Thursday, November 30, 2023

THE SAVIOUR

 THE SAVIOUR

ஆபத்பாந்தவன்

வேறு யாருமில்லை சாக்ஷாத் நம்ப கனக சபையே தான். ஒரு ஞாயிறன்று தெருவில் ஸ்கூல் மாணவர்கள் 'கல்யாண ப்பரிசு' படம் பற்றி பேசிக்கொண்டிருக்க நானும் ஆர்வக்கோளாறில் அங்கு போக -"நீ ஏண்டா இங்க வர ? என்று ஒருவன் கேட்க, நானும் கல்யாணபரிசு பத்தி தெரிஞ்சுக்க வந்தேன் என்றேன் . நீ சினிமாவை ப்பாத்துட்டியா என்றான் அந்த 11 ம் வகுப்பு தடியன். ம்ம் பாத்தாச்சு என்றேன். "சரி யார் டைரக்டர்"? -தடியன் 

நான் உதட்டைப்பிதுக்க, அவன் 'எப்பிடி டைரக்ட் பண்ணிருக்கான் பாத்தியா?" என்றான் தடியன். நான் பேந்தப்பேந்த விழிக்க, பின் மண்டையில் ஓங்கி ஒரு அறைவிட்டான்.

ஆந்தை மாதிரி முழிக்கற போடா என்று துரத்தினான். மிகுந்த வேதனையுடன் அங்கிருந்து கிளம்பினேன். இருடா நாளைக்கு கனகசபை கிட்ட அக்கு வேற ஆணி வேறயா கேட்டுட்டு வந்து உன்னை நாறடிக்கிறேன் பார் என்று என்று ஆழ்ந்த வைராக்கியம் கொண்டேன். மறுநாள் திங்கள் நம்ம ஞானகுரு கனகசபை பள்ளிக்கு வரவே இல்லை. அதுவரை அவன் ஒரு நாள் கூட ஆப்சென்ட் ஆனதே இல்லை மறுநாளும் ஞானகுரு மிஸ்ஸிங்.   டைரக்ட் பண்ணியிருக்கான் அப்பிடின்னா என்ன? இந்தக்கேள்வி தொடர்ந்து மனதில் ஒலிக்க, பாழாய்ப்போன மனக்குரங்கு திரும்பத்திரும்ப அதைசுற்றியே வருகிறது

மூன்றாம் நாள் புதன் காலை கனகசபை சிவப்பழமாக மொட்டைத்தலை, நெற்றியில் விபூதிப்பட்டையுடன் பிரசன்னம்.

எங்கடா போய்த்தொலஞ்ச? என்று நான் கொந்தளிக்க, அவன் "டேய் கவனமாப்பேசு தொலஞ்ச கிலஞ்சனு பேசாத -நான் திருப்பதி போயிட்டு பக்தியா வந்திருக்கேன்; இனிமே உக்காந்து ஒழுங்கா படிக்கப்போறேன். "அப்ப சினிமா?. ஓ -அதுவும் பாப்பேன். ஆனா ஒளுங்கா படிக்கிறேன் னு சாமிகிட்ட சொல்லி மொட்டைபோட்டிருக்கேன், அதுனால நிச்சயம் படிப்பேன் என்று சூளுரைத்தான் கனக சபை., இந்தா திராச்சை பளம்- திருப்பதில குடுத்தாங்க, உனக்காக எடுத்து வச்சிருக்கேன் - கைய கழுவிட்டு வாங்கிக்க என்று உத்தரவு போட்டான்.                   சரி, பெருமாள் இந்த மொட்டையன் வழியாக ஆசீர்வதிக்கிறார் என்றது கை அலம்பி ஒரு பொட்டலத்தை வாங்கிக்கொண்டேன். "டேய் -டைரக்ட்" என்று நான் ஆரம்பித்ததும் இப்ப எதுவும் பேசாதே ப்ரேயர் பெல் அடிச்சாச்சு, மத்தியானம் பேசுவோம் என்று ஆறுதல் சொல்லிவிட்டு ஹெட்மாஸ்டருக்கு பிரசாதம் தர ஓடினான்.

பின்னர், இடை வேளையில் மீண்டும் வந்தான் கனக சபை. டேய் எனக்கு இந்த 7 ஏஜெஸ் ஆப் மேன் என்ற ஷேக்ஸ்பியர் பாடலின் கடைசி பகுதி சுத்தமாக புரியல்லடா கொஞ்சம்சொல்லுடா என்றான் எனக்கு மட்டும் ரொம்ப தெரியுமா என்ன? ஏதோ கொஞ்சம் தெரியும் –என்றதும், டேய் சொல்லுடான்னா என்று முறைத்தான்.  

