Sunday, December 17, 2023

EFFORT AND REWARD

 EFFORT AND REWARD

உழைப்பும் வெகுமதியும்

அன்பர்களே/ மாணவர்களே

எதை நம்புவீரோ அல்லீரோ , நான் அறியேன் ஆயின் ஒன்று மறுக்கவொண்ணா பேருண்மை. அதுவே வள்ளுவன் வாக்கு -அதையும் ஏற்பீரோ -எதிர்ப்பீரோ வள்ளுவன் அறிவான்.

அவ்வாக்கு "தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த க்கூலி தரும்". இறையருளை நம்பாதவர் கூட, முயற்சியை ஏற்கத்தான் வேண்டும். அதிலும் குறிப்பாக கொட்டி அள்ள கோடிகள் இல்லாதோர் கடை கோடியில் நில்லாமல்; உயர்ந்திட உழைப்பு ஒன்றே உறுதுணை. அந்த நம்பிக்கைகொண்ட   மாந்தர்க்கு இயற்கை கை நீட்டி மெய் தழுவி மேலுயர்த்தும். இது நான் என் இளம் வயதில் அறிந்த உண்மை. நான் தொய்வுற்றபோதெல்லாம்    மேற்சொன்ன வள்ளுவன் வாக்கு அருமருந்தாக வேலை செய்து முறையான உயர்வுக்கு உரமாக வழித்துணை ஆனது. அனுபவத்தை மறுப்பவர்க்கு சொந்த அனுபவமே காலம் கடந்து உணர்த்தும் -அது பிறருக்கு தான் பயன்படும் அதுவும் ஏற்போருக்கே -ஏனையோர்க்கல்ல,இதன் உட்பொருள் யாதெனில் மதி இருப்பவர்  உழைப்பார் -அவர்க்கு வெகுமதி வந்து சேரும். எனவே எந்த முன்னேற்றமும், திடீர்         கொடை அல்ல -அதன் பின்னணியில் 'உழைப்பு' உண்டு. உழைத்தவர் யார்?  என்பது கள யதார்த்த நிலையினால் மாறக்கூடும்.

இதில் கல்வி கற்போர் நினைவில் கொள்ள வேண்டிய அழுத்தமான உண்மை, கல்வி உழைப்பவனுக்கே சேரும். எனவே ட்யூஷன் ஆசிரியர் உழைப்பில் நமக்கு கல்வி கை வராது. கல்விப்பயன் நாடுவோர் உழையுங்கள் சோர்வின்றி உழையுங்கள் வெற்றியும் மதிப்பெண்ணும் உங்களை நாடி வரும்; நாம் உழைப்பின்றி வெற்றியை ஈட்ட ஒரே வாய்ப்பு பகல் கனவு தான்.

இன்னமும் எனது உணர்த்துதல் உங்களுக்கு புரியவில்லை என்றால் "Grand Master " பட்டம் பெரும் இளம் சிறார் சிறுமியர்  தாய் தகப்பன் முயற்சியில் வெற்றி பெற்றனரா? ஒவ்வொரு கிரிக்கெட் வீரனும் /நங்கையும்  களத்தில் எவ்வளவு போராடி உயர்ந்திருப்பர் -சற்று  யோசியுங்கள் . தகப்பன் உழைப்பில் உயர் இடம் அடைய அரசியலில் இயலலாம். நாம் பேசிக்கொண்டிருப்பது அறிவும், அறிவுசார் உழைப்பும் சங்கமிக்கும் களங்கள் குறித்து. அறிவைப்புறந்தள்ளி எந்த வளர்ச்சியும் நிலைத்ததல்ல; திடீர் பெருமைகள் வானில் ஜாலம் செய்யும் வாணவேடிக்கை உருவங்கள் போன்றவை. பிறப்பும் மறைவும் உடனுக்குடன் தொடரும் நிகழ்வுகள். அது போன்றதல்ல கல்வியும் கல்வியின் வெகுமதியும் அவை காலத்திற்கும் தொடர்வது.என்பதை நன்கு உள்வாங்கிக்கொள்ளுங்கள்   

