Thursday, November 30, 2023

THE SAVIOUR

 THE SAVIOUR

ஆபத்பாந்தவன்

வேறு யாருமில்லை சாக்ஷாத் நம்ப கனக சபையே தான். ஒரு ஞாயிறன்று தெருவில் ஸ்கூல் மாணவர்கள் 'கல்யாண ப்பரிசு' படம் பற்றி பேசிக்கொண்டிருக்க நானும் ஆர்வக்கோளாறில் அங்கு போக -"நீ ஏண்டா இங்க வர ? என்று ஒருவன் கேட்க, நானும் கல்யாணபரிசு பத்தி தெரிஞ்சுக்க வந்தேன் என்றேன் . நீ சினிமாவை ப்பாத்துட்டியா என்றான் அந்த 11 ம் வகுப்பு தடியன். ம்ம் பாத்தாச்சு என்றேன். "சரி யார் டைரக்டர்"? -தடியன் 

நான் உதட்டைப்பிதுக்க, அவன் 'எப்பிடி டைரக்ட் பண்ணிருக்கான் பாத்தியா?" என்றான் தடியன். நான் பேந்தப்பேந்த விழிக்க, பின் மண்டையில் ஓங்கி ஒரு அறைவிட்டான்.

ஆந்தை மாதிரி முழிக்கற போடா என்று துரத்தினான். மிகுந்த வேதனையுடன் அங்கிருந்து கிளம்பினேன். இருடா நாளைக்கு கனகசபை கிட்ட அக்கு வேற ஆணி வேறயா கேட்டுட்டு வந்து உன்னை நாறடிக்கிறேன் பார் என்று என்று ஆழ்ந்த வைராக்கியம் கொண்டேன். மறுநாள் திங்கள் நம்ம ஞானகுரு கனகசபை பள்ளிக்கு வரவே இல்லை. அதுவரை அவன் ஒரு நாள் கூட ஆப்சென்ட் ஆனதே இல்லை மறுநாளும் ஞானகுரு மிஸ்ஸிங்.   டைரக்ட் பண்ணியிருக்கான் அப்பிடின்னா என்ன? இந்தக்கேள்வி தொடர்ந்து மனதில் ஒலிக்க, பாழாய்ப்போன மனக்குரங்கு திரும்பத்திரும்ப அதைசுற்றியே வருகிறது

மூன்றாம் நாள் புதன் காலை கனகசபை சிவப்பழமாக மொட்டைத்தலை, நெற்றியில் விபூதிப்பட்டையுடன் பிரசன்னம்.

எங்கடா போய்த்தொலஞ்ச? என்று நான் கொந்தளிக்க, அவன் "டேய் கவனமாப்பேசு தொலஞ்ச கிலஞ்சனு பேசாத -நான் திருப்பதி போயிட்டு பக்தியா வந்திருக்கேன்; இனிமே உக்காந்து ஒழுங்கா படிக்கப்போறேன். "அப்ப சினிமா?. ஓ -அதுவும் பாப்பேன். ஆனா ஒளுங்கா படிக்கிறேன் னு சாமிகிட்ட சொல்லி மொட்டைபோட்டிருக்கேன், அதுனால நிச்சயம் படிப்பேன் என்று சூளுரைத்தான் கனக சபை., இந்தா திராச்சை பளம்- திருப்பதில குடுத்தாங்க, உனக்காக எடுத்து வச்சிருக்கேன் - கைய கழுவிட்டு வாங்கிக்க என்று உத்தரவு போட்டான்.                   சரி, பெருமாள் இந்த மொட்டையன் வழியாக ஆசீர்வதிக்கிறார் என்றது கை அலம்பி ஒரு பொட்டலத்தை வாங்கிக்கொண்டேன். "டேய் -டைரக்ட்" என்று நான் ஆரம்பித்ததும் இப்ப எதுவும் பேசாதே ப்ரேயர் பெல் அடிச்சாச்சு, மத்தியானம் பேசுவோம் என்று ஆறுதல் சொல்லிவிட்டு ஹெட்மாஸ்டருக்கு பிரசாதம் தர ஓடினான்.

பின்னர், இடை வேளையில் மீண்டும் வந்தான் கனக சபை. டேய் எனக்கு இந்த 7 ஏஜெஸ் ஆப் மேன் என்ற ஷேக்ஸ்பியர் பாடலின் கடைசி பகுதி சுத்தமாக புரியல்லடா கொஞ்சம்சொல்லுடா என்றான் எனக்கு மட்டும் ரொம்ப தெரியுமா என்ன? ஏதோ கொஞ்சம் தெரியும் –என்றதும், டேய் சொல்லுடான்னா என்று முறைத்தான்.  

