Thursday, August 17, 2023

CINE DIRECTION / DIRECTOR- 3

 CINE DIRECTION / DIRECTOR- 3

திரை இயக்கம் / இயக்குனர் -3

எந்தப்படமும் ஒரு நன்னாளில் நல்ல சுப முகூர்த்தத்தில் "பூஜை” இடப்பட்டு , அதன் பின்னரே துவங்கும்

சினிமாவைப்போல மிகுந்த செண்டிமெண்ட் / பக்தி /பூஜை புனஸ்காரம் என்று இயங்கும் வேறு எந்த தொழிலையும் அடையாளம் காட்ட முடியாது. வெளியே நான் அந்தக்கட்சி இந்தக்கட்சி என்று வீர வசனம் பேசி உதார் விடும் தயாரிப்பாளர்/ இயக்குனர் / நடிகன் யாராயினும் பூஜை போடாமல் படப்பிடிப்பு துவக்கமாட்டார்கள். அது போல் துவக்கினால் படத்துக்கு பலமாக "பூசை" விழும் என்று நடுங்குவார்கள் இந்த வாய்ச்சொல் வீரர்கள். இப்போதெல்லாம் பூஜையை வெகு டாம்பீகமாக கொண்டாடி விநியோகஸ்தர்களை வளைத்துப்போட்டு படம்  துவங்குமுன் அச்சார தொகை வாங்கிக்கொண்டு ஏக தடபுடலாக விழா போல் நடத்துகின்றனர். அவ்விழாவில் தயாரிப்பாளர், இயக்குனர் , ஒளிப்பதிவாளர் , பாடலாசிரியர்  இசை அமைப்பாளர் , முக்கிய நடிக/நடிகையர் பங்கேற்பர். பார்ப்பனரை எதிர்க்கும் படத்துக்கும் "ஐயர்" தான் பூஜை போடவேண்டும்.,சொல்லும் செயலும் வெவ்வேறு திசையில் பயணிப்பதை அரசியல் மற்றும் சினிமா இரண்டிலும் அன்றாடம் காணலாம்.

பூஜைக்குப்பின் பெரும்பாலும் பாடல் காட்சிகளை படம் பிடிக்க ஆர்வம் செலுத்துவர். ஏனெனில் இயற்கைக்காட்சிகளை வண்ணத்தில் பதிவிட மற்றும் நடனங்கள் அமைக்க , இசை ஒலிக்க என்று .பலரும் நாட்டம் கொள்வர் எனவே இயக்குனர்கள், பலரையும் பயன் படுத்திக்கொள்ள பாடல் காட்சிகளில் அதிக கவனம் செலுத்துவர்.. பாடல் படம் பிடிப்பதில் உள்ள ஒரு இயற்கையான சவுகரியம் பாடல்களை பொறுத்தமான இடங்களில் பின்னர்  இணைத்துக்கொள்ளலாம்; அதாவது திரைக்கதை வேலைகள் முற்றுப் பெறாமல் இருந்தாலும் , பாடல் ஏற்கனவே பதிவிடப்பட்டுள்ளதால் படப்பிடிப்புக்கு இடையூறின்றி முன்னேற்றம் காணலாம்.

இப்போது பாடல் உட்புறக்காட்சியா /வெளிப்புறக்காட்சியா என்பது film உபயோகித்த காலங்களில் ஒரு விவாதப்பொருள் . ஏனெனில் பிரத்யேகமாக indoor films 3200-3600 Ko and Outdoor films 5200- 6000 Ko என்று ஒளி ஏற்புத்திறன் [LIGHT / COLOUR RECEPTIVITY] குறித்த மதிப்பீ டுகள் பற்றிய  விவரங்களுடன் + பில்டர் [LIGHT FILTERS] என்னும் ஒளி வடிகட்டிகள் எவை தேவைப்படும் என்ற பரிந்துரையுடன் ஈஸ்ட்மன் கொடாக் மற்றும் அக்பா , ஆர்வோ ஆகிய நிறுவனங்கள் film விற்பனை செய்தன. எனவே தேவையான வகை எது  என அறிந்து கொண்டு கொள்முதல் செய்யாமல் படப்பிடிப்பில் இறங்கினால் கால தாமதம் நேரிடும். ஏனெனில் அப்போது பிலிம் ரேஷன் முறை அமலில் இருந்தகாலம் .

ஒளிப்பதிவாளருடன் இயக்குனர்/ தயாரிப்பாளர் விவாதித்து , தேவைப்படும் பிலிம் வகைகளை பிலிம் சேம்பர் மூலம் விண்ணப்பித்தால் உரிய விலையில் பிலிம் வாங்கலாம். இல்லையேல் கருப்பு மார்க்கெட்டில் பன்மடங்கு விலையில் வாங்க  நேரிடும்

நான் பேசும் காலம் 1963 தொடக்கம் 1990 வரை ; பின்னர் தாராள மயமாக்கல் காரணமாக பொருட்கள் எளிதில் கிடைக்கத்துவங்கின. அந்தக்கொடும் சூழலில் உலவிய ஒளிப்பதிவு ஜாம்பவான்கள் - எல்லப்பா [ஜெமினி], மார்க்கஸ் பார்ட்லே , என். பாலகிருஷ்ணன் [விஜயாவாஹினி], அ. வின்சென்ட்- பிஎன் சுந்தரம் [சித்ராலயா ]  யூ ராஜகோபால் [மலையாள த்திரை ]. இவர்கள் விசேஷ முத்திரை பதித்தவர்கள்.. இதே உயரத்தில் வைத்துப்பேசப்படவேண்டிய பின்னாள் வரவு கள் அசோக் குமார் , மது அம்பாட் ,பாலுமகேந்திரா . இவர்கள் பணி என்பதை படமே பேசும் - அசகாய சூரர்கள்.

