம் நல்லிணக்கம் கொண்டு வெற்றி காண்பது ஒரு மாயையே அன்றி வேறில்லை. நல்லிணக்கம் என்பது அன்பான உரையாடல் அல்ல . அது மாணவரி ன் அறிவுத்தேவைகளை ஒவ்வொரு நாளும் நிறைவேற்றி அவர்களின் தர மேம்பாட்டுக்கு உழைப்பது தான். சினிமா பார்த்தாயா , சகோதரி திருமணம் இனிது நடந்தேறியதா போன்ற தெருமுனை உரையாடல்கள் ஆசிரியரின் அறிவு வெற்றிடம்  என்பதாக வலுவாக நிறுவப்பட்டு அத்தகவல் அடுத்தடுத்த தலைமுறை மாணவருக்கும் மறவாமல் பாரம்பரிய சொத்துப்போல் வழங்கப்பட்டு எதிர்காலமாணவ சமுதாய த்திற்கும் எச்சரிக்கை மணியாக ஒலிக்கும் .HEREDITARY TRANSMISSION OF MESSAGE மிக அற்புதமாக ஈடேறி , ஹி ஹீ ஹி என்று அசடு வழியும் ஆசிரியக்கூட்டம் அதிகரித்துவருவது கவலை அளிப்பதாக உள்ளது.

இது போன்ற அவலங்கள் தலை தூக்காமல் ஆசிரியப் பணிபுரிய மிகுந்ததோர் உளக்கட்டுப்பாடு தேவை. ஆம் ஆரம்ப நிலையில் [பணி துவங்கும் வயதில் ]யுவனோ யுவதியோ ஆசிரியப்பணிக்கு வந்துகொண்டிருந்த அக்காலத்தில் நிலவிய ஒழுக்கம் இப்போது 40 வயதில் பணி  அமர்த்தப்படும் middle age ஆண்  /பெண் இருபாலருக்கும்  ஒழுக்கம் இருந்த இடத்தில் "அத்துமீறல் " வேரூன்றி விட்டதோ என்று ஐயம் தோன்றுகிறது . இதற்கு எனக்கு விளக்கம் தெரியவில்லை. இரு காரணிகளை நான் உணருகிறேன்  .1] வயது கொடுக்கும் அசாத்திய துணிச்சல் மற்றும்இல்லற  "ருசி கண்ட பூனை " மனநிலை 2] சமுதாயத்தில் நுழைந்து விட்ட தளர்வு நிலை யினால் எந்த அவலத்தையும் 'உலகம் அப்படி இப்படி தான் இருக்கும்’ என்று [பிறர்க்கு இன்னல் நேரும்போது ] ஒரு வேதாந்த விளக்கம் உரைக்கும் மனோபாவம் காட்டும் சமுதாயம் . அதனால் சமுதாயச்சிற்பிகளாக உருவகப்படுத்தப்படும் ஆசிரியர்களை நிலைகுலையவைத்ததில் சமுதாயத்தின் குற்றமும் இருப்பதாகக்காண்கிறேன்.

இவையல்ல நமது விவாத பொருள். ஆசிரியர் செய்ய வேண்டிய அடிப்படை முயற்சிகள் சில :  

1 கற்றது கைமண்ணளவு என்பது முதலில் ஆசிரியருக்கே 

2 மாணவனுக்கு /மாணவிக்கு என்ன தெரியும் என்று குறைத்து மதிப்பிடாதீர்கள் .சில குடும்பங்களில் குழந்தைகள் வெகு நேர்த்தியாக பொது அறிவு மற்றும் சமகால நடப்பு பற்றிய தெள்ளத்தெளிந்த கருத்துகளுடன் பயில வருகின்றனர். [பொதுக்கூட்டத்தில் பேசுபவன் தான் மட்டுமே அறிவாளி என்று எண்ணும் நிலையை விட மோசம் மாணவனுக்கு ஒன்றும் தெரியாது என்று எண்ணும் மமதை]..

3 இன்று புதிதாய்ப்பிறந்தோம் என்பது போல ஒவ்வொரு நாளும் ஆசிரியர் தன்னை தயார் படுத்திக்கொன்டே வகுப்புக்கு வர வேண்டும் -இந்த இடத்தில் சமரசம் செய்யும் ஆசிரியர்களை மாணவ சமுதாயம் மன்னிப்பதில்லை மேலும் எந்நாளும் வசைமாரி பொழியும் என்பதை கருத்தில் கொள்க.

4. பிறர்க்கு நாம் உரைக்கும் ஒவ்வொரு அறிவுரையையும்  முதலில் நாம் கடைப்பிடித்து உயிர் மாதிரி [living example ] யாக செயல் பட்டால் உங்கள் அறிவுரை பெரிதும் ஏற்கப்படும்.

5. இவற்றை முறையாக நிர்வகித்தால் நமது பயணம் அறிவுத்தேடலில் நேர்கோட்டில் செல்லும் பாதை விலகாது .மிகுந்த நன் மதிப்பை பெற்றுத்தரும்.

செயல் களத்  தேவைகள்   --  அறிவு மேம்படுத்திக்கொள்ளுதல்

இந்த தேவை அனைத்து நிலை ஆசிரியருக்கும் பொருந்தும். நம் எந்த நிலையில் [க்ளாஸ் ]போதிக்கிறோமோ அதனினும் உயர்நிலையில் இருக்கும் தகவல்களை அறிந்து கொள்ளுதலும் /அவற்றை புதுப்பித்தல் [updating ] மிகுந்த பலன் தரும் . குறிப்பாக பயில்வோர், ஆசிரியர் குறித்த மதிப்பீடுதனை உயர்வாகவே கொள்வர். இது போதும் என்பது உணவில் மாத்திரமே சரியான நிலைப்பாடு , அது கற்பது /கற்பித்தல் இரண்டு செயல்களுக்கும் பொருந்தாது.

உச்சரிப்பு மற்றும் சொல்லாட்சி

இவ்விரண்டும் ஆசிரியரின் இயல்பான ஆயுதங்கள் . கோர்வையாகப்பேசுதல் என்பது சொற்களின் இயல்பான விரைந்த பயணம் மற்றும் பொருத்தமான ஏற்ற இறக்கங்கள் அனைத்தையும் உள்ளடக்கியது. பிழையான மற்றும் தெளிவற்ற உச்சரிப்பு கேட்பவர்களின் கவனச்சிதறல் எனும் DIGRESSION மற்றும் முனைப்பின்மை எனும் LOSS OF FOCUS  இவற்றை விருட்சமென வளர்த்து  கல்வியை ஒரு கசப்பான அனுபவமாக மாற்றிவிடும்.

மேலும் களப்பணியில் செலுத்தவேண்டிய நுணுக்கங்கள் குறித்து பின்னர் பேசுவோம்.

தொடரும்          நன்றி.    ராமன்

 

1 comment:

  1. இல்லற ருசிகண்ட பூனைக்கு இருபாலர் படிக்கும் வகுப்பில் கட்டுப்பாடு தேவைதான்

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...