Friday, August 4, 2023

TEACHERS ' ROLE

 GENERAL THEME

பொது கருத்து

                                'ஆசிரியப் பணி '           

வரம் 7 நாட்களிலும் கருத்துகளை பதிவிட வேண்டி உள்ளதால் இது போல ஒரு 'தலைப்பிற்கு ' வாய்ப்பும் இடமும் கிடைக்கிறது எனவே சமுதாயத்தில் தாக்கம் அல்லது பாதிப்பை ஏற்படுத்தவல்ல அம்சங்கள் பேசப்பட வேண்டும் என்று கருதுகிறேன் . அவ்வகையில் ஒரு முக்கிய மான தலைப்பு 'ஆசிரியப் பணி'  என உணருகிறேன். இந்த தலைப்பைக்கேட்டவுடன் வெறுப்போரும் விரும்புவோரும் இருகூறாக பிளவுபட்டு நிற்பதை உணரமுடிகிறது. இவ்விருவகை உணர்வுகள் ஒன்றை தெளிவாக உணர்த்துகின்றன .

விரும்புவோர் தம் வாழ்வின் முக்கிய நிலைகளில் குறைத்தது 2 அல்லது 3 நல்லாசிரியர்களின் திறமையினால் எளிதாகப்பயின்று அந்த அனுபவம் அவர்களுக்கு ஆசிரியப்பணியின் மீது மதிப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்த அதனால் ஈர்ப்பும் விருப்பும் அவர்களிடம் வெளிப்படுவது இயல்பு. .மாறாக வெறுப்பும் கசப்பும் மேலிட அணிவகுத்து நிற்போர்,  பயிலுதல் என்பது ஒரு கொடூரமான தண்டனை என்று மாறி மாறி பல ஆசிரியர்கள் போதித்த அல்லது போதிக்காமலே மாணவர் தம் வாழ்வை சீரழித்த அனுபவமேதான் பயில் பருவம் என்று தீர்க்கமாக உணர்ந்திருப்பர் . அவர்களைப்பொறுத்தவரை ஆசிரியன் என்போன் ஆ -சிறியோன் என்றே மனம் வகைப்படுத்தியுள்ளது.

எனவே எந்த ஒரு நிலைப்பாடும் அவரவர் பெற்ற அனுபவங்களால்  பண்படுத்தப்பட்டவை அல்லது புண்படுத்தப்பட்டவை என்று அறுதியிட்டுக்கூறலாம். இருசாராரிடமும் வாதிட்டு அவர் தம் எண்ணங்களை மாற்ற முயலுதல் தேவையற்ற கருத்து முரண்களை எளிதாக விதைத்துவிடும். மாறாக இவ்விரு அனுபவக்களங்களின் பின்னணியை தெளிவுபடுத்தமுயன்றால் ஒரு வேளை 'தெளிவு' பிறக்கக்கூடும் . முயற்சிப்போம்

இதுகாறும் நான் வகைப்படுத்திய இரு ஆசிரிய செயல்வடிவங்களையும் இரு வகையினதாக அடையாளம் காணலாம்.  1. கலங்க வைக்கும் செயல்  2. கிறங்க/ மயங்க வைக்கும் செயல் .

1 கலங்க வைக்கும் வகையான செயல்பாடு அதிகரித்து தற்கால சூழலில் ஆசிரியர்-மாணவர் இடைவெளி நிரப்பவொண்ணாத பள்ளமாக அகன்று விட்டதோ என்று சஞ்சலம் கொள்ளவைக்கிறது.இவ்வகை ஆசிரியர்கள் எது குறித்தும் ஆர்வம் கொள்வதில்லை. அவர்களின் தலையாய முனைப்பு பொருள் ஈட்டுவது தான். அதாவது இன்வெஸ்ட்மென்ட் எனும் முதலீடு வித்தைகளையும் விந்தைகளையம் கரைத்துக்குடித்தவர்கள். இந்த வகையினரின்  எண்ணிக்கை வலுவானது எனவே இவர்கள் சங்க வழி முறையினர் . மன்னிக்கவும் சங்க காலத்தியவர் அல்லர் ;சங்க என்பது தொழிற்சங்க குறியீடு. தங்களின் குறைகளை மறைக்க, தேவைகளை விரைந்து நிறைவேற்ற 'சங்கம்' வளர்ப்பவர்கள். இதனாலேயே இவர்கள் அரசியல் சார்பு நிலைகளை எடுப்பவர்கள். மேலும் இவர்களின் 'தொடர்புகள்' மாநில அளவிலானது .எனவே அதிகாரிகளும், நெறிமுறைகளை பின்பற்ற வேண்டிய குழுக்களும் கூட கிட்டத்தட்ட முடங்கிய நிலைக்கு 'கலங்க' வைக்கும் செயல் மரபினர் ஒரு முக்கிய காரணி என்பது விவரமறிந்தோர் அனைவர்க்கும் தெரியும்.  இவர்களுக்கு அரசியல் ஆசியும் உண்டு -எனவே ஆசிரியப்பணி குறித்த 'சமுதாயக்  குமுறல் மற்றும் கண்ணோட்டம் ஆழமாக வேரூன்ற இது போன்ற செயல் ஆர்வமற்ற ஆசிரியர்கள் பெரும் பங்குதாரர்கள் எனில் மிகை அன்று. மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஆசிரியர்கள்  'கலங்க' வைக்கும் நிலைப்பாடு உடையோர் என்பதால், மாணவர்கள் இவர்களுக்கு அஞ்சுவதோ பணிவதோ கிடையாது , மாறாக பணிவதாக நடித்து தப்பித்துக்கொள்கின்றனர்.   இவர்களின் பணியில் உள்ள தொய்வுகளை மறைக்க ' இவ்வாசிரியர்கள்  மதிப்பெண்களை அள்ளி  வீசி "சமாதானப்புறாக்களை "பறக்க விடுவதில் சமர்த்தர்கள். தொழில் மொழியில் சொன்னால் 'ரிசல்ட் காட்டுவதில்' தேர்ந்தவர்கள். இந்த நோய் விஸ்வரூபம் எடுத்து 100/100, மன்னிக்கவும் 200/200 என்ற விளக்கவொண்ணா குறீயீடாக தன்னை நிலைப்படுத்திக்கொண்டது தான் துயரம்.  அனைவருமே 'கலங்க' வைப்பவர் தானா  எனில் இல்லை, ஆசிரியர்களுள் 'கிறங்க' வைப்போரும் உண்டு.