வாழ்வின் கடைசி பகுதியில், மனிதனின் முதுமையில் மீண்டும் குழந்தையாகிறான். கண் பல், சுவை அனைத்தையும் இழந்து அவனது சரித்திரம் மழுங்கி மங்குகிறது என்று ஆசிரியர் சொன்னதை சொன்னதும் அவன் இவ்வளவு தானாடா? நான் ரொம்ப பயந்துக்கிட்டிருந்தேன், தேங்க்ஸ் டா; நீ வாத்தியார் வேலைக்குப்போடா ரொம்ப நல்லா வருவ என்று ஆசியோ, ஆருடமோ சொன்னான்.

இன்னொரு சந்தேகம் என்றான். நான் விழித்துக்கொண்டேன்-- முடியாது நான் கேட்டதை சொல்லாம ஏமாத்தப்பாக்கிறாயா, நான் சொல்லித்தர மாட்டேன் என்று முரண்டு பிடித்தேன். சரி என்று தினமும் ஒரு கால் மணி நேரம் சினிமா, கதை வசனம், காமெரா, மேக் அப், நடனம், கவிஞர், இசை அமைப்பு [யார்யார்] விளம்பரம்,  ஸ்டூடியோ, நடிகை நடிகர் என்று ஒன்று விடாமல் பலமான அஸ்திவாரம் அமைத்துக்கொடுத்தான்.

வெகு நேர்த்தியாக சொல்லிக்கொடுத்து, படம் பார்த்தல், பாடல் எப்படி புரிந்துகொள்வது என்று சிறப்பாக போதித்தான் அந்த போதிசத்துவன்.                  இதே போல் மெர்ச்சண்ட் ஆப் வெனிஸ் பாடத்தில் -- A POUND OF FLESH? என்ற பகுதியை விளக்க சொன்னான். அப்போது ஷைலக் என்ன சொன்னான், போர்ஷியா எப்படி ஷைலக்கை மடக்கினாள் என்பதை விளக்கியவுடன் அவனுக்கு போர்ஷியா தெய்வம் போல தெரிந்தாள், வக்கீல் னா இப்பிடித்தாண்டா இருக்கணும் என்று அந்த சீனில் ஒன்றிவிடுவான்.

 இத்தனை நல்லவனை பலரும் கெட்டவன் சினிமாப்பாட்டு பாடுகிறான் என்று தவிர்த்தனர்.ஆனால் அவனை எதிர்த்து பேச யாருக்கும் தைரியம் கிடையாது . பேசினால் கிண்டல் பேச்சில் அவர்களை அசிங்கப்படுத்தி விடுவான்.

எப்படியோ என்னிடம் நட்பு கொண்டான் கனகசபை ...கூடவே எல்லா ப்பாடங்களிலும் சந்தேகம் கேட்டான், என்னைவிட நன்றாகப்படிப்பவர்களைக்கேள் என்றால் அவங்க என்னைக்கண்டாலே நான் கெட்டவன் மாதிரி பாக்குறாங்க, ஆனா நீ நல்லா பக்குவமா சொல்ற -எனக்கு அது போதும் டா நான் நிச்சயம் பாஸ் என்று நன்றியுணர்ச்சியோடு சொன்னதை என்னால் 63 ஆண்டுகள் கழிந்தும் அவன் சொன்னதையும், அவன் சொன்ன எதையும் மறக்காமல் இருக்கிறேன். பள்ளிப்படிப்புக்குப்பின், அவனை இன்றளவும் என்னால் சந்திக்க முடியவில்லை. சினிமா குறித்த என் பார்வையில் ஏதேனும் தெளிவு தென்படுமானால், அது கனகசபை எனக்குள் விதைத்த விமரிசனப்பார்வை. இன்றளவும், பலவற்றை நுணுக்கமாக பார்க்கவோ ரசிக்கவோ முடிகிறது. அதனால் என்ன சாதித்தாய் எனில் ஒன்றுமில்லை ஆனால் அவ்வாறு கேட்பவர்கள் சாதித்தது என்ன? அதனை  அறிந்தால் பிறர்க்கு பயன் படும் என்பதனால் அது குறித்து பேசவேண்டியதாகிறது..

நன்றி அன்பன்  ராமன்

 

 

No comments:

Post a Comment

SRIRANGAPATNA

  SRIRANGAPATNA Curiously, the name has no association with either Srirangam of Tamilnadu or Patna of Bihar; in its own right –it is Srira...