வாழ்வின் கடைசி பகுதியில், மனிதனின் முதுமையில் மீண்டும் குழந்தையாகிறான். கண் பல், சுவை அனைத்தையும் இழந்து அவனது சரித்திரம் மழுங்கி மங்குகிறது என்று ஆசிரியர் சொன்னதை சொன்னதும் அவன் இவ்வளவு தானாடா? நான் ரொம்ப பயந்துக்கிட்டிருந்தேன், தேங்க்ஸ் டா; நீ வாத்தியார் வேலைக்குப்போடா ரொம்ப நல்லா வருவ என்று ஆசியோ, ஆருடமோ சொன்னான்.

இன்னொரு சந்தேகம் என்றான். நான் விழித்துக்கொண்டேன்-- முடியாது நான் கேட்டதை சொல்லாம ஏமாத்தப்பாக்கிறாயா, நான் சொல்லித்தர மாட்டேன் என்று முரண்டு பிடித்தேன். சரி என்று தினமும் ஒரு கால் மணி நேரம் சினிமா, கதை வசனம், காமெரா, மேக் அப், நடனம், கவிஞர், இசை அமைப்பு [யார்யார்] விளம்பரம்,  ஸ்டூடியோ, நடிகை நடிகர் என்று ஒன்று விடாமல் பலமான அஸ்திவாரம் அமைத்துக்கொடுத்தான்.

வெகு நேர்த்தியாக சொல்லிக்கொடுத்து, படம் பார்த்தல், பாடல் எப்படி புரிந்துகொள்வது என்று சிறப்பாக போதித்தான் அந்த போதிசத்துவன்.                  இதே போல் மெர்ச்சண்ட் ஆப் வெனிஸ் பாடத்தில் -- A POUND OF FLESH? என்ற பகுதியை விளக்க சொன்னான். அப்போது ஷைலக் என்ன சொன்னான், போர்ஷியா எப்படி ஷைலக்கை மடக்கினாள் என்பதை விளக்கியவுடன் அவனுக்கு போர்ஷியா தெய்வம் போல தெரிந்தாள், வக்கீல் னா இப்பிடித்தாண்டா இருக்கணும் என்று அந்த சீனில் ஒன்றிவிடுவான்.

 இத்தனை நல்லவனை பலரும் கெட்டவன் சினிமாப்பாட்டு பாடுகிறான் என்று தவிர்த்தனர்.ஆனால் அவனை எதிர்த்து பேச யாருக்கும் தைரியம் கிடையாது . பேசினால் கிண்டல் பேச்சில் அவர்களை அசிங்கப்படுத்தி விடுவான்.

எப்படியோ என்னிடம் நட்பு கொண்டான் கனகசபை ...கூடவே எல்லா ப்பாடங்களிலும் சந்தேகம் கேட்டான், என்னைவிட நன்றாகப்படிப்பவர்களைக்கேள் என்றால் அவங்க என்னைக்கண்டாலே நான் கெட்டவன் மாதிரி பாக்குறாங்க, ஆனா நீ நல்லா பக்குவமா சொல்ற -எனக்கு அது போதும் டா நான் நிச்சயம் பாஸ் என்று நன்றியுணர்ச்சியோடு சொன்னதை என்னால் 63 ஆண்டுகள் கழிந்தும் அவன் சொன்னதையும், அவன் சொன்ன எதையும் மறக்காமல் இருக்கிறேன். பள்ளிப்படிப்புக்குப்பின், அவனை இன்றளவும் என்னால் சந்திக்க முடியவில்லை. சினிமா குறித்த என் பார்வையில் ஏதேனும் தெளிவு தென்படுமானால், அது கனகசபை எனக்குள் விதைத்த விமரிசனப்பார்வை. இன்றளவும், பலவற்றை நுணுக்கமாக பார்க்கவோ ரசிக்கவோ முடிகிறது. அதனால் என்ன சாதித்தாய் எனில் ஒன்றுமில்லை ஆனால் அவ்வாறு கேட்பவர்கள் சாதித்தது என்ன? அதனை  அறிந்தால் பிறர்க்கு பயன் படும் என்பதனால் அது குறித்து பேசவேண்டியதாகிறது..