அந்த சூழலில் எவ்வளவு இன்னல்கள் என்பதை படப்பதிவு பற்றிய நுணுக்கங்கள் அறிந்தோர் மட்டுமே உணர முடியும். இன்றுபோல் வசதிகள் இல்லை.எனினும் பிரமிக்க வைத்த ஒளிப்பதிவு த்திறமை -பேசாது விட்டால் பாவம் என்னைச்சேரும் . இவர்களுடன் விவாதித்துதான் இயக்குனர்கள் தங்கள் விருப்பங்களில் காட்சிகளை  திரையில் ஒளிரவிட்டனர். இயக்குனரின் காட்சி அமைப்புப்பெருமையில் ஒளிப்பதிவுக்கு சிறப்பான இடம் உண்டு. அதனால் தான் சில இயக்குனர்-ஒளிப்பதிவாளர் காம்பினேஷன் தொடர்ந்து நீடித்தது. 

ஆகவே படம் இயக்குபவருக்கு மனக்கண்ணில் காட்சிகளை கற்பனை செய்து, ஒளிப்பதிவாளரிடம் தெளிவாக பேசி என்ன எதிர்பார்க்கிறார் என்பதை ஒளிப்பதிவாளர் தலையில் ஏற்ற வேண்டும்.. இப்போது ஒளிப்பதிவாளர் , டைரக்டர் முன்னிலையிலேயே , ஒப்பனை கலைஞர்களுடன் எந்த வகை ஒப்பனை செய்யப்படவேண்டும் என்று ஆணித்தரமாக சொல்லிவிடுவார் .

ஒரு நடிகை , "என்ன சார் பவுடர் ரொம்பக்கம்மியா இருக்கு என்று ஆரம்பிக்க , கலர் படம்மா , எங்களுக்கு தெரியும் , பவுடர் அப்பிக்கிட்டு வரக்கூடாது" என்று கண்டிப்புடன் வின்சென்ட் அதிர விட்டதாக ஒரு தகவல் உண்டு. இது போன்ற தருணங்களில் இயக்குனர்கள் குறுக்கிடாமல் ஒதுங்கிக்கொள்வார்கள் , இல்லையேல் ஒளிப்பதிவுத்திறமை அசிங்கப்படுத்தப்பட்டதாக கிசு கிசு கிளம்பி விடும்.

சரி இவ்வளவு தானா ? அதெப்படி இன்னும் இருக்குல்ல என்று மதுரைத்தமிழில் சொல்ல அவா கொள்கிறேன் . ஆம் இப்போது பாடல் குறித்த அனைத்து விவரங்களையும் நடன இயக்குனரிடம் விவாதிப்பார் பட இயக்குனர். நடனங்கள் எந்த வகை என்று கதை மற்றும் பாடல் கருத்து அடிப்படையில் உருவாக்கப்படும். நடனம் மிகச்சிறப்பாக வேண்டும் எனில் நடன இயக்குனர்கள் அவர்களே இயக்குனர் முன் ஆடிக்காட்டி ஒப்புதல் பெறுவர். சில தருணங்களில் இயக்குனரை முறையாகப்புரிந்து கொள்ள ஆண் கோரியோக்ராபர் களே உடம்பில் புடவையை சுற்றிக்கொண்டு கதா நாயகிகள் போல் ஆடிக்காட்டி இயக்குனர்களை மிரள வைத்த நிகழ்வுகள் உண்டு. சரி மேலும் என்ன வெனில்,  இந்த நிலையில் ஒளிப்பதிவாளரும் சேர்ந்து கொண்டு INDOOR /OUTDOOR  தேவைகள் தெள்ளத்தெளிவாக நிர்ணயிக்கப்பட்டு , ஒளிப்பதிவாளர் எல்லைகளை வகுத்து 'செட்' எவ்வளவு விஸ்தீரணம்,  OUTDOOR எனில் எந்த எல்லைவரை ஆடலாம் என்பன நிர்ணயித்துக்கொள்வார்கள்; ஒளிப்பதிவாளரை  மீறி . ஏதாவது செய்தால் படம் தாக்குப்பிடிக்காது என்று அனைவரும் அறிவர் . இன்னும் கேளுங்கள் இவர்களின் ஆளுமை மற்றும் திட்டமிடல் எவ்வளவு நேர்த்தியானது என்று. இந்த விஸ்தீரணக்கணக்கு என்ன என்பதை வரும் பதிவில் பேசுவோம்.

தொடரும்

அன்பன் ராமன்

 

2 comments:

  1. ஐயர் இல்லாமல் ஒரு காரியமும் நடக்காதோ?
    வெங்கட்ராமன்

    ReplyDelete
  2. Your statement appeals for innocence. K.Raman

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...