2. கிறங்க/ மயங்க வைக்கும் செயல் .வகையினர்

இவர்களுக்கு மாணவப்பருவத்தில் இருந்தே கற்றலை  விட கற்பித்தல் குறித்த தெளிவான பார்வை அமைந்து விடுகிறது என்பது எனது கணிப்பு. மிகச்சிறந்த திறைமையாளர்கள் இவர்களுக்கு ஆசிரியராய் வாய்த்துவிட, இவர்கள் கவனச் சிதறல் இல்லாமல், முறையாக புரிந்து கொள்ளும் வழிமுறைகளையும் "பிடித்து" விடுகிறார்கள். இவர்கள் தான் பின்னாளில், பட்டொளிவீசும்ஆசிரியர்கள்.இந்த 'நுணுக்கமறிதல்" மாணவப் பருவத்தில் அமைந்து விட்டால் கற்றல் என்பது எளிது என்பதை விட சுகமானது என்பதே உண்மை.

இவ்வகை கிறங்க / மயங்க வைக்கும் ஆசிரியர்கள் மரபு வழி யில் தங்களை கட்டமைத்துக்கொண்டவர்கள் . அதாவது "APPROACH " எனும் அணுகுமுறைகைகளை முறையாக வகுக்கப்பட்ட [WELL -ESTABLISHED] வழியே பயணித்து மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தி கற்பதை ஒரு சுகானுபவமாகவே வேரூன்றச்செய்பவர்கள் . இதன் வெளிப்பாடாகவே  மாணவ மாணவியர் சிலர் ஆங்கிலம் மற்றும் கணக்கு பாடங்களை சிறிதும் தயக்கம் இன்றி "ஊதித்தள்ளுகிறார்கள் " வேறு சிலருக்கோ இதே பாடங்கள் நள்ளிரவு நரஸிம்ஹாவதாரமாக தோன்றி அவர்கள் வெட வெட    என பகலிலும் குலை நடுங்குகிறார்கள். இவ்விருமாறுபட்ட நிலைகளும் ஆசிரியர்களின் செயல் பாடுகளைப்பொறுத்ததே நிறுவப்படுகின்றன . தொடர்ந்து இதே போன்ற கலங்க வைக்கும் ஆசிரியர்கள் ஆங்கிலம் மற்றும் கணக்கு பாடங்களை ஒரு 4 ஆண்டுகள் பயிற்றுவித்தால் , அதன் பின்னர் மேல் வகுப்புகளில் மீட்சி என்பது எட்டாக்கனி தான் . அதனால் அந்த பாடங்களை வெறுக்க தலைப்படுகின்றனர் மாண வ /  மாணவியர்.

ஆசிரியரில் சிலர் உடல் வணங்காமல் திறமை இருந்தும் சோம்பேறிகளாக தங்களையும் சார்ந்த மாணவர்களையும் கல்வியின் மீது நாட்டமில்லாத நிலைக்கு இட்டுச்செல்லுகின்றனர். இவர்களே சில நேரங்களில் சுடர்விட்டு பிரகாசிக்கும் திறமை தனை வெளிப்படுத்தி திறமை இருந்தும் ஆர்வமில்லை என்ற அவல  நிலையை தமதாக்கிக்கொள்ளுகிறார்கள்.

ஆசிரியப்பணிக்கு பட்டங்களையும் பதக்கங்களையும் விட நாட்டமும் கற்பிக்கும் ஆர்வமும் தேவை இவை அனைத்திற்கும் உந்து திறனாக இருப்பது சுய மரியாதை என்னும் தன் மான உணர்வு மட்டுமே . ஊதியமும் ஊக்க போனஸும் நல்லாசிரியர்களை தோற்றுவிப்பதில்லை. உண்மையிலேயே நல்லாசிரியர்களிடம்  பயின்றவர்கள் தான் தம் வாழ்வில் நல்லாசிரியர்களாக பரிமளிக்க  இயலும். .

நன்றி அன்பன் ராமன்

3 comments:

  1. நல்லாசிரியர்களை தேர்வு செய்வதில் பணம்தான் முக்கியத்துவம் பெறுகிறது இப்போது.
    வெங்கட்ராமன்

    ReplyDelete
  2. In 50s, 60s and even till 70s teachers ( be it school or college) were devoted to their job of teaching. They cared less for monetary benefits. Today the situation is different. They too need money to live a decent life. Thank God! Highly devoted teachers are still there .

    ReplyDelete
  3. 'SHANMUKHI" - Glad that you express your opinion. It would be nice if you can let us know of your 'profession' place of living etc just to recognize whom are we interacting with . Thank you Prof.K.Raman

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-23

  TEACHER BEYOND YOUR IMAGE-23 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-23 அன்பர்களே இதுகாறும் ஆசிரியப்பணியில் ஆசிரியர் மேற்கொள்ள உகந...