நன்றி அன்பன்  ராமன்

 

 

Wednesday, November 29, 2023

CINE MUSIC SOFT MELODIES

 CINE MUSIC      SOFT MELODIES

மென்மையான பாடல்கள்

திரைப்படப்பாடல்களில் மனதை மயிலிறகால் வருடும் வகைப்பாடல்கள் அவ்வப்போது வருவதும் பின்னர் சில ஆண்டுகளுக்குப்பின்னர் மீண்டும் வருவதும் உண்டு. ஆனால் அவை தோற்றுவிக்கும் ஒரு மன நிறைவும் அமைதியும் அலாதியானவை,. அவை நமக்குப்பிடிக்கும் என்பதைத்தாண்டி அவை நம்மை பீடிக்கும் [அதாவது முற்றாக ஆட்கொள்ளும் என்பதே உணர்த்தப்பட வேண்டிய சிறப்பு என்று எண்ணுகிறேன்]. அப்படி சில பாடல்களை இன்றைய பதிவில் காணலாம்   

1 தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே [ஆலயமணி - 1962]

கண்ணதாசன் -விஸ்வநாதன் ராமமூர்த்தி - எஸ் ஜானகி

அற்புதமான கவிதை, எளிய தமிழில் கவிஞர் பாடிய தாலாட்டு. இதை இசைத் தொட்டிலில், அல்ல அல்ல இசைத்தூளியில்   மெல்லிசை மன்னர்கள்,மெல்ல உறங்கவிட்டிருக்கும் நேர்த்தியை என்ன சொல்ல?  மிகக்குறைந்த இசைக்கருவிகள் ஆனால் ஒரே சீராக மிதக்கும் ட்யூன், அதில் ஏற்படும் நளினமான அசைவில் உறக்கம் தழுவிக்கொள்ளும் ஆதிக்கம் இந்தப்பாடலின் அமைப்பின் தனிச்சிறப்பு.

மனம் சஞ்சலம் கொள்ளாமல் வைகைறைப்பொழுதின் உறக்கம் போல உள்ளத்தை வருடுகிறது . பாடல் இணைப்பு இதோ 

https://www.google.com/search?q=thookam+un+kangalai+video+song+download&newwindow=1&sca_esv=580785707&sxsrf=AM9HkKm6oMz27ONMTlfG5EabpptnDYr thookkamun kangalai

 2 யார் அந்த நிலவு [ சாந்தி -1965] கண்ணதாசன் -விஸ்வநாதன் ராமமூர்த்தி ,டி எம் சௌந்தர்ராஜன்

சிம்மக்குரலோன் என்ற சிவாஜிக்கென அவரே விடுத்த சவால் விளைவித்த இந்த மேன்மையும் மென்மையும் இணைந்த பாடல் TMS அவர்களின் குரலில்.                  ELVIS PRIESTLY பாணியில், MSV வடிவமைத்து மிகமிக அடக்கி வாசித்த பாடல். டி எம் எஸ்ஸின் [இனி குறைந்த தொனிப்பாடல்கள் மட்டுமே பாட வேண்டி வருமோ என்ற] அச்சத்தை தவிடு பொடியாக்கி மேலும் அவரின் புகழை வெகுவாக உயர்த்திய பாடல் . கிட்டார் சிணுங்கலும் ட்ரம்மின் மென் ஒலியும் இப்பாடலின் முத்திரை. இந்தப்பாடலுக்கென்றே சிவாஜி அவர்கள் கவனம் செலுத்தி சிகரெட் புகைத்தது., இந்தப்பாடல் சிவாஜி மீது ஏற்படுத்திய தாக்கம் அலாதியானது. இப்பாடலை நமக்கு வழங்கிய பெரும் ஆளுமைகள் இன்று நம்மிடையே இல்லை, ஆனால் பாடல் தவழ்ந்துகொண்டே இருக்கிறது பாடல்

இணைப்பிற்கு  https://www.google.com/search?q=YAR+ANDHA+NILAVU+VIDEO+SONG+&newwindow=1&sca_esv=585225403&sxsrf=AM9HkKkgA0Pex-0lM9wTICqlVdjoehMkGQ%3A17  YAAR ANDHA NILAVU

3 மௌனமே பார்வையால் [கொடிமலர-1966] கண்ணதாசன் - எம் எஸ் விஸ்வநாதன் , பி பி ஸ்ரீனிவாஸ்

ஒரு அமைதியானமுதலிரவுப்பாடல். நாயகி வாய் பேச முடியாத பெண,. எனினும் கணவன் அவள் மீது அன்பைப்பொழிவதான நயமிக்க சொற்கள். PBS குரலின் அமைதியான தொனி பாடலுக்கும் , உணர்வு களுக்கும்  மிக சிறப்பான இசை வடிவில். சொல்லி விளக்குவது எளிதன்று . கண்டு ரசிப்பதே பேரின்பம். பாடல் இணைப்பிற்கு இதோ

https://www.google.com/search?q=mouname+paarvaiyaal+video+song+download&newwindow=1&sca_esv=585342624&sxsrf=AM9HkKlbi_Oqsr6MOPBgyIKsFs7L7f11yw . MOUNAME PARVAIYAL   PLEASE ACCESS THROUGH “GOLDEN CINIMA” LIMK FOR TOTAL SCENE.