என்ன காலத்திற்கும் கல்வி பயில வேண்டுமா ? ஐயோ என்று பதற வேண்டாம் .ஏனெனில் அதுதான் நீடித்த நெடிய வாழ்வில் தொய்வில்லா முன்னேற்றத்திற்கான வழி முறை. நான் சொல்லும் தொழில் சார் கல்வியினால் தங்களுக்கென இடம் பிடித்து பலருக்கும் உந்துதலாக திகழும் Role model   வகையினரைப்பற்றி தான். இவர்கள் நாடு போற்றும் விஞ்ஞானிகள், டாக்டர்கள் , வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், இசைக்கலைஞர்கள் இவர்களில் யாரை வேண்டுமானாலும் சந்தர்ப்பம் வாய்க்கும் போ து கேட்டுப்பாருங்கள்  "நீங்கள் கடைசியாக எப்போது கற்பதை முடித்துக்கொண்டு பணியை துவாக்கினீர்கள் என்று? அவர்கள் நிச்சயம் சொல்வார்கள் நான் பணியில் இறங்கிய பின்னரே அதிகம் கற்றுக்கொண்டேன் , இனமும் கற்றுக்கொண்டே இருக்கிறேன் , மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று தான் தெளிவாக சொல்வார். . என்றோ பயின்றதை வைத்துக்கொண்டு இன்றும் டாக்டர்/ என்ஜினீயர், வக்கீல் , பேராசிரியர், ஆசிரியர் என்று சிறப்பாகப்பணியாற்ற முடியாது. ஏனெனில் களம் மாறிக்கொண்டே வருகிறது அதற்கேற்ப நாமும் மேம்படுத்திக்கொண்டே[updating] தான் தொடர்ந்து முன்னிலை வகிக்க முடியும். பயின்ற கல்வி வலுவான அடித்தளத்திற்கானது -அதுவே கட்டிடமாக உயராது , அதற்கும் தொடர்ந்து பயின்றுகொண்டே முன்னேறுவதுதான் போட்டி நிறைந்த உலகில் தோற்றுத்துவளாமல்  முன்னிலையில் நீடிக்க உதவும் முறையான அணுகுமுறை. ஒரு பேராசிரியப்பணி என்ன என்று நன்குணர்ந்த என்னால்   இந்த அணுகுமுறையின் விஸ்வரூப பரிமாணங்கள் என்ன என்று ஆழ்ந்த பார்வையும் , அனுபவமும் தந்த உணர்தலால் உறுதியாக சொல்ல முடியும். நான் ஆன்றோனோ சான்றோனோ அல்லன், எனினும் அனுபவம் தந்த முத்திரைகளை உடலெங்கும் தாங்கி நிற்பவன். அது ஒன்றே எனது தகுதி-  எனவே  தான் சொல்லுகிறேன் தன்  முயற்சியாக கல்வி பயில இடை விடாது உழையுங்கள் புரிந்து கொண்டே பயிலுங்கள் புரியாமல் மனனம் செய்து வழி தெரியாமல் விழி பிதுங்கி திணறாதீர்கள். படிப்படியாக முன்னேறுங்கள் மேற்படியில் கால் பதிக்க ஹெலிகாப்டர் உத்திகள், கல்வி பயில உகந்தவை அல்ல. நேரடி உழைப்பே திடமான வடிவமைப்புக்கு உதவும்

வாழ்த்துகள்

நன்றி   அன்பன் ராமன் .

3 comments:

  1. முயற்சி திருவினையாக்கும்
    முயன்றின்மை இன்மை புகுத்திவிடும்

    ReplyDelete

PATTU IYENGAR- LYRICIST

 PATTU IYENGAR- LYRICIST  பாட்டு எழுத வந்த   பட்டு ஐயங்கார்   என்னது பட்டு ஐயங்காரா ?   அவர் என்ன பட்டு வ்யாபாரியா அல்லது எல்...