Friday, February 16, 2024

The Hare and the Tortoise

 The Hare and the Tortoise

முயலும் ஆமையும்

 சென்னை உஸ்மான் சாலையில் மேற்கு பகுதியில் ஒரு வாசகம் படித்தேன், ரசித்தேன் ரசித்துக்கொண்டே இருக்கிறேன் அது கூறும் தகவல்

"முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும், முயலாமை ஒருபோதும் வெல்லாது" ஆமையும் முயலும் போட்டியில் பங்கேற்ற கதை அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால், அதன் சாரத்தை மேலே உள்ள எளிமையான வாக்கியம் எவ்வளவு நேர்த்தியாக உணர்த்துகிறது.

எளிய உண்மைகளே பெரிய தத்துவங்கள் -என்பதே சான்றோர்   கருத்து.

சரி-- நமது களம்-- -அதுதான் கல்விபயிலும் சூழலும் காலமும் ஒருங்கிணைந்த போர்க்களம். அது ஏன் போர்க்களம் என்கிறேன். போர்க்களத்தில் அமைதி, அன்பு, பொறுமை அடக்கம் அனைத்தும் விலக்கி வைத்து கோபமும் பொறாமையும் கொப்பளிக்கும் நிலை தான் இருக்கும். அங்கே விரைந்து செயலாற்ற வேண்டும். எப்போதும் தாக்குவதே தொழிலும் நோக்கமும், அங்கு புரிதலை விட போர்புரிதலே  தலையானது. தலை போனாலும் அதுவே தலையாயது. இது போலவே மாணவர்கள் தேர்வுகளில் போர்க்களம் போன்றே உணர்கிறார்கள், இயங்குகிறார்கள். பலரின் செயல்கள் கண் மூடித்தனமாகவே இருப்பதை காண்கிறோம்.. இதற்கும் முயல்/ ஆமை இவற்றிற்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா?

நேரடி தொடர்பு இல்லை; எனினும் பயில்வோரில் முயல் ஆமை இரண்டும் உண்டு. மாணவர்களில் இரண்டும் உண்டு அவற்றிற்கிடையே ஆழ்ந்த நட்பும் உண்டு. ஆம் முயல் ஆமை இரண்டும் இயல்பாக பழகும். முயல் வீட்டில் விரைந்து செயல் பட்டு தன்னை தயார்படுத்திவிடும்.. ஆமையோ வெகு நிதானம், பாவம் புரிந்துகொள்ளும் தன்மையும் குறைவு. அது போலவே நண்பன் வெளியே சொல்லாமல் தயார் நிலையில் இருக்க , ஆமையோ எதுவுமறியாமல் நேரம் போவது புரியாமல் செயல் பட திடீரென்று தேர்வு வந்துவிட ஆமை நிகர்த்த மாணவன் திகைப்பும் குழப்பமு ம்   மேலிட தடுமாறுகிறார்.

இது ஒரு இடர்ப்பாடு அல்ல. இதற்கான திட்டமிடல் இல்லாமல் திணறுவதே குற்றம், இதற்கு முயலை குற்றவாளி ஆக்குதல்   தவறு. ஆமையாய் இருந்தால் என்ன?மெதுவாக முன்னேறுங்கள்    காலஎல்லைக்குள் இலக்கை நெருங்கிவிடலாம். கல்வியில் இலக்கை நேற்று நெருங்கினாலும் இன்று நெருங்கினாலும் பெரும் வேற்றுமை எதுவும் கிடையாது. ஆனால் தேர்வுக்குள் இலக்கின் அருகில் இருப்பது அவசியம். எனவே அவன் வேகமாகப்படிக்கிறானே, இவள் என்னைவிட திறமை காட்டுகிறாள் என்றெல்லாம் ஒப்பீடு செய்து அதனால் தோன்றும் சஞ்சலம் வேண்டாம். அவரவர் வேகம் அவரவர்க்கு 

இதில் உயர்வு தாழ்வு இல்லை.. வேற்றுமை எது எனில்-- முயல்வதும் முயலாது சோம்பிக்கிடப்பதும் மட்டுமே.   எனவே, முயலுவது நமது கடமை. முயலுவது என்பது விடா முயற்சியே. நமது நிதானம் கருதி, நாம் முன்பே புறப்பட்டால், பிறருக்கு சமமாக இலக்கை அடையலாம். இவ்வுலகு விரிந்து பறந்து வியாபித்துக்கிடப்பது. இங்கு அனைவர்க்கும் அனைத்துக்கும் இடம் உண்டு; நாம் அனைவருமே இயற்கையின் படைப்புகள். எனவே நமக்குரிய இடம் எங்கோ இருக்கிறது. அதைத்தேட முயலாதீர்கள். ஆனால் செய்யும் முயற்சியில் நம்பிக்கையோடு ஈடுபடுங்கள்.

இலக்கு [அது முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒன்று ] உரிய நேரத்தில் நமதருகே வந்து அழைத்துக்கொள்ளும். அதுவரை நாம் செய்ய வேண்டியது இயன்ற வரை அனைத்தையும் 'முறையாக அறிந்து கொள்ளும் முயற்சியே.. அறிந்துகொள்ளுவது என்பது, வேள்வி போன்றது. வேள்விக்குள் கேள்விகள் எழலாம் ஆனால் வேள்வியையே எதிர்த்துக்கேள்வி கேட்பது [நேரத்தை வீணடிக்கும் செயல்] நம்மை அறிவாளியாக கற்பனை செய்யப்பயன் படும். பின்னாளில், வாழ்வை வீணடித்தோமே என்று குமைவது எந்த வகையில் பயன் அளிக்கும்? 

நம்பிக்கை கொண்டு கல்வி முயற்சியில் ஈடுபடுங்கள் .      தேர்வு நேரத்தில் யாரிடமும் நீ என்ன படித்ததாய் அதையா இதையா என்றெல்லாம் கேட்டு மன பீதியை வளர்க்காதீர்கள். பயின்றதை மீண்டும் மீண்டும் மனத்திரையில் ஓட விடுங்கள்  . அதுதான் உங்கள் நண்பன், அதோடு  பேசுங்கள்  -அது உங்களை வழி நடத்தும் . அதன் மறு பெயர்    தன்னம்பிக்கை. 

தன்னம்பிக்கையை விட உயர்ந்த துணை வேறு உண்டா—என்றால், அது இறைவனின் ஆசியே. எனவே இறை நம்பிக்கை கொண்டு முறையாக முயலுங்கள். நீங்கள் முயலோ, ஆமையோ    என்பது பொருட்டல்ல, "முயற்சி திருவினையாக்கும் ' நம்பிக்கை கொண்டு செயல் படுவீர். செயல் படுவதே முக்கியம் .வாழ்த்துகள்

நன்றி அன்பன் ராமன் 

No comments:

Post a Comment

SALEM SUNDARI -26

SALEM SUNDARI -26 சேலம் சுந்தரி -26 மாலை 5.05 மெல்ல அலுவல் முடிந்து கீழிறங்கி முன் வாயில் வழியே சுந்தரி   வெளியேறி ராமசாமி - ம...