பாடல் காட்சியில் ஸ்ரீதர் எவ்வளவு நேர்த்தியாக கோணங்கள் அமைத்துள்ளார். ஒளிப்பதிவு .N .பாலகிருஷ்ணன்

அடுத்து நாம் பார்க்க இருப்பது ஒரு இசைப்புரட்சியின் துவக்கம் என்று பெயரிடும் அனைத்து கட்டமைப்புககும் தகுதியுடைய சிறப்புகள் கொண்ட படம் "பாவ மன்னிப்பு". பாவ மன்னிப்பு ஒரு மைல் கல்., ஆம் தமிழ் திரை இசையை "பா  "க்கு முன் "பா " க்கு பின் என்று பிரிக்கலாம். அதாவது பாடல் வடிவம் , கவிதை நயம், இசையின் ஆளுமை , கருவிகளின் எண்ணிக்கை, ஒருங்கிணைப்பு என்று தமிழ்த்திரை ப்பாடல்களை மாறுபட்ட புதிய யுகத்துக்குள் அழைத்து வந்த பெருமை கொண்டது. அது இந்த படத்திற்கும், இசை அமைப்பாளர்களுக்கும் மாபெரும் மகுடம் சூட்டி , திரை இசையின் தாக்கம் மிக வலுவானது என்பதை ஐயம் திரிபற பறைசாற்றிய பெட்டகம். பாடல்களை  ரசிக்கவே  கூட்டம் கூடியது என்பதே இசை ஏற்படுத்திய தாக்கம் மற்றும் இசை அமைப்பிற்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி, தவிர்க்கவொண்ணாத சக்திகளாக வடிவெடுத்தனர் என்ற வரலாற்று உண்மையை கல்வெட்டுபோல் பறைசாற்றியது  பாவ மன்னிப்பு .

அவை குறித்த நீண்ட விளக்கங்கள் தர வேண்டியிருப்பதால் பாடல்கள் அடுத்த பதிப்பில் தொடரும்.

நன்றி அன்பன் ராமன்

Tuesday, November 28, 2023

SOWING THE SEEDS FOR APT LEARNING

SOWING THE SEEDS FOR APT LEARNING

புரிதலுக்கு வித்திடுதல்

புரிதலுக்கு வித்திடுதல் எனில் எதையோ ஒன்றை விற்று புரிதலை வாங்கிக்கொள்ளுதல் என்று எண்ண  வேண்டாம் . புரிதல் என்பது சீராக வேரூன்றி மரமாக வளர்ந்து வியாபித்து சொந்த முயற்சியில் விஸ்வரூபம் கொள்ளுதல்..எனவே முதலில் புரிதலை புரிந்து கொள்ள வேண்டும். கேட்கின்ற /பார்க்கின்ற/ படிக்கின்ற எதையும் விரைவாக உள்வாங்கும் தன்மை என்பதே 'புரிதல்'. அது எப்போதும் ஆரவாரம், விளம்பரம் ,வாய்ச்சொல் ஜம்பம் இவற்றை பயன்படுத்தி தன்னை முன்னிறுத்த முயலாது. புரிந்தவன் அடக்கமாக தெரிவான் எனவே அவன் ஒன்றுக்கும் உதவாதவன் என்று கருதுவோரே  " ஒன்றுக்கும் உதவாதவன்/ள்"  என்ற பெயருக்கு முற்றிலும் தகுதி படித்தவர்கள்."Staying hollow / shallow, billowing venom and spreading vituperation are integral to idiocy " என்பது நான் அறிந்த உண்மை. விளக்கம் வேண்டுவோர், நல்ல சொல் அகராதி மூலம் விளங்கிக்கொள்ளுங்கள். அப்படியாவது, டிக்ஷனரி எவ்வளவு தேவையானது என்று நேரடியாக புரிந்துகொள்வோமே என்றே இதை ஆங்கில வாக்கியமாகத் தந்துள்ளேன்.

குழந்தைகளுக்கு இந்த புரிதலை 'விதைக்க' வேண்டுமே அன்றி மிரட்டி / அடித்து, துன்புறுத்தி படி என்று காது கன்னம், முதுகு இவற்றை இசைக்கருவிகள் போல திருகுவதோ மீட்டுவதோ -மிஸ்ரசாபு , கண்ட சாபு  , ஆதி தாளம் போன்ற வகைகளை முதுகில் அரங்கேற்றுவதோ மாபெரும் 'அஸ்திவார ப்பிழை : அஸ்திவாரமே பிழையானபின் பின்னாளில் பிழைப்பது எவ்வாறு? எனவே புத்தகங்களின் மீது நாட்டம் கொள்ள செய்தலே புரிதலை விதைக்கும் பயிற்சி/ முயற்சி.இதை பெற்றோரே துவங்கிவைத்தால் முன்னேற்றம் விரைவாகும். இதற்கெனவே, வண்ண மயமான சித்திரங்களுடன் குழந்தைகளுக்கான புத்தகங்களை வெளியிடுகிறார்கள். அனைத்து புத்தக நிலையங்களிலும் கிடைக்கும் இவையே பன்மொழி களிலும் வெளியிடப்படுகின்றன . எனவே ஒரே புத்தகத்தை 3 மொழிகளில் [ஆங்கிலம் /தாய் மொழி /ஏதேனும் மற்றொரு மொழி] வாங்கிக்கொடுத்தால் முதலில் 'பொம்மை பார்க்கும் , பின்னர் இது என்ன அது என்ன என்று கேட்கும். அப்போது பொறுமையாக விளக்குங்கள் 2 வாரத்தில் வேறு புத்தகம் கேட்கும் .அதே மொழிகளில் வேறு புதிய புத்தகங்களை வாங்கிக்கொடுத்து மெல்ல மெல்ல அதே மொழிகளில் உள்ள எழுத்துகளை கொண்ட புத்தகங்களை க்கொண்டு எழுத்துகளை கற்கச்செய்யலாம் . புத்தகத்தின் வழ வழப்பும் , வண்ணமும் குழந்தைகளை கவரும் நல்ல உத்திகள். இப்படி புத்தகங்களை வாங்கிக்கொண்டே இருக்கவேண்டுமா என்று புலம்பவோ கலங்கவோ வேண்டாம் , ஏனெனில் இது அறிவின் வளர்ச்சிக்கான முன்னெடுப்பு. இதில் சுணக்கம் கூடாது. எத்துணையோ வேண்டாத கதைபுத்தகங்களை வரம் 50/- ரூ[ க்கு வாங்குகிறோமே  , அதை நாம் சிந்திப்பதேயில்லை , அது நமக்கு பொழுதைப்போக்க. புரிதல் என்பது பள்ளியில் சேர்ந்தால் வந்து விடும் என்று மனப்பால் குடிக்கிறவர்கள் லட்சங்களில் கொட்டிகொடுத்து LKG யில் இடம் பிடிக்கிறோம் .

அதுவும் இதுவும் ஒப்பிட பார்ப்பது சரியா என்று வாதம் பேசாதீர்கள் .    லட்சங்களில் கொட்டிகொடுத்து, LKG யில் இடம் பிடித்தாலும் "புரிதல்" என்பதற்கு உத்திரவாதம் உண்டா? என்பதே கேள்வி-  ஏன் ?

புரிதல் என்பது தனி மனித சிந்தனைத்திறன் வாயிலாக வேரூன்றுவது, அப்படி,. வேரூன்றுவதற்கு வழி செய்யாமல், வேறு எதையோ விதைத்துக்கொண்டிருக்கிறீர்கள். தானே நடந்து மெல்ல பாலன்ஸ் செய்து கொள்ளும் குழந்தையை விழுந்து விடாமல் தாங்கிப்பிடிக்கும் செயலுக்கு ஒப்பானது தான் இளம் மனங்களில் "புத்தக நாட்டம் ஏற்பட" முறையான முயற்சிகளை கைக்கொள்ளுதல். சரி தான் போய்யா 'எங்களுக்கு தெரியும்' என்போர், தெரிந்து கொண்டு விட்டமைக்கு நன்றி சொல்லி விடை பெறுகிறேன்   

நன்றி அன்பன்  ராமன்

SRIRANGAPATNA

  SRIRANGAPATNA Curiously, the name has no association with either Srirangam of Tamilnadu or Patna of Bihar; in its own right –it is